search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி"

    ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 1 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    கோடை சீசனையொட்டி ஊட்டியில் கடந்த 17-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்கி வரும் 22-ந்தேதி நிறைவடைகிறது. பல வண்ண மலர்கள், வெவ்வேறு வகையான அலங்காரங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. குறிப்பாக ஹாலந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, 3 ஆயிரம் ‘துலிப்’ மலர்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தன.

    நேற்று சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிக எண்ணிக்கையில் வருகை தந்தனர். இன்னிசை கச்சேரியின்போது, பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். மலர்களின் முன் நின்று போட்டோ எடுக்க அதிகம் ஆர்வம் காட்டினர்.

    17-ந்தேதி 26 ஆயிரம் பேர்களும், 18-ந்தேதி 35 ஆயிரம் பேர் வருகை தந்தனர். நேற்று காலை முதலே, கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில், புல்தரை மைதானத்தில் சுற்றுலா பயணியர் கூடியிருந்தனர்.. நேற்று ஒருநாள் மட்டும் 44 ஆயிரம் பேர் வருகை புரிந்தனர் என்று தோட்டக்கலை துறையினர் தெரிவித்தனர்.
    ஊட்டி-மேட்டுப்பாளையம் ரோட்டில் காட்டுயானை சாலையைக் கடந்து செல்லும் போது வாகனஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. தற்போது கோடைகால சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.செடி கொடிகள் காய்ந்து சருகாகி விட்டன.நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி குறைந்து காணப்படுகின்றது.

    இதனால் உணவு மற்றும் நீர்நிலைகளைத்தேடி அலையும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளை பொருள்களை நாசம் செய்து வருகின்றது.

    இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை மற்றும் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை வாகன போக்குவரத்தில் முக்கியப்பங்கு வகித்து வருகின்றது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலைகளில் வந்தும் சென்றும் கொண்டிருக்கின்றன.

    மேலும் இந்த 2 சாலைகள் காட்டுயானைகள் மற்றும் பிற வன விலங்குகள் கடந்து செல்லும் சாலைகளாகவும் உள்ளது.இதுதவிர மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரத்தில் சாலையைக்கடந்து செல்வது தினசரி வழக்கமாக நடைபெற்று வருகின்றது.

    ஊட்டியில் குளுகுளு சீசன் தொடங்கியதால் காலை ஊட்டிக்கு சென்ற வாகனங்கள் மீண்டும் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தன.அப்போது மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் கல்லாறு அருகே வழக்கம்போல் ஒற்றை காட்டு ஆண்யானை சாலையைக்கடக்க சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.யானையைக்கண்டதும் அந்த வழியே சுற்றுலாப் பயணிகளுடன் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்து அந்தந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி யானையை வேடிக்கை பார்த்தார்கள்.

    ஒருசிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.ஒரு சில யானைகள் வாகனங்களின் முகப்பு வெளிச்சம் மற்றும் ஹாரன் சப்தத்தைக்கேட்டு மிரண்டோடும்.ஆனால் இந்த யானைக்கு இவைகள் பழக்கப்பட்டு விட்டதால் பொருட்படுத்தாமல் மெல்ல ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து சாலையை மெல்ல மெல்ல கடந்து சாலையோரத்தில் இருந்த விடுதியைக்கடந்து கல்லாறு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.அதன்பின்னர் மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.

    யானை சாலையைக் கடந்து செல்லும் போது சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காட்டுயானை சாலையைக் கடந்து செல்லும் போது வாகனஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து ஊட்டி நகர பகுதிகளில் இயங்கிவரும் சாலையோர உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் விற்கப்படும் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்

    ஊட்டி:

    ஊட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து ஊட்டி நகர பகுதிகளில் இயங்கிவரும் சாலையோர உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் இதர உணவுப் பொருட்கள் விற்கப்படும் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஆய்வில் பலகாரம் செய்ய மறுசுழற்சி செய்யப்பட்ட எண்ணை 5 லிட்டர், கலப்படம் மற்றும் சாயம் கலந்த டீ தூள்கள் 2 கிலோ மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் 500 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும், இவ்வாறு கண்டறியப்பட்ட கடைகளுக்கு எல்லாம் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.

