search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என அந்த ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் இன்று தெரிவித்தார். #Sterlite
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த புதிய விதிமுறைகளை நிறைவேற்ற எங்களுக்கும் இன்னும் நேரம் இருக்கிறது. புதிய நிபந்தனைகளை கடைபிடிப்போம்.



    தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதற்கான அனுமதி கேட்டிருக்கிறோம்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலத்திட்டங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். 

    15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும். 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.  மேலும், ஒரு பள்ளி, ஒரு மருத்துவமனை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். #Sterlite
    தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கமிட்டனர். #SterliteProtest #NGT
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து மே மாதம் 28-ந்தேதி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி வழக்கு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர்.

    பல அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை நடத்தவும் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போராட்டத்தை தூண்டும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து சந்தேகப்படும்படியாக யாராவது ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களுக்கு வந்து உள்ளார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    பஸ் நிலையம், ரெயில் நிலையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தூத்துக்குடிக்கு வரும் அனைத்து வழிகளிலும் போலீசார் 8 சோதனைச்சாவடிகளை அமைத்து வாகன தணிக்கை செய்து வருகிறார்கள். தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்களில் சந்தேகப்படும்படியாக வெளியாட்கள் யாராவது தங்கி உள்ளனரா? என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு ஏராளமானோர் திரண்டு வரப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கலெக்டர் அலுவல‌கத்துக்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    மக்கள் கூட்டமாக கூடாமல் அமைதியாக மனு கொடுத்து செல்ல வேண்டும் என்று ஒலிப்பெருக்கிகள் மூலமாக அறிவிக்கப்பட்டது. ஆட்டோகளிலும் ஒலிப்பெருக்கி கட்டி அறிவிப்பு செய்யப்பட்டது.

    இதனிடையே தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் இயற்றவேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்ற வலியுறுத்தி தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தீபா பேரவையினர் வாயில் கருப்பு துணி கட்டி வாயை மூடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்திய தீபா பேரவையினர்

    போராட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை மாவட்ட செயலாளர் தொண்டன் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். #SterliteProtest #NGT
    மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னைக்கு தென் கிழக்கே 930 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து ஓங்கோலுக்கும்- காக்கிநாடாவுக்கும் இடையே வருகிற 17-ந் தேதி பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை பிரமுத்துவிளையை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருடைய தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இதனால் இளம்பெண்ணின் தாயார் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தாயார் வேலைக்கு வெளியே சென்று விட்ட நிலையில், இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய தந்தை மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த தந்தை, மகளை அடித்து உதைத்ததுடன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த தாயார், கணவரிடம் இருந்து மகளை மீட்டார்.

    இதுகுறித்து இளம்பெண் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தையை கைது செய்தார். கைதான அவர் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்ததையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் குறைந்த அளவே பெய்து வருகிறது. நவம்பர் மாதம் சராசரி மழை அளவான 208.20 மில்லி மீட்டரை விட குறைவாக 186.11 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.

    இந்த மாதம் சராசரி மழை அளவான 111.60 மில்லி மீட்டர் பெய்தால் தான் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானதாக இருக்கும். இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதியே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1841.55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று 124.15 அடியாக உள்ளது. சேர்வ லாறு அணை நீர்மட்டமும் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 134.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 103.60 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி -78.20, ராமநதி-69.25, கருப்பாநதி-67.86, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு -19.61, கொடுமுடியாறு-37, அடவிநயினார்-94.75 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 54 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் மலை பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், அம்பையில் 38.2 மில்லி மீட்டர் மழையும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 32.8 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக வைப்பாறில் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநதி-54, பாபநாசம்-39, அம்பை-38.2, கன்னடியன் கால்வாய்-32.8, சேர்வ லாறு-30, ஆய்க்குடி-12.8, தென்காசி-8.4, கருப்பாநதி-7, குண்டாறு-7, களக்காடு-5.6, மணிமுத்தாறு-5.2, கடனாநதி-5, சேரன் மகாதேவி-2

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வைப்பாறு-13, கடம்பூர்-3, எட்டயபுரம்-3, கயத்தாறு-1. #ManimutharDam

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #SouthDistricts
    சென்னை:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் நாகையில் கரையை கடந்தபோது 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    அதன்பின் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் பரவலாக மழை பெய்தது.

    வங்கக் கடலில் 22-ந்தேதி உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது.

    அது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருந்ததால் இன்று வரை தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலையே காணப்பட்டது.

    இந்த நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    இது தொடர்பாக வானிலை ஆய்வுமைய அதிகாரி கூறியதாவது:-

    இந்திய பெருங்கடல் மத்தியரேகை மற்றும் அதனை யொட்டியுள்ள வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை (29-ந்தேதி) ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rain #SouthDistricts

    தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #pocsoact
    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 13 வயதில் ஒரு பெண் உள்ளனர். இந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். தொழிலாளியின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் தூத்துக்குடியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று சிறுமி விடுமுறையில் தாயை பார்ப்பதற்காக வந்துள்ளார். இதையடுத்து அவரது தாய், சிறுமியை அழைத்து கொண்டு வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடைக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பனாபுரத்தை சேர்ந்த விக்டர் ராஜா (49) என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை பற்றி அவர் தாயிடம் கூறியுள்ளார்.

