search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு தேவேகவுடா விடுத்த அழைப்பை ஏற்று பெங்களூரு செல்ல உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தொலைபேசி மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தார். தேவேகவுடாவின் அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் 23-ம் தேதி பெங்களூரு சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார் என டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
    கர்நாடக மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.#KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்தார். இன்று மாலை அவர்களை நேரில் சந்திக்க உள்ளார். முன்னதாக இன்று காலை ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் குமாரசாமி தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்திருக்கிறார். அநேகமாக பரமேஸ்வரா துணை முதல்வர் ஆகலாம் என கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய தலைவர்களை குமாரசாமி சந்தித்த பின்னர் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    எனவே, புதன்கிழமை குமாரசாமி மட்டுமே பதவியேற்பார். அன்றே நம்பிக்கை வாக்கெடுப்பும் நடைபெறும் என்று தெரிகிறது. மற்ற அமைச்சர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தபிறகு பதவியேற்கலாம். #KarnatakaElections #KarnatakaFloorTest #Kumaraswamy
    காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என்று திருச்சியில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கூறினார்.#KarnatakaElection #Cauvery #Kumaraswamy
    செம்பட்டு:

    கர்நாடக முதல்-மந்திரியாக வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) பதவி ஏற்க இருக்கும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக குமாரசாமி நேற்று மாலை 6.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.

    பின்னர் அவர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் இரவு 7 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் தரப்பில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், உதவி ஆணையர் ரத்தினவேல் ஆகியோர் குமாரசாமிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

    அதன்பிறகு அவர் பேட்டரி கார் மூலம் ஆரியபட்டாள் வாசல் வரை சென்றார். அங்கு கொடிகம்பத்தை தொட்டு வணங்கி விட்டு மூலவர் ரெங்கநாதரை தரிசித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாயார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்தார்.

    சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த குமாரசாமி நிருபர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடும், கர்நாடகமும் சகோதரர்கள் மாதிரி ஆகும். தண்ணீர் பிரச்சினையால் தமிழக விவசாயிகளும், கர்நாடக விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்டவன் அருளால் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி நதிநீர் பங்கீடு சுமுகமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்த காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி உள்ளது. அதனால் 5 ஆண்டுகள் சுமுகமாக ஆட்சியை முடிப்பேன். தண்ணீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். இதற்கு தமிழகம் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.



    அதன்பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியே வந்த குமாரசாமி பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அவர், இரவு 9.40 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, குமாரசாமி திருச்சி வந்ததும் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபித்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு தான் காவிரி பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும். காவிரி விவகாரத்தில் சில பிரச்சினைகளை இரு தரப்பிலும் சந்திக்கிறோம். கர்நாடக விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அவை சரி செய்யப்பட வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எனது அரசு மட்டுமல்ல. யாராக இருந்தாலும் மதித்துத்தான் ஆக வேண்டும்.

    கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகத்தில் ஆறுகள் வறண்டுபோய் கிடந்தன. இதனால் தான் இரு மாநிலங்களிலும் பிரச்சினை உருவானது. ஆனால் இந்த ஆண்டு ரெங்கநாதர் அருளால் நல்ல மழை பெய்து எங்கள் மாநிலத்தில் ஆறுகள் நிரம்பும் பட்சத்தில் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் எந்த சிரமமும் இருக்காது. எனது அரசு 5 ஆண்டுகள் நிலைத்து இருக்கும். அதுமட்டுமின்றி சிறந்த நிர்வாகத்தையும் தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்து இருப்பதாக கூறி, குமாரசாமியிடம் நேற்று பெங்களூருவில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. அப்படி இருக்க தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை. நான் ரஜினிகாந்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து நீங்கள் கர்நாடகத்திற்கு வாருங்கள். இங்குள்ள அணைகளின் நீர் இருப்பு பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

    எங்கள் மாநில விவசாயிகள் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பிறகு, கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டுமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரலாம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #KarnatakaElection #Cauvery #Kumaraswamy
    காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் என திருச்சி விமான நிலையத்தில் மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue
    திருச்சி:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி வருகிற 23-ம் தேதி முதல் மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். 

