search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 107604"

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சின்னபூலாம் பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 56). குன்னத்தூர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 3 தினங்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வேலையை முடித்து வீட்டிற்கு புறப்பட்டார். பஸ் நிறுத்தம் நோக்கிச் சென்றபோது அந்த வழியே வந்த மறவன்குளம் செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பாண்டி பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை செல்லப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.

    அவரது மகள் ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    லாரி மோதி லோடுமேன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலியான தொழிலாளிக்கு நிதியுதவி கேட்டு சக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 32). லோடுமேனான இவர் நேற்று இரவு பழங் காநத்தம் மாடக்குளம் மெயில் ரோடு அருகே உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் சரக்குகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீ ரென்று கட்டுப்பாட்டை இழந்து செந்தில்நாதன் மீது மோதியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த கரிமேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தில்நாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் நாதனுக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த செந்தில்நாதன் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கக்கோரி பழங்கா நத்தத்தில் சக தொழிலாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

    திருமங்கலம் அருகே பேரையூர் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பேரையூர்:

    விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பிரபாகரன் (வயது 26). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து இயக்கி வருகிறார். நேற்று திண்டுக்கல்லில் சரக்குகளை இறக்கி விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூரை அடுத்துள்ள பாறை பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.

    இதில் மினிலாரியின் உள்பகுதி பலத்த சேதமடைந்தது. உள்ளே இருந்த பிரபாகரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மற்றொரு லாரியில் வந்த விருதுநகர் மாங்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அருள்ஜீவா (29) படுகாயம் அடைந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 1 மணி நேரம் போராடி மினி லாரியில் இறந்த பிரபாகரின் உடலை மீட்டனர். அருள் ஜீவா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
    மதுரையில் பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் மும்மூர்த்தி (வயது 37). இவர் சிலைமான் புளியங்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது மும்மூர்த்தி சோர்வாக காணப்பட்டார். குடும்பத்தினர் விசாரித்த போது எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் மும்மூர்த்தி தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மும்மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட மும்மூர்த்திக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    போலீஸ் ஏட்டு மும்மூர்த்தி பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் பணிச்சுமை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் ஏட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    மதுரையில் காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கடத்தியது தொடர்பாக வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம், புலித்தேவன் தெருவைச் சேர்ந்த 16 வயதுடைய மைனர் பெண் புதுநத்தம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவர் தினமும் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்த வாலிபர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அடிக்கடி மாணவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலிக்க மறுத்ததோடு, வாலிபரை கண்டித்துள்ளார்.

    சம்பவத்தன்று அந்த மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர் மாணவியை வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை மாணவி மீது அடித்துள்ளார்.

    இதில் மயங்கிய மாணவியை, வாலிபர் காரில் கடத்தினார். இதற்கு உடந்தையாக 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் செயல்பட்டுள்ளார்.

    ஒரு இடத்தில் காரை நிறுத்தி வாலிபர் உள்பட 2 பேரும் அருகில் இருந்த கடைக்கு சென்றனர். அப்போது மயக்கம் தெளிந்த அந்த மாணவி நைசாக காரில் இருந்து தப்பினார்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews
    என்ஜினீயர் வீட்டை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கருப்பாயூரணி மீனாட்சி காட்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி செல்வராணி (வயது 33). ரவிக்குமார் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தேனிக்குச் சென்றனர். நேற்று வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகுமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    ஓய்வு பெற்ற இன்ஸ் பெக்டர் மகன் தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை நண்பரே கல்லால் தாக்கி கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா முரளி தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சிபிராஜ் (வயது 23). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார்.

    தனது நண்பரின் உறவினர் திருமணத்துக்காக சிபிராஜ் ஊருக்கு வந்தார். நேற்று திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக அவர் வீட்டில் கூறிச்சென்றார்.

    இந்த நிலையில் கூடல்புதூர் அருகே உள்ள பொட்டகுளம் வேத வல்லிநகர் முனியாண்டி கோவில் அருகே சிபிராஜ் பிணமாக கிடப்பதாக ஜெயசீலனுக்கு தகவல் கிடைத்தது. கூடல்புதூர் போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது தலை நசுங்கிய நிலையில் சிபிராஜ் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சிபிராஜுடன் சென்றது யார்? என்பது குறித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. சிபிராஜை அவரது நண்பர் பாலாஜி என்பவர்தான் கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் பாலாஜியை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், சிபி ராஜும், நானும் ஒரே பெண்ணை காதலித்தோம். அந்த பெண் என்னை விரும்பினார். இது சிபி ராஜுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அந்த பெண்ணை பற்றி பேஸ் புக்கில் தவறான கருத்துக்களை பரப்பினார். இது தெரியவந்ததும், அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அதன்படி சிபிராஜிடம் நைசாக பேசி அவரை வேதவல்லி நகருக்கு வரவழைத்து, அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

