search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100067"

    பரந்து விரிந்த கொங்கு மண்டலத்தின் நடுநாயகமாக அமைந்திருப்பது ஈரோடு. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈரோடு நகரம் பல்வேறு சிறப்புகளை பெற்றது. சிறப்பு பெற்ற ஈரோடு நகரில் எழுந்தருளி உலக மக்களுக்கு நன்மை அருள்புரியும் தாயாக வீற்றிருப்பவர் பெரிய மாரியம்மன்.

    ஈரோட்டில் கோட்டை இருந்த காலத்தில் கோட்டையின் உள்ளே இருந்து ஈரோட்டை மட்டுமின்றி கொங்கு 24 நாடுகளையும் காக்கும் தெய்வமாக குடிகொண்டு இருந்த பெரிய மாரியம்மன், கோட்டை பெரிய மாரியம்மன் என்று அழைக்கப்பட்டு வந்தார். தற்போது பன்னீர்செல்வம் பூங்கா அருகே பிரப் ரோட்டில் (மாநகராட்சி அலுவலகத்தின் எதிரில்) பக்தர்களுக்கு அருளாசி புரியும் மாரியம்மனின் திருவிழா காலம் இது.

    பங்குனி மாதத்தில் ஈரோட்டில் வெயில் கொளுத்தினாலும், காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையாது என்கிற வகையில் நாள்தோறும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவுடன் வகையறா கோவில்களான நடு மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு, கம்பம் நடுதல் நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடக்கிறது. நடுமாரியம்மன் கோவில் பெரியார் வீதியிலும், வாய்க்கால் மாரியம்மன் கோவில் காரைவாய்க்காலில் காலிங்கராயன் வாய்க்கால் கரையிலும் அமைந்து உள்ளன.

    பெரிய மாரியம்மன் கோவிலின் குண்டம் வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், தேரோட்டம் நடுமாரியம்மன் கோவிலிலும் நடைபெறும்.

    ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து பெரிய மாரியம்மனை வழிபடுவார்கள். அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இங்கு அதிகம் இருக்கும். திருவிழா நாட்களில் போக்குவரத்து திணறும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதுபோல் திருவிழா காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய மாரியம்மனை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

    பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழா மஞ்சள் நீராட்டு விழா மிக சிறப்பு மிக்கது. மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நகராக மாறும் காட்சி அன்று நடைபெறும். 3 கோவில்களில் இருந்தும் கம்பத்தை பிடுங்கி ஊர்வலமாக நகரில் வீதி உலா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்ச்சைக்கடனாக வீசும் உப்பு தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும் என்றால் பக்தர்கள் மாரியம்மன் மீது கொண்ட நம்பிக்கைக்கு இதுவே சாட்சியாகும். பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களின் தேர் நடுமாரியம்மன் கோவிலில் உள்ளது.

    இந்த தேர் 30 அடி உயரம் கொண்டது. நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டது. சிவபெருமான், முருக பெருமானின் திருவிளையாடல்கள் தேரில் செதுக்கப்பட்டு உள்ளன. வீணை, இரட்டைக்குழல், மத்தளம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்கள் பற்றி சிற்பங்களும் இந்த தேரில் செதுக்கப்பட்டு உள்ளன. இந்த தேர் அலங்காரம் செய்யப்பட்டு பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் வழங்க தேரேறி வரும் காட்சியை காண கண்கோடி வேண்டும்.

    வெப்பு சம்பந்தமான நோய்களை தீர்க்க பெரிய மாரியம்மனுக்கு வேண்டுதல் வைத்தால் உடனடியாக குணமாகும் என்பது நம்பிக்கை. அம்மை கொப்பளம் வராமல் இருக்க பெரிய மாரியம்மன் அருள் புரிகிறார். குழந்தை இல்லாத தம்பதியருக்கு அந்த குறை இல்லாமல் செய்யும் தாயாக விளங்கும் பெரிய மாரியம்மன் கொங்கு மண்ணுக்கே தாயாக உள்ளார். எனவேதான் நாள்தோறும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நீண்டுகொண்டே உள்ளது.
    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் - தேர்த்திருவிழா விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.
    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம்- தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு பூச்சாட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

    விழாவையொட்டி தினமும் 3 கோவில்களிலும் வைக்கப்பட்டுள்ள கம்பங்களுக்கு பெண்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள்.