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு குமாரசாமிக்கு உள்ளது. 

    இதற்கிடையே, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அவர் இன்று வருகை தந்து கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

    இந்நிலையில், திருச்சி வந்த குமாரசாமி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஜத கட்சி தலைவர் குமாரசாமி கூறியதாவது:
     
    காவிரி விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முழு ஒத்துழைப்பு அளிப்பேன். காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும். ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசு, 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்யும். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி தருவது பற்றி தற்போது எதுவும் கூற இயலாது என தெரிவித்தார். #Kumaraswamy #CauveryIssue
    ஜூன் 12-ந்தேதி காவிரி நீரை பெற குமாரசாமியுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #Cauveryissue #KumaraSamy

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடை பெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நீண்ட நாட்களாக பொது மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையாக, தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சனையாக உள்ள காவிரிப் பிரச்சனையில் சட்டரீதியாக ஒரு முடிவை நாம் கண்டிருக்கிறோம்.

    ஆனால், அந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கக் கூடியவற்றை நிறைவேற்ற முன்வருவார்களா, பயன் கிடைக்குமா, விவசாயிகளின் வாழ்வாதாரம் வளம் அடையுமா என்ற நிலையில் இருக்கிறோம்.

    இந்நிலையில், இங்கிருக்கும் அரசு என்ன செய்ய வேண்டுமென்றால், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற நிலையில் ஒரு புதிய அரசு பொறுப்பேற்கவிருக்கிறது,


    அப்படி புதியதாக பொறுப்பேற்கும் முதல்- அமைச்சரோடு, இங்கிருக்கும் முதலமைச்சர் ஒரு நட்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு, சட்டரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், வரும் ஜூன் மாதம் 12-ந் தேதி பெற வேண்டிய காவிரி நீரை நட்புரீதியாக பெற்றாக வேண்டும்.

    கடந்த 7 ஆண்டுகளாக நமக்கு வர வேண்டிய நீர் தடைபெற்று இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒருவேளை நமக்கு வர வேண்டிய நீரை பெறுவதில் தமிழக அரசு தவறினால், மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள, குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டிய நிலை வரும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

    காவிரி உரிமைக்காக பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டத்தைக் கண்டு, உச்ச நீதிமன்றமே அதற்கு மதிப்பளித்து சட்டரீதியான உரிமையை அளித்திருக்கிறது.

    ஆகவே, தி.மு.க.வின் போராட்டங்களில் பெருமளவு பங்கேற்று, ஆதரவு தந்திருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #Cauveryissue #KumaraSamy

    கர்நாடக முதல்வராக வருகிற 23-ந்தேதி பதவியேற்க உள்ள எச்.டி.குமாரசாமி இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து தரிசிக்க உள்ளார். #KarnatakaElection2018 #Kumarasamy
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு குமாரசாமிக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும்  நாளை டெல்லி சென்று அவர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

    இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அவர் இன்று  வருகை தர உள்ளார். கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக குமாரசாமியின் சகோதரர், தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களின் வேட்பாளர் பட்டியலை ஸ்ரீரங்கம் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection2018 #Kumarasamy
    குமாரசாமி மந்திரிசபையில் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. #Karnataka #KumaraSamyMinistry

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பா ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆதரவை பெற்று வெற்றி பெறுவாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது திடீர் ராஜினாமா திருப்பத்தை ஏற்படுத்தியது.

    3 நாளில் அவர் பதவி இழந்தது பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேசமயம் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். தலைவர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எடியூரப்பா ராஜினாமா செய்ததால் கவர்னர் வாஜுபாய் வாலா, ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதை அவர் ஏற்றுக் கொண்டார்.

    குமாரசாமி ஏற்கனவே கவர்னரை சந்தித்து தன்னை ஆதரிக்கும் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கொடுத்து இருந்தார். இதனால் நேற்று புதிதாக கடிதம் எதுவும் கொடுக்கவில்லை. குமாரசாமிக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் 15 நாள் கால அவகாசம் அளித்தார்.

