search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளையன்"

    கோக்-பெப்சி உள்ளிட்ட அன்னிய குளிர்பானங்களை ஆகஸ்ட்-15-ந்தேதி முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் விழுப்புரத்தில் நடந்தது. மே-5 ந்தேதி தூத்துக்குடியில் வணிகர் தின மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய மாநில-மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி. பாராட்டுகள் தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    வணிகர் சங்க பேரவைக்கு புதிய மாநில பொதுச்செயலாளராக சி.எல். செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் மாநில தலைவர் த.வெள்ளையன் பேசியதாவது:-



    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட்டு இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை நிரூபித்து உள்ளார்கள். வாக்களித்த மக்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. நாட்டின் பெருமையை காப்பாற்றி இருக்கிற நாம் நம்முடைய வாழ்வாதாரத்தை நமது தொழில் உரிமைகளை தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிபெற்று வருபவர்கள் காப்பாற்றுவார்களா? என்றால் நிச்சயமாக காப்பாற்ற மாட்டார்கள். எல்லோரும் வெளிநாட்டுக்குத்தான் துணையாக இருப்பார்கள்.

    இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அன்னிய தயாரிப்பு பொருட்களை தவிர்த்து நம் நாட்டு தயாரிப்பு பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற ஒரு சுதேசி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

    வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘‘சுதேசி பொருட்களைத்தான் வாங்க வேண்டும்’’ என்ற இருசக்கர வாகனத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் தமிழகம் முழுவதும் இருந்து தொடங்கி திருச்சி மலைக்கோட்டைக்கு ஆகஸ்ட் 15-ந்தேதி வந்தடைகிறது.

    அங்கு ‘சுதேசி பிரகடனம்’ செய்ய இருக்கிறோம். அன்னிய குளிர்பானங்களான கோக்-பெப்சியையும் அதன் இதர தயாரிப்புகளையும் கடைகளில் விற்காமல் புறக்கணிக்க வேண்டும். அன்று முதல் அந்நிய பொருட்களின் தயாரிப்புகளை கடைகளில் வியாபாரிகள் முன்னிலை படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விளம்பரங்கள் மூலம் ஏற்படும் அந்நிய மோகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    நம் நாட்டு தயாரிப்பு சுதேசி பொருட்களை தான் கடைகளில் விற்க வேண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து சில்லரை வியாபாரிகளும் வணிகர் சங்க பேரவையின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக இதனை செயல்படுத்த முன்வர வேண்டுகிறேன்.

    இவ்வாறு த.வெள்ளையன் பேசினார்.
    த.வெள்ளையன் பற்றி வாட்ஸ்-அப், முகநூல் வாயிலாக அவதூறு தகவல்கள் பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்க பிரமுகர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத்துள்ளனர்.
    சென்னை :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தென்சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் ஏராளமான வணிகர் சங்க பிரமுகர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் த.பத்மநாபன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா மீது கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆனால், இந்த வழக்கு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனின் தூண்டுதலின் பேரில் போடப்பட்டு உள்ளதாகவும், அவரது தூண்டுதலின் பேரில்தான் த.பத்மநாபன் புகார் மனு கொடுத்ததாகவும் வாட்ஸ்-அப், முகநூல் வாயிலாகவும் அவதூறு தகவல்களை பரப்புகிறார்கள். த.வெள்ளையன் பற்றி இது போன்று அவதூறு தகவல்கள் பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

    இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
    நெடுஞ்சாலைக்காக சுங்க கட்டணம் வசூலிப்பது புதிய முறை கொள்ளை என வெள்ளையன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #vellaiyan

    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் ஈரோட்டில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    வணிகர்கள் மிகுந்த வலிமையோடு செயல்பட வேண்டிய காலம் இது அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் போன்றவை சில்லரை வணிகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது சில்லறை வணிகர்கள் கடைப் பிடிக்க முடியாத பல்வேறு சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது சில்லறை வணிகர்கள் அன்னிய முதலீட்டாளர்கள் உடன் போட்டி போடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    முன்பு ஆங்கிலேயர்கள் எவ்வாறு நமது நாட்டிற்குள் நுழைந்தார்களோ அதேபோன்று அந்நிய முதலீடு ஆன்லைன் வர்த்தகம் வந்துள்ளது.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஸ்டிரைக் நடந்து வருகிறது இதை ஆட்சியாளர்களுக்கு இடித்துரைக்கும் வகையில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இப்போதாவது பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும்.

