search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிப்பு"

    • காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான இருமல், சளி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், அத்திப்பட்டு அனுப்பம்பட்டு, பழவேற்காடு, வன்னிப்பாக்கம், தேவம்பட்டு, நந்தியம்பாக்கம், அண்ணாமலைசேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான இருமல், சளி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மட்டும் 5 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தடப்பெருக்பாக்கம் ஊராட்சி முழுவதும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வீடுகளில் பொருட்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மேலும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதித்த கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வீடுகளில் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும், கொசு மருந்து தெளிக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
    • மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு நிலை ஏற்படுகிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த உலர் களம் வசதி இல்லைஅரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர்.

    நெடுஞ்சாலையில் நெல் உலர்த்துவதால்வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதோடு, நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிளாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.

    விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சாலியமங்களம் பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    சாலியமங்களம் பகுதியில் 2500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன இங்கு விளைய கூடிய நெல்லை காயவைக்க உலர் களம் இல்லைஅரசு கொள்முதல் நிலையத்திலும் நெல்லை காயவைக்க இடவசதி இல்லைநெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகின்றனர்.

    அதனால விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலைகளில் கொட்டி காய வைக்க வேண்டி உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேற வழியில்லை நெல்லை உலர்த்த அரசு களம் அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே ஹைட்ரோ கார்பன் அகழ்வு திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ள நிலையில் ஹைட்ரோ கார்பனின் உற்பத்தி, அதன் பயன்பாடு மற்றும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
    இந்தியா பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல 45 சதவீதம் எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறார்கள்.

    இதற்காக பெருமளவு பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் குறுகிய காலத்திற்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. எனவே இந்தியாவிலேயே எரிபொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.

    இதனால் மாற்று ஏற்பாடாக எரிபொருள்களை உற்பத்தி செய்யும் திட்டங்களை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதில் ஒன்று தான் ஹைட்ரோ கார்பன் திட்டம்.

    நாம் பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களில் ஹைட்ரஜனும், கார்பனும் கலந்துள்ளது. அவைதான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோன்று ஹைட்ரஜனும், கார்பனும் கலந்த பல்வேறு வகையான எரிபொருள்கள் பூமிக்கு அடியில் வாயுவாக தேங்கி உள்ளன. அவை மீத்தேன், புரோபைன், பியூடேன், ஈத்தேன், பென்டேன் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் எரிபொருள் ஆகும்.

    அதாவது ஹைட்ரஜன் அணுக்களும், கார்பன் அணுக்களும் எந்த வகையில் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன என்பதன் அடிப்படையில் இவற்றிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    உதாரணத்திற்கு 4 ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு கார்பன் அணுவும் சேர்ந்திருந்தால் அது மீத்தேன். 2 கார்பன் அணுவும், 6 ஹைட்ரஜன் அணுவும் கலந்திருந்தால் அது ஈத்தேன்.

    இவ்வாறு அணுக்கள் சேர்மானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு எரிபொருளும் உள்ளன. நிலத்திற்கு அடியில் இந்த அனைத்து வகை எரிபொருள்களும் கலந்திருக்கின்றன. இவற்றை ஒட்டுமொத்தமாக ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கிறார்கள்.

    பூமிக்கு அடியில் இவைகள் பாறைகளின் இடுக்குகளில் ஆங்காங்கே ஏராளமாக தேங்கி நிற்கின்றன. இந்தியாவின் சில பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

    அவ்வாறு அதிகமாக காணப்படும் பகுதிகளில் தமிழ்நாடு ஒன்று. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் வரை அதிக அளவில் ஹைட்ரோ கார்பன்கள் பூமிக்கு அடியில் இருக்கின்றன.