    மேலும் இனிவரும் காலங் களில் ஆய்வு செய்யும் போது ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் திரும்ப பயன்படுத்துவது தெரியவந்தாலோ, நெகிழி பைகள், உண்ணத்தகாத பழைய உணவுகள், பலகாரங்கள் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்வது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டாலோ விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அறிவுரை வழங்கப்பட்டது. இவ் ஆய்வானது தொடர் நடவடிக்கையாக ஊட்டி நகராட்சி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் கண்காணிக்கப்படும்.

    தொடர்ந்து தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் கடையின் உரிமம், பதிவு ரத்து செய்யப்படும். மேலும் கலெக்டருக்கு தெரிவிக்கப் பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மேல் நடவடிக்கை எடுக்கப் படுமென மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்புத்துறையால் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் இதுபோன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போலி கலப்பட டீ தூள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவின் தரம்குறித்த புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கும், மாவட்ட கலெக்டரின் புகார் எண்ணான 9943126000 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஊட்டி:

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். ஊட்டி நகரில் முக்கிய சாலைகளில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் கோடை சீசனுக்கு பின்னர் மலைகளின் அரசியான ஊட்டி 2-வது சீசனில் களை கட்டி உள்ளது.

    நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்கு 2-வது சீசனை முன்னிட்டு 10 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்கியதை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். மேலும் பெரணி இல்லம் அருகே புல்வெளியில் மலர் மற்றும் அலங்கார பூந்தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்றனர். பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் அங்குள்ள செல்பி ஸ்பாட்டில், அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இத்தாலியன் பூங்கா மேல்பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகை சீரமைக்கப்பட்டு மலர் பூந்தொட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. தொடர் விடுமுறையையொட்டி அந்த மாளிகை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. அங்கிருந்த மலர்களை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    ஊட்டி தொட்டபெட்டா மலைசிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்குள்ள காட்சி முனையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி நகரம், கர்நாடகா மாநில எல்லை, அணைகள் போன்றவற்றை தொலைநோக்கி மூலம் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    தொடர் விடுமுறை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள சமவெளி பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் ஊட்டிக்கு வருகை தந்து கொண்டே இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் திட்டமிட்ட படி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, ஊட்டி-கூடலூர் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றதை காண முடிந்தது. ஊட்டியில் முக்கிய சந்திப்பான சேரிங்கிராஸ் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 
    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் லாரிகள் மூலம் விற்கப்பட்டு வந்த குடிநீர் விற்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து மிகுதியாக இருக்கும். இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. சுற்றுலா பயணிகளை நம்பி ஊட்டியில் 900–க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டி நகரில் 25 வீடுகள் இருக்கின்றன. இந்த விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு நகராட்சி மூலம் கோரிசோலை, கோடப்பமந்து, பார்சன்வேலி உள்பட 9 அணைகளில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் தனியார் சார்பில் 40 லாரிகளில் விடுதிகளுக்கு குடிநீர் விற்கப்பட்டு வந்தது. அதற்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக ரீதியில் குடிநீர் விற்கப்படுவதால், அதற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஊட்டியில் லாரிகள் மூலம் குடிநீர் விற்பது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து குடிநீர் வினியோக லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

    ஊட்டி மலைப்பிரதேசமாக இருப்பதால் உயரமான இடங்களில் உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது லாரிகள் மூலம் குடிநீர் விற்கப்பட்டது. மேலும் மின்சார துண்டிப்பு மற்றும் குழாய்கள் உடைப்பு ஏற்படும் நேரங்களில் தட்டுப்பாட்டை போக்க கோவில் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு குறைந்த கட்டணத்தில் குடிநீர் விற்பனை செய்து வந்தோம். சமவெளி பகுதிகளில் நிலத்தடி நீர் ஆழ்துளை கிணறு மூலம் உறிஞ்சப்படுகிறது. ஆனால் நீலகிரியில் அப்படி அல்ல. மழைக்காலங்களில் எங்களது நிலங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் உயருகிறது. அதை தான் கொய்மலர் சாகுபடி, காளான் உற்பத்தி போன்ற விவசாயத்துக்கு வழங்கி வந்தோம். இவ்வாறு ஊட்டி நகர மக்களும் பயனடைந்து வந்தனர். தற்போது ஐகோர்ட்டு உத்தரவுப்படி குடிநீர் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் எங்களிடம் தெரிவித்ததால், லாரிகளில் குடிநீர் விற்பனையை நிறுத்தி கொள்கிறோம். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் விடுதிகள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி விளைநிலங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விற்க நீலகிரிக்கு மட்டும் ஐகோர்ட்டில் விதி விலக்கு பெற்று தர அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ஊட்டி அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேர் மீட்கப்பட்டனர். #OotyCarAccident
    மசினகுடி:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜூட் அண்டோ கெவின் (வயது 34), கப்பல் கேப்டன். இவர் தனது நண்பர்களான சென்னை கொளத்தூரை சேர்ந்த ராமராஜேஷ் (36), வியாசர்பாடி இப்ராகிம் (35), பெரம்பூரை சேர்ந்த அருண் (36), வக்கீல் ரவிவர்மா (39) மற்றும் தொழில் அதிபர்கள் ஜெயக்குமார் (36), அமர்நாத் (35) ஆகியோருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றார்.

