என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107099"
- நாளை மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.
- நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில் நடந்தது.
ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இரவு ஏழுமலையான் கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் பவனி வந்தார்.
8-வது நாளான நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. மாடவீதியில் உலா வரும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.
9-வது நாளான நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
திருப்பதியில் நேற்று 82,463 பேர் தரிசனம் செய்தனர். 35, 385 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி, பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக 'ராமச்சந்திரமூர்த்தி' அலங்காரத்தில் சுதர்சன சாளக்ராம ஹாரம் மற்றும் தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து தமக்கு பிடித்தமான, விசுவாசமான அனுமந்த வாகனத்தின் மீது அமர்ந்தபடி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அனுமனை போல் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் பக்தர்களும், பொதுமக்களும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே மலையப்பசாமி அனு மந்த வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து காலை 6 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியின் மனைவி சொர்ணலதாரெட்டி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மேலும் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. வாகனச் சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சூரிப பிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
- பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
- இன்று இரவு ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று காலை மோகினி வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாடவீதிகளில் உலா வருகிறார்.
ஏறக்குறைய 3 லட்சம் பக்தர்களுக்கு கருட சேவை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தென்மேற்கு வாசல், வடமேற்கு வாசல், வட கிழக்கு வாசல் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரத்தி காண்பிக்கும் இடங்களில் ஆரத்தி ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுகின்றனர்.
ஆரத்தி வழங்கும் நேரத்தில் 5 பேருக்கு தரிசனம் கொடுக்க முடியும். எனவே இந்த ஆண்டு ஆரத்திகளை ரத்து செய்து சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆரத்தி தலத்திலும் 10,000 பேருக்கு கருடசேவை காண வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல், கேலரிகளிலும், வணிக வளாகம் முதல், கோவில் எதிரில் உள்ள நடரா ஜர் மண்டபம் வரை, 2 லட்சம் பேரை அனுமதித்தால், கூடுதலாக, 25,000 பேர் தரிசனம் செய்யலாம். இதன் மூலம் சுமார் 2.75 லட்சம் முதல் 3 லட்சம் பேர் கருட சேவையை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டடம், ரம்பகீஜாவில் சிறப்பு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் திருப்தி அடையும் வகையில் கருடசேவை தரிசனம் அளிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருட சேவையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக நிமிடத்திற்கு 2 பஸ்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு இயக்கப்படுகிறது. மேலும் திருமலைக்கு செல்ல 20 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரும் வாகனங்கள் திருப்பதியிலேயே பார்க்கிங் செய்துவிட்டு பஸ்களில் திருப்பதி செல்ல வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று மதியம் முதல் இன்று இரவு வரை பைக்குகள் திருமலைக்கு செல்ல அனுமதி வழங்காததால் பஸ்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டத்தை காண முடிகிறது. பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
கருட சேவையையொட்டி ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை திருப்பதிக்கு கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பது வழக்கம்.
அதன்படி நேற்று மாலை ஆண்டாள் கோவில் இணை ஆணையர் செல்லதுரை, அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு சூடிய மாலையை திருப்பதி ஆஞ்சநேயர் சாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் சாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோரிடம் வழங்கினர்.இதையடுத்து இன்று இரவு ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை அணிவிக்கப்படுகிறது.
திருப்பதியில் நேற்று 75,382 பேர் தரிசனம் செய்தனர். 31,434 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.85 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.
- திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
- இன்று இரவு கருடசேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கற்பக விருட்ச வாகன வீதி உலா நடந்தது. அப்போது லேசான தூறல் பெய்தது. கொட்டும் மழையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசாமி, ராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு உற்சவர்கள் ரெங்கநாயக்கர் மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிய மாலைகள், கிளிகள் திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆண்டாள் சூடிய மாலைகளுக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை பல்லக்கில் மோகினி அலங்கார வீதிஉலா, இரவு கருடசேவை உற்சவம் நடக்கிறது.
- புரட்டாசி பிரம்மோற்சவ விழா தான் முக்கியத்துவம் வாய்ந்தது.
- ‘திருப்பதி வந்தால் திருப்பம் வரும்’ என்ற சொல்வழக்கு உருவானது.
வாழ்க்கையில் திருப்பம் தரும் தெய்வமாக இருப்பவர், திருப்பதி ஏழுமலையான். இதனால்தான் 'திருப்பதி வந்தால் திருப்பம் வரும்' என்ற சொல்வழக்கு உருவானது. திருமலை திருப்பதியில் அருளும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதுமே பல்வேறு விழாக்களும், உற்சவங்களும் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாதான் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் எளிமையாகவே நடத்தப்பட்டது. மாடவீதிகளில் ஏழுமலையான் வீதி உலா வரும் நிகழ்வு நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிலைமை சீரான காரணத்தால், முன்பு போலவே, வெகு விமரிசையாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா, இன்று (27.9.2022) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழா அக்டோபர் 5-ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெற உள்ளது.