    இவற்றை தோண்டி எடுப்பதற்கு தான் இப்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இவற்றை தோண்டி எடுக்கும் பணிகளை மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவனங்கள் செய்து வந்தன. ஆனால் இந்த நிறுவனங்களால் பெருமளவு பணத்தை செலவிட்டு பணிகளை செய்ய முடியவில்லை. எனவே தனியாருக்கு இது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    பூமிக்கு அடியில் 1000 மீட்டரில் இருந்து 5000 மீட்டர் ஆழம் வரை இவை படிந்திருக்கின்றன. அவற்றை தோண்டி எடுக்கவேண்டுமானால் ராட்சத வடிவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும். செங்குத்தாகவும், குறுக்கு நெடுக்குமாகவும் இந்த கிணறு அமைக்கப்படும்.

    அப்போது பாறை இடுக்குகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேறும். இதற்காக உள்ளுக்குள் தண்ணீர் அல்லது வாயுக்கள் மூலமாக அழுத்தம் கொடுக்கப்படும். அப்போது வெளியே வரும் வாயுக்களை கலன்களில் சேமித்து அவற்றை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வார்கள். அங்கிருந்து தரமான ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கப்பட்டு அவை எரிபொருள்களாக பயன்படுத்தப்படும்.

    பொதுவாக நமது நிலப்பரப்பில் மீத்தேன் வாயுதான் அதிகமாக பரவி உள்ளது. கிட்டத்தட்ட 90-லிருந்து 95 சதவீதம் வரை மீத்தேன் எடுக்கப்படும். இதற்காகத்தான் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.



    1000 மீட்டரில் இருந்து 3000 மீட்டர் வரை ஆழ்துளை கிணறு தோண்ட உள்ளனர். அப்போது அங்கு தேங்கி இருக்கும் ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் வெளியேற தொடங்கும். அந்த இடுக்குகளில் நிலத்தடி நீர் சென்றுவிடும்.

    உதாரணத்திற்கு தற்போது நிலத்தடி நீர் பூமிக்கு கீழே 100 மீட்டரில் இருந்து 400 மீட்டர் ஆழத்தில் இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டும்போது 1000 மீட்டரிலிருந்து 3000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் வெற்றிடத்திற்குள் இந்த தண்ணீர் புகுந்துவிடும்.

    அதாவது மேல்மட்டத்தில் உள்ள தண்ணீர் கீழ்மட்டத்திற்கு சென்றுவிடும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கிணறுகளில் இருந்து பெருமளவு தண்ணீரையும் வெளியேற்றுவார்கள்.

    இதனால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நிலத்தடி நீரே கிடைக்காத நிலை ஏற்படும். இதன் காரணமாக அந்த பகுதி விவசாயமே அழிவு நிலைக்கு தள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து பலவிதமான நச்சு வாயுக்கள் வெளியேறும். இவை காற்றில் கலந்து சுற்றுப்புற சூழலை முற்றிலும் நாசமாக்கிவிடும்.

    மனிதன் மற்றும் அனைத்து உயிரினங்களின் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். செடி, கொடிகள் என இயற்கைகளையும் நாசமாக்கிவிடும்.

    விவசாயம் இல்லாத பாலைவன பகுதி அல்லது மக்கள் அதிகம் பயன்படுத்தாத பகுதி ஆகியவற்றில் இந்த கிணறுகளை தோண்டினால் அதனால் பெரிய அளவில் பிரச்சினைகள் வராது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இவற்றை உருவாக்கும்போது அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    எனவே தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    கேரளாவில் இன்று 2-வது நாளாக ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. #BharatBandh
    திருவனந்தபுரம்:

    நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு வரை நீடிக்கிறது.

    கேரளாவிலும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான ஆட்டோ, டாக்சி, வேன்களும் ஓடவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

    இதனால் ரெயில்களை பொதுமக்கள் நாடிச் சென்றனர். ஆனால் ரெயில்களையும் மறித்து போராட்டம் நடைபெற்றதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் தாமதமாகவே புறப்பட்டுச் செல்ல முடிந்தது. இந்த போராட்டம் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது.