    வரும் ஏப்ரல் 2-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்துகிறார்கள்.

    அன்று இரவு 9 மணிக்கு மாவிளக்கும் கரகம் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் 3-ந்தேதி பொங்கல் விழா நடக்கிறது.தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் குஞ்சப்பணை மகா மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை மகாமாரியம்மன் கோவில் உள்ளது.

    இக் கோவில் குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 12 -ந்தேதி கணபதி ஹோமம் பொரிச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து அக்னி கம்பம் நடுதல், திருவிளக்கு பூஜை வழிபாடு, அக்னி குண்டம் திறத்தல், பூவளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதனைத்தொடர்ந்து குண்டம்இறங்குதல் நிகழ்ச்சிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.அதிகாலை 4.30 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சியையொட்டி பவானி ஆற்றங்கரையில் இருந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வண்ணம் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கோவிலை அடைந்தது.

    அதன்பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது.தலைமைப்பூசாரி வெள்ளிங்கிரி குண்டத்தை வலம் வந்து பூஜை செய்து குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார். அவரைத் தொடர்ந்து உதவிபூசாரிகள் லோகநாதன் சிவன்கரகம், யோகேஸ்வரன்சக்தி கரகம், பிரபாகரன் கோலக் கூடை, புவனேஸ்குமார் கற்பூர தட்டு எடுத்து குண்டம் இறங்கினார்கள்.அவர்களைத்தொடர்ந்து ஆண்,பெண்பக்தர்கள், மாணவ -மாணவிகள் சிறுவர் சிறுமிகள் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

    கோவில் தலைவர் சென்னியப்பநாடார், உதவித்தலைவர் மணி செயலாளர் கிட்டு, பொருளாளர் அய்யாசாமி, பாபு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கூடைகளில் பூக்களை சுமந்து வந்து அம்மனை வழிபட்டனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான கடந்த 10-ந் தேதி அன்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. அன்று முதல் 28 நாட்களுக்கு அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. சமயபுரம் கடைவீதி வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 59-வது ஆண்டாக நடைபெற்ற விழாவில் சமயபுரம் கடைவீதியில் உள்ள கருப்பண்ணசாமி, மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் படம் வைக்கப்பட்டு 2 யானைகள் முன்னே வர அந்த சங்கத்தின் திருச்சி மாவட்ட துணை தலைவர் பெ.கலியபெருமாள், இணை செயலாளர் கோவி.கண்ணன், விழா குழு துணைத்தலைவர் தினேஷ் என்ற நடராஜமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் பூக்கூடையில் பூக்களை சுமந்து கோவிலுக்கு சென்று அம்மனுக்கு சாற்றினர்.

    இதேபோல் ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர் மத்தியாஸ் தலைமையில் பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலைமான்திருமுடிகாரி, உதவி இயக்குனர் முத்துக்குமார், செயல் அலுவலர்கள் லால்குடி குமரன், மேட்டுப்பாளையம் சேகர் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பூக்கூடையில் பூக்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று அம்மனுக்கு சாற்றினர்.

    காலை 8 மணியில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும், மாலை அணிந்தும் பாதயாத்திரையாக கூடைகளில் பூக்களை சுமந்து வந்த பக்தர்கள், அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாமக்கல், சேலம், ஆத்தூர் போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து, அம்மனை வழிபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பாக திருச்சி, துறையூர் போன்ற இடங்களில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு அமைப்புகள் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் புதிய பஸ் நிலையத்தில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும். இக்கோவிலில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் அம்மன் எழுந்தருளியுள்ளார்.