    கடந்த 30-ந் தேதி காரில் ஊட்டிக்கு சென்ற அவர்கள் 7 பேரும் அங்கு ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த 1-ந் தேதி காலை விடுதியில் இருந்து ஊட்டி அருகே உள்ள மசினகுடி பகுதியை சுற்றிப்பார்க்க காரில் புறப்பட்டனர்.



    அவர்கள் கல்லட்டி மலைப்பாதையில் புதுமந்து பகுதியில் உள்ள 35-வது கொண்டை ஊசி வளைவில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டபடி சென்றது. இதனால் காருக்குள் இருந்த 7 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

    200 அடி பள்ளத்தில் மரங்கள் அடர்ந்த பகுதியில் கார் விழுந்து கிடந்ததால் அந்த பாதையில் சென்ற யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை. ஊட்டி சென்றவர்களிடம் இருந்து 2 நாட்களாக எந்த தகவலும் இல்லை, செல்போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர்கள் இதுபற்றி ஊட்டி போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வனத்துறை ஊழியர்கள் கல்லட்டி மலைப்பாதையில் நேற்று தேடியபோது அங்கு 200 அடி பள்ளத்தில் நொறுங்கிக்கிடந்த காரை கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது காருக்குள் ராமராஜேஷ், அருண் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். மற்ற 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. விபத்து நடந்து 2 நாட்களுக்கு பின்னரே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்திருந்ததால் அவர்களால் காரில் இருந்து வெளியே வரமுடியவில்லை என தெரிகிறது.

    போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டனர். ராமராஜேஷ் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், அருண் மைசூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பலியான ஜூட் அண்டோ கெவின், இப்ராகிம், ரவிவர்மா, ஜெயக்குமார், அமர்நாத் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து குறித்து புதுமந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். மலைப்பாதையில் 30 கி.மீ. வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் 60 கி.மீ. வேகத்தில் சென்றதால் பிரேக் பிடிக்க முடியாமல் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. 
    17 ஆண்டுகளுக்கு பிறகு நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சேலம் கோட்ட ரெயில்வே சார்பில், ‘ஜாய் ரைடு’ என்ற பெயரில் பாரம்பரியம் மிக்க நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயங்கும் சிறப்பு மலை ரெயில் ஊட்டி-கேத்தி இடையே நேற்று இயக்கப்பட்டது. கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் ஊட்டி-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டது. 1914-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1918-ம் ஆண்டு தென்னக ரெயில்வேயில் சேர்க்கப்பட்டது.



    அந்த காலத்தில் வெளிநாடுகள் மற்றும் நீலகிரியில் மலை ரெயில் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சில காரணங்களால் நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பாரம்பரியம் மிக்க நீராவி என்ஜினை மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து நீராவி என்ஜின் குன்னூருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கேத்திக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நீராவி என்ஜின் கேத்தி சென்று மீண்டும் குன்னூருக்கு வந்தது. சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அந்த நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் சிறப்பு மலை ரெயில் நேற்று இயக்கப்பட்டது. முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு என இரண்டு பெட்டிகளில் 80 இருக்கைகளுக்கு நேற்று காலையிலேயே டிக்கெட் எடுக்கப்பட்டு விட்டது.

    மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை நினைவுகூறும் வகையில், திட்டத்தின் குறியீடு குறித்த தொப்பிகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நீராவி என்ஜின் ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வந்ததும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இருக்கைகளில் ஏறி அமர்ந்தனர். இந்த மலை ரெயிலை ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தொழில்நுட்ப பொறியாளர் முத்துகிருஷ்ணன், ஊட்டி ரெயில் நிலைய அதிகாரி பிரமோத், பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளை தலைவர் நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ஊட்டியில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பாரம்பரியம் மிக்க நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயங்கும் மலை ரெயில் லவ்டேல் வழியாக கேத்தி சென்றடைந்தது. பின்னர் அங்கு ½ மணி நேரம் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகு மற்றும் கேத்தி ரெயில் நிலையத்தை கண்டு ரசித்தனர். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்னர் அந்த ரெயில் ஊட்டி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ஊட்டி-கேத்தி இடையே மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலக்கரி நீராவி என்ஜினின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். கடந்த 2000-ம் ஆண்டு பல்வேறு காரணங்களால் ஊட்டியில் நிலக்கரி நீராவி என்ஜின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஊட்டியில் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊட்டி:

    ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப் படுகிறது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்டவை இருக்கின்றன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    ஆனால் புதிதாக வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் எந்தெந்த இடங்களில் சுற்றுலா தலங்கள் இருக்கின்றன என்பது தெரியாமல் வாகனங்களில் தேடி அலையும் நிலை இருந்தது. இதனால் சிலர் திட்டமிட்டபடி சுற்றுலா தலங்களை காண முடியாமல் தவித்தனர். மேலும் சிலர் சுற்றுலா வழிகாட்டிகளின் உதவியோடு சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா பயணிகள் எளிதில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் புகைப்படங்களுடன் கூடிய வழிகாட்டி பலகைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன.

    அவை வைக்கப்பட்டு பல மாதங்களை கடந்ததாலும், முறையாக பராமரிக்காததாலும் வழிகாட்டி பலகைகளில் குறிப்பிடப்பட்டு இருந்த சுற்றுலா தலங்கள், அவற்றுக்கு செல்லும் தூரம்(கிலோ மீட்டரில்) குறித்த விவரங்கள் அழிய தொடங்கி விட்டன. மேலும் இரும்பு பலகைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்தன. இதையடுத்து வழிகாட்டு பலகைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நீலகிரி மாவட்ட வரைபடத்துடன் சுற்றுலா தலங்கள் குறித்த புதிய வழிகாட்டி பலகைகள் ஊட்டியில் வைக்கப்பட்டு உள்ளன. ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிரில், சேரிங்கிராஸ், ஊட்டி படகு இல்லம், பிங்கர்போஸ்ட், தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி ஏரி, ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, கர்நாடகா பூங்கா, அரசு அருங்காட்சியகம், வேலிவியூ, தொட்டபெட்டா மலைச்சிகரம், காமராஜ் சாகர் அணை, கல்லட்டி நீர்வீழ்ச்சி, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, அப்பர்பவானி, கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து தொரப்பள்ளி தொங்கு பாலம், ஊசிமலை காட்சிமுனை, தவளைமலை காட்சிமுனை, தெப்பக்காடு, சேரம்பாடி, கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து நேரு பூங்கா, கேத்ரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சிமுனை, குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து சிம்ஸ் பார்க், லேம்ஸ் ராக், காட்டேரி நீர்வீழ்ச்சி, காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல எத்தனை கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    ஊட்டியின் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க உதவியாக புதிய வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அவற்றில் சில சுற்றுலா தலங்களுக்கு செல்லும் கிலோ மீட்டர் தூரம் குறைவாகவும், கூடுதலாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு 23 கிலோ மீட்டர் எனவும், பைக்காரா படகு இல்லத்துக்கு 21 கிலோ மீட்டர் எனவும் இருக்கிறது. பைக்காரா நீர்வீழ்ச்சியை அடுத்து தான் பைக்காரா படகு இல்லம் இருக்கிறது. எனவே குழப்பம் அடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே தவறாக இடம்பெற்றுள்ள தூர விவரத்தை சரியாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    தொடர் மழையால் ஊட்டி பகுதியில் 23 வீடுகள் சேதமடைந்து உள்ளன. மண்சரிவு ஏற்பட்டதால் அந்தரத்தில் வீடுகள் தொங்கி கொண்டு இருக்கின்றன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து அம்பேத்கர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் எளிதில் நடந்து செல்லும் வகையிலும், வீடுகள் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் நகராட்சி மூலம் நடைபாதை, தடுப்புச்சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி-கூடலூர் சாலை, ஊட்டி-இத்தலார் சாலை போன்ற முக்கிய இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கோடப்பமந்து அம்பேத்கர் காலனியில் குடியிருப்பு பகுதிகளில் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேற்பகுதியில் உள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளிக் கிறது. அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் விரிசல்களும் காணப்படுகின்றன.