    இன்று 2-வது நாளாக கேரளாவில் ரெயில்களை மறித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். காலை 6 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடந்ததால் அந்த ரெயில் புறப்பட முடியாத சூழ்நிலை உருவானது. உடனடியாக ரெயில்வே போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    இதேபோல கொச்சி, கொல்லத்திலும் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.



    இன்றும் கேரள அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் பாதுகாப்பாக டெப்போக்களில் நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் சபரிமலைக்கு சென்று வந்தன.

    திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த நோயாளிகள் பலர் பஸ், ஆட்டோக்கள் இயங்காததால் சிரமத்திற்கு ஆளானார்கள். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தங்களது ஜீப், வேன்களில் அவர்களை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல உதவினார்கள்.

    வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  #BharatBandh



    2016-ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டத்தால் நாட்டின் வளர்ச்சி சுமார் 2 சதவீதம் பாதிக்கப்பட்டதாக அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #Demonetisation
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    அப்போது பண புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் இது 86 சதவீதமாகும். திடீரென பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

    பண மதிப்பிழப்பு திட்டத்தால் ஏற்பட்ட தாக்கம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த தேசிய பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

    அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் கேபிரியேல் ஜோட்ரோவ்ரிச், கீதா கோபிநாத், மும்பை குளோபல் மேக்ரோ ரிசர்ச் அமைப்பின் மேலாண்மை இயக்குனர் பிராச்சி மிஸ்ரா, ரிசர்வ் வங்கி அதிகாரி அபினவ் நாராயணன் ஆகியோர் இந்த குழுவில் அங்கத்தினர்களாக இருந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அது தொடர்பான கட்டுரை ஒன்றை இப்போது அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    அதில், 2016 நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டம் இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து விட்டது.

    அன்றைய கால கட்டத்தில் சுமார் 2 சதவீத வளர்ச்சியை பண மதிப்பிழப்பு பாதித்து இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

    பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும் நவம்பர் மாதமும், டிசம்பர் மாதமும் 3 சதவீதம் வரை பாதிப்பு இருந்ததாகவும், அதன் பிறகு பல மாதங்கள் இதன் தாக்கத்தால் பாதிப்புகள் தொடர்ந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    2017 கோடை காலத்தில் நாட்டில் பொருளாதார ரீதியாக மோசமான நிலை இருந்ததாகவும் அதில் கூறியுள்ளனர்.

    மேலும் அந்த அறிக்கையில் பணமில்லா பரிவர்த்தனை திட்டங்கள், நவீன நிதி சந்தை பொருளாதாரத்தில் அவசியமான ஒன்று. அது, இந்திய பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.


    பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சில நீண்ட கால பலன்கள் கிடைத்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    அதாவது வரி வசூல் அதிகரிப்பு, நிதி அமைப்புகளில் சேமிப்பு அதிகரிப்பு, பணமில்லா பரிவர்த்தனை முறைகள் அதிகரிப்பு போன்றவை நடந்துள்ளது.

    ஆனாலும், இதில் எந்த மாதிரி நன்மைகள் கிடைத்தன என்பது தொடர்பாக இன்னும் விரிவாக ஆய்வு நடத்தப்படுவது அவசியம் என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    இந்த ஆய்வை நடத்தியவர்களில் கீதா கோபிநாத், பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த மாதம் இந்த பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Demonetisation
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மழை காரணமாக நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    அறந்தாங்கி:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை , அறந்தாங்கி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடை விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். தொடர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. சிதலமடைந்த சாலை பகுதிகள் சகதியாக மாறியுள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. குடிசை வீடுகள் சேதமானதால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். மின்சாரம், குடி நீர் இல்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழையால் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மின்கம்பங்கள் சீரமைப்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    மழை பெய்து கொண்டிருந்த போதிலும் மின் ஊழியர்கள் அதனை பொருட்படுத்தாமல் தங்கள் பணியை தொடர்ந்தனர். ஆனாலும் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் அந்த பகுதிகளுக்கு மின் கம்பங்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று பெய்த மழையாலும் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    புயலால் சேதமடைந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பொதுமக்கள் தொடர்ந்து தங்கியிருந்து வருகின்றனர். வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகியதால் அவர்கள் கடும் அவ திக்குள்ளாகினர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    புதுக்கோட்டை-30, ஆலங்குடி-34, கந்தர்வக்கோட்டை-7, கறம்பக்குடி-29, திருமயம்-16.20, அறந்தாங்கி -22.40, ஆவுடையார்கோவில் -26.40, மணல்மேல்குடி-39, இலுப்பூர்-62, குளத்தூர்-7.60, பொன்னமராவதி-15.

