search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதயகுமார்"

    நாகர்கோவிலில் இன்று அதிகாலை தூத்துக்குடிக்கு புறப்பட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இச்சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    தூத்துக்குடியில் நடைபெறும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

    இதையடுத்து தூத்துக்குடியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பதட்டமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்காக குமரி மாவட்டத்தில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி சென்றனர்.

    தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் நிறுவனருமான சுப. உதயகுமார் இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை நாகர்கோவில், கோட்டார் இசங்கன்விளையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அவர், தூத்துக்குடி செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார். அவரை போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதாக கூறினர்.

    பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டார். இதுபோல பச்சை தமிழகம் அமைப்பின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியும் கைது செய்யப்பட்டார். ஆரல்வாய் மொழியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் சங்கரபாண்டியை கைது செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
    வருகிற 1-ந்தேதி நாகர்கோவில் வரும் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1, 2-வது அணு உலைகள் இயங்குகிறதா? இல்லையா? என்பது தெரியும் முன்பே 3, 4, 5, 6 என அணு உலை பூங்கா அமைக்கும் வேலைகள் நடந்து வருகிறது. இந்த அணு உலை பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    குமரி மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கோவளம், மணக்குடி சரக்கு பெட்டக துறைமுக திட்டத்தை கைவிட வேண்டும். இந்த 3 பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி தென்தமிழகத்தை காப்போம் என்ற தலைப்பில் பாளை நூற்றாண்டு மண்டபம் அருகே வருகிற 1-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்பு சார்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக போலீசாரிடம் முறைப்படி அனுமதி கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை அனுமதி தரவில்லை. அனுமதி மறுக்கப்பட்டால் வருகிற 1-ந்தேதி நாகர்கோவில் வரும் பிரதமர் மோடியை முற்றுகையிட்டு கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம். பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் இந்த 3 கோரிக்கைகளையும் முன்வைத்து பிரசாரம் செய்ய வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசின் சிபாரிசுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது. சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். உடனே அவரை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அகில இந்திய மக்கள் மேடை நிர்வாகி வக்கீல் ரமேஷ், எஸ்.டி.பி.ஐ. கட்சி அப்துல் கனி, த.மு.மு.க. ரசூல், த.ம.ஜ.க. அப்துல் ஜபார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து மாயமாகியிருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டு பிடிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

    காணொலி காட்சிகள் மூலம் நடிகர் விசு, அவதூறாக பேசி மிரட்டல் விடுப்பதாக நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் சுப.உதயகுமார் புகார் அளித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் தலைவருமான சுப. உதயகுமார் இன்று நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் விசு பேசும் காணொலி காட்சி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் நடிகர் விசு என் பெயரை குறிப்பிட்டு மிகவும் அநாகரீகமாக பேசியுள்ளார்.

    இது பற்றி நான் அவருக்கு என் முகநூல் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். என்னை பற்றி பேசும் அவதூறு கருத்துக்களை நீக்கிவிடும்படி கூறியிருந்தேன்.

    ஆனால் அவர் அக்காட்சிகளை நீக்காமல் என்னை மீண்டும் அவதூறாகவும், உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறியும் விமர்சித்து இருந்தார்.

    இது பற்றி நான் சென்னையில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நடிகர் விசு எனக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசி வருகிறார்.

    நடிகர் விசுவின் கருத்துக்களால் நானும், என் குடும்பத்தினரும் மிகவும் மன உளைச்சலில் உள்ளோம். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நடிகர் விசுவால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கும், என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
    ×