search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரசேகரராவ்"

    காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னையில் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 6-வது கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடைசி கட்ட தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

    23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருமா? இல்லை அதற்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமையுமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் தனித்து போட்டியிட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பே சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை.

    இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அவர்களுடன் துரைமுருகன் முன்னாள் மத்திய மந்திரி டிஆர் பாலு ஆகியோர் உடன் இருந்தார்கள்.
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். #ChandrasekarRao
    ராமேசுவரம்:

    தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை ராமேசுவரம் வந்தார். பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு சென்ற அவர், அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புகைப்படம், அரிய ஓவியங்களை பார்வையிட்டார்.

    அதன் பின்னர் சந்திர சேகரராவ் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு தங்கினார். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இன்று காலை சந்திர சேகரராவ் ராமநாத சாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமநாதசாமி - பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தார்.

    ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோவிலில் இருந்து அவர் பிரகார மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். சந்திர சேகரராவுடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

    தெலுங்கானா முதல்வர் வருகையையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. #ChandrasekarRao
    திருமயம் அருகே சாலை விபத்தில் பலியான அய்யப்ப பக்தர்களின் குடும்பத்துக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். #PudukkottaiAccident #ChandrasekharRao #Pilgrims
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் வழிபாட்டை முடித்து விட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது, புதுக்கோட்டையை அடுத்த திருமயம் அருகே அவர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.



    இந்த விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டதை அறிந்ததும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.



    மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். #PudukkottaiAccident #ChandrasekharRao #Pilgrims
    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகர் தொகுதியில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை முதல் மந்திரி சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். #ChandrashekarRao

    ஐதராபாத்:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளன.

    இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கி உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் தொகுதியில் தற்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த வினோத்குமார் எம்.பி.யாக இருக்கிறார். அவர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று சந்திரசேகரராவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கரீம்நகர் தொகுதிக்குட்பட்ட சர்சீலா நகரில் நடந்த கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசேகரராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது தெலுங்கானாவில் எம்.பி.க்களாக இருக்கும் டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் கரீம்நகரில் மீண்டும் வேட்பாளராக வினோத்குமார் அறிவிக்கப்பட்டதும் டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினோத்குமாருக்கு டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது. 43 சதவீதம் பேர் இந்த கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதையடுத்து தெலுங்கானாவில் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    சந்திரசேகரராவின் வேட்பாளர் அறிவிப்பு காரணமாக காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. #ChandrashekarRao

    காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ChandrasekharRao

    ஐதராபாத்:

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பஞ்சாயத்துராஜ் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு குறைந்தபட்சம் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பற்றி முட்டாள்கள் போன்று பேசி வருகிறார்கள்.

    எனது அரசு பஞ்சாயத்து தேர்தலில் 61.13 சதவீத இட ஒதுக்கீடு அளித்த புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் ஸ்வப்னாரெட்டி, கோபால் ரெட்டி ஐகோர்ட்டை நாடினர்.

    இட ஒதுக்கீடுக்கு ஐகோர்ட்டு தடை விதித்ததால் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படிதான் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளோம்.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஜனவரி 10-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும். இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றி நன்கு தெரியாமல் காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதை ஆராய்ந்தால் முட்டாள் தனமாக இருக்கும்.

    அவர்கள் முட்டாள் தனத்தை வெளிக்காட்டுவதால் காங்கிரஸ் தலைவர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறோம்.

    சந்திரபாபுநாயுடு இந்தியாவிலேயே மோசமான அரசியல்வாதி. அவர் அரசியல் மேனேஜர். தலைவர்அல்ல. எனது கட்சி எப்போதுமே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க ஆதரவு தெரிவிக்கும்.

    ஆனால் இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை அரசியல் காரணங்களுக்காக மாற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrasekharRao

    சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் என்று தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார். #ChandrasekharaRao #RahulGandhi
    ஐதராபாத்:

    மாநிலத்தை தங்கமாக மாற்றுவார் என மக்கள் கனவு கண்டால், சந்திரசேகரராவ் தனது குடும்பத்தை தங்க குடும்பமாக மாற்றி விட்டார் என்று தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கினார்.

