search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பிதுரை"

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க. பல கட்ட முயற்சிகளை செய்து வருவதாக அரவக்குறிச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #DMK #BJP
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான மு. தம்பித்துரை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் இன்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார்.

    அப்போது அரவக்குறிச்சி கொத்தாம்பாளையம் பகுதியில் தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கு மொழியில் குறைகளை கேட்டார். பின்னர் பள்ளப்பட்டி பகுதியில் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் மாதிரி கிராமம் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதனால் அந்த திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. கரூரில் சாயப்பூங்கா திட்டத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களையும் சமாதானம் செய்து விரைவில் அந்த திட்டம் செயல்படும் சூழல் ஏற்படுத்தப்படும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் மனு அளித்துள்ளது. இறுதி முடிவினை கவர்னர் தான் எடுக்க வேண்டும்.



    தி.மு.க. 1999-ஆம் ஆண்டு முதல் 2004 -ம் ஆண்டு வரை பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்துள்ளது. அந்த உறவினை புதுப்பிப்பதாக அவர்களின் சமீபத்திய நடவடிக்கை அமைந்துள்ளன. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி வீட்டில் இருந்தபோது பிரதமர் மோடி அவரை சந்தித்தார். அதில் இருந்து உறவு தொடர்கிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க. பல கட்ட முயற்சிகளை செய்து வருகிறது.

    தமிழகத்தில் காவித் தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது பா.ஜ.க. பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #DMK #BJP
    மத்திய அரசை எதிர்த்து போராட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார் என்று பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை கூறினார். #Thambidurai #MKStalin
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்தார். அப்போது அணியாப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிவாளர், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை பொறுத்தவரை அரசின் முடிவை ஆளுனர் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய பாரத் பந்தில் தி.மு.க. பங்கேற்றும் பிசுபிசுத்து போனது. காரணம் மத்திய அரசை எதிர்த்து போராட மு.க.ஸ்டாலின் தயங்குகிறார்.



    பாரத ரத்னா வேண்டுமா? பாரத் பந்த் வேண்டுமா? என்றால் பாரத ரத்னா கலைஞருக்கு தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வந்த பின் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.

    ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது என்றால் தேர்தல் காரணமாக குறைக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கும். ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டி நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது. இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்பதால் விலை குறைக்க வாய்ப்பில்லை. இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்தால், விலையை இன்னும் உயர்த்துவார்கள் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #PetrolDieselPrice #GST #ThambiDurai
    சென்னை:

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கும் விஷயத்தில் மத்திய அரசின்  செயல்பாட்டை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதிமுகவைப் பொருத்தவரை பெட்ரோல், டீசல் விலை குறையவேண்டும்.
    தனியாருக்கு தந்த உரிமையை மீண்டும் அரசே ஏற்று விலையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.


    பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்கவேண்டும். அதேசமயம் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விட்டு எல்லா உரிமையையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டால் விலையை இன்னும் உயர்த்தத்தான் செய்வார்கள். எனவே ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வருவதை ஏற்க முடியாது.

    மாநில அரசுக்கு என சில உரிமைகள் இருக்கின்றன. மாநில அரசுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. ஆகவே, முழுவதையும் ஜிஎஸ்டியிடம் கொடுத்து விட்டால் நாங்கள் கையேந்தி நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார். #PetrolDieselPrice #GST #ThambiDurai
    மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதி திட்டம் தீட்டி வருவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #dmk #admk
    கரூர்:

    பழைய ஜெயங்கொண்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசின் செயல்பாட்டை அ.தி.மு.க. கண்டிக்கிறது. பா.ஜ.க. அரசின் கையாலாகாத தனமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்.

    முந்தைய காங்கிரஸ் அரசு, தற்போதைய பா.ஜ.க. அரசின் தவறான கொள்கையால் தான் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க.-பா.ஜ.க. ரகசிய உடன்பாடு உறவு வைத்து வருகிறது. இதனால் இருவரும் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகின்றனர். குட்கா விவகாரத்தில் தேவையில்லாமல் அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    சி.பி.ஐ., வருமான வரி சோதனை என எந்த அச்சுறுத்தல்களுக்கும் அ.தி.மு.க. அரசு பயப்படாது. ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சோதனை நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தி.மு.க.வுடன் கூட்டணி சேர தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதி திட்டம் தீட்டி வருகிறது.

    கேள்வி:- ஜெயலலிதா இருக்கும் போது தமிழக அமைச்சர்கள் தவறு செய்தால் உடனடியாக அமைச்சர்களை நீக்கி விடுவாரே?

    ப: ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாடு வேறு. தற்போது உள்ளவர்களின் ஆட்சி நிலைப்பாடு வேறு.

    கே: குட்கா ஊழல் விசாரணையில் ஜார்ஜ் ஊழல் நடந்தது உண்மை, என்னை வேண்டுமென்றே சிக்க வைத்துவிட்டனர் என கூறியுள்ளாரே?

    ப: ஜார்ஜ், பதவியில் இருக்கும் போது சொல்லி இருக்கலாமே? இப்போது, கடிதம் எழுதியிருந்தேன் என கூறுவதை ஏற்க முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #dmk #admk #centralgovernment
    மக்களவைத் தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இரு கட்சிகளும் அரசியல் என்ற முறையில் நட்புடன் இருப்பதாகவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
    திருச்சி:

    மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி பேரணி நடத்தியது தொடர்பான செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மீது வேண்டுமென்றே புகார் கூறுகின்றனர். அமைச்சரின் செயல்பாடுகளை முடக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் அரசு நல்ல முடிவை எடுக்கும்.

    மக்களவைத் தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசியல் என்ற முறையில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. நட்புடன் இருக்கிறது. ஆனால், அரசு என்ற முறையில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நட்புடன் இருக்கிறது.
     
    இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #LSPolls
    மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது, அந்த சக்தியும் அவருக்கு கிடையாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #Thambidurai #MKStalin
    கரூர்:

    கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இந்தியாவிலேயே தரமானதாக மாற்ற முயற்சி செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இதில் நர்சிங் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி போன்றவற்றை கொண்டு வந்து ஹெல்த் சிட்டியாக மாற்ற உள்ளோம்.



    மு.க.ஸ்டாலின் ஒரு மேடை பேச்சாளர் போன்று பேசி உள்ளார். அவர் பொறுப்பாக பேசியதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் தனது முயற்சியால், திறமையால் தலைவர் பதவிக்கு வந்ததாகவும் தெரியவில்லை. அவர் தலைவராக பதவி ஏற்றதை வாரிசு அரசியலாகத்தான் பார்க்க முடியும். மூத்தவர் (அழகிரி) இருக்கும் போது இளையவருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது.

    கலைஞரின் தகுதி, பேச்சாற்றல் ஆகியவை தனக்கு இல்லை என்று மு.க.ஸ்டாலினே ஒப்புக்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலினால் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த முடியாது, அந்த சக்தியும் அவருக்கு கிடையாது. கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்காத விரக்தியில் பா.ஜ.க.வை விமர்சித்து உள்ளார்.

    1999-ல் காவிரி பிரச்சினைக்காக வாஜ்பாய் அரசில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. அப்போது அந்த ஆட்சியை தாங்கி பிடித்தது தி.மு.க.தான். தற்போது அவர்கள் காவியை பற்றி பேசுகிறார்கள். இது வினோதமாக இருக்கிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மத்திய அரசுடன் உறவில் இருந்தாலும் உரிமையில் விட்டு கொடுக்கவில்லை. முத்தலாக்கை எதிர்த்து பேசி உள்ளோம். எல்லாவற்றிற்கும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை. மத்திய அரசின் பணமதிப்பிழப்பால் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. உண்மையில் வியாபாரிகள், விவசாயிகள் கஷ்டப்பட்டார்கள்.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசின் சிபாரிசை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது தவறானது. அவர்கள் ஒரு சில ஆவணங்களை கேட்டு உள்ளனர். அதனை தமிழக அரசு வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin

    பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #Thambidurai
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்று கட்சியின் கருத்துக்களை முன்வைத்தார்.

    இக்கூட்டத்தில் பங்கேற்ற தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி அதிமுக சார்பில் வலியுறுத்தினோம். வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர்கூட விடுபடக்கூடாது என கூறினோம்.

    தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் வரவேற்போம். வாக்குச்சீட்டு முறையோ, மின்னணு எந்திரம் முறையோ எதுவாக இருந்தாலும் தவறு நேரக்கூடாது. வாக்குச்சீட்டு முறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டதால் அதிமுகவுக்கு ஆட்சேபம் இல்லை.



    பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தம்பிதுரை எம்பி பேசினார். #thambidurai #parliamentelection

    கரூர்:

    கரூரில் இன்று பாராளு மன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால் தீவிரவாதம் பெருகி வருவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது தவறான கருத்து. மத்தியில் ஆளும் மோடி அரசும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசும் வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் ஆண்ட காலத்திலும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தது. ஆகவே தீவிரவாதத்திற்கும், வேலை வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.

    மு.க. அழகிரி தி.மு.க.வில் இருக்கும் போது தான் 2014 பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2016 சட்ட மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது. பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்ற வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெறும். சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் இரட்டைஇலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #thambidurai #parliamentelection

    அரசியலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #EdappadiPalaniswami #Scam
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது அரசியலுக்காகத்தான். ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும், அந்த கட்சிகள் மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.

    ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். எதிர்கட்சிகள் எதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். தனக்கு பயமில்லை எனவும், எதையும் சந்திக்க தயாராக உள்ளோம் என முதல்வரே கூறியுள்ளார். ஆகவே இந்த அ.தி.மு.க. அரசு எதற்கும் பயப்படாது.