    மேலும் மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்மன் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வார். பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல்(கொடியேற்றுதல் முதல் திருநாள்), காத்தல்(ரிஷப வாகன காட்சி, 5-ம் திருநாள்), அழித்தல்(திருத்தேர், 10-ம் திருநாள்), மறைத்தல் (ஊஞ்சல் பல்லக்கு உற்சவம், 11-ம் திருநாள்), அருள்பாலித்தல் (தெப்பம், 13-ம் திருநாள்) ஆகிய 5 தொழில்களையும் சித்திரை பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் புரிந்து வருவதாக புராண மரபு.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை பெருந்திருவிழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டாம் நாள் காலை 10 மணிக்கு பல்லக்கிலும் மாலை 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளுதலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 9-ம் நாளான 15-ந்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 16-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    11-ம் திருநாளான 17-ந் தேதி காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12-ம் திருநாளான 18-ந் தேதி காலை பல்லக்கிலும் இரவு 8 மணிக்கு முத்து பல்லக்கிலும் அம்மன் புறப்பாடாகிறார்.

    13-ம் திருநாளான 19-ந் தேதி காலை 12 மணிக்கு அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். மாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதையடுத்து அம்மன் வழிநடை உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார், கோவில் மேலாளர் ஹரிஹரசுப்ரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 
    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் (நடு) மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    வருகிற 23-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு 3 கோவில்களிலும் கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கிராமசாந்தியும், 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் கொடியேற்றமும் நடக்கிறது.

    ஏப்ரல் மாதம் 2-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவும், இரவு 9 மணிக்கு மாவிளக்கு பூஜையும், பெரிய மாரியம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 3-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடக்கிறது.

    4-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன், 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன், இரவு 10 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 6-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி-பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் இந்து சமய அற நிலையத்துறைக்குட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா 40 நாட்கள் வரை நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு திருவிழாவையொட்டி நடைபெறும் பால்குட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவில் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது மற்றொரு தனிச்சிறப்பாகும். இந்த கோவில் பால்குட விழா மற்றும் பூக்குழி திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது.

    முன்னதாக இந்த கோவிலுக்கு காப்புக் கட்டி விரதம் இருக்க தொடங்கிய பக்தர்கள் தினமும் பால்குடம், அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுத்து வருகின்றனர். நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அதிகாலை முதலே காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அம்மனுக்கு அபிஷேகம் செய்த பால் அந்த பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.

    முன்னதாக பால்குடங்களில் உள்ள பாலை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய அண்டாவில் நிரப்பி, அதை மின் மோட்டார் மூலம் கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் கழுத்தில் அணிந்து வந்த மாலைகள் கோவில் பின்புறம் மலைபோல் குவிந்து காணப்பட்டன. இதை நகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது அகற்றினர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வரும் பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அந்த பால் கோவிலை சுற்றியுள்ள கால்வாயில் பாலாறு போல் ஓடியது. இதையடுத்து எப்போதும் வறண்டு கிடந்த அந்த கால்வாயில் நேற்று பால் பெருகி ஓடியதை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    விழாவையொட்டி பல்வேறு சமூகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சியும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
    கோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் திகழ்ந்து வருகின்றாள்.
    இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் கோவை நகர் வரலாறு புகழ் மிக கொண்டது. கோவன்புதூர் என்ற சிற்றூராகத் திகழ்ந்தது. கோயமுத்தூர் கோட்டை வலிமை பொருந்தியதாக விளங்கியது. நகரம், கோட்டை மற்றும் பேட்டை என்ற இரண்டு பெரும் பிரிவுகளாகத் திகழ்ந்தன. கோட்டையில் ஒரு ஈசுவரன் கோயிலும், பேட்டையில் ஒரு ஈசுவரன் கோவிலும் இன்றும் பொலிவுடன் திகழ்கின்றன.

    கோவை மறுமலர்ச்சி

    வணிகம் செய்வதற்கு வந்த ஆங்கிலேயர் நம் மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டையும் நம் மக்களையும் அடிமைகளாக மாற்ற தந்திரங்களையும் வஞ்சகத் திட்டங்களையும் கையாண்ட தருணத்தில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினர். அதுபோல் மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்க தமது படையுடன் கோவை கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான்.

    அந்தக் காலத்தில் தான் நம் அன்னை தண்டுமாரி மக்களுக்கு அருள்மழை பொழியத்தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள்.

    தண்டு

    தண்டு என்னும் சொல்லுக்குப் படைவீரர்கள் தங்குவதற்கு அமைக்கப்படும் கூடாரம் என்பது பொருள் மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வரதாபி என சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சிறுத்தொண்டராகிய பரஞ்சோதி வடநாட்டுக்கு படையெடுத்துச் சென்று வென்ற செய்தியைக் கூறும் பொழுது சேக்கிழார் பெரியபுராணத்தில் இச்சொல்லை சிறப்பித்துக் காட்டினார்.

