search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறண்டது"

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டன. கடனாநதி, ராமநதி பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் 11 அணைகள் உள்ளன. இதில் அதிக கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய அணையாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 118 அடி, மொத்த கொள்ளளவு 5511 மில்லியன் கன அடி ஆகும்.



    அதற்கு அடுத்ததாக பாபநாசம் அணை மிகப் பெரிய அணையாக உள்ளது. இதன் மொத்த அடி 143, கொள்ளளவு 5500 மில்லியன் கன அடி ஆகும். இது போக சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன.

    இந்த 11 அணைகளில் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய 3 அணைகளில் எப்போதும் தண்ணீர் இருப்பு இருக்கும். இந்த அணைகளில் தண்ணீர் இல்லாவிடில், குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விடும். தற்போது பாபநாசம் அணையில் சகதியும், தண்ணீரும் சேர்ந்து நீர்மட்டம் 9 அடி மட்டுமே உள்ளது.

    குடிநீருக்காக குறைந்தது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியே செல்கிறது.

    இதனால் குடிநீருக்காக மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது. மணி முத்தாறு அணையில் தற்போது 64.31 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த தண்ணீர் பச்சையாறு வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் இப்போது பச்சையாறு பகுதியில் உள்ள ஆகாய தாமரைகள் தாமிரபரணி ஆறு வரை பரவி உள்ளது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையிலும் தற்போது 47.41 அடியாக நீர்மட்டம் உள்ளது.

    பாபநாசம் அணையும் சகதி தண்ணீர் மட்டும் உள்ளதால் அந்த அணையில் மற்ற பகுதிகள் வறண்டு விட்டது. அணையின் அடிப்பகுதியில் உள்ள மரங்களின் வேர் பகுதி மட்டும் காய்ந்து வெளியே தெரிகிறது.

    இதுபோல கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. இங்கு பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் மணல் நிரம்பி சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது. இந்த அணைகளின் ஒரு ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் போல் லேசாக தண்ணீர் கசிந்து செல்கிறது.

    இதனால் இந்த அணைகளில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பா நதியிலும் பல ஆண்டுகளாக தூர்வாராமல் 23 அடி வரை மணல் நிரம்பி உள்ளது. அதன் மேல் 1½ அடி உயரத்துக்கு சிறிதளவு தண்ணீர் உள்ளது. மற்றபடி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

    இதுபோல குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளிலும் சிறி தளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நீரோட்டம் இல்லாததால் இந்த அணைகளும் வறண்டு விட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 அணைகளும் வறண்டு மழைக்காக காத்திருக்கிறது.

    எப்போதும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழும் அகத்தியர் அருவியில் தற்போது மிக குறைவாகவே தண்ணீர் விழுகிறது. குற்றால அருவிகளில் எந்த அருவியிலும் தண்ணீர் விழவில்லை. குற்றாலம் மெயினருவி முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது மணிமுத்தாறு அணை நீர்மட்டத்தை வைத்து குடிநீர் தேவை மட்டும் சமாளிக்கப்படுகிறது.

    வழக்கமாக ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வேண்டும். சில ஆண்டுகளில் முன்னதாக மே கடைசி வாரமே தென்மேற்கு பருவ மழை பெய்து விடும். எனவே தென் மாவட்ட மக்கள் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். தென்மேற்கு பருவ மழை பெய்தால் தான் வறண்டு உள்ள 9 ஆணைகளுக்கும் தண்ணீர் வரும். இல்லாவிடில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
    செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு தரிசு நிலமாக காணப்படுகிறது. 15 ஆண்டுக்கு பின்னர் ஏரி மீண்டும் தற்போது வறண்டுள்ளது.
    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், பூண்டி ஏரிகள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய ஏரியாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.

    மொத்தம் 6303 ஏக்கர் பரப்பளவில் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. ஏரியில் 3645 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்கலாம். நீர்மட்டம் 24 அடி ஆகும்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களில் இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும் நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளிலும் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு வேகமாக குறைந்ததால் அங்கு கடந்த மாதம் 2-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் எடுப்பது நிறுத்தப்பட்டது.

    குளம் போல் ஆங்காங்கே தேங்கி இருந்த சிறிதளவு தண்ணீர் மட்டும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு தினமும் 6 கனஅடி வீதம் அனுப்பப்படுகிறது.

    அதுவும் சில நாட்களில் தண்ணீரில் அதிக அளவு மண் கலந்து வந்ததால் நிறுத்தப்பட்டது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு தரிசு நிலமாக காணப்படுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் வறண்டு இருந்தது. தற்போது 15 ஆண்டுக்கு பின்னர் ஏரி மீண்டும் வறண்டு உள்ளது.

    இதேபோல் ஏற்கனவே சோழவரம் ஏரி வறண்டு விட்டது. அங்கிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியில் 153 மில்லியன் கனஅடியும் (மொத்த கொள்ளளவு 3231) மி.கன அடி) புழல் ஏரியில் 57 மி.கன அடியும் (3,300 மி.கனஅடி) தண்ணீர் இருக்கிறது.

    இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டும் இந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஏரிகள் முழுவதும் வறண்டு வருவதால் தண்ணீர் பிரச்சினை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    குடிநீர் பிரச்சினையை சமாளிக்க விவசாய கிணற்று நீர், கல்குவாரி நீர், கூடுதலாக எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    செம்பரம்பாக்கம் ஏரியை ரூ. 191 கோடிக்கு முழுவதுமாக தூர்வார ஆழப்படுத்த கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தின்படி 6,303 ஏக்கர் பரப்பளவுக்கும், ஒரு மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரப்படும்.

    6 ஆண்டுகள் இந்த பணியை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் முழு கொள்ளளவிலும் தூர்வார முடியாது என்பதால் பகுதி பகுதியாக பணி செய்யப்படும். தூர்வாரும் பணியில் மொத்தம் ஒரு கோடியே 51 லட்சத்து 80 ஆயிரத்து 423 கன மீட்டர் மண் எடுக்கப்படும்.

    இதன் மூலம் ஏரியின் முழு கொள்ளளவான 3645 மி.கனஅடிக்கு மேல் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் கோடை காலத்தில் கூடுதலாக சில மாதங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும்.

    தற்போது புழல் ஏரியில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் உடனடியாக பராமரிப்பு பணியை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவியதால் தலையணை ஆறும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். மேலும் அங்கு நம்பியாறு ஓடுகிறது. நம்பி கோவில் அருகில் இருந்து மலையடிவாரத்தில் செக் போஸ்ட் வரையுள்ள நம்பியாற்றில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சென்று குளிப்பது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருக்குறுங்குடி மலையில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து நெல்லை உள்ளிட்ட பிற பகுதிகளில் பெய்யும் அளவு கூட திருக்குறுங்குடி மலையில் மழை பெய்யவில்லை. கடும் வெயிலினால் மலையில் வெப்பம் நிலவுகிறது. இதையடுத்து நம்பியாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    செக் போஸ்ட் அருகில் உள்ள தடுப்பணையை தாண்டி சிறிதளவு தண்ணீரே விழுகிறது. இந்த தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளிக்க ஏதுவாக இல்லை. தற்போது கோடை விடுமுறை என்பதால் திருக்குறுங்குடி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீர்வரத்து குறைந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதேபோல களக்காடு தலையணையிலும் குறைவாகவே தண்ணீர் குறைந்துவிட்டது. மலைப் பகுதியில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வறட்சி நிலவியதால் தலையணை ஆறும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே நம்பியாறு, தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×