    மாவட்டம் முழுவதும் மொத்தம் 288.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். கஜா புயலில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமாகின.

    50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காணாமல் போயின. சேதமான மற்றும் காணாமல் விசைப்படகுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு இன்னும் விசைப்படகு மீனவர்கள் பலர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்கள் புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். தற்போது அந்த மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் விற்பனை பாதிக்கும் என்பதால் கடலுக்கு இன்னும் மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர். நாளை முதல் அவர்கள் மீண்டும் மீன் பிடிக்க செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். #GajaCyclone #EdappadiPalaniswami #CentralTeam
    சென்னை:

    கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

    இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான இந்த குழு, இன்று காலை சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

    அப்போது, கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து பேசப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் எப்போது ஆய்வு செய்வது? அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன? என்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது.   இந்த சந்திப்பின்போது அமைச்சர் உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதன்பிறகு அதிகாரிகளுடனும் மத்திய குழு ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பிறகு இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிகிறது.



    அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடலாம் என தெரிகிறது.

    கஜா புயல் ஏற்படுத்திய சேத  விவரங்களை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும்.   #GajaCyclone #EdappadiPalaniswami  #CentralTeam
    ‘கஜா’ புயலால் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 102 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2 நாளில் மின்சார வினியோகம் சீராகும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. #GajaCyclone
    சென்னை:

    ‘கஜா’ புயலால் மின்சாரத்துறைக்கு ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ‘கஜா’ புயல் கரை கடந்ததையொட்டி தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் மின் பாதிப்பு மற்றும் சேதங்கள் அதிகளவில் இருந்தது.

    பிற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாகவே இருந்தது. 7 மாவட்டங்களிலும் மொத்தம் 20 ஆயிரம் மின் கம்பங்கள், 102 துணை மின்நிலையங்கள், 495 மின் கடத்திகள்(டிரான்ஸ்பார்ம்), 100 மின்மாற்றிகள், 500 கிலோ மீட்டர் மின் வழித்தடங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

    அந்தந்த மாவட்டங்களில் தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதால் திருச்சி, கோவை மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கடத்திகள், மின் கம்பிகள் மற்றும் தளவாட பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப பிற மாவட்டங்களில் இருந்து தளவாட பொருட்கள் வாகனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை கண்காணிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து ஏற்கனவே இயக்குனர்(மின் தொடரமைப்பு) அனுப்பி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.



    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கிணங்க எரிசக்தி துறை செயலர் முகமது நசிமுதீன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குனர் பி.என்.ஸ்ரீதர், மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் எஸ்.சண்முகம், இயக்குனர் (பகிர்மானம்) எம்.ஏ.ஹெலன் ஆகியோர் இன்று(நேற்று) அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு உயர் அலுவலர்கள் குழுவுடன் விரைந்துள்ளனர்.

    இந்த 3 மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. படிப்படியாக மின் வினியோகம் சீரமைக்கப்பட்டு 2 நாட்களில் 100 சதவீதம் மின் வினியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GajaCyclone #Gaja
    விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் ராயபுரத்தை சேர்ந்த முனியமுத்து மகன் தஷ்வின் (வயது 4) என்ற சிறுவன், கடந்த சில நாட்களாக விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனால் பதறிப்போன முனியமுத்து, தஷ்வினை அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவனுக்கு விஷ காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் அவன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதேபோல, பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய 4 தாலுகாக்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருக்கிறதா? என பரிசோதனை செய்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கொசுக்கள் கடிப்பதால்தான் காய்ச்சல் ஏற்படுகிறது. ஆகவே, கொசுக்கள் உற்பத்தியாகாதவாறு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்று நோயாளிகளிடம் டாக்டர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்
    அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறி உள்ளது. #HurricaneMichael
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர்.