    இந்த தண்டு என்னும் சொல்லே அன்னையின் பெயருக்கு அமுதூட்டும் சிங்காரச் சொல்லாய், சிறப்புப் பெயராய் அன்னையின் பெயருடன் சேர்ந்து வழங்கி வருகிறது. கோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், அகிலாண்ட நாயகியாய், ஆதி பராசக்தியாய், சாந்தசொரூபிணியாய் சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் எழுந்தருளி கோவை நகரை அரசாட்சி செய்யும் அன்னையாய் திகழ்ந்து வருகின்றாள்.

    நோய் தீர்க்கும் தாய்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி, அக்காலத்தில் காலரா, பிளேக், அம்மை ஆகியவை கொடிய நோய்களாகக் கருதி அஞ்சப்பட்டன. நம் தண்டுமாரியம்மன் பக்தர்களுக்கு நோய் அணுகாத நல்வாழ்வை வழங்கி காத்து வருகிறாள்.

    அன்னையை மறவாத வீரர்கள்

    திப்புவின் படைவீரர்கள் அன்னை எழுந்தருளிய இடத்தில் சின்னஞ்சிறு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். மன்னன் ஆணைப்படி தண்டு எனும் படைவீடு இடம் மாறியபோதும் வீரர்கள் தண்டுமாரியம்மனை மறவாமல் தமக்கு இன்னல் வந்த போதெல்லாம் வந்து வணங்கினர். திருவிழாக் காலங்களில் அன்னையை வந்து தொழுது வேண்டினர். தம்மை நாடி வரும் பக்தர்களின் நோய் அகல அன்னை வேப்பிலையிலும், தீர்த்தத்திலும் கலந்து அருள் செய்தாள்.

    மேனியில் அவைபட்டவுடனே நோயின் வேகம் குறைந்தது. கவலைகள் மறைந்தன. சுபகாரியங்கள் இன்னும் கைகூடவில்லையே என்று ஏங்கியவர் பலரும் நம்பிக்கையோடு தண்டுமாரியை நாடி வந்தனர். தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டுவன வழங்கி கருணைக்கடலாய் அன்னை தண்டுமாரி அருள்பாலித்து வருகின்றாள்.

    வழிபாட்டின் மேன்மைகள்

    கோவை தண்டுமாரியம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவள், செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சைபழம் தோலில், இராகு கால நேரத்தில் நெய்தீபம் ஏற்றி ஒன்பது வாரம் வழிபாடு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல சுபவேளை கைகூடும். வெள்ளிக்கிழமை அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாக வழிபாடு செய்து சகல நன்மைகளையும் செளபாக்கியங்களையும் குறைவில்லாமல் பெற்று வாழ்வில் பயனடைந்து வருகின்றனர்.

    படைவீரனுக்கு கனவில் அருள் காட்சி

    திப்புவின் படைகள் கோவை கோட்டை மதிலுக்குள் தங்கியிருந்த சமயத்தில் எண்ணற்ற வீரர்கள் படையில் இருந்தனர். ஆனால் அவள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு வீரனுக்கு அன்னை கனவில் அருள் காட்சி அளித்தார். கண்ணுக்கும், கருத்துக்கும் அரிய நம் தாய் தண்டுமாரியம்மன் கற்பனைக்கு எட்டாத காலம் முதல் இப்புவியில் வாழ்ந்து வருவதாக கூறினாள்.

    வேப்ப மரங்களுக்கும், செடி, கொடிகளுக்கும் இடையில் நீர்ச்சுனைக்கும் அருகில் அமைந்துள்ள இக்காட்டுப் பகுதியில் அன்னை தண்டுமாரி வீற்றிருந்த கோலத்தை கனவில் கண்ட வீரன் மறுநாள் எழுந்து அதிகாலையில் விரைவாக ஆவலுடன் தேடினான். வேப்பமரத்தின் கிளைகளைத் தன் கைகளால் விலக்கி பார்த்த பொழுது பெற்ற தாயை முதலில் நோக்கும் குழந்தையாய் அவன் அன்னையை முதலில் கண்டு இன்புற்றான். பின்பு தன் கண்கள் இன்புற்றதோடு மட்டுமல்லாமல் கையெடுத்து தொழ ஆரம்பித்தான்.

