search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை"

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் கமி‌ஷனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமி‌ஷனர் அசோக் லாவாசா ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஒரு தொகுதி “காலியிடம்” என்று அறிவிக்கப்பட்டதும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 சட்டமன்ற தொகுதிகளும் 18.9.2017 அன்றே காலியானதாக அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கின் தீர்ப்பும் 25.10.2018 அன்றே அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதே போல் திருவாரூர், திருப்பரங்குன்றம்,ஓசூர், ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன.

    திருவாரூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தேதியில் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன.

    ஆகவே இந்த தொகுதிகளுக்கு எல்லாம் உடனடியாக தேர்தலை நடத்தவில்லையென்றால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட கடமையை தேர்தல் ஆணையம் மீறுவதாக அமைந்து விடும்.

    வருகிற ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக பத்திரிக்கை செய்திகள் வயிலாக அறிந்து கொண்டேன். ஆகவே மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    அவ்வாறு 39 மக்களவை தொகுதிக்கான தேர்தலுடன் இந்த சட்ட மன்ற தொகுதிகளின் தேர்தலையும் நடத்துவது வாக்காளர்களுக்கு வசதியாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கவும், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சவுகரியமாகவும் இருக்கும்.

    மேலும் அரசு கஜானாவிற்கு மற்றுமொரு தேர்தல் செலவு ஏற்படாமல் தவிர்க்கும். தனியாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்துமே இதனால் பயனடையும்.

    மக்களவைத் தேர்தலுக்கும், இந்த 21 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்தான் என்பதால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கோருவதில் நியாயம் இருக்கிறது.

    ஆகவே, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 21 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் நடைபெறவிருக்கின்ற 17-வது மக்களவை தேர்தலின் போதே இடைத்தேர்தலை நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதே போல் ஓசூர் தொகுதியை காலியிடமாக அறிவிக்கக் கோரி தமிழக கவர்னர், தலைமை தேர்தல் கமி‌ஷனர், சட்டசபை சபாநாயகர் ஆகியோருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு தெர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணரெட்டிக்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை, சிறப்பு நீதிமன்றம் பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவித்து கலவரம் செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 8-ன் கீழ் அவர் வகித்து வரும் சட்டமன்ற பதவி தானாகவே காலியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் “சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்பிற்கு” தடை பிறப்பிக்கவில்லை,

    அவர் காவல்துறையிடம் சரண்டர் ஆவதற்கு கால அவகாசத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

    எனவே ஓசூர் சட்டமன்ற தொகுதியை காலியானதாக அறிவித்து அதற்கு வழக்கமாக வெளியிட வேண்டிய அரசிதழ் அறிவிப்பை வெளியிடவும், தேர்தல் ஆணையத்திற்கு ஓசூர் தொகுதி காலியாகி விட்டது என்று அறிவிக்கவும் தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    அதே போல் தேர்தல் ஆணையமும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. ஆகவே ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழ் வெளியிட்டு, அத்தகவலை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அனுப்புமாறு தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவருக்கு கவர்னர் உத்தரவிட்டு அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க.வின் 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன் கொஞ்சம் கூட நேரத்தை வீணடிக்காமல் அவர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப் பேரவைத் தலைவர் தெரிவித்து, தேர்தல் ஆணையமும் உடனே நடவடிக்கைகளை மேற்கொண்டதை கவர்னருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இதில் சட்டப்பேரவைத் தலைவர் அமைதிகாப்பது ஒருதலைப்பட்சமானது, ஓரவஞ்சகமானது பாரபட்சமானது. இதில் கவர்னர் உடனடியாக தலையிட்டு அறிவுறுத்த வேண்டும்.

    கடிதத்தை கனிமொழி எம்.பி., தலைமையில் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் இன்று, புதுடெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று அளித்தனர்.

    இதே போல் தி.மு.க. கொறடா சக்கரபாணி, துணைக் கொறடா பிச்சாண்டி ஆகியோர் இன்று காலை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்தனர். #MKStalin

    மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைக்க தடையில்லை என்று சட்டசபையில் அமைச்சர் கருப்பணன் கூறினார். #MinisterKaruppannan #PlasticBan
    சென்னை:

    தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன் (தூத்துக்குடி) பேசியதும், அமைச்சர் கருப்பணன் குறுக் கிட்டு அளித்த பதில் வருமாறு:-

    மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நன்நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

    மறுசுழற்சி செய்ய முடியாத, கேடு விளைவிக்கக் கூடிய, மக்காத மற்றும் ஒருமுறை பயன்படுத்தி வீசக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக்குகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. 100 சதவீதம் பிளாஸ்டிக்கை தடை செய்யவில்லை.



    மிச்சர், முறுக்கு, கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்குகளுக்கு தடையில்லை. பிளாஸ்டிக் ஒழிப்பில் இது ஆரம்ப கட்டம்தான். இன்னும் பல மாற்றங்கள் வரும். அப்போது தெளிவுபடுத்தப்படும்.

    பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தின்பண்டங்களுக்கான பிளாஸ்டிக் பாக் கெட்டுகளை முறைப்படுத்துவதற்கான திட்டமும் அரசிடம் உள்ளது.

    இவ்வாறு விவாதம் நடந்தது.#MinisterKaruppannan #PlasticBan
    உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சுவாமியிடம் மனு அளித்தனர். #Farmersstruggle

    பல்லடம்:

    விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்டத்தில் சுல்தான் பேட்டை, திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.நேற்று 14-வது நாளாக காத்திருப்பு போராட்டமும், 8-வது நாளாக உண்ணாவிரதமும் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தாராபுரம் ராசு, பெருமாநல்லூர் தனபால், மேற்கு சடையம் பாளையம் பச்சியப்பன் ஆகியோர் மொட்டை அடித்தனர்.

    பின்னர் ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத பந்தலில் இருந்து ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள விநாயகர், அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அங்கு சுவாமியிடம் மனு அளித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, விளை நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை விதிக்க கோரி அரசியல்வாதிகள், அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தான் சுவாமியிடம் மனு அளித்தோம் என்றனர்.

    காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நேற்று மாலை 5 மணிக்கு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    அவர்களுக்கு விவசாயிகள் போராட்ட கூட்டு இயக்க தலைவர் கொங்கு ராஜாமணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.

    அடுத்த கட்டமாக விவசாயிகள் வருகிற 3-ந் தேதி சட்டசபையை முற்றுகையிட உள்ளனர். இதற்காக நாளை அவர்கள் சென்னை புறப்பட்டு செல்கிறார்கள். சட்டசபை முற்றுகை போராட்டத்திலும் வெற்றி கிடைக்காவிட்டால் வேறு மாதிரியான போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய மந்திரி மூர்த்தி, மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது-

    மற்ற மாநிலங்களில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வது போல் தமிழகத்திலும் கொண்டு செல்ல வேண்டும். விவசாயத்தை அழிக்கும் எந்த வளர்ச்சி திட்டமும் தேவை இல்லை.

    ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆற்றின் குறுக்கே அணை கட்டி விவசாயத்தை வளர்க்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் இந்த அரசு விவசாயத்தை அழித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    விவசாயத்திற்காக 4 அமைச்சர்கள் நியமிக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக் கலைத்துறை, நீர்வளம், நீர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கு தனி அமைச்சர்கள் நியமிக்க வேண்டும்.

    நமது முன்னோர்கள் தீட்டிய முன்னோடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டம், பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லா விட்டால் விவசாயத்தை பெருக்க முடியாது.வருகிற 3-ந் தேதி விவசாயிகள் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவு அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு பா.ம.க. துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Farmersstruggle

    சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. #KeralaAssemblySession #SabarimalaTempleIssue
    திருவனந்தபுரம் :

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்கு தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
     
    அதன்படி பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். போலீசாரின் இத்தகைய கெடுபிடிகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    கேரள சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சட்டசபையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை கடந்த இரு தினங்களாக ஒத்திவைக்கப்பட்டது.



