search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107524"

    ஆசனூர் அருகே யானைகள் கூட்டமாக ரோட்டில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் மற்றும் வன விலங்குகள் உள்ளன.

    ஆசனூர், தாளவாடி, தலமலை பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் வன விலங்குகள் தாகம் தீர்க்க வனப்பகுதியில் உள்ள வன குட்டையில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

    கடந்த வாரம் வனபகுதியில் கோடை மழை பெய்தது. இதனால் காய்ந்து கிடந்த மரம் செடிகள் உயிர் பெற்று பசுமையாக காட்சி அளிக்கிறது. கோடை மழை பெய்தாலும் ஆசனூர் பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

    இதனால் யானைகள் ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கூட்டமாக வருகிறது. அவ்வப்போது ரோட்டை கடக்கும் யானைகள் அங்கு உள்ள மூங்கில் மரத்தை உடைத்து சாப்பிட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ அபராதம் விதிக்கபடும் என்று எச்சரித்தனர்.
    திருவோணம் அருகே நள்ளிரவில் வீட்டு முன்பு கட்டிப்போட்டிருந்த 6 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றது.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே சேவல் விடுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு கோபால் வீட்டு முன்பு ஆடுகளை கட்டிப்போட்டு இருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம விலங்குகள் 6 ஆடுகளின் கழுத்தில் கடித்து கொன்று ரத்தத்தை குடித்து விட்டு தப்பி சென்று விட்டன.

    இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது கோபால் , தனது 6 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் திருவோணம் போலீசிலும், வனத்துறை அலுவலகத்திலும் புகார் செய்தார். ஆடுகளை கொன்று ரத்தத்தை குடித்தது சிறுத்தையா? அல்லது நரிகளா? என்று தெரிய வில்லை.

    ஏற்கனவே திருவோணம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல் மேல்மலையில் புலி தாக்கி அடுத்தடுத்து 5 மாடுகள் பலியான சம்பவத்தால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் வனப்பகுதியில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    வனத்துறையினரும் அவ்வப்போது ஆய்வு செய்து வன விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று கூக்கால் வனப்பகுதியில் 4 காளை மாடு மற்றும் ஒரு பசு மாடு என 5 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மாடுகளின் உடலில் வன விலங்கு கடித்ததற்கான அடையாளம் இருப்பதால் புலி தாக்கி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.இதனையடுத்து வன அதிகாரி பழனிக்குமார் தலைமையில் அங்கு விரைந்து சோதனை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவர் தங்கராஜ் தலைமையில் இன்று உடற்கூறு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகே புலி தாக்கித்தான் இறந்ததா? அல்லது வேறு வன விலங்குகள் கடித்ததா? என தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர்.

    தொண்டாமுத்தூர் அருகே கிராமத்துக்குள் நுழைந்து ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை அடித்து கொன்ற 7 வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.
    பேரூர்:

    கோவை தொண்டாமுத்தூர் இருட்டுபள்ளம் அருகே உள்ள பச்சினாம்பதி மலையடிவார கிராமத்தில் கடந்த சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் சிறுத்தை கடந்த வாரம் பூலுவம்பட்டி கிராமத்துக்குள் நுழைந்து ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை அடித்து கொன்றது. எனவே இந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டம் எந்த பகுதியில் உள்ளது என ஆய்வு செய்தனர். அப்போது இருட்டுப்பள்ளம் அருகே உள்ள பச்சினாம்பதியில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க பச்சினாம்பதி பகுதியில் கடந்த மாதம் 26-ந் தேதி வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற விவசாயிகள் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கி இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக ரேஞ்சர் செந்தில்குமார், வனவர் சோழமன்னன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர். அப்போது இந்த சிறுத்தை 7 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி பன்னாரி வனச்சரகத்துக்குட்பட்ட தெங்குமரகடா வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள காளிமங்கலத்தில் ஒரு சிறுத்தை சிக்கியது. தற்போது 2- வது முறையாக இந்த பகுதியில் சிறுத்தை சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    புளியங்குடி அருகே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த யானை குட்டி 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. #tamilnews
    புளியங்குடி:

    நெல்லை மாவட்டம் புளியங்குடியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள விளை நிலங்கள், தோட்ட பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் புளியங்குடியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமாக பள்ளமடத்து ஓடை பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் இன்று காலை 4 வயது மதிக்கத்தக்க ஒரு குட்டி யானை புகுந்தது. அது வழி தெரியாமல் திரிந்த போது அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    கிணற்றுக்குள் கிடந்த தண்ணீரில் குட்டி யானை தத்தளித்து கொண்டிருந்தது. அதனை அந்த தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் புளியங்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.