    அது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது.

    முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.

    அத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

    மழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

    பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.

    லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


    அமெரிக்காவில் மரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறாவளி காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.

    கடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.

    புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறி உள்ளது.

    மின்சாரம் இல்லாததால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

    கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் கூறினார்கள்.

    தொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர். #HurricaneMichael
    ஆதார் கார்டை தனியார் துறைகள் ஒருபோதும் அடையாள அட்டையாக கருதக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் தீர்ப்பால் அரசு, தனியார் துறைகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். #AadhaarCard
    புதுடெல்லி:

    ஆதார் அட்டை முதலில் நடைமுறைக்கு வந்த போது ஒரு சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.

    ஆனால் பிற்காலத்தில் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உயிரி அடையாளமாக (பயோ மெட்ரிக்) ஆதார் அட்டை இருந்ததால் அது சரியான அடையாள அங்கீகாரமாக கருதப்பட்டு எல்லா துறைகளும் இதை பயன்படுத்தின.

    அரசு துறைகளில் அத்தனை அத்தியாவசிய பணிகளுக்கும் ஆதார் கார்டு அடையாள அட்டையாக கருதப்பட்டது. இதுமட்டுமல்லாமல் தனியார் துறைகளும் ஆதார் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த தொடங்கின.

    இவ்வாறு பல பணிகளுக்கும் ஆதார் கார்டு கேட்கப்பட்டதால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதன் மீது கடந்த புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அதில் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் தான் ஆதார் கார்டை அடையாளமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    எல்லாத்துறைகளும் அதை பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக அரசு சேவை திட்டங்களுக்கு மட்டும் அடையாள அட்டையாக ஆதார் கார்டை எடுத்துக் கொள்ளலாம். தனியார் துறைகள் ஒரு போதும் இவற்றை அடையாள அட்டையாக கருதக்கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

    இதன் காரணமாக அரசின் பல துறைகளிலும், தனியார் துறைகளிலும் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாஸ்போர்ட்டு வழங்குதல், தொழிலாளர் வைப்பு நிதி, டிஜி லாக்கர் போன்ற பணிகளுக்கு ஆதார் கார்டு அடையாளமாக கருத்தப்பட்டது. இனி அவற்றை பயன்படுத்த முடியாது.

    டெலிபோன் நிறுவனங்கள் ஆதார் கார்டை தான் தங்கள் அடையாளமாக எடுத்துக்கொண்டது. அதையும் இனியும் பயன்படுத்த முடியாது. வங்கிகள், பங்குச்சந்தை வர்த்தகம் போன்றவற்றிலும் இவற்றை முக்கிய அடையாளமாக எடுத்துக் கொண்டனர். அதற்கும் தடை வந்துள்ளது.

    இது சம்பந்தமாக ஆதார் கார்டு தொடங்கப்பட்ட போது அதை உருவாக்குவதில் முக்கிய நபராக இருந்த ஏ.பி.சிங் இது பற்றி கூறும்போது, தற்போதைய டிஜிட்டல் உலகத்திற்கு தகுந்தவாறு நாம் பல மாற்றங்களை கொண்டு வந்தோம். ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து மறுபடியும் ஆட்கள் மூலம் செய்யப்படும் பேப்பர் பணிகளுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

    தொழிலாளர் வைப்புநிதி துறையில் 6 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் 5 கோடி பேர் வரை ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தனர். இப்போது அதிலும் கடுமையான பாதிப்பு ஏற்படும். பங்குச் சந்தை வர்த்தகமே ஆதார் கார்டை முக்கியமாக கொண்டு தான் செயல்பட்டு வந்தது. அதற்கும் கடும் பாதிப்பு ஏற்படும்.