    கவர்னரை சந்தித்த பின்பு குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில் வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என்றார். கவர்னர் 15 நாள் அவகாசம் அளித்துள்ளார். அதற்கு முன்னதாகவே மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்றும் கூறினார்.

    பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை காங்கிரஸ்- ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களை பெங்களூரிலேயே தங்கி இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, ஜே.டி.எஸ் தலைவர் தேவேகவுடா, முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ், முன்னாள் முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    பதவி ஏற்பு விழாவை முதலில் நாளை (திங்கட்கிழமை) வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தார். நாளை ராஜீவ்காந்தி நினைவுநாள் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் அது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டி இருப்பதால் அவர்களுக்கு வசதியாக 23-ந்தேதி பதவி ஏற்பு விழா வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.


    புதிய மந்திரிசபை தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கலந்து கொண்டார்.

    இதில் மந்திரி பதவிகளை இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பு குழு அமைத்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்து ஆட்சி அதிகாரத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரி ஆகிறார். முதல்- மந்திரியாக பதவி ஏற்கும் குமாரசாமி நிதித்துறையையும் கூடுதலாக வைத்துக் கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தலுக்கு முன்பு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஜே.டி.எஸ். கட்சியுடன் கூட்டணி வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று மகேஷ் என்பவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் மந்திரி சபையில் இடம் அளிக்கப்படுகிறது.

    மேலும் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவும் மந்திரி சபையில் முக்கிய பங்கு வகிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதவிர காங்கிரஸ், ஜே.டி.எஸ். சார்பில் யார்- யார்? மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல் வருமாறு:-

    விஸ்வநாத் (ஜே.டி.எஸ்.)- கல்வித்துறை.

    புட்டராஜூ (ஜே.டி.எஸ்.)- விவசாயத் துறை.

    ரேவண்ணா (ஜே.டி.எஸ்.) - பொதுப்பணித்துறை

    ஜார்ஜ் (காங்கிரஸ்)- பெங்களூரு நகர வளர்ச்சி துறை

    கிருஷ்ணப்பா (காங்கிரஸ்) - விளையாட்டுத் துறை

    கிருஷ்ண பைரே கவுடா (காங்கிரஸ்)- தகவல் மற்றும் விளம்பரத்துறை

    மகேஷ் (பகுஜன் சமாஜ்)- சமூக நலத்துறை

    ஜி.டி.தேவகவுடா (ஜே.டி. எஸ்.) - கூட்டுறவு துறை

    பண்டேப்பா கசேம்பூர் (ஜே.டி.எஸ்.) - ஜவுளி மற்றும் அறநிலைய துறை

    தம்மன்னா (ஜே.டி.எஸ்.)- தொழிலாளர் நலத்துறை

    தினேஷ் குண்டுராவ் (காங்கிரஸ்)-கலால் வரி

    சுதாகர் (காங்கிரஸ்)- சுகாதாரத்துறை

    தன்வீர் சையது (காங்கிரஸ்) - உயர் கல்வித்துறை

    ரோசன் பெய்க் (காங்கிரஸ்) -வனத்துறை

    எம்.டிபாட்டீல் (காங்கிரஸ்)- உணவு மற்றும் நுகர் பொருள் வினியோகத் துறை

    ஆர்.வி.தேஷ்பாண்டே (காங்கிரஸ்)-சட்டம் மற்றும் சட்டசபை விவகாரங்கள் துறை

    சதீஷ் ஜர்கிகோலி (காங்கிரஸ்) -சிறுதொழில் மற்றும் சர்க்கரை ஆலைகள்.

    அஜய் (காங்கிரஸ்) -அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

    சிவசங்கரப்பா (காங்கிரஸ்)- வருவாய் துறை

    ராமலிங்கரெட்டி (காங்கிரஸ்)- போக்குவரத் துறை

    ராமசாமி (ஜே.டி.எஸ்.)- தொழில் துறை

    நரேந்திரா (காங்கிரஸ்)- கால்நடை துறை.

    காதர் (காங்கிரஸ்) -சுகாதாரம்.

    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தேவேகவுடா அழைப்பு விடுத்துள்ளார். #Devegowda #MKStalin
    சென்னை:

    கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை அழைத்து கவர்னர் பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

    இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தொலைபேசி மூலம் மு.க.ஸ்டாலினிடம் பேசி உள்ளார். இதை ஏற்று பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது. #Kumarasamy #Devegowda #MKStalin
    காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி, சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நாளை குமாரசாமி டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கூட்டணி மந்திரி சபையில் காங்கிரசுக்கு எத்தனை மந்திரி பதவி அளிப்பது, யார்-யாரை நியமிப்பது பற்றியும், சோனியா, ராகுலுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த சந்திப்பின் போது பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு சோனியா, ராகுலுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கிறார்.

    பின்னர் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை முறியடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும், சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அவர்களையும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

    குமாரசாமி மந்திரிசபை பதவி ஏற்பு விழா பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. எடியூரப்பாவும் பதவி ஏற்க இந்த ஸ்டேடியத்தைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தார். பின்னர் கவர்னர் மாளிகையிலேயே தனி ஆளாக பதவி ஏற்றார்.

    அவர் தேர்வு செய்த ஸ்டேடியத்தில் குமாரசாமி பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    கர்நாடக மாநில அரசியிலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். #AkhileshYadav
    லக்னோ:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இன்றிரவு, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். வரும் 21-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக மாநில அரசியிலில் ஏற்பட்ட குழப்பத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும் என உ.பி. முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அகிலேஷ் யாதவ், ‘இன்று பண அதிகாரத்தை மக்களின் தீர்ப்பு வெற்றி கண்டுள்ளது. பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்தவர்கள், அரசியலை வியாபாரமாக்க விரும்பாதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று பாடம் கற்றுள்ளனர்.

    எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். #KarnatakaCMrace #Centralgovtshouldresign #AkhileshYadav 
    எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இன்றிரவு கவர்னரை சந்தித்த குமாரசாமி வரும் 21-ம் தேதி கர்நாடக முதல் மந்திரியாக பதவி ஏற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #kumaraswamy #karnatakacmrace
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் இன்று போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல் மந்திரி எடியூரப்பா தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதையடுத்து, ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரி இருந்த குமாரசாமிக்கு இன்று மாலை கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இன்றிரவு, சுமார் 7.15 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்ற குமாரசாமி கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்தார். வரும் 21-ம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதல் மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்பார் என ராஜ் பவன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #kumaraswamy #karnatakacmrace
    பா.ஜ.க.வின் ‘ஆபரே‌ஷன் கமலா’ திட்டத்தை முறியடிக்க குமாரசாமி, சிவகுமார் மற்றும் ஜமீர் அகமத் இணைந்து பா.ஜ.க சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.
    பெங்களூரு:

    மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி, காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மின்சார துறை மந்திரியுமான டி.கே.சிவகுமார் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய ஜமீர் அகமத் ஆகிய 3 பேரும் முன்பு எலியும், பூனையும் போல் எதிரிகளாக இருந்தனர்.

    தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், இந்த மூவரும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தங்களுக்குள் கூட்டணி அமைத்து உள்ளனர்.

    இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த பிடதி ஈகிள்டன் ரிசார்ட்டிலும், ஐதராபாத்துக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வதிலும் குமாரசாமி, சிவகுமார் மற்றும் ஜமீர் அகமத் ஆகியோர் பரஸ்பரம் சிரித்துக் கொண்டு, பம்பரமாக சுற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டதை கண்டு, சக எம்.எல்.ஏ.க்களே ஆச்சரியத்தில் மூழ்கினார்.

    மேலும், பா.ஜனதா கட்சியின் ‘‘ஆபரே‌ஷன் கமலா’’ திட்டத்தை முறியடிக்க இவர்கள் 3 பேரும் பாரதீய ஜனதாவை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர். இந்த மூவர் கூட்டணி, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×