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு வரும் 7-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற உத்வேகத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



    இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும், தெலுங்குதேசம் கட்சியும் இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணி, அவருக்கு சரியான போட்டியாக அமைந்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியும் ஆட்சியைப் பிடிக்க ஆர்வமாக உள்ளது.

    இந்த நிலையில் அங்கு கத்வால் என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா பணக்கார மாநிலமாக இருந்தது. இப்போது அது கடன்களின் பிடியில் தவிக்கிறது. மாநிலத்தில், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா ரூ.1 லட்சம் கடன் உள்ளது. ஆனால் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் குடும்பத்தினர் சொத்துகளோ உயர்ந்து கொண்டே போகிறது.

    30 லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 4½ ஆண்டு கால ஆட்சியில் எத்தனை பேருக்கு இந்த ஆட்சியில் வேலை கிடைத்தது? விவசாயிகள், மலைவாழ் பழங்குடி மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளது.

    வீடு இல்லாதவர்களுக்கு 2 படுக்கை அறைகளை கொண்ட வீடுகள் கட்டித்தரப்படும் என்று சந்திரசேகர ராவ் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்படி மக்கள் வீடு கட்டிக்கொள்வதற்காக குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

    குடிநீர், வளங்கள், வேலை வாய்ப்புகள் என எல்லாவற்றையும் பெற்ற தங்கமான மாநிலமாக தங்கள் மாநிலம் மாறும் என மக்கள் கனவு கண்டார்கள். ஆனால், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் குடும்பம்தான் தங்கமான (பணக்கார) குடும்பமாக மாறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ராகுல் காந்தி, தெலுங்கானா தேர்தலையொட்டி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகியவை பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு அணி (‘பி’ டீம்), சந்திரசேகரராவ் பிரதமர் மோடியின் தெலுங்கானா ரப்பர் ஸ்டாம்ப்” என தாக்கி உள்ளார்.

    இதே போன்று மராட்டிய மாநிலத்தில் சஞ்சய் சாத்தே என்ற விவசாயி சாகுபடி செய்த 750 கிலோ வெங்காயத்துக்கு வெறும் ரூ.1,064 தான் கிடைத்து, அந்த பணத்தை அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பி உள்ளதை தொடர்புபடுத்தி மற்றொரு பதிவில் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

    அதில் அவர், “பிரதமர் மோடி 2 இந்தியாக்களை கட்டமைத்து கொண்டிருக்கிறார். ஒரு இந்தியாவில், ரபேல் விமான பேரத்தில், எதுவும் செய்யாத, விமானத்தை தயாரிக்காத அனில் அம்பானிக்கு அவர் ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை வழங்கி உள்ளார். மற்றொரு இந்தியாவில், நாசிக் விவசாயிக்கு 4 மாத உழைப்பில் விளைந்த 750 கிலோ வெங்காயத்துக்கு ரூ.1,040 கிடைத்துள்ளது” என கூறி உள்ளார். #ChandrasekharaRao #RahulGandhi 
    அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப வேண்டும் என சந்திரசேகரராவுக்கு ஒவைசி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    சந்திரசேகராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஆதிலாபாத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசும் போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை கடுமையாக சாடினார். அக்கட்சியுடன், சந்திரசேகரராவின் கட்சி ரகசியமாக நட்பு வைத்து உள்ளது. மஜ்லிஸ் கட்சியினருக்கு சந்திரசேகரராவ் பிரியாணியை அனுப்புகிறார் என்று கூறினார்.

    இதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

    குகட்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசியதாவது:-

    பிரியாணி மீது உங்களுக்கு (பா.ஜனதா) திடீரென்று பாசம் ஏன் வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. சந்திரசேகரராவிடம் டெலிபோனில் பேசி அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப கேட்டுக்கொள்வேன்.



    பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தானுககு சென்று முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    மோடியை நவாஸ்செரீப் விருந்துக்கு அழைக்கவில்லை. ஆனால் நவாஸ்செரீப் கையை பிடித்தபடி அவரது வீட்டுக்குள் மோடி சென்றார். அப்போது அங்கு என்ன சாப்பிட்டார் என்பதை அமித்ஷாவிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சி 70 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #ChandrasekharRao #TelanganaElection
    நகரி:

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ் நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பு நடத்தின.

    இதில் 119 தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 70 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ், தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 4 கட்சிகள் கூட்டணிக்கு 33 இடங்களும், பா.ஜனதாவுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 37-55 சதவீத ஓட்டுகள் பெறும் என்று கணித்துள்ளது. காங்கிரசுக்கு 27.98 சதவீத ஓட்டுகளும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 5.66 சதவீத ஓட்டுகளும், முதல்வராக சந்திரசேகரராவுக்கு 45 சதவீத பேரும், காங்கிரஸ் தலைவர் உத்தம்குமாருக்கு 30 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 52 சதவீத பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேசத்துடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர் பதவிக்கு மோடிக்கு 33.61 சதவீத பேரும், ராகுல்காந்திக்கு 30 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



    தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணிக்கு பெரும் பாலானோர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தெலுங்கு தேசம் கட்சியையும், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிடாமல் பேசினார். #ChandrasekharRao #TelanganaElection
    பிரதமர் மோடி எனக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று தெலுங்கு தேசம் செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக பேசினார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. அதில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    “பா.ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். ஏனெனில் 2 தெலுங்கு மாநிலங்களுக்கும் மத்தியில் ஆளும் தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அநீதி இழைத்துள்ளது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் முழு ஆதரவுடன் பா.ஜனதா அரசு செயல்படுகிறது.

    கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அவற்றை பயன்படுத்தியது. ஆந்திரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் விரைவிலோ அல்லது பின்னரோ பயன்படுத்தும். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தெலுங்கானாவில் தேசிய நீர்பாசன திட்டத்தை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது.

    தெலுங்கு மாநிலங்களுக்கு மட்டும் பா.ஜனதா அரசு அநீதி இழைக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் துரோகம் செய்துள்ளது.


    எனக்கும், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவுக்கும் இடையே பிரச்சினைகளை உருவாக்கி மோதல் ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி தெலுங்கானா, தெலுங்கு தேசம் 2 அல்லது 3 நாளில் முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தெலுங்கானாவில் போட்டியிட பல தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் போட்டியிட அனைவருக்கும் டிக்கெட் தர இயலாது.

    டிக்கெட் பெறுவதில் ஏற்பட்டுள்ள போட்டியை பார்க்கும் போது தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி பலமாக இருப்பதையே காட்டுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் ரமணா பேசும் போது, “தெலுங்கு தேசத்துடன் கை கோர்க்கும் கட்சிகளுடன் தான் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்பதை தலைவர் சந்திரபாபுநாயுடு முன்னிலையில் தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கு தேசம் ஆதரவின்றி தெலுங்கானாவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது” என்றார்.

    மேலும் அவர் பேசும் போது, தெலுங்கு தேசம் ஆந்திர மாநில கட்சி என சந்திரசேகரராவ் பேசியதற்கு பதில் அளித்தார். அப்போது “தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்துக்கு மட்டும் சொந்தமான கட்சி இல்லை. அனைத்து மாநிலத்துக்கும் சொந்தமானது. சந்திரசேகரராவ் தனது அரசியல் வாழ்க்கையை தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தான் தொடங்கினார்” என்றார்.

    முன்னதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சந்திரபாபுநாயுடு பேசினார். அப்போது “தெலுங்கானாவில் பல சட்டசபை தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியின் ஓட்டு வங்கி கணிசமான அளவில் உள்ளது” என்றார். #ChandrababuNaidu
    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவிடம் நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை இருப்பதால் பிரதமர் ஆவார் என்று அவரது மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் கூறியுள்ளார். #ChandrashekarRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு அமைந்து 4½ ஆண்டுகள் ஆவதையொட்டி ஐதராபாத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளை சேகரிக்க டெல்லியில் இருந்து தனியாக பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் பேட்டி அளித்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் எங்களது கட்சி மிக வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 15 இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம். அதேபோல 119 சட்டமன்ற தொகுதிகளில் 109 இடங்களை கைப்பற்றுவோம்.