    அதே போல பாஸ்போர்ட் துறையில் 1 கோடியே 36 லட்சம் பேர் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தனர். அதற்கும் இனி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளது.

    தேர்தல் துறையில் 38 கோடி வாக்காளர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருந்தார்கள். அதுவும் மாற்றப்பட வேண்டும். தனியார் துறைகள், வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு இது பேருதவியாக இருந்தது. இனி அவர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். #AadhaarCard


    கரூரில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சின்னதேவன்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கவேல் பேசுகையில், நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலை போதுமானதாக இல்லை. களை எடுப்பது, மருந்து தெளிப்பது என நெல் சாகுபடிக்கு செலவு அதிகம் ஆகிறது. எனவே நெல் கொள்முதல் விலையினை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் உழைத்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். காவிரியில் உபரியாக செல்லும் நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க வேண்டும். இதற்காக குழாய் மூலம் நீரை கொண்டு வந்து கடவூர் பகுதியிலுள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயம் செழிப்பதோடு, குடிநீர் பிரச்சினையும் எளிதில் தீர்ந்துவிடும் என்று கூறினார்.

    நெரூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் கருமலை பேசுகையில், கடம்பங்குறிச்சியில் இருந்து நன்னியூர் வழியாக செல்லும் ராஜவாய்க்காலில் தண்ணீரை தேக்கி வைக்கும் மதகு உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காவிரி ஆற்று உபரிநீர் ராஜவாய்க்காலில் அதிகளவு வந்ததால், இந்த மதகுக்கு முன்புறமாக ஆங்காங்கே போடப்பட்ட சிறிய தடுப்பணைகள் உடைந்து சேதமடைந்து விட்டது. அதனை சரி செய்து தர வேண்டும். மேலும் காவிரி ஆறு, நெரூர் வாய்க்காலின் கரைகளில் ஆயில் என்ஜின் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    கரூரை சேர்ந்த விவசாயி சண்முகம் பேசுகையில், கரூர் அமராவதி ஆற்றங்கரையோரமாக கொட்டப்படும் கழிவுகளை அகற்றி தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கழிவுநீரை ஆற்றுக்குள் திறந்து விடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்பள்ளி வாய்க்காலை தூர்வாராத காரணத்தினால் அப்பகுதியில் தண்ணீர் செல்ல முடிவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமாநிலையூர் வாய்க்கால் உள்ளிட்டவை தூர்வாரப்படவில்லை. தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலை 30 ஆண்டுகளாக காணவில்லை. தூர்ந்து போய் விட்டது என்று கூறினார். உடனே எழுந்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், என்னுடன் வாருங்கள் தூர்வாரிய இடத்தையெல்லாம் காண்பிக்கிறேன் என கூறி அந்த குற்றசாட்டை மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் பேசுகையில், கரூரில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கக்கோரி கடந்த 2003-2004-ம் ஆண்டில் சென்னையிலுள்ள இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த இழப்பீட்டு தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் செப்டம்பரில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் போராட்டம் நடத்தப்படும். சணப்பிரட்டி பகுதியில் உள்ள குடிநீர் கிணறு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. அந்த கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் உள்ளிட்டவை சேதமடைந்து, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அது சீர் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் தண்ணீர் பிரச்சினையால் அவதியடைகின்றனர். எனவே அந்த குடிநீர் கிணற்றை சீர் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    மேலும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். அமராவதி, காவிரி ஆற்றங்கரையோரமாக இயங்கும் சாயப்பட்டறைகளில் அடிக்கடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக ஆற்றில் சாயக்கழிவு திறந்து விடப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நரிக்காட்டுவலசு ராஜமாணிக்கம், ஆண்டிப்பாளையம் நல்லுசாமி, கீழவெளியூர் ராஜூ உள்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பேசினர். முடிவில் இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் பதில் கூறினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஜெயந்தி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ×