search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100356"

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

    பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து மோடி 2-வது முறையாக இன்று பதவியேற்கிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் பிரமாண்ட கோலாகல விழாவில் அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    மோடியுடன் மந்திரிகளும் பதவியேற்கிறார்கள். 50-60 பேர் வரை அவரது மந்திரி சபையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மந்திரி சபையில் இடம் பெற்ற ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், நிதின்தோமர், ஜே.பி.நட்டா, ஹர்ஸ்வர்தன், பாபுல் சுப்ரியோ ஆகியோர் மீண்டும் மத்திய மந்திரிகளாக பதவியேற்கிறார்கள்.

    உடல்நலம் சரியில்லாததால் அருண்ஜெட்லி மீண்டும் மந்திரியாக விரும்பவில்லை. இதை அவர் மோடியிடம் உறுதிப்படுத்தினார்.



    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி தமிழ்நாட்டில் மோசமான தோல்வியை தழுவியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தேனி தொகுதியில் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரை பிரதமர் அலுவலகத்துக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

    தமிழக பா.ஜனதாவுக்கு மற்றொரு இடம் ஒதுக்கப்படலாம் என்றும் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
    ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட தடை கோரிய வழக்கை 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. #ADMK #DelhiCourt

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த கட்சி இரண்டு பிரிவாக செயல்பட்டது.

    முதல்-அமைச்சர் இ.பி.எஸ், துணை முதல்- அமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் ஓர் அணியாகவும், சசிகலா, தினகரன் மற்றொரு அணியாகவும் செயல்பட்டனர்.

    கடந்த 2017-ல் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழு என புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளர்கள் வேட்புமனுவில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரியும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில் ‘‘அ.தி.மு. க.வின் விதிகளின்படி வேட்பாளர்களின் மனுவில் கையெழுத்திட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு மார்ச் 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது. ஆனால் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தொடங்குவதால் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கே.சி.பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை வருகிற 25-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு அறிவித்தது. #ADMK #DelhiCourt

    அதிமுக தேர்தல் பிரசாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தினர். #ADMK #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. 18 சட்ட சபை இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.

    அடுத்த கட்டமாக தேர்தல் பணி, பிரசார வியூகம் பற்றி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    முதல்-அமைச்சர், துணை முதல்வர் ஆகியோர் தேர்தல் பிரசார தேதி தேர்தல் ஏற்பாடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #ADMK #EdappadiPalaniswami #OPS

    அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் தேர்வு பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள். #ADMK #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.

    அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் வந்தனர்.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாளை 18 தொகுதி இடைத்தேர்தல் நேர்காணல் நடைபெற உள்ளது.

    அதன் பிறகு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை பற்றியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள்.

    சுமார் 45 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றது. #ADMK #EdappadiPalaniswami #OPS
    இரட்டை இலை சின்னத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கியது செல்லும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்தது. #DoubleLeafSymbol
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.

    இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த நிலையில்,  நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.



    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அப்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது செல்லும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். #DoubleLeafSymbol

    ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்தார்.

    சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரதுஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பி.எஸ். அணி இணைந்தது.

    இதற்கிடையே ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சபா நாயகர் முடிவில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் சக்கரபாணி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    இதன் மீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்றது. இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு காத்திருக்கிறது. இறுதி விசாரணை முடிந்தால் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.



    இந்த நிலையில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எ.ஏ.க்கைளை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி தி.மு.க., டி.டி.வி. தினகரன் தரப்பில் முறையிடப்பட்டது.

    ஆனால் விரைவாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைவாக விசாரிக்க முடியாது. வழக்கை பட்டியலிட முயற்சி செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது. #SupremeCourt #OPS #MLADisqualify
    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கு விருப்ப மனு வினியோகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தனர். #ParliamentElection #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு இன்று முதல் வருகிற 10-ந்தேதி பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று தொண்டர்களுக்கு விருப்ப மனு வழங்குவது தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்து தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை வழங்கினர்.

    இதில் அமைச்சர்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

    விருப்ப மனுக்களை பெறுவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

    தமிழ்மகன் உசேன், தளவாய்சுந்தரம், ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.

    தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. #ParliamentElection #ADMK
    தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓபிஎஸ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. #OPSYagam
    சென்னை:

    தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
    இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 
    தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை என்றார்.



    இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கோவில் கட்டி யாகம் நடத்தியது தொடர்பாக, துணை முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக, ஆனூர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார். அதில், உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்ததையொட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #OPSYagam
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள காளைகளில் சிறந்த காளை மற்றும் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. #Jallikattu #AlanganallurJallikattu
    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் பச்சைக் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    காளைகளை அடக்க காளையர்கள் களத்தில் ஆக்ரோஷமாக களமிறங்கி உள்ளனர். இன்றைய ஜல்லிக்கட்டில் 1400 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 848 வீரர்கள் களமிறங்கி உள்ளனர்.

    ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காமல் சீறிப்பாயும் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இருசக்கர வாகனங்கள், தங்கம், வெள்ளிக் காசுகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    இன்றைய ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்களில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு கார் பரிசாக வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது. இத்தகவலை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.



    ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்காக மதுரை எஸ்பி தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Jallikattu #AlanganallurJallikattu
    கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைக்க உள்ளார்.



    இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், அரசியலில் தங்களை நேரடியாக எதிர்க்க முடியாத சக்தியற்ற எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவதாக கூறினார்.

    “கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஓபிஎஸ் எச்சரித்தார்.

    தேர்தல் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என்றும் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் எழுந்ததால், இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
     
    இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.



    இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், வரும் 23ம் தேதி ஆஜராக வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும், தம்பிதுரை எம்.பி. ஜனவரி 22ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் எனவும் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission #OPanneerselvam
    எம்.ஜி.ஆரின் 31-வது நினைவுநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். #MGR #MGRMemorialDay
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.



    இதையொட்டி அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். #MGR #MGRMemorialDay

    ×