இந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறும் ஒன்பது நாட்களும், அரசு முறையிலான விருந்தினர்கள் தவிர, மற்ற பிரமுகர்களுக்கான சலுகைகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட் போன்றவை ரத்து செய்யப்படும். அனைத்து பக்தர்களுமே இலவச தரிசன வரிசையில் மட்டுமே ஏழுமலையானைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- கருடசேவை அக்டோபர் 1-ந்தேதி நடக்கிறது.
- பல்வேறு வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருடசேவை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி இரவு 7 மணியளவில் தொடங்கி நடக்கிறது. அன்று வாகனச் சேவையைப் பார்க்க வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் வாகன தரிசனம் வழங்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்தநிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, போலீஸ் டி.ஐ.ஜி ரவிபிரகாஷ், போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி ஆகியோர் கோவிலின் நான்கு மாட வீதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். நான்கு மாடவீதிகளில் சாமி உலா வரும்போது, பக்தர்கள் உற்சவருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கும் இடம், கேலரிகளை பார்வையிட்டனர்.
அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் கருடசேவை அன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் பக்தர்கள் கருடசேவையை தரிசிக்கலாம்.
கேலரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாசல்கள் வழியாக பக்தர்கள் சென்று கருடவாகனத்தில் எழுந்தருளும் மலையப்பசாமியை வழிபடலாம். வீதிஉலாவின்போது கற்பூரம், நெய் தீப ஆரத்தி கொடுக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு ஆரத்தி வாசல்களிலும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு கருடசேவையைக் காண வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல் கேலரிகளிலும், கோவில் எதிரே உள்ள நாதநீராஞ்சன மண்டபம் முதல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வரையிலும் அனுமதித்தால் கூடுதலாக 25 ஆயிரம் பக்தர்கள் கருடசேவையைத் தரிசனம் செய்யலாம். அதன் மூலம் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் முதல் 3 லட்சம் பக்தர்கள் வரை மலையப்பசாமியின் கருட வாகன வீதி உலாவை தரிசிக்க முடியும்.
தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடம், ராம்பகீதா விடுதி அருகில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் கருடசேவை தரிசனம் அளித்து, மலையப்பசாமி வாகன மண்டபத்தை அடைவார்.
அறங்காவலர் குழு தீர்மானித்த முடிவின்படி வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ரூ.300 தரிசனம் உள்பட பல்வேறு வகையான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருடசேவை அன்று சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக முன்னுரிமை வழங்கப்படும்.
கருடசேவைக்காக வியாழக்கிழமை (அதாவது நேற்று) காலையில் இருந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பக்தர்களின் கூட்டத்துக்கேற்ப திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர், பக்தி சேனல் அதிகாரி சண்முககுமார், என்ஜினீயர் ஜெகதீஸ்வர்ரெட்டி மற்றும் காவல்துறையினரும், தேவஸ்தான அதிகாரிகளும் உடனிருந்தனர்.
- இன்று பைக்குகளில் திருமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கருட சேவை நாளை இரவு நடைபெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட விதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு முத்து பந்தல் வாகன ஊர்வலம் நடந்தது.
இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் மாட வீதிகளில் பவனி வந்தார்.
இன்று அதிகாலை 4 மணி முதல் திருப்பதியில் மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மழையில் நனைந்தபடி மாட வீதியில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை கடும் அவதி அடைந்தனர்.
சாமி வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை குழுவினர் தங்களது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தி வந்தனர்.
இன்று மாலை ஏழுமலையான் சர்வபூபால வாகனத்திலும், நாளை சனிக்கிழமை காலை மோகினி வாகன சேவையும் நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை இரவு நடைபெறுகிறது. ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கருட சேவையையொட்டி இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிய தொடங்கி உள்ளனர்.
திருமலையில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 20 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் அனுமதி வழங்கி உள்ளது. கூடுதலாக வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பதியில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மதியம் 2 மணி முதல் நாளை இரவு வரை பைக்குகள் திருமலைக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 61,879 பேர் தரிசனம் செய்தனர். 24,634 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.1.82 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- திருப்பதி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
- ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் 5-ம் நாளில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருட சேவை நடைபெறும்.
அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி ஏழுமலையான் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்காக ஏழுமலையானுக்கு மாலை கொண்டு செல்லும் வைபவம் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி காலை 9 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து ஏழுமலையானுக்கு அணிவிக்கக்கூடிய மாலையை ஆண்டாள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பிறகு ஆண்டாள் மாலை, பரிவட்டம், கிளி ஆகியவை பெரிய கூடையில் வைத்து யானை முன்செல்ல பட்டர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் ஊர்வலமாக வந்தனர்.