    அதே பகுதியில் ராணி என்பவருக்கு சொந்தமான வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தொடர் மழையால் ஊட்டி தாலுகாவுக்கு உட்பட்ட அனுமாபுரம், இந்திராநகர், ஊட்டி எல்க்ஹில், அம்பேத்கர் காலனியில் 2 வீடுகள், ஊட்டி எல்க்ஹில் குமரன் நகரில் 1 வீடு, நஞ்சநாடு கவர்னர்சோலையில் 1 வீடு, உல்லத்தில் 1 வீடு உள்பட கடந்த 4 நாட்களில் மொத்தம் 23 வீடுகள் சேதமடைந்து உள்ளன.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக உடனடியாக ஒரு வீட்டிற்கு ரூ.4 ஆயிரத்து 100 உதவித்தொகையை வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி அருகே தலைகுந்தா, ஊட்டி-மஞ்சூர் சாலை லவ்டேல் பகுதியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினார்கள். 
    ஊட்டியில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நாளை(புதன்கிழமை) தேசியக்கொடியை ஏற்றுகிறார். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். #IndependenceDay
    ஊட்டி:

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நாளை காலை 10 மணியளவில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதில் தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பும் நடக்க உள்ளது.



    விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். விழாவையொட்டி மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொடிக்கம்பம் நடப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காகவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்காலிகமாக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    விழாவுக்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக தினமும் காலையில் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பார்வையிட்டார். மேலும் ஊட்டி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். விழா நடைபெறும் மைதானம் மற்றும் அங்குள்ள சாலையை தூய்மையான வைக்கும் பணியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    விழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின்பேரில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய 3 தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு(மதுவிலக்கு) கோபி தலைமையிலும், கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை தலைமையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் 570 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சேரம்பாடி, தாளூர், அய்யங்கொல்லி, கக்கனல்லா, எருமாடு, பாட்டவயல், நாடுகாணி, முள்ளி, மஞ்சூர், கெத்தை, குஞ்சப்பணை உள்ளிட்ட 16 சோதனைச்சாவடிகளில் இரவும், பகலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துகிறார்கள். சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. குன்னூரில் 4 இடங்கள், ஊட்டியில் 4 இடங்கள், கூடலூரில் 1 இடம், கோத்தகிரியில் 1 இடம் என வாகன சோதனை நடத்தப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் தங்கும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட கலெக்டர் பங்களாவில் இருந்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நாளை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. மைதானம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் உள்ளது. 
    ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டமாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் குளு, குளு காலநிலை நிலவுவதால் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நீலகிரிக்கு வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வருகின்றனர்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் வாடகை கார்களை அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்போது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதனால் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள வாடகை கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ஊட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலர், சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் கார்கள், வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்கள். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுற்றுலா வாகன டிரைவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையொட்டி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து ஊட்டி பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம் உள்பட பல இடங்களில் கடந்த சில தினங்களாக வாகன தணிக்கை செய்தனர்.

    அப்போது ஏராளமான மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த வாகனங்களை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த வேண்டிய மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை வாடகைக்கு விட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததால் சுற்றுலா வாகன டிரைவர்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர். 
    தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஊட்டியில் ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா, மூலிகை பண்ணை, ரெயில் நிலையம், படகு இல்லம், கேர்ன்ஹில் வனப்பகுதி உள்ளது.

    ஊட்டி வெளிவட்டாரங்களில் பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. சீசன் காலங்கள், தொடர் மற்றும் கோடை விடுமுறை காலங்களில் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.

    இதனால் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் சீசன் இல்லாத காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவில் இருக்கும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக ஊட்டி, கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது.

    இதனால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அடிக்கடி மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் கடுங்குளிர் நிலவியது.

    இதனால் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா மலர் பூங்கா, படகு இல்லம் உள்பட பல முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் கமர்சியல், எட்டின்ஸ், சேரிங்கிராஸ் உள்ளிட்ட சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே இயக்கப் படுகிறது.

    சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பெருமளவு இல்லாததால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி இல்லை. தாவரவியல் பூங்காவில் மட்டும் கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

    ஆனால் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அடியோடு குறைந்து இருந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து குறைந்து காணப்படுவதால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் தாவரவியல் பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சராசரியாக 2 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

    இதனிடையே ஊட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடைகளை பிடித்தபடி பொதுமக்கள் நடந்து சென்றனர். 
    ×