search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குச்சாவடிகள்"

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பொதுமக்கள் வாக்களிக்க 257 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூத்கள் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 257 வாக்குச்சாவடிகளிலும் மத்திய அரசின் ஊழியர்களை நுண்பார்வையாளர்களாக நியமித்துள்ளனர். இதையடுத்து டெல்லி உள்ளிட்ட எந்த இடத்தில் இருந்தும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் இதில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மொத்தம் களத்தில் 15 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்த ஒரு வி.வி.பாட் எந்திரங்களும் வைக்கப்படுகிறது. 257 வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக ஒரு வீல் சேர் உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு தொகுதி முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    பதற்றமான வாக்குச்சாவடிகள் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 3 மத்திய கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தமிழகத்தில் மே 19ல் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி, மறுவாக்குப்பதிவு தொடர்பாக விளக்கம் அளித்தார். #LokSabhaElections2019 #Repoll
    சென்னை:

    தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச்சாவடிகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கடந்த 29ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினோம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த 13 வாக்குச்சாவடிகள் தவிர வேறு எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இல்லை.



    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்களில் பதிவான மாதிரி வாக்குகள் அழிக்கப்படாததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தலைமை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. மறு வாக்குப்பதிவுக்காகவே தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தருமபுரி பாராளுமன்றத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் கடலூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Repoll 
    திருப்பரங்குன்றம் தொகுதியில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா கூறினார்.
    மதுரை:

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1670 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தலை முன்னிட்டு நகரில் 18 இடங்களிலும், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 27 இடங்களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகளுடன் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நகரில் உள்ள 47 வாக்குச்சாவடிகளும், தொகுதியில் உள்ள 134 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக மத்திய-மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக 3600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    கூட்டத்தில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட போலீஸ் சூப்பிரண் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதால், மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
    புதுடெல்லி:

    மேற்கு திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 81 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரித்து, அறிக்கை பெற்றது. அதில், திரிபுரா மேற்கு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.



    இதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வரும் 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
    கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி , நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. #LoksabhaElections2019

    சென்னை, ஏப்.19-

    தமிழகம், புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடந்தது.

    தேர்தலில் பயன் படுத்தப் படும் வாக்குப்பதிவு இயந் திரங்களை இடம் மாற்று வதற்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாக னங்கள் பயன்படுத்தப் படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தின் மலைப் பகுதி களில் வாக்குப்பதிவு இயந் திரங்களையும் உபகரணங் களையும் இடம் மாற்ற ஜி.பி.எஸ் தொழில்நுட்பங் களை பயன்படுத்த முடியாது.

    மலை உச்சியில் உள்ள சில குக்கிராமங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது கடின மான பணி. சில பகுதி களுக்கு வாகனங்களில் செல்ல வழியே இல்லை.

    தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களி லுள்ள தொலைதூர கிராம வாக்குச்சாவடிகளுக்கும் சுமார் 300 முதல் 1100 வாக்காளர்கள் உள்ளனர். தர்மபுரி மாவட் டம் பென்னாகரம் பகுதி யிலுள்ள கோட்டூர், நாமக்கல் மாவட்டம் போத மலை போன்ற பகுதிகள் பாறைகள் நிறைந்த கரடு முரடானவை.

    இந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங் களையும், உப கரணங்களை யும் தேர்தல் அதிகாரிகள் சாக்குப்பைகளில் கட்டி கழுதைகளிலும், குதிரை களிலும் ஏற்றி தொலைதூர வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சிலர் பொருட்களை தலை யில் சுமந்தபடி சென்றனர். இவர்கள் மலைப் பகுதிகளில் 9 முதல் 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி மற்றும் பள்ளத்துக்காடு, நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங் களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன் படுத்தப் பட்டன.

    வெள்ளக் கவி கிராமம் போன்ற சில வாக்குச்சாவடிகள் அடர்ந்த மலைக் காடுகளுக்கிடையே இருப்பதால் நக்சல் தடுப்பு போலீசாரின் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் பயணம் செய்தனர். பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது.

    பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டிருப்பதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #TNElections2019 #DMKFilesComplaint
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சிறுசிறு பிரச்சனைகள் தவிர பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இன்று மதியம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இயக்குனருக்கு (தேர்தல்) அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கிய காலை முதலே வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக வாக்களித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாலை 3.30 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.



    இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில், காவல் துறையின் பாதுகாப்பினை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்க செய்யப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

    இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNElections2019 #DMKFilesComplaint
    18-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பெங்களூருவில் 8,514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறினார். #LokSabhaElections2019
    பெங்களூரு:

    பெங்களூரு மாநகராட்சி கமிஷனரும், பெங்களூரு நகர மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மஞ்சுநாத் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூரு நகரில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய என 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற 18-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு வடக்கு தொகுதியில் 31 பேரும், பெங்களூரு மத்திய தொகுதியில் 22 பேரும், பெங்களூரு தெற்கு தொகுதியில் 25 பேரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

    பெங்களூருவில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 72 லட்சத்து 64 ஆயிரத்து 796 வாக்காளர்கள் உள்ளனர்.

