search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 104622"

    கேரள மாநிலம் இடுக்கியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட தேனி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி அருகே நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் நேற்று முன்பதினம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து தனிப்படை அமைத்து கள்ள நோட்டு கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

    போலீஸ் விசாரணையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தேனியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தேனி மாவட்டம் கூடலூர், தேவாரம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து தேடி வந்தனர்.

    கூடலூரில் ஒரு அறையில் தங்கி இருந்த 2 பேர் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்தது. கூடலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த பாஸ்கரன் (வயது 26) என்பவரும் தேவாரத்தைச் சேர்ந்த அருண்குமார் (23) என்பவரும் நெடுங்கண்டம் தூக்குப்பாலம் பகுதியில் உள்ள ஒரு பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு போலி 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். அதன் பின் ஒரு ஆட்டோவில் ஏறி தங்களது அறைக்கு வந்துள்ளனர். ஆட்டோ டிரைவரிடமும் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளனர். அவர்கள் 2 பேரும் நெடுங்கண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் அவர்களை தேடினர். இதனையடுத்து அவர்கள் தங்களை தேடுவதை அறிந்து கூடலூருக்கு வந்து விட்டனர்.

    போலீசார் அதிரடியாக சென்று அவர்கள் தங்கி இருந்த அறையில் சோதனையிட்டனர். அப்போது அருண்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதை ஒத்துக் கொண்டார்.

    அவர் அறையில் இருந்து ரூ.7,500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த கூடலூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் ஏற்கனவே பல முறை கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இங்கிருந்து நக்சலைட்டு உள்ளிட்ட தீவிரவாத செயல்களுககு கள்ள நோட்டுகள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து இரு மாநில எல்லை பகுதியில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வந்தனர்.

    தற்போது அதே போல் தமிழகத்தைச் சேர்ந்த வாலிபர்கள் கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என பிடிபட்ட அருண்குமாரிடம் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே கலர் பிரிண்டர் மூலம் ரூ.2000 கள்ள நோட்டு அச்சடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    மராட்டிய மாநிலம் புனே நகர போலீசார் ரூ. 2 ஆயிரம், ரூ. 500 கள்ள நோட்டுகளை அச்சடித்த 4 பேரை புனேயில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) பிரிண்டர் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக தெரிவித்தனர்.

    அதன் பேரில் வெங்கடேசனை பிடிக்க புனே மாநகர போலீஸ் துணை சூப்பிரண்டு டெங்காலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பொன்னேரி வந்தனர்.

    ஆனால் கள்ள நோட்டு கும்பல் தெரிவித்த முகவரியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் புனேயில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த ஒருவனின் செல்போன் சிம்கார்டு மூலம் வெங்கடேசனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.

    அவர் போனை எடுக்க வில்லை. போன் டவரின் சிக்னல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி ஜடியல் சிட்டி பகுதியை காட்டியது. போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் வெங்கடேசன் அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருவதாக தகவல் கிடைத்தது.

    நேற்று அதிகாலையில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டினர். கதவை திறந்து வெளியே வந்த வெங்கடேசன் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்த கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் புனேயில் பணிபுரிந்த போது அங்கேயே தங்கி விட்டார். இதனால் அவரின் குடும்பம் புனேக்கு குடிபெயர்ந்தது. 24 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் அங்குள்ள திருட்டு கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து அவரின் நடவடிக்கைகள் மாறிவிட்டன.

    20 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் வேலையில் இறங்கினார். அங்குள்ள ஒரு நபர் போலீசிடம் ரகசிய தகவல் கொடுத்ததையடுத்து வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அவரை கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் வெங்கடேசன் 20 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார் என்று புனே நகர போலீஸ் துணை சூப்பிரண்டு டெங்காலி தெரிவித்தார். போலீசார் வெங்கடேசனை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புனேவுக்கு அழைத்து சென்றனர்.

    கேரளா மாநிலம் திருச்சூரில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம், கொப்பம் ஆகிய பகுதிகளில் செர்புழச்சேரி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 2 முறை நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மற்றும் ரூ.82 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் சிக்கியது.

    இதனை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கள்ளநோட்டு சிக்கியது. கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருச்சூர் காட்டூர் தோட்டப்பள்ளியை சேர்ந்த மணி (வயது 45) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்தனர்.

    மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், இங்க், காகிதங்களை பறிமுதல் செய்தனர். மணியிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பரான சதானந்தம் (46) என்பவரும் கள்ளநோட்டு அச்சடிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது வீட்டிலும் சோதனை செய்தபோது அங்கு ரூ.40 ஆயிரம் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு அச்சடித்த மணி மற்றும் சதானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து செர்புழச்சேரி போலீசார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்கள் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகள். வங்கி அதிகாரிகளே திணறும் அளவுக்கு மிக நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. பல நாட்கள் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டதால் பாலக்காடு, ஒற்றப்பாலம், பொள்ளாச்சி கிராம பகுதி மற்றும் கோவை எல்லையோர பகுதிகளில் அதிகம் புழக்கத்தில் விட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளி நபர்களிடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நன்கு தெரிந்த நபர்களிடமே 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். #FakeCurrency

    கேரளாவில் தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து கள்ளநோட்டு அச்சடித்த மலையாள நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #FakeCurrencyCase
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதை தொடர்ந்து கேரளாவில் கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பலை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    கள்ள நோட்டு கும்பலை கண்டுபிடித்து கைது செய்ய வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் ரவீந்திரன், லியோ, கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். காரில் ஒரு பெரிய பையில் ரூ.2½ லட்சம் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள டி.வி. நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதைதொடர்ந்து அந்த நடிகை கொல்லத்தில் வசிக்கும் சொகுசு பங்களாவை போலீசார் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினார்கள். அப்போது அந்த பங்களாவுக்கு சந்தேகப்படும் படியாக அடிக்கடி ஆட்கள் சென்று வருவது தெரிய வந்தது.


    இதைதொடர்ந்து நேற்று அதிகாலை நேரத்தில் போலீஸ் படையினர் அந்த பங்களாவில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் வசித்த மலையாள டி.வி. நடிகை சூரியாவை (வயது 36) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது தாய் ரமா தேவி (56), தங்கை சுருதி (29) ஆகியோரும் கைதானார்கள்.

    நடிகை சூரியா மற்றும் அவரது தாய், தங்கை ஆகியோர் அந்த பங்களாவில் கம்ப்யூட்டர், ஸ்கேனர் உள்பட நவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ரூ.57 லட்சம் மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.200 கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பலிடம் ரூ.1 லட்சம் நல்ல ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவர்கள் அதற்கு பதில் ரூ.3 லட்சத்திற்கு கள்ள நோட்டுகளை கொடுப்பார்கள்.

    இதுபோல கடந்த 8 மாதங்களாக இந்த பங்களாவில் கள்ள நோட்டு அச்சடித்து அவர்கள் புழக்கத்தில் விட்டு உள்ளனர். கள்ள நோட்டு அச்சடித்தது தொடர்பாக டி.வி. நடிகை கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #FakeCurrencyCase
    கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்த வழக்கில் கைதானவர் முதலமைச்சருடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.#fakecurrency #TNCM
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31). இவர் தனது நண்பர்களான கிதர் முகமது, சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டார். இதையடுத்து ஆனந்த், கிதர் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுந்தர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்த நிலையில் ஆனந்த், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுடன் எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    அதில் கள்ளநோட்டுகள் கும்பலுடன் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது. இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சருடன் ஆனந்த் இருப்பது போன்று பரவி வரும் புகைப்படம் உண்மையானதா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அத்துடன் அந்த புகைப்படத்தில் இருக்கும் மற்ற நபர்களிடமும் இது உண்மையாக எடுக்கப்பட்டதா? அப்படி என்றால் எப்போது எடுக்கப்பட்டது? அங்கு ஏன் ஆனந்த் வந்தார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த புகைப்படம் போலியானது என்று தெரியவந்தால், புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #fakecurrency #TNCM
    கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாராட்டியுள்ளார்.

    கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் நேற்று மாலை தடாகம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வேலாண்டிப் பாளையத்தை சேர்ந்த ஆனந்த்(35) என்பவர் பாக்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 4 இருந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மாநகர துணை கமி‌ஷனர்(தலைமையிடம்) தர்மராஜன் நேரடி மேற்பார்வையில் குற்றப்பிரிவு உதவி ஆணையாளர்கள் சோமசேகர், சோமசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வேலாண்டிப்பாளையம் மருதப்பகோனார் வீதியில் வெங்கிடசாமி என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தினர்.

    அங்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் 5904 இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரமாகும். அவர்களிடமிருந்து கலர் ஜெராக்ஸ் மிஷின், ஹார்டுடிஸ்க், கம்ப்யூட்டர் மானிட்டர், கீபோர்டு, கட்டிங் மெஷின், ஒரு செல்போன், இரு சக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் கடையை மாதம் ரூ.2,700-க்கு வாடகைக்கு எடுத்து இங்கு கள்ளநோட்டு அச்சடித்து கோவை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் மூலமாகவும், தெரிந்த நபர்கள் மூலமாகவும் கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்தது தெரியவந்தது.

    பண மதிப்பு இழப்புக்கு பின் வந்த புதிய கரன்சிநோட்டில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா பாராட்டினார். #tamilnews
    ×