    அவன் அடைந்த இன்பத்திற்கு எல்லையின்றி அமையவே கூத்தாடி மகிழ்ச்சியுற்றான். பின் அனைத்து படைவீரர்களுக்கும், நண்பர்கள், உறவினர்களுக்கும் நம் அன்னையை கோவையில் காவியத் தலைவியாய் பறைசாற்றத் தொடங்கினான். நல்ல நாள் பார்த்து சிறு மேடை அமைத்து அம்மேடை மீது அன்னை தண்டுமாரியை எழுந்தருளச் செய்தான்.

    இங்ஙனம் எழுந்தருளிய நம் அன்னை தண்டுமாரி கோவையில் கொலு வீற்றிருக்கும் செய்தி எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் பேசப்பட்டது. படைவீடான தண்டு இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மாரி தண்டுமாரி என அழைக்கப் பெற்றாள். பசியும், பிணியும் நீங்கி அன்னையை எண்ணி வழிபட்ட பக்தகோடி பெருமக்கள் எண்ணிக்கை நாளும் பெருகியது. அன்னையின் புகழ் அகிலமெங்கும் எதிரொலித்தது.

    நிகழ்ச்சி நிரல்

    தண்டுமாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று 13.03.2019 புதன்கிழமை காலை 6.30 மணிக்குமேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது.

    பூச்சாட்டு

    சித்திரை மாதத்தில் முதல் செவ்வாய் கிழமையன்று அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழாவானது பூச்சாட்டுடன் தொடங்கப் பெறுகிறது. அன்று மாலை 6.30 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்வித்து மேள தாளங்கள் முழங்க கம்பம் எடுத்து வந்து சுவாமி சன்னிதானத்தில் வசந்த மண்டபத்தில் கம்பத்தை ஆவாகனம் செய்து மலர் மாலை களினால் கம்பத்திற்கு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெறும்.

    அக்கினிச்சாட்டு

    சித்திரைத் திருவிழாவில் மூன்றாம் நாளன்று அம்மனுக்கு அக்கினிச்சாட்டு விழா நடைபெறும். அன்று மாலை 6.30 மணியளவில் அக்கினிச்சட்டியை அம்மனின் திருமலர் பாதங்களில் வைத்து அக்கினிச்சட்டியில் அக்கினி வளர்க்கப்படும். பின்பு அக்கினி கம்பத்திற்கு பூஜை செய்யப்பட்டு மேற்படி கம்பத்தையும் அக்கினிச் சட்டியையும் இத்திருக்கோயில் பூசாரிகள் எடுத்து கோவிலைச் சுற்றி வலம் வந்து பூச்சாட்டுக் கம்பத்தை எடுத்து விட்டு அக்கினிச்சாட்டு கம்பத்தை ஆவாகனம் செய்து மேற்படி கம்பத்தின் மூன்று கிளைகளிலும் குழல் ஓடுகளைச் செருகி அதன்மேல் அக்கினிச்சட்டியை வைப்பார்கள். அக்கினிச் சட்டியில் எரியும் அனல் நெருப்பினால் அன்னையவள் ஜோதி சொரூபியாக அருள்பாலித்து இப்பூவுலகைக் காத்து இரட்சிக்கிறாள்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்விதமான நோய்களும், தீவினைகளும், அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்கவும், நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும் 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அவர் விரதம் மேற்கொள்வார். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

    இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை கோவில் கொடிமரத்தில் இருந்து யானை மீது கோவில் அர்ச்சகர் பூக்கூடைகளில் பூக்களை வைத்து அமர்ந்திருக்க, கோவிலை வலம் வந்து கடைவீதி வழியாக கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணை ஆணையர்(பொறுப்பு) தென்னரசு, முன்னாள் இணை ஆணையர் குமரதுரை, கோவில் மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், மணியக்காரர் ரமணி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் துரைராஜசேகர் மற்றும் கோவில் பணியாளர்கள், ஊழியர்கள், பக்தர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கினார். மேலும் காலை 8 மணியில் இருந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும், மாலையணிந்தும் பாதயாத்திரையாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் படத்தை வைத்து பூக்களை எடுத்து கொவிலுக்கு வந்து, அம்மனுக்கு சாற்றினர்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி மாவட்டம் மட்டுமின்றி கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாமக்கல், சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று இரவு முழுவதும் கட்டணம் இல்லாமல் அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) தென்னரசு, ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    கொள்ளிடம் நெ.1 டோல்கேட்டில் இருந்து கூத்தூர், பழூர், பனமங்கலம், சமயபுரம் நால்ரோடு, ஒத்தக்கடை, சந்தை பகுதி ஆகிய இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் நடமாடும் கழிவறை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தலைமையில் தலைமை எழுத்தர் சதீஸ் கிருஷ்ணன் மேற்பார்வையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பாக திருச்சி, துறையூர் போன்ற இடங்களில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்கியுராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சமயபுரத்தில் முகாமிட்டுள்ளனர். 
    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோபுரங்களில் கலசங்கள் வைக்கப்பட்டன.
    கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னல் அருகே தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததால் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தீபாராதனை, புண்யாஹவாசனம் நடந்தது. நேற்று முன்தினம் காலை புண்யாகம், நவகிரக ஹோமம், தீபாராதனையும், மாலை வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலையில் யாகசாலை அலங்கார நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து கருவறையில் தண்டுமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் கலசங்கள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு, ராஜகோபுரத்தில் 5 கலசங்களும், கருவறையின் மீது 3 கலசங்களும், விநாயகர், கருப்பராயன், நவக்கிரகம் ஆகியவற்றில் தலா ஒரு கலசங்கள் உள்பட 12 கலசங்கள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., பிந்து மோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது தங்கம், வெள்ளி போன்றவற்றை சிலர் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர். மாலை 4.15 மணிக்கு புண்யாகம், அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்பஅலங்காரம், யாகசாலை அமைத்தல், முதற்கால யாக பூஜை, திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை 2-ம் கால யாக பூஜை உள் பட பல்வேறு பூஜைகளும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு பூஜைகள் நடக்கிறது.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் காலயாக பூஜை, மகா பூர்ணாஹுதி, கலசங்கள் புறப்பாடு, காலை 6.45 மணி முதல் காலை 7 மணிக்குள் தண்டுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் 123 ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் 123 ஆண்டுகள் பழமையான பிரசித்திபெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 14-ந் தேதி இரவு 10 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு பெண்கள் தினமும் புனிதநீர் ஊற்றி வருகிறார்கள். 19-ந் தேதி காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது.

    25-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மாரியம்மன் வகையறா கோவிலான வாணியம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், குண்டம் திறப்பு, பிச்சை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் இறங்குவதற்கு வசதியாக குண்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் தலைமை பூசாரி கிருஷ்ணன் முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். ஒருசிலர் அலகு குத்தியும், கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    காலை 10 மணிக்கு கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜையை தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், அக்கினிசட்டி ஏந்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. பின்னர் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சங்கரலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் மற்றும் அன்ன அபிஷேகம் நடந்தது.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி 2 ஆயிரத்து 7 பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக காந்திரோட்டில் உள்ள பாண்டிய வேளாளர் சமூக திருமண மண்டபத்துக்கு, பழனி நகரின் 33 வார்டுகளை சேர்ந்த பெண்கள் மஞ்சள் புடவை அணிந்து பால்குடத்துடன் நேற்று காலை வந்தனர்.

    பின்னர் அங்கு பால்குடத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு நடந்த உச்சிக்கால பூஜையில் மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    அதன்பிறகு மாலை 4 மணி அளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மாரியம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. மாலை 5 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது, அன்ன அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் கோவில் முறை பண்டாரங்கள் செய்தனர்.

    விழாவையொட்டி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் தனசேகர், பழனிவேல், கார்த்திக், பாண்டிய வேளாளர் சங்க பிரமுகர் பெருமாள், சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கொங்குவேளாளர் பிரமுகர் மாரிமுத்து, வக்கீல் கல்யாணசுந்தரம் மற்றும் பழனி வ.உ.சி. மன்றம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×