    நெடுஞ்சாலைக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது கொடுமையானது இது புதிய முறை கொள்ளை ஆகும் எனவே மத்திய அரசு இதை கைவிட வேண்டும் லாரி உரிமையாளர் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு வெள்ளையன் கூறினார்.  #vellaiyan

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.
    சென்னை :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டத்தை நசுக்க போலீசார் நடத்தியிருக்கும் காட்டு தர்பாரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடுமையாக கண்டிக்கிறது.

    முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான சாமானிய மக்களை கைது செய்திருக்கலாமே அன்றி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்கள் போராட்டம் திடீரென்று ஏற்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடக்கும் போராட்டம்.

    கண்மூடித்தனமான போலீசாரின் காட்டு தர்பார் 12 உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 65 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த காட்டு தர்பாருக்கு ஒட்டுமொத்த காவல்துறையோ, அரசோ காரணம் என்று சொல்லிவிட முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலையின் பணபலமே இதற்கு காரணமாக இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை செய்து பணத்துக்காக பணியாற்றிய கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த காட்டு தர்பாரை கண்டித்து 24-ந்தேதி(இன்று) தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

    தமிழக வரலாற்றில் இந்த காட்டுதர்பார் ஒரு கறைப்படிந்த அத்தியாயம், வணிகர்கள், விவசாயிகள், பொதுத்துறை ஊழியர்கள் என்று போராடும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக இதுபோன்ற காட்டு தர்பார் கட்டவீழ்த்து விடப்படலாம். இன்றே அதற்கு முடிவு கட்டுவதற்கு கடையடைப்பில் அனைத்து வணிகர்களும் பங்கேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் நாளை கடையடைப்பு நடத்த மாநில தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கோவை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் முத்துராஜ், பொருளாளர் பொன். தங்கமாரியப்பன்,மாநில துணை பொது செயலாளர் அபிபுல்லா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாட்களுக்கு மேலாக பல போராட்டத்தை தூத்துக்குடியை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள்,வணிகர் சங்கங்கள் செய்து கொண்டிருக்கிறது.

    நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பாவி பொதுமக்கள் 12 பேரை காவல் துறையினர் சுட்டு வீழ்த்தியதற்கும் அதற்கு துணை போன தமிழக அரசை கண்டித்து நாளை (24-ந் தேதி) முழு கடையடைப்பு நடத்த மாநில தலைவர் வெள்ளையன் வேண்டு கோள்விடுத்துள்ளார்.

    இதனை ஏற்று கோவையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அனைத்து வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    வால்மார்ட் நிறுவனத்தை விரட்டி அடிப்போம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம் சிறுவணிகர்களின் வாழ்தாவாரத்தையும், வாழ்க்கை முறையையும் சின்னா பின்னாமாக்கி விடும்.

    எனவேதான் அந்நிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறோம். அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சித்த போது வணிகர்களை திரட்டி போராடினோம். அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த வி‌ஷயத்தில் வணிகர்களுக்கு துணையாக நின்றது மறக்க முடியாதது.

    அன்று விரட்டப்பட்டு முன் வாசல் வழியாக வெளியேறி வால்மார்ட் நிறுவனம் இன்று இந்திய ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கி பின் வாசல் வழியாக நுழைந்து சில்லரை வணிகத்தை ஒட்டு மொத்தமாக கைப்பற்ற பார்க்கிறது. மத்திய அரசு இதை அனுமதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

    உள்நாட்டு வணிகத்தின் மீதும், வணிகர்கள் மீதும் உண்மையில் அக்கறையிருந்தால் பிளிப்கார்ட்- வால்மார்ட் உடன்பாட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும். வால்மார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்குள் நுழைய வணிகர்கள் அனுமதிக்கமாட்டோம். ஆன்லைன் வணிகத்தில் நுழைந்த வால்மாட்டை விரட்டி அடிப்போம்.

    தேச விரோத வர்த்தக செயல்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் வணிகர் நலன் காக்க தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நேரடியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு த.வெள்ளையன் கூறினார். #tamilnews

    ×