    இது குறித்து மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்டர்ராஜாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்டர்ராஜா ஓய்வு பெற்ற ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. #pocsoact
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. #Soorasamharam #ThiruchendurMurugan
    தூத்துக்குடி:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டனர். விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை ஆகியவை நடந்தது.
     
    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூர‌சம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று மாலை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதன்பிறகு காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்த‌து. இதையடுத்து யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளிதெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மதியம் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.

    முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். அதன்பின்னர் சிங்கமுகமாகவும், தன்முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி அருள் செய்தார்.

    ஒவ்வொரு உருவமாக மாறி வந்த சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்தபோது, லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. கடல் எங்கும் மனித தலைகளாக காணப்பட்டன. 

    சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலை சேர்ந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். 



    சூரசம்ஹார நிகழ்ச்சியை காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப‌ட்டது. சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டன.

    தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோன்று தற்காலிக வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்காக 15 மினி பஸ்களும் இயக்கப்பட்டன.

    சூரசம்ஹாரம் முடிந்ததும் ஊர் திரும்பும் பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு மாலை 6.30 மணி, இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். 

    இன்று இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் (கண்ணாடி யில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Soorasamharam #ThiruchendurMurugan
    கஜா புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு செல்லவில்லை. #GajaCyclone #GajaStorm #Fishermen
    நெல்லை:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தற்போது திசைமாறி நாகப்பட்டினம் பாம்பன் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நெல்லை- தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகு மீனவர்கள் வழக்கம் போல் நேற்று நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்று இன்று காலை கரை திரும்பி விட்டனர்.

    தூத்துக்குடியில் மட்டும் சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ‘கஜா’ புயல் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ‘கஜா’ புயல் காரணமாக வடதமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் வரும் 14 -ந்தேதி கனமழை பெய்யும். 15-ந்தேதி வடதமிழகத்தில் மிக மிக கனத்த மழையும் தென்தமிழகத்தில் மிக கனமழை அல்லது கனமழை பெய்யும்.

    சுழல் காற்று மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில், அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று 13-ந்தேதி காலை முதல் வீசக்கூடும்.

    தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கடல் சீற்றத்துடன் காணப்படும்.

    இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது.

    எனவே தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த பருவமழை இன்று நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பெய்யத் தொடங்கி உள்ளது. தென்காசியில் அதிகபட்சமாக 6.4 மில்லி மீட்டர் மழையும், ஆய்க்குடியில் 4.20 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் இன்று காலை வரை பெய்துள்ளது.

    பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணை நீர் மட்டம் தொடர்ந்து அப்படியே நீடிக்கிறது. அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வருகிறது.  #GajaCyclone #GajaStorm #Fishermen


    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்தந்த தாசில்தார் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை (9-ந் தேதி) நடக்கிறது.

    இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி1, ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆழ்வார்கற்குளம், திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு, சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி, கோவில்பட்டி தாலுகா பிச்சைத்தலைவன்பட்டி, விளாத்திகுளம் தாலுகா நடுகாட்டூர், எட்டயபுரம் தாலுகா சிந்தலக்கரை, ஓட்டப்பிடாரம் தாலுகா மேலஅரசடி, கயத்தாறு தாலுகா காலாங்கரைபட்டி, ஏரல் தாலுகா சிவகளையில் நடக்கிறது.

    இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

    எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    தூத்துக்குடியில் மர்மக் காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மர்மக்காய்ச்சல் பரவி வருவதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சாந்தினி என்ற கர்ப்பிணி மர்ம காய்ச்சல் காரணமாக இறந்தார். பின்னர் கழுகுமலையை சேர்ந்த ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

    இதையடுத்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவ மனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அத்திமரப்பட்டி 56-வது வார்டுக்கு உட்பட்ட வேதக் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசிகாமணி. விவசாயி. இவரது மனைவி கெப்சிபாய். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் கெப்சி பாய்க்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே மர்மகாய்ச்சலுக்கு சிலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கெப்சிபாய் என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். எனவே சுகாதாரத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தீவிர சுகாதார பணிகளை முடுக்கிவிட்டு தீவிர தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Swineflu #Dengue

    தூத்துக்குடி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் எம். தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). பெயிண்டர். இவரது மனைவி புஷ்பலதா(27). மாரிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. சமீப காலமாக கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதையடுத்து கடந்த மாதம் கணவரிடம் கோபித்து கொண்டு புஷ்பகலா, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த மாரிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்த மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×