    தேர்தல் ஆணைய வழிக்காட்டுதலின்படி படம் பொறிக்கப்பட்ட வாக்குச்சீட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நாளை (அதாவது இன்று) மாலை 5 மணிக்குள் இந்த பணி முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும். மேலும் வாக்குச்சாவடியை கண்டுபிடிப்பது, வாக்களிப்பது எப்படி?, புகார்கள் தெரிவிப்பது எப்படி? என்பன போன்ற அம்சங்கள் அடங்கிய வழிக்காட்டு புத்தகம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் அடையாள அட்டையை பிறரிடம் கொடுப்பது குற்றமாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 3 தொகுதிகளையும் சேர்த்து பல்வேறு செயல்களுக்காக அனுமதி கேட்டு ‘சுவிதா’ செயலி மற்றும் நேரில் வந்தவர்களிடம் இருந்து 1,298 விண்ணப்பங்கள் வந்தன. இதில், 1,202 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 49 விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, 47 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ‘சி-விஜில்’ செயலி வழியாக மொத்தம் 101 புகார்கள் வந்தன. இதில் 29 புகார்கள் நிராகரிக்கப்பட்டன. 69 புகார்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

    3 பாராளுமன்ற தொகுதிகளிலும் பணம்-பரிசு பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள், செலவு கணக்கீடு குழு உள்பட மொத்தம் 551 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பெங்களூரு நகரில் உள்ள 3 தொகுதிகளிலும் இதுவரை ரூ.3.20 கோடி ரொக்கம், ரூ.5.75 கோடி மதுபானம், 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறக்கும் படை, போலீசார் உள்பட பல்வேறு குழுவினர் சார்பில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கலால் சட்டத்தின் கீழ் மொத்தம் 2,573 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது உதவி தேர்தல் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 11-ந் தேதி நடந்த பயிற்சியில் 42 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். வாக்குச்சாவடியில் ஊழியர்களை நியமிக்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

    3 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 28 உதவி தேர்தல் அதிகாரிகளின் அலுவலகத்திலும் தபால் ஓட்டுகள் செலுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தம் 5,499 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு நகரில் மொத்தம் 8,514 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பெங்களூருவில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்காக 6,869 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 982 கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் உள்பட 1,437 வாகனங்கள் தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண்கள் அதிகாரியாகவும், ஊழியர்களாகவும் பணி செய்ய உள்ளனர்.

    பெங்களூரு நகரில் மொத்தம் 477 வாக்குச்சாவடிகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 1,234 பேர் நுண்பார்வையாளர்களாக செயல்பட உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ‘வீல்சேர்’, பூதக்கண்ணாடி வசதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளை அழைத்து வருவதற்காக வாடகை கார் வசதிகள் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 16-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

    தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களை கேட்டு பெறவும், புகார்களை அளிக்கவும் பெங்களூரு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் தொடர்பு மையம தொடங்கப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், 24 மணிநேரம் செயல்படும் இந்த மையத்தை 1950 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதுவரை 34 ஆயிரத்து 5 அழைப்புகள் வந்துள்ளது.

    15-ந் தேதிக்குள் (நாளை) வேட்பாளர்கள் தேர்தல் செலவு விவரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள், கட்சிகள் உணவு வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாகன கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 16-ந் தேதியில் இருந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட இருக்கிறது. ஓட்டல்களில் தங்கும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.



    16-ந் தேதி மாலை 6 மணியுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது. வாக்குப்பதிவு தினத்தில் வாக்குச்சாவடியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் பிரசாரம் செய்யவும், செல்போன் பயன்படுத்தவும், வீடியோ எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் கூறிய ஆவணங்களை தவிர்த்து பிற ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிறகு மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசாரின் உதவியுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றன.

    பெங்களூரு வடக்கு தொகுதியில் பதிவாகும் வாக்குகள் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப்பள்ளி(பெங்களூரு வடக்கு), பேலஸ் ரோட்டில் உள்ள மவுண்ட் கார்மல் பெண்கள் பி.யூ. கல்லூரி (பெங்களூரு மத்திய தொகுதி), ஜெயநகரில் உள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. பி.யூ. கல்லூரி (பெங்களூரு தெற்கு) ஆகியவற்றில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையானது மே மாதம் 23-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019

    ஓட்டுக்கு பணம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்குச் சாவடிகள் முன்பும் விளம்பர பலகைகள் வைக்க கோரிய பொதுநல வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #LoksabhaElections2019 #HighCourt
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    பூந்தமல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழக அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் தேர்தலுக்கு பின்பு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார். இது மறைமுகமாக தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டுவதற்கு சமமாகும்.

    தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குகளை பெற வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம் வழங்குவது தேர்தல் நடைமுறையை கேலிக்கூத்தாக்கி விடும்.

    தமிழகம் முழுவதும் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.500 பணமாக வழங்குவதாகவும், இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுகிறது.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்கு சாவடிகளிலும் விளம்பர பலகைகள் வைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

    இதேபோன்ற கோரிக்கைகளுடன் வக்கீல் ரமேஷ் என்பவரும் வழக்கு தொடர்ந்தார். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கும், பணப்பட்டுவாடா குறித்த புகார்களில் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், துண்டறிக்கைகள் வழங்கி வருவதாகவும் கூறினார்.

    இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #LoksabhaElections2019 #HighCourt
    தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகவும், 7780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டடுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths
    சென்னை:

    தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 94 ஆயிரத்து 653 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பெண்களுக்கான தனி வாக்குச்சாவடி மையம், தொகுதிக்கு ஒன்று அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.



    வாக்காளர்கள் தங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பிற 13 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் முதல்முறையாக வாக்களிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அங்கு சிகிச்சை பெற்று வரும் 900 பேரில் வாக்களிக்கும் தகுதியுடைய 192 பேரை மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

    தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.127.66 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.62 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.284 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தலைமை தேர்தல் அதிகாரியின் பேச்சு, வாய்பேச முடியாத மற்றும் காது கேளாதோருக்கும் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElectoins2019 #TamilNaduCEO #SensitiveBooths

    மராட்டியத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. #WomenPollingBooth
    மும்பை:

    மராட்டியத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு 8.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 4.16 கோடி பேர்.

    பெண் வாக்காளர்கள் மத்தியில் வாக்குரிமை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 288 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே பணியாற்றுவார்கள் என்று நேற்று மாநில தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடந்த தேர்தலில் மராட்டியத்தில் பெண்கள் ஓட்டு 57 சதவீதம் மட்டுமே பதிவானது. சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட 80 சதவீதம் பெண்கள் ஓட்டு பதிவான நிலையில் மராட்டியம் அந்த பட்டியலில் மிகவும் பின்தங்கி இருந்தது.

    இதையடுத்து மராட்டியத்தில் பெண் வாக்காளர்களை ஊக்குவிக்க இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மராட்டியத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதன்படி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச்சாவடி ஒன்று அமைக்கப்படுகிறது.

    இந்த வாக்குப்பதிவு மையத்தில் தலைமை அதிகாரி, வாக்குப்பதிவு பணியாளர்கள் மட்டும் அல்லாமல் போலீசாரும் பெண்களாகவே இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களே பணியாற்றினாலும் ஆண் வாக்காளர்களும் அங்கு ஓட்டுபோட முடியும்.

    பெண் பணியாளர்கள் வழிநடத்தும் வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாக்குப்பதிவு மையங்கள் பெரும்பாலும் தாசில்தார் அலுவலகம் அல்லது போலீஸ் நிலையங்கள் அருகிலேயே அமைக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 
    கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #LSPolls #ChristianSchoolsBooths
    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் பல்வேறு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.



    “தேவாலயங்கள் இயங்கக்கூடிய கிறிஸ்துவப் பள்ளிகள் அதிகமாக உள்ள நிலையில், அந்த தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும், அதேசமயம் அந்த பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் இயங்கும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிறிஸ்தவ பள்ளிகளில் செயல்படக்கூடிய வாக்குசாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால், தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிஷப் கவுன்சிலின் மனுவிற்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தார். #LSPolls #ChristianSchoolsBooths 
    வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார். #LSPoll
    ஆம்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய கலெக்டர் ராமன் ஆம்பூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், தேர்தலுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, தாசில்தார் சுஜாதா மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் ஆம்பூர் தொகுதி மக்கள் 2 வாக்கு செலுத்த வேண்டும். வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளவர்களுக்கு வருகிற 24-ந் தேதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு 4 கட்ட பயிற்சி அளிக்கப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் 326 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கும், ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை வேலூரில் உள்ள தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தான் நடக்கும்’ என்றார்.

    அதைத்தொடர்ந்து வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று தேர்தல் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்தும், அதன் விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    முன்னதாக குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் பாதுகாப்பு அறைகளை கலெக்டர் எஸ்.ஏ.ராமன் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து மண்டல அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தாசில்தார் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமநந்தினி, வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன், துணை தாசில்தார் பலராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் தரணி, சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர். #LSPoll

    ×