    யானையை மீட்க கிணற்றில் ஒரு புறத்தில் தடுப்பு சுவரை உடைத்து எடுத்து, யானை மேலே வருவதற்கு வசதியாக ஜே.சி.பி. மூலம் வழியை ஏற்படுத்தினர். பின்னர் குட்டி யானையை கயிற்றால் கட்டி பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து வெளியே மீட்டு கொண்டு வரப்பட்டது.

    சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு குட்டி யானை உயிருடன் மீட்கப்பட்டது. பின்பு அந்த குட்டி யானையை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் விட்டனர். #tamilnews
    கொடைக்கானல் கீழ்மலையில் கஜா புயலை காரணம் காட்டி மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    தமிழகத்தை சுருட்டி வாரிய கஜாபுயல் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன.

    மேலும் மின்கம்பங்களும் சாய்ந்ததால் பொதுமக்கள் 15 நாட்களுக்கு மேலாக இருளில் தவித்தனர். தற்போது குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்காக வனத்துறையினரிடம் அனுமதிபெற தாமதமாவதால் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவுப்படி தனி தாசில்தார் மற்றும் வி.ஏ.ஓ கையொப்பமிட்ட அனுமதிசீட்டுடன் மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் சாய்ந்த மரங்களுடன் நன்றாக இருக்கும் மரங்களையும் வெட்டி கடத்தி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    புயலால் சாய்ந்த மரங்களை வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இருந்தபோதும் லாரிகளில் அதிகளவு மரங்கள் கொண்டு செல்வது வாடிக்கையாகி உள்ளது. சித்தரேவு சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகள் அவ்வழியே வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மணலூர், கே.சி.பட்டி பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் இருந்து புயலால் சாய்ந்த மரங்களை ஏற்றி வருவதாக கூறினர்.

    ஆனால் அந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் விலை உயர்ந்த சில்வர்ஓக், தீக்குச்சி செய்ய பயன்படுத்தும் மலைமுருங்கை மரங்கள் இருந்ததால் லாரிகளை சோதனைச்சாவடியில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு சென்ற உரிய அனுமதிவாங்கி மரங்களை வெட்டினார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். உரிய அனுமதி சீட்டு இருந்தால் லாரிகள் அனுமதிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் யானைக்கூட்டம் தினந்தோறும் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதால் அதனை கட்டுப்படுத்தாத வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து தேவர்பெட்டா வழியாக தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் தமிழக எல்லைக்குள் நுழைந்த யானைக்கூட்டம் தினந்தோறும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. 

    இந்த யானை கூட்டத்தை கட்டுப்படுத்தாத வனக துறையினரை கண்டித்தும், யானைகள் ஊருக்குள் வராதவாறு அகழிகள் வெட்டி யானை கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பயிர் சேதாரங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக்கோரியும் தேன்கனிக்கோடடை பழைய பஸ் நிலையம் பக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் பூதட்டியப்பா முன்னிலை வகித்தார்.
    தாயை பிரிந்த குட்டியானைக்கு, காட்டெருமை நண்பனாக கிடைத்துள்ளது. அவற்றை பிரிக்க முயன்ற வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்றும் தனியாருக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் இருக்கின்றன. தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளன.

    இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பலாப்பழ சீசன் காலமாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் பலாப்பழங்களை தின்பதற்கு சமவெளி பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக வருவது வழக்கம். அதன்படி கடந்த சீசனில் சமவெளி பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் கூட்டத்தில் இருந்து 5 வயதுடைய குட்டியானை ஒன்று பிரிந்தது.
    இந்த குட்டியானை பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம், காட்டேரி நஞ்சப்ப சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது. இதனை குன்னூர் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நஞ்சப்ப சத்திர வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமையுடன், அந்த குட்டியானை நட்புடன் பழகியது. தற்போது காட்டெருமையும், குட்டியானையும் நண்பர்களாக இணைந்தே சுற்றித்திரிகின்றன. இதற்கிடையில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி அறிவுரையின்பேரில் வன ஊழியர்களும், வேட்டைத்தடுப்பு காவலர்களும் குட்டியானையையும், காட்டெருமையையும் பிரிக்க போராடி வருகின்றனர். ஆனால் அது நடந்தபாடில்லை. மாறாக பிரிக்க முயற்சிக்கும்போது 2 வனவிலங்குகளும் ஆக்ரோஷம் அடைந்து விடுகின்றன. நேற்று முன்தினம் மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே காட்டெருமையும், குட்டியானையும் இணைந்து வந்தபோது வனத்துறையினர் அவற்றை பிரிக்க முயற்சித்தனர். ஆனால் அவை வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