    முல்லை பெரியாறு அணை பகுதியில் மட்டும் மழை பொழிந்து கேரளாவில் வெள்ளம் ஏற்படவில்லை. பாலக்காட்டிலும் மழை பெய்துள்ளது. பாலக்காட்டில் பெய்த மழை நீர் முல்லை பெரியாறு அணைக்கு வந்ததா?. அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு அரசியலுக்காக இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


    எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஊழல், கமி‌ஷன் நடைபெறுவதாக கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சர்க்காரியா ஊழல் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் நடைபெற்றது.

    2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கீழ் கோர்ட்டில் தான் தி.மு.க. விடுதலை பெற்றுள்ளது. ஆனால் மேல்மட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்களைத்தான் இன்றுவரை கூறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். #ADMK #ThambiDurai #EdappadiPalaniswami #Scam
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பிதுரை எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சி தொடங்கவில்லை. எனவே அவரது குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் அளிக்க விரும்பவில்லை. இருப்பினும் ஒன்றை சொல்கிறேன்.

    மறைந்த கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நான் (தம்பித்துரை) ஆகிய 3 பேரும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். இதை இல்லையென யாராவது சொல்ல முடியுமா? தமிழக அரசின் சார்பில் என்ன மரியாதை செய்ய வேண்டுமோ? அது எல்லாம் கருணாநிதிக்கு செய்யப்பட்டது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? எனவே பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது. புதைக்க இடம் கொடுக்காமலா? மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.


    அண்ணா, எம்.ஜி.ஆர். உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தையே காலி செய்ய வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. ஆகவே சட்ட சிக்கல்கள் இருந்ததால் கிண்டியில் இடம் ஒதுக்குவதாக முதல்வர் தெரிவித்தார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மெரினாவில் அடக்கம் செய்தார்கள். அதற்கு மேல் தமிழக அரசும் ஆட்சேபனை செய்யவில்லை. எனவே கருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்காதீர்கள்.

    கருணாநிதி முதல்வராக எம்.ஜி.ஆர். உழைத்தார். அவரை கட்சியில் இருந்து தி.மு.க.வினர் நீக்கியதால் மக்கள் அவருக்கு முன்னும், பின்னும் இருந்து இயக்கத்தை உருவாக்கினார்கள். அ.தி.மு.க. தனிப்பட்ட ஒருவரால் தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. அது மக்கள் இயக்கம். மக்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். #ADMK #ThambiDurai #KarunanidhiFuneral
    தமிழுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் பாடுபட்ட கருணாநிதி பூரண உடல் நலம் பெற வேண்டுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். . #ADMK #ThambiDurai #DMK #Karunanidhi
    கரூர்:

    கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் அன்பழகன் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மருத்துவமனையும் செயல்படும்.

    உள்ளாட்சி தேர்தலை கண்டு அ.தி.மு.க.வுக்கு பயம் இல்லை. ஜெயலலிதா இருந்த போதே வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. தி.மு.க.தான் கோர்ட்டுக்கு சென்று இடைக்கால தடை வாங்கியது. மத்திய அரசு ரூ.2000 கோடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது. மீதம் உள்ள தொகையும் விரைவில் தருவதாக கூறியுள்ளனர்.


    தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது எங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது. தமிழுக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் பாடுபட்ட அவர் பூரண உடல் நலம் பெற வேண்டுகிறேன்.

    அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. கருத்து கணிப்புகளிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகி கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயார். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #DMK #Karunanidhi
    பள்ளப்பட்டியில் அம்மா மருந்தகத்தினை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி ஒன்றியம் பள்ளப்பட்டியில் அம்மா மருந்தகத்தை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மூலம் கரூர் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் கரூரின் மையப்பகுதியில் அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதேபோன்று பள்ளப்பட்டி பகுதியிலுள்ள மக்கள் பயனடையும் வகையில் பள்ளப்பட்டியிலும் அம்மா மருந்தகம் திறக்கப்பட்டது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள 5,000 மருந்து வகைகள் உள்ளது. உயிர் காக்கும் மருந்து வகைகளும் உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மருந்து வகைகளும் 15 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். மேலும் டோர் டெலிவரி வசதியும் உள்ளது. இம்மருந்தகத்தில் மருந்து வகைகள் கூட்டுறவு மையக்கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்து விற்பனை செய்யப்படுகிறது என கூட்டுறவு விற்பனை பண்டக சாலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாகம்பள்ளி ஊராட்சி மலைக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், வெங்கிடாபுரம் பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தையும் அப்பகுதி மாணவ- மாணவிகள் பயனடையும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் பிரபு, கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாக இயக்குனர் கணேசன், தலைவர் வை.நெடுஞ்செழியன் துணை பதிவாளர் ஜெயபிரகலாதன், மேலாண்மை இயக்குனர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×