இதில் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ராம்கோ நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வாகனத்தில் வைத்து, மாலை உள்ளிட்டவை திருப்பதி கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் ஆண்டுதோறும் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, அழகர் ஆற்றில் இறங்குவது குறிப்பிடத்தக்கது.
- இன்று காலை கல்ப விருட்ச வாகன வீதி உலா நடக்கிறது.
- இன்று இரவு சர்வ பூபால வாகன வீதி உலா நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி, யோக நரசிம்மர் அலங்காரத்தில் சிங்கத்தின் மீது யோக பட்டயம் அணிந்தவராக, கால்களை மடித்து குத்திட்டு அமர்ந்தபடி யோக நிலையில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் அணிவகுத்துச் சென்றன. மலையப்பசாமி வீதி உலா வந்தபோது நான்கு மாட வீதிகளின் ஒவ்வொரு திருப்பத்திலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். வாகன வீதி உலாவுக்கு முன்னால் பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். கலைக் குழுவினர் கோலாட்டம் ஆடினர். மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து காலை 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதி உலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சர்வ பூபால வாகன வீதி உலா நடக்கிறது.
- உற்சவர்களுக்கு பிரத்யேக அலங்காரம் செய்யப்படுகின்றன.
- வரும் நாட்களிலும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின்போது உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பிரத்யேகமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதற்காக ஒரு டன் கட் பிளவர்கள் மற்றும் பழங்கள், பூக்கள், வாசனை திரவியங்கள், ஜப்பான் ஆப்பிள், மஸ்கட் திராட்சை, தாய்லாந்தில் இருந்து மாம்பழம், அமெரிக்காவில் இருந்து செர்ரிஸ் பழங்கள் போன்றவைகள் பக்தர்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன.
மேலும் உலகம் முழுவதிலும் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து மேற்கண்ட பழங்கள், பூக்களை கொண்டு வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.
பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று மதியம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட உள்ளது.
நேற்று மதியம் ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறையினர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பரத்யேக பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்தனர்.
கட் பிளவர்கள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு அரங்கை அழகாக அலங்கரித்திருந்தாலும் மலையப்பசாமிக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாலைகள் சிறப்பாக இருந்ததாக, பக்தர்கள் தெரிவித்தனர்.
ஸ்நாபன திருமஞ்சனத்தில் உற்சவருக்கு ஏலக்காய், வெட்டி வேர், உலர் திராட்சை, துளசி மாலைகளுடன் செய்யப்பட்ட மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அத்துடன் பவள மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை இயக்குனர் சீனிவாஸ் தலைமையில் இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழாவுக்காக தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட லிச்சீஸ், ஆஸ்திரேலிய பிங்க், கருப்பு திராட்சை மற்றும் பல்வேறு நாடுகளின் பழங்கள் உற்சவர்களுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர பத்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
- இன்று மாலை முத்து பல்லக்கு வாகன சேவையில் ஏழுமலையான் வீதி உலா வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி சமேத ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனா்.
2-வது நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும், மாலை அம்ச வாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது. சாமி வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக் குழுவினர் தங்களது மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி அசத்தினர்.
புதுச்சேரியின் பம்பை ஆட்டம், கேரளாவின் செண்டை மேளம், டிரம்ஸ், மகாராஷ்டிராவின் பாரம்பரிய நடனம், ஒடிசா குழுவினரின் கோலாட்டம் ஆகியவை பக்தர்களின் கண்களை கவர்ந்தன.
விசாகப்பட்டினத்தின் லலிதா பஜனை மண்டலி குழுவினரின் பல்வேறு தெய்வங்களின் வேடம், மேற்கு கோதாவரியின் தேவாரப்பள்ளி நடனம் போன்றவை. பக்தர்களின் மனதை கவர்ந்தது.
3-வது நாளான இன்று காலை ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார்.
அப்போது மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர பத்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். இன்று மாலை முத்து பல்லக்கு வாகன சேவையில் ஏழுமலையான் வீதி உலா வருகிறார்.
திருப்பதியில் நேற்று 64,823 பேர் தரிசனம் செய்தனர்.22,890 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.03 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- இரவு ஹம்ச வாகன வீதி உலா நடந்தது.
- இன்று காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று அதிகாலை மூலவருக்கு சுப்ரபாதம், தோமால சேவை, சகஸ்ர நாமார்ச்சனையும், உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.
அதன் பிறகு உற்சவர் மலையப்பசாமி வாகன மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 'பத்ரி நாராயணர்' அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மங்கல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பஜனை கோஷ்டியினர் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர்.
பல்வேறு குழுவை சேர்ந்த ஆண்களும், பெண்களும் மகா விஷ்ணு, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். பல்வேறு நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
அதைத்தொடர்ந்து மதியம் 1 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன் பிறகு இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சியில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, இணை அதிகாரிகள் சதா பார்கவி, வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்