    தொடர்ந்து அவைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

    தாயை பிரிந்த குட்டியானையையும், அதை தாய் போல பாதுகாத்து செல்லும் காட்டெருமையையும் காணும்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த 2 வனவிலங்குகளையும் பிரிக்க வனத்துறையினர் போராடி வருவதாக தெரிகிறது. யாருக்கும் ஆபத்து ஏற்படாத பட்சத்தில், அவற்றை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. காலப்போக்கில் அவை பிரிந்து செல்வது நடக்கக்கூடிய ஒன்று தான்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
    அரூர் அருகே கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 7 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறி கொன்றது. பலியான ஆடுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே செக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் சொந்தமாக 30 செம்பறி ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்த்து விட்டு கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது 7 ஆடுகள் பலியாகி செத்து கிடந்தது. மேலும் 6 ஆடுகள் காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையறிந்த ஊர் பொதுமக்கள் வந்து பார்த்தனர்.

    இது குறித்து வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது மர்ம விலங்குகள் 7 ஆடுகளை கடித்து குதறி கொன்றது தெரியவந்தது. பலியான ஆடுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு தான் எந்த விலங்குகள் கடித்தது என்று விபரம் தெரியவரும் வனத்துறை தெரிவித்தனர்.
    முத்துப்பேட்டை அருகே அலையாத்தி காடுகளில் பறவைகளை வேட்டையாடிய 3 பேருக்கு வனத்துறையினர் ரூ.15 ஆயிரம் அபராதமம் விதித்துள்ளனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கடைசி எல்லையான அலையாத்திக்காட்டை ஒட்டியுள்ள காப்புக்காடு அருகே சிலர் பறவைகளை வேட்டையாடுவதாக முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் வந்தது. 

    இதனையடுத்து வன அலுவலர் தாகீர் அலி தலைமையில் வனவர் செல்லையன், வனக் காப்பாளர் மாரிமுத்து, வனவர் ஜீவாராமன், வன காவலர் சின்னப்பா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சென்று கண்காணித்தனர். இதில் அப்பகுதியில் வலை விரித்து பறவைகளை பிடித்துக் கொண்டிருந்த 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து வலை மற்றும் 10 கொசு உள்ளான் பறவைகளை பறிமுதல் செய்தனர். 

    இதில் 8 கொசு உள்ளான் பறவைகள் இறந்திருந்தது. 2 பறவைகள் மட்டும் உயிருடன் இருந்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் முத்துப்பேட்டை அடுத்த கீழவாடியக்காட்டை சேர்ந்த சரவணன்(வயது 44), முத்துக்குமார்(39), விஜயகுமார்(38) என்பது தெரியவந்தது. 

    இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த வனத்துறையினர் வன சட்டப்படி அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 15 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்து விடுவித்தனர். பிறகு உயிருடன் மீட்ட 2 பறவைகளையும் வனத்துறையினர் பறக்கவிட்டனர்.
    மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அப்பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அடிக்கடி நடந்து வருகிறது. மயில்களை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.


    போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் (வயது 50) என்பவர் மயில்களுக்கு வி‌ஷம் வைத்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    குத்தகை எடுத்து விவசாயம் செய்த நிலத்தில் புகுந்து மயில்கள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் நெல்லில் குருணை மருந்தை கலந்து மயில்களை கொன்றேன் என்று கைதான சந்திரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சீர்காழி அருகே உடலில் காயங்களுடன் கிடந்த மானை மீட்ட வனத்துறையினர் எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த தென்னலக்குடி வனப்பகுதியில் மான்கள்கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் தென்னலக்குடியை அடுத்த கருக்குடி அய்யனார் கோவில் பகுதியில் உள்ள சேக்கணையில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புள்ளி மானை மீட்டனர். அப்போது மானின் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த மான் எப்படி இறந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்னலக்குடி பகுதியில் வசிக்கும் புள்ளி மான்களை வனத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#tamilnews

    ×