    இந்நிலையில், 3-வது நாளாக இன்றும் கேரள சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    சபரிமலை கோவில் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    அவை நடவடிக்கைகளை ரத்து செய்து விட்டு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சபாநாயகர், உறுப்பினர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

    அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, சபரிமலையில் பக்தர்கள் நுழைவதை தடுக்கும்வகையில் பாஜகவும், தற்போது ஆட்சியில் உள்ள சிபிஐ அரசும் மறைமுகமாக கூட்டு சேர்ந்துள்ளன என கடுமையாக குற்றம் சாட்டினார். 

    இதைத்தொடர்ந்து அங்கு கூச்சல் குழப்பம் நிலவியதால் சபாநாயகர் அவையை மூன்றாவது நாளாக ஒத்திவைத்தார். #KeralaAssemblySession #SabarimalaTempleIssue 
    மும்பையில் 10 ஆண்டுகளில் 49 ஆயிரத்து 391 தீவிபத்துகள் நடந்ததாகவும், இதில் 609 பேர் பலியானதாகவும் சட்டசபையில் மந்திரி தெரிவித்தார். #RanjitPatil #FireAccident
    மும்பை :

    மும்பை புறநகர் பாந்திரா குடிசைப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி ஏற்பட்ட தீவிபத்து குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து மந்திரி ரஞ்சித் பாட்டீல் கூறியதாவது:-

    மும்பையில் 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மொத்தம் 49 ஆயிரத்து 391 தீவிபத்துகள் நடந்துள்ளன. இதில் 33 ஆயிரத்து 946 தீவிபத்துகள் மின்கசிவு காரணமாகவும், 1,116 கியாஸ் கசிவு காரணமாகவும், 14 ஆயிரத்து 329 தீவிபத்துகள் மற்ற பல காரணங்களாலும் நடந்துள்ளன.

    இந்த விபத்துகளில் சிக்கி 609 பேர் மற்றும் 5 தீயணைப்பு படையினர் இறந்துள்ளனர்.

    மேலும் ரூ. 110.42 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

    10 ஆண்டுகளில் பதிவான தீ விபத்துகளில் 3 ஆயிரத்து 151 விபத்துகள் குடிசைப்பகுதிகளில் பதிவாகியுள்ளன.

    மக்கள் நெருக்கடி மிகுந்த மற்றும் குடிசைப்பகுதியில் நடக்கும் தீ விபத்துகளை தடுக்க 17 சிறிய அளவிலான தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 17 விரைவாக செயல்படும் வாகனங்கள் மற்றும் 3 மினி தீயணைப்பு வாகனங்கள் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வாங்கப்பட்டுள்ளது.

    மேலும் 5 ஆயிரம் தீயணைப்பு வீரர்களுக்கு தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி கமலா மில் காம்பவுண்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 பேரும், சாக்கிநாக்கா பகுதியில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தீ விபத்தில் 12 பேரும் இறந்தது குறிப்பிடத்தக்கது. #RanjitPatil #FireAccident
    கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டசபை மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. #KarnatakaBypolls #Shimoga
    பெங்களூரு:

    கர்நாடகம் மாநிலத்தின் சிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ராமநகரம், ஜம்கண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

    இந்த தொகுதிகளில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியை எதிர்த்து பாஜக மட்டுமே களத்தில் உள்ளது. பெல்லாரி உள்பட மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 31 பேர் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஐந்து தொகுதிகளில் மொத்தம் 54,54,275 வாக்காளர்கள் உள்ளனர்.  பெல்லாரியில் 1901, சிவமோகாவில் 2002, மாண்டியாவில் 2047, ஜம்கண்டியில் 226, ராமநகரில் 277 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாகக் கருதப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



    மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஷிமோகா தொகுதியில் தன் மகன் ராகவேந்திரா வெற்றி பெறுவது 101 சதவீதம் உறுதி என்கிறார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இதேபோல் பெல்லாரி, ஜம்கண்டியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.  #KarnatakaBypolls #Shimoga
    சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் கருணாசுக்கு ஆதரவு கொடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். #Karunas #Speaker
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார்.

    இவர் அ.தி.மு.க. குறித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் விமர்சனம் செய்ததால் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கருணாஸ் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கும்படி கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த மனு சபாநாயகரின் ஆய்வில் உள்ளது.

    இதற்கிடையே ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள கருணாஸ், சபாநாயகரை பதவி நீககம் செய்யகோரி தனது வக்கீல்கள் மூலம் சட்டசபை செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.

    இந்த மனு சட்டசபை கூடும்போது முதல் அஜண்டாவில் வைக்கப்படும். 35 பேர் மெஜாரிட்டி இருந்தால் விவாதம் நடைபெறும். இல்லை என்றால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இதுகுறித்து சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது:-

    சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தனித் தீர்மானம் யார் கொண்டுவர நினைத்தாலும் எழுத்துப் பூர்வமாக 14 நாட்களுக்குள் முன்னறிவிப்புடன் சட்டசபை செயலாளருக்கும், அதன் பிரதியை சபாநாயகரிடமும் கொடுக்க வேண்டும்.

    இதை சட்டசபை கூடும்போது முதல்நாள் பட்டியலில் சேர்ப்போம். சட்டசபையில் இதற்கு 35 உறுப்பினர்களுக்கு குறையாமல் உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தரவேண்டும். போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லை என்றால் அனுமதி மறுக்கப்படும்.

    உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் 7 நாட்களுக்குள் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்படும். அப்போது துணை சபாநாயகர் இந்த சபையை நடத்துவார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



    சட்டசபையில் தி.மு.க.வுக்கு 87 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் கருணாசுக்கு ஆதரவு கொடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இதுபற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனிடம் கேட்டதற்கு கருணாஸ் தி.மு.க.விடம் ஆதரவு கேட்டால் அந்த நேரத்தில் கட்சி மேலிடம் இதை பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார். #Karunas #Speaker

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர். #FuelPrice #Congress
    ராய்ப்பூர்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

    கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடந்த 10ம் தேதி பாரத் பந்த் போராட்டம் நடத்தியது.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

    ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்த சைக்கிள்களை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து சட்டசபைக்குள் காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் சட்டசபையை சிறிது ஒத்திவைத்தார். #FuelPrice #Congress
    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால் ரூ.33,200 செலவாகும் என சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது. #LawPanel #SimultaneousPolls
    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஒரே நேர தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றியும் கட்ட கமிஷன் கூறியிருந்தது.

    அது குறித்து சட்ட கமிஷன் தனது அறிக்கையில், ‘பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால், 12.9 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் 12.3 லட்சம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் அலகுகள் கூடுதலாக தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து இருக்கிறது. இந்த 3 அலகுகளும் சேர்ந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றுக்கு ரூ.33,200 செலவாகும். அந்தவகையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்காக ரூ.4,555 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதைப்போல அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியதாகவும் சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. #LawPanel #SimultaneousPolls 
    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும் என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர்ராவ் கூறினார். #KrishnaRao #AmendmentBill
    ஐதராபாத்:

    பாராளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார்.

    இது தொடர்பாக ஐதராபாத்தில் தெலுங்கானா மாநில பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர்ராவ் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் திட்டம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. தொடர்ந்து வருகிறோம்.

    இதற்காக அரசியல் சாசனத்தில் உரிய திருத்தம் செய்வதற்கான மசோதாவை, விரைவில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அல்லது சிறப்பு கூட்டம் கூட்டியும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    தெலுங்கானாவை பொறுத்தமட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்தினால், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முதல்-மந்திரி சந்திர சேகரராவ் கணிக் கிறார்.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடத்த அவர் விரும்பவில்லை.

    நரேந்திர மோடி அரசுக்கு உள்ள நற்பெயரின் தாக்கம் பொதுத்தேர்தலில் ஏற்படும்போது, அது மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என கவலைப்படுகிறார்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களுடன் சட்டசபை தேர்தலை நடத்திவிடலாம் என முதல்-மந்திரி சந்திர சேகரராவ் சட்டசபையை கலைத்தாலும்கூட, தொழில்நுட்ப ரீதியில் அது சாத்தியம் கிடையாது. ஏனென்றால் இந்த 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே செய்து முடித்து விட்டது. அத்துடன் இன்னொரு மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தும் நிலையில் தேர்தல் கமிஷன் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.   #KrishnaRao #AmendmentBill
    நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக செய்யப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் குறித்து சட்ட ஆணையம் இந்த வாரம் சிபாரிசு செய்ய உள்ளது. #SimultaneousPolls #LawPanel
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, அனைத்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த முயன்று வருகிறது.

    வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடப்பதால், அதிக செலவு ஏற்படுவதுடன், நலத்திட்ட பணிகள் பாதிப்பு, பாதுகாப்பு படையினருக்கு பணிச்சுமை போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், இந்த பாதிப்புகளை தவிர்க்க விரும்புகிறது.



    மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையமும் சிபாரிசு செய்துள்ளது. இப்படி தேர்தல் நடத்த, மக்களவை, சட்டசபைகளின் பதவிக்காலம் தொடர்பான அரசியல் சட்டத்தின் 83(2), 172(1) ஆகிய பிரிவுகளிலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும்.

    இந்த திருத்தங்கள் உள்பட சட்டரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து சட்ட ஆணையம் இந்த வாரம் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய உள்ளது. இத்தகவல்களை சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    சட்ட ஆணையத்தின் சிபாரிசுகள், மத்திய அரசை கட்டுப்படுத்தாது. இருப்பினும், இந்த சிபாரிசுகள், அரசியல் கட்சிகளிடையே ஒரு விவாதத்தை உருவாக்க உதவும் என்று கருதப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், சட்ட ஆணையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை 2 கட்டங்களாக செய்யலாம். 2019-ம் ஆண்டு, சில மாநிலங்களுக்கும், 2024-ம் ஆண்டு சில மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தலாம். இதற்காக, அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தங்கள் செய்ய வேண்டும். அவற்றுக்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    ஒருவேளை, இடையிலேயே ஒரு அரசு கவிழ்ந்தால், புதிதாக அமையும் மாற்று அரசு, மீதி பதவிக்காலத்துக்குத்தான் பதவி வகிக்க வேண்டுமே தவிர, இன்னொரு 5 ஆண்டுகளுக்கு அல்ல.

    ஒரு அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும்போது, அதன் பின்னாலேயே நம்பிக்கை தீர்மானமும் கொண்டுவர வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இல்லாதநிலையில், முந்தைய அரசையே நீடிக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SimultaneousPolls #LawPanel
    பாராளுமன்றம்- சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார். #Parliament #Assembly #SimultaneousElections

    பாட்னா:

    உலகில் பல நாடுகளில் பாராளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.

    அதேபோல் இந்தியாவிலும் பாராளுமன்றத்துடன் சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதோடு சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் நடத்தலாமா? என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இது சம்பந்தமாக மத்திய தேர்தல் கமி‌ஷன் அனைத்து கட்சிகளுடன் ஏற்கனவே ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளது.


     

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் கூறியதாவது:-

    ஒரே நேரத்தில் பாராளுமன்றம்- சட்டசபை தேர்தல் நடத்துவது சிறப்பான ஒன்று. ஆனால், வரும் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் நடத்துவதற்கு சாத்தியமில்லை.

    ஏனென்றால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக விரிவாக ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. அதற்கு கால அவகாசம் தேவை. பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அதற்கு போதிய காலம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பீகாரில் முக்கிய எதிர்க் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு தேர்தல் நடத்தினால் மாநில கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டு விடும். இது, கூட்டாட்சி தத்துவத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று அந்த கட்சி கூறியுள்ளது.

    பீகாரில் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    ஆனால், தொகுதி பங்கீடு சம்பந்தமாக இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. ஐக்கிய ஜனதா தளத்துக்கு குறைவான தொகுதிகளையே ஒதுக்குவதாக பாரதிய ஜனதா கூறுவதால் ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே, கூட்டணியில் சிக்கல் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    ×