    எனது தந்தை சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருந்து யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 4½ ஆண்டுகளில் இந்த சாதனைகளை செய்திருப்பது மிகப்பெரிய செயலாகும்.

    மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை அவரிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஏன் என்றால் மாநில அளவில் செயல்படும் பல கட்சிகள் பாரதிய ஜனதாவையும் விரும்பவில்லை, காங்கிரசையும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம். அப்படி ஒரு ஆட்சி வருவதாக இருந்தால் சந்திரசேகரராவ் பிரதமராக வருவார்.

    அப்படி அவர் பிரதமர் ஆனால் பல்வேறு வித்தியாசமான தொலைநோக்கு திட்டங்களை அவர் கொண்டு வருவார். ஏற்கனவே மாநிலத்தில் இதேபோல அவர் திட்டங்களை செயல்பட்டு சாதித்திருக்கிறார்.

    பிரதமர் மோடி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்கள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. நாட்டுக்கு இப்போது புதிய தலைமை தேவை. அதை சந்திரசேகர ராவ் செயல்படுத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrashekarRao #KTRamaRao
    சட்ட சபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டு இருந்த தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவ் இப்போது அந்த முடிவை கைவிட்டார். #TelanganaAssembly #ChandrasekharRao

    ஐதராபாத்:

    ஆந்திரா பிரிவினைக்குப் பின் தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியைப் பிடித்தது. சந்திரசேகர ராவ் முதல்- மந்திரியாக இருந்து வருகிறார்.

    தெலுங்கானா சட்ட சபையின் பதவி காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கிறது. இந்த நிலையில் மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் வெளியாகிறது.

    இந்த 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து தெலுங்கானா சட்டசபை தேர்தலையும் நடத்தலாமா என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தி வந்தார். இறுதியில் சட்ட சபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம் என்று முடிவுக்கு வந்தார்.

    இன்று மதியம் 1 மணிக்கு ரங்காரெட்டி மாவட்டத்தில் தெலுங்கானா கட்சி மாநாட்டை முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கூட்டி இருந்தார். இதற்காக 2,000 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வதற்காக சேர்கள், பந்தல்கள் போடப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மாநாட்டு பந்தல் சரிந்தது. மைதானத்தில் வெள்ளம் தேங்கியது.

    இதனால் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை கலைப்பு அறிவிப்பையும் ஒத்திவைத்தார். இதுபற்றி தெலுங்கானா கட்சி நிர்வாகிகள் கூறும்போது, சந்திரசேகரராவ் சட்ட சபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டு இருந்தார். இப்போது அவர் அந்த முடிவை கைவிட்டார்.

    2019-ம் ஆண்டு மே மாதம் வரை சட்டசபையின் பதவி காலம் உள்ளது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவை சந்திரசேகரராவ் எடுத்து இருப்பதாக தெரிவித்தனர். #TelanganaAssembly #ChandrasekharRao

    தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருக்கிறார். இங்கு அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற வேண்டும்.

    ஆனால் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் ஐதராபாத்தில் கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மனை திடீரென நேரில் சந்தித்து பேசினார்.

    அவரது மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியுமான கே.டி.ராமாராவ் டெல்லியில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தெலுங்கானா அரசின் தலைமை ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான ராஜிவ்சர்மா டெல்லி சென்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவை சந்தித்து பேசினார்.



    இந்த ஆண்டு இறுதியில் சத்திஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அத்துடன் சேர்த்து தெலுங்கானாவுக்கும் சட்ட சபை தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    இவர்களின் இந்த திடீர் சந்திப்பு தேர்தல் குறித்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க இருப்பதாக முதல்-மந்திரி சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார். #ChandrasekharRao
    ×