search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106218"

    கோக்-பெப்சி உள்ளிட்ட அன்னிய குளிர்பானங்களை ஆகஸ்ட்-15-ந்தேதி முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் விழுப்புரத்தில் நடந்தது. மே-5 ந்தேதி தூத்துக்குடியில் வணிகர் தின மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய மாநில-மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி. பாராட்டுகள் தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    வணிகர் சங்க பேரவைக்கு புதிய மாநில பொதுச்செயலாளராக சி.எல். செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் மாநில தலைவர் த.வெள்ளையன் பேசியதாவது:-



    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட்டு இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை நிரூபித்து உள்ளார்கள். வாக்களித்த மக்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் பெருமையை காப்பாற்றி இருக்கிற நாம் நம்முடைய வாழ்வாதாரத்தை நமது தொழில் உரிமைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிபெற்று வருபவர்கள் காப்பாற்றுவார்களா? என்றால் நிச்சயமாக காப்பாற்ற மாட்டார்கள். எல்லோரும் வெளிநாட்டுக்குத்தான் துணையாக இருப்பார்கள்.

    இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அன்னிய தயாரிப்பு பொருட்களை தவிர்த்து நம் நாட்டு தயாரிப்பு பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற ஒரு சுதேசி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

    வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘‘சுதேசி பொருட்களைத்தான் வாங்க வேண்டும்’’ என்ற இருசக்கர வாகனத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் தமிழகம் முழுவதும் இருந்து தொடங்கி திருச்சி மலைக்கோட்டைக்கு ஆகஸ்ட் 15-ந்தேதி வந்தடைகிறது.

    அங்கு ‘சுதேசி பிரகடனம்’ செய்ய இருக்கிறோம். அன்னிய குளிர்பானங்களான கோக்-பெப்சியையும் அதன் இதர தயாரிப்புகளையும் கடைகளில் விற்காமல் புறக்கணிக்க வேண்டும். அன்று முதல் அந்நிய பொருட்களின் தயாரிப்புகளை கடைகளில் வியாபாரிகள் முன்னிலை படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விளம்பரங்கள் மூலம் ஏற்படும் அந்நிய மோகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    நம் நாட்டு தயாரிப்பு சுதேசி பொருட்களை தான் கடைகளில் விற்க வேண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து சில்லரை வியாபாரிகளும் வணிகர் சங்க பேரவையின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக இதனை செயல்படுத்த முன்வர வேண்டுகிறேன்.

    இவ்வாறு த.வெள்ளையன் பேசினார்.
    கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை யொட்டி 500-க்கும் மேற்பட்ட சீசன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை யொட்டி 500-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

    சபரிமலை பக்தர்கள் பலரும் தற்போது கன்னியாகுமரி வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் சீசன் கடைகளில் விற்கப்படும் பொருள்கள் பல காலாவதியாகி இருப்பதாகவும், அதனை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கன்னியாகுமரியில் உள்ள சீசன் கடைகளில் ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாகரன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிரவின் ரகு, சிதம்பர தாணுபிள்ளை, கிளாட்சன், நாகராஜன், சண்முகசுந்தரம் ஆகியோர் இன்று கன்னியாகுமரி சீசன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    சன்செட் பாயின்ட், கடற்கரை சாலைகளில் உள்ள கடைகளில் இந்த ஆய்வு நடந்தது. அங்கிருந்த பொருட்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    இதில் பல கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றி தரையில் கொட்டி அழித்தனர்.

    மேலும் தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், அந்த கடைகளை காலி செய்ய டிசம்பர் 31-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2-ந் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, முதல்-அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களுக்கு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கடைகளை காலி செய்யும்படி கூறப்பட்டிருந்தது.

    இந்த நோட்டீசை எதிர்த்து குமார் என்பவர் உள்பட ஏராளமான கடைக்காரர்கள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.

    பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டில் வைத்து நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களின் தொல்லியல் தன்மைகளை பாதுகாக்க வேண்டும் என்று அரசு எடுத்த முடிவின் அடிப்படையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவில், மேலமாசி வீதியில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், அண்ணா நகர் சேவுகப் பெருமாள் கோவில், மதுரை கிருஷ்ணராயர் தெப்பம் ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், குற்றாலம், திருக்குற்றாலநாதர் சுவாமி கோவில்,

    சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் (ஆண்டாள்) கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், திருச்சி நாகநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் என்று 15 கோவில்களில் கடை வைத்திருப்பவர்களுக்கு, கடையை காலி செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    அதாவது, கோவில் வளாகத்துக்குள்ளும், வெளியேயும், கோவில் மதில்சுவர் அருகேயும் கடை வைத்திருப்பவர்கள், பூஜை பொருட்கள், பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக இந்த கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘மனுதாரர்கள் வைத்திருக்கும் கடைகளினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. எனவே, கடைகளை காலி செய்தால், இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும்’ என்று வாதிட்டனர். கோவில்களை பாதுகாப்பது என்பது பொதுநலன் ஆகும். எனவே, கடை வைத்திருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறினாலும், தனிப்பட்டவர்களின் நலனைவிட, பொதுநலன் தான் முக்கியமாகும்.

    அதனால், கோவிலை சுற்றியுள்ள கடைகளை காலி செய்யவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சரியான முடிவினை எடுத்துள்ளனர். அந்த நடவடிக்கையில் சட்டவிரோதம், விதிமீறல் எதுவும் இல்லை. எனவே, இந்த நோட்டீசில் தலையிட இந்த ஐகோர்ட்டு விரும்பவில்லை.

    அதேநேரம், மனுதாரர்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக, கடை வைத்திருப்பதால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடியுமா? என்று இந்து சமய அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்க முடியும். மற்ற கோவில்களில் மாற்று இடம் வழங்க இடம் இல்லை’ என்று கூறியது.

    எனவே, இந்த இரு கோவில்களில் கடை வைத்திருப்பவர்கள், மாற்று இடம் கேட்டு மனு செய்தால், அதை கருணையுடன் அதிகாரிகள் பரிசீலிக்கவேண்டும். பிற கோவில்களில் கடை வைத்திருப்பவர்களை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கவேண்டும்.

    அதனால், வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் அவர்கள் கடைகளை காலி செய்யவேண்டும். அதுவரையில் குத்தகை தொகை மற்றும் வாடகை கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் முறையாக செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, டிசம்பர் 31-ந் தேதி வரையில், கடை நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனுவும் கொடுக்க வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.#tamilnews
    தாம்பரத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள கைக்கெடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
    ஆலந்தூர்:

    சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் (வயது 29). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள வேளச்சேரி சாலையில் கைக்கெடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை சந்தீப் பூட்டி விட்டு சென்றார்.

    வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க சந்தீப் வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டார். இதுபற்றி சேலையூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு வேனில் வந்த கொள்ளையர்கள் கைக்கெடிகாரங்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கடையில் இருந்து ரூ.35 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கைக்கெடிகாரங்களை அவர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த மாதம் கிழக்கு தாம்பரம் மகாலட்சுமி நகர் வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்த மற்றொரு கெடிகாரக்கடையிலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கெடிகாரங்கள் கொள்ளைபோனது குறிப்பிடத்தக்கது. 
    ×