search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101697"

    பள்ளி கட்டிடம் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், என்ஜினீயர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் முத்தூர் புதுக்காலனியில் அழகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மகரிஷி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் தரை தளத்துடன் சேர்த்து 2 தளங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஒடிசா மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இப்பள்ளியில் தரை தளத்திலும், முதல் தளத்திலும் கடந்த 10 நாட்களுக்கு முன் கான்கிரீட் போட்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கட்டிடத்தின் 2-வது தளத்திலும் மேற்கூரை அமைப்பதற்கு சென்ட்ரிங் கம்பிகள் கட்டி கான்கிரீட் கலவை போடும் பணியில் 19 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது திடீரென 2-வது தளம் இடிந்து விழுந்தது. மேலும் முதல் தளத்தின் மேற்கூரையும், தரை தளத்தின் மேற்கூரையும் மொத்தமாக இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்குள் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்கள் அலறினார்கள். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த தொழிலாளர்களும், பொது மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 15 தொழிலாளர்களை மீட்டனர். இதில் ஒடிசாவை சேர்ந்த கண்ணா (18) என்பவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

    ஒடிசாவை சேர்ந்த லட்சுமி நாராயணன் (18), நரேன்(24), வசந்த் (35), நிரஞ்சன் (20), பிண்டு (20), தேவா (19), தினேஷ் (25) கொல்கத்தாவை சேர்ந்த ஜோதிப் (30), முத்தூர் அஜித் (21), ராமப்பட்டிணத்தை சேர்ந்த சதிஷ் (20), ஜமீன் முத்தூரை சேர்ந்த நரேன் (27), மேற்கு வங்காளத்தை சேர்ந்த ராகுல் (28), நல்லூரை சேர்ந்த மேற்பார்வையாளர் சிவமணி (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



    அவர்கள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சம்பவம் நடந்த இடத்தை தாசில்தார் செல்வபாண்டி, டி.எஸ்.பி. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை சப்-கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கட்டிடம் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளரும், கட்டிட உரிமையாளருமான அழகேஸ்வரி, என்ஜினீயர் கணேஷ்குமார், மேற்பார்வையாளர் சிவமணி, சிமெண்ட் கலவை கலக்கும் எந்திர ஆபரேட்டர் சுமன் ஆகிய 4 பேர் மீது பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    எந்திரத்தை பாதுகாப்பு இன்றி இயக்குதல், விபத்தை ஏற்படுத்துதல், தவறான முறையில் பணி செய்ய தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கட்டிடம் இடிந்து விழுந்து காயம் அடைந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று காலை பார்த்து ஆறுதல் கூறினார்.

    மேலும் இடிந்து விழுந்த கட்டிடத்தையும் அவர் பார்வையிட்டார்.

    இடிந்த பள்ளி கட்டிடம் இந்த கல்வி ஆண்டே திறக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் கட்டப்பட்டதாகவும், தரம் இல்லாமலும், ஒரு தளத்திற்கும் மற்ற தளத்திற்கும் போதிய கால இடைவெளி இல்லாமலும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களை சேர்த்து கட்டணமும் பெற்று விட்டதால் மாணவர்களை சில நாட்களில் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு கட்டிட பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்துள்ளது.

    இதன் காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். #tamilnews
    ராதாபுரம் அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை கிணற்றில் வீசி கொன்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வி.என்.குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 80). இவரது கணவர் சுவாமிதாஸ் இறந்துவிட்டார். அவரது 3மகள்கள் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் சுப்புலட்சுமி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி ஆனந்தராஜின் மனைவி ஜெயக்கொடி என்பவருக்குமிடையே பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்துவந்தது. நேற்றுமாலை ஜெயக்கொடி தெருவில் உள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மூதாட்டி சுப்புலட்சுமியும் தண்ணீர் பிடிக்க சென்றார். அந்த நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயக்கொடி தனது கணவர் ஆனந்தராஜிடம் (48) கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு வீட்டில் தனியாக இருந்த சுப்புலட்சுமியை அவர் தாக்கினாராம். பின்னர் அவரை அலேக்காக தூக்கிச் சென்று ஊருக்கு அருகில் உள்ள கிணற்றுக்குள் வீசினார். அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தலையில் அடிபட்டு சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து ஆனந்தராஜ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து ராதாபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் கிடந்த சுப்புலட்சுமியின் உடலை மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

    ஆனந்தராஜ் மீது ஏற்கனவே அவரது தந்தையை கொலை செய்த வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    காங்கயம் அருகே வடமாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ளது பரஞ்சேர் வழி கிராமம். இக்கிராமத்தில் தனியார் குவாரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் நாயக் (23) என்பவரும் அங்கு வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவர் வேலைக்கு செல்லவில்லை. அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது சந்தோஷ் நாயக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் அவர் தலையில் அம்மிக் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி, இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் கொலை செய்யப்பட்ட சந்தோஷ் நாயக் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ் நாயக்குடன் அவரது நண்பர்கள் 2 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர். 3 பேருக்கும் குடிபழக்கம் இருந்துள்ளது. போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தோஷ் நாயக்கை அவரது நண்பர்கள் கொலை செய்து விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை தேடி வருகிறார்கள்.
    4½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவள்ளூர்:

    சென்னை பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த 4½ வயது சிறுமியை அந்த சிறுமியின் தாயார் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு விட்டிருந்தார்.

    27-1-2012 அன்று கடைக்கு பென்சில் வாங்குவதற்கு சென்ற அந்த சிறுமியை சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மணி என்கிற மணிகண்டன் (35) முகப்பேர் கிழக்கு நக்கீரன் சாலையில் உள்ள பாழடைந்த குழந்தைகள் மைய கட்டிடத்திற்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

    குடிபோதையில் அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் நகங்களால் கீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரவு முழுவதும் அந்த சிறுமியை சித்ரவதை செய்துள்ளார்.

    28-1-2012 அன்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுமியுடன் இருந்த மணிகண்டனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர் பொதுமக்கள் மீது கற்களை வீசி அவர்களை விரட்டியுள்ளார்.

    பின்னர் அவர்கள் சென்னை முகப்பேர் ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்து அந்த சிறுமியை மீட்டனர். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    சட்டத்திற்கு புறம்பாக சிறுமியை கடத்தி அடைத்து வைத்து கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுமியை அடித்து மிரட்டி துன்புறுத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என மணி கண்டனுக்கு மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    சாத்தான்குளம் அருகே பணத்தகராறில் தொழிலாளி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கள்ளம்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்(வயது45). இவர் சென்னையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லிங்கம்(50) என்பவரிடம் ரூ.1000 கடன் வாங்கினாராம். அதை திரும்ப கொடுக்க தாமதமானது. இது லிங்கத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    உடனே தனது உறவினர் ஜெகன் என்பவருடன் சென்று செந்திலிடம் பணத்தை கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கம், ஜெகன் ஆகியோர் சேர்ந்து செந்திலை சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதை பார்த்த லிங்கமும், ஜெகனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    செந்திலின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட செந்திலுக்கு கலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.#tamilnews
    தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000த்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தனகோபால் (வயது 57). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை தனகோபாலிடம் காட்டி அவரிடமிருந்து ரூ.1000 -த்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தனகோபால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தனகோபாலிடம் பணத்தை பறித்து சென்றவர் இடையக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×