    புரோட்டா மாஸ்டரை அரிவாளால் வெட்டியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). இவர், மதுரை காமராஜர் சாலையில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று அவர் பணியில் இருந்தபோது மாரிநாதன், திலீப், காளிச்சரண், அரிகரசுதன் மற்றும் ஆட்டோ டிரைவர் வாசுதேவன் ஆகியோர் வந்தனர். அவர்கள் ஓட்டலில் வாக்குவாதம் செய்தனர். இதனை பாலமுருகன் தட்டிக்கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பால முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வாசுதேவனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். #Tamilnews
    மதுரையில் கணவன்-மனைவியை குழந்தைகளுடன் காரில் கடத்திச் சென்று ரூ.26 லட்சம் நகை-பணத்தை பறித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி லட்சுமி (வயது 42). இவர்களுக்கும், மதுரை வடபழஞ்சி புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் தரப்புக்கும் இடையே கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி சென்னையில் இருந்து வெங்கடேசன் தனது மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளுடன் மதுரை வந்தார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் லட்சுமி தனது ஆராய்ச்சி படிப்புக்கான (பி.எச்.டி.) கல்வி சான்றிதழை வாங்கி விட்டு பல்கலைக்கழக அலுவலகம் முன்பு நின்றிருந்த போது அங்கு திடீரென வந்த ஜெயச்சந்திரன் மற்றும் 10 பேர் ஆயுதங்களை காட்டி மிரட்டி வெங்கடேசனையும், லட்சுமி மற்றும் குழந்தைகளையும் காரில் கடத்திச் சென்றனர்.

    பொள்ளாச்சி பகுதிக்கு கடத்திச் சென்ற அந்த கும்பல் அவர்களை மிரட்டி ரூ. 17 லட்சம் மற்றும் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை பறித்துக் கொண்டது.

    மேலும் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்னை தம்பதியை விட்டு விட்டு அந்த கும்பல் சென்று விட்டது.

    அதன் பின்னர் அடிக்கடி கூடுதல் பணம் கேட்டு போனில் தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது. பணம் தராவிட்டால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

    இது குறித்து வெங்கடேசன் சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரை மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு போலீஸ் டி.ஜி.பி. அனுப்பி வைத்து சம்பந்தப்பட்ட கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சென்னை தம்பதியை குழந்தைகளுடன் கடத்தி பணம் பறித்த வடபழஞ்சி புதுரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் தலைமறைவாகி விட்டார்.

    கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மதுரை புளியங்குளத்தைச் சேர்ந்த ரவி (39), குருபிரபு (22), ஜெகதீஷ் பாண்டியன் (27), கருப்பசாமி (24), குமாரவேல் (22), மாரிச்சாமி (22), குரு (22), செந்தில் (28) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். கோபி உள்ளிட்ட சிலர் தலைமறைவாகி விட்டனர்.

    கைதான 8 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது ஆள் கடத்தல், பணம் பறிப்பு, சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை தம்பதியை கடத்தி பணம்-நகைகளை பறித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருமங்கலம் அருகே வருகிற 4-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள வி.அம்மா பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மகள் பவானி (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு வருகிற 4-ந்தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்திற்கு சில நாட்களே இருந்ததால் சின்னக்காளை மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பவானி வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமடைந்த சின்னக்காளை மகளை காணாமல் உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர். திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. #Tamilnews
    மதுரை அருகே கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் சின்னாத்தேவர். இவரது மனைவி ராணி (வயது 55). இவர் மதுரை மாவட்டம், நாட்டார் மங்கலத்தில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

    அவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ராணி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே உள்ள நடுமுதலைக்குளத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவி கழுவாயி (70). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கழுவாயி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவில் விழாவில் ராணுவ வீரர் மீது உருட் டுக்கட்டையால் தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பாண்டிமாரி. இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 25). ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த முத்துப்பாண்டி சோழவந்தான் மாரியம்மன் கோவில் விழாவில் குடும்பத்துடன் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான் காரைக்கடை தெருவில் அக்னிசட்டி ஊர்வலத்தில் சென்றபோது சிலர் முத்துப்பாண்டியிடம் தகராறு செய்துள்ளனர். இதில் முத்தப்பாண்டிக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது.

    தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்ட முத்துப் பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை தாக்கிய மாரிக்கனி (20), ராம்குமார், மதி, தினேஷ், பிரபாகரன், அங்குச்சாமி, ஆலயமணி, கார்த்தி ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×