search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிபி"

    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தேர்தல் டி.ஜி.பி.யிடம் 2-வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து கடைகளிலும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். ஆனாலும் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

    முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    தற்போது தேர்தல் டி.ஜி.பி.யாக உள்ள அசு தோஷ் சுக்லாவிடமும் கடந்த 8-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனராக சில மாதங்கள் பணியில் இருந்த நேரத்தில் குட்கா ஊழல் வழக்கில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

    இதனால் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அசு தோஷ் சுக்லாவை வரவழைத்து 2-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    குட்கா விவகார வழக்கில் சசிகலா மற்றும் டிஜிபி குறித்து மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடந்தது. #GutkhaScam #Sasikala
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் “டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்காக பிறப்பித்த அரசாணையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

    இதேபோல மனுதாரர் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவில், “குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பது குறித்து வருமானவரித்துறையினர் கடிதம் எதுவும் அரசு அலுவலகத்தில் இல்லை என்று, இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சசிகலா அறையில், கடந்த 2017-ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனையின்போது, குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறையினர் கடிதம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    எனவே வருமானவரித்துறையினர் அனுப்பிய கடிதம் குறித்து கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்குகள் இறுதி விசாரணைக்காக நேற்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு வந்தது.



    அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், “டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு செய்ய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு பரிந்துரைத்தபோது, லஞ்சப்புகார் தொடர்பான ஆவணங்கள் எதுவும் அரசிடம் இல்லை” என்று வாதாடினார்.

    முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், “லஞ்சப்புகார் தொடர்பாக வருமானவரித்துறையினர் அனுப்பிய கடிதத்தை முறைப்படி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

    சசிகலா தரப்பு வக்கீல், “போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தபோது சசிகலா அங்கு இல்லை. எனவே அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று வாதாடினார்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “லஞ்சப் புகார் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகி உள்ளது. அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பிறகாவது, டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை மறுபரிசீலனை செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரைக்க உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை. எனவே இதுகுறித்து மனுதாரர் அனுப்பிய புகார் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். #GutkhaScam #Sasikala
    டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. #Jactogeo
    ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக காவல்துறை அமைச்சு பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் காவல்துறை அலுவலகங்களில் சுமார் 5 ஆயிரம் அமைச்சுப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குட்பட்ட இடங்களில் சுமார் 500 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மட்டும் 200 பேர் வேலை செய்து வருகிறார்கள்.

    இதுபோன்ற பணியில் இருப்பவர்கள் போலீசாரின் அலுவல் சார்ந்த பணிகளை அன்றாடம் மேற்கொள்வார்கள். போலீசார் தொடர்புடைய ஓய்வூதியம், சம்பளம், பில்போடுவது உள்ளிட்ட பணிகளை அமைச்சு பணியாளர்களே மேற்கொண்டு வருகிறார்கள்.

    கமி‌ஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு மனுக்களையும் இவர்களே கையாண்டு வருகிறார்கள்.

    உதாரணத்துக்கு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஒருவர் அதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை கமி‌ஷனர் அலுவலகத்தில் நேரில் வந்தே தாக்கல் செய்ய வேண்டும்.

    இதேபோல சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓட்டல்களை நடத்துபவர்கள், உடற்பயிற்சி கூடம் நடத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களும் தங்களது நிறுவனம் தொடர்பான உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்வார்கள். இதுபோன்ற பணிகளுக்காக கமி‌ஷனர் அலுவலகம் வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த 24-ந் தேதி முதல் பணிகள் முடங்கியுள்ளன.

    இதேபோல டி.ஜி.பி. அலுவலகத்திலும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கும் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலகங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கைகளும் அனுப்பப்படவில்லை.

    காந்தி நினைவு நாளை யொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்காக 2 நாட்களுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்படும். இந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.

    மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கடந்த 22-ந்தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் முதல் 2 நாட்கள் அவர்களுக்கு ஆதரவாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர்கள் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 24-ந்தேதி முதல் அவர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
    டி.ஜி.பி.க்கள் நியமன முறையில் மாற்றம் செய்ய கோரிய 5 மாநில அரசுகளின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #SupremeCourt

    புதுடெல்லி:

    டி.ஜி.பி.க்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், மாநில டி.ஜி.பி.க்கள் நியமன முறையில் மாற்றம் செய்ய வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த வி‌ஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டி.ஜி.பி.யாக பணியமர்த்துவதாகவும் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறும் கேட்டு பிரகாஷ்சிங் என்பவர் வழக்கை தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டி.ஜி.பி.க்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்துக்கு முன்னதாக புதிய பரிந்துரை பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு மாநில அரசுகள் அனுப்ப வேண்டும், மத்திய தேர்வாணையம் தேர்வு செய்த பெயர்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டு அவர்களில் ஒருவரை மாநில அரசு டி.ஜி.பி.யாக நியமனம் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இடைக்கால டி.ஜி.பி.யாக யாரையும் நியமனம் செய்யக்கூடாது, ஓய்வுபெறும் நிலையில் இருக்கும் அதிகாரிகளை டி.ஜி.பி.யாக நியமிக்க கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்தும், டி.ஜி.பி.க்களை அந்தந்த மாநில தேர்வுக்குழுவே தேர்வு செய்து நியமிக்க அனுமதி கோரியும் கேரளா, பஞ்சாப், அரியானா உள்பட 5 மாநிலங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. #SupremeCourt

    குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர், டிஜிபி டிகே ராஜேந்திரன், சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர்.

    அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றவர்களின் பட்டியல் இருந்ததாக தகவல்கள் வந்தது.

    அந்த பட்டியலில் தமிழக அமைச்சர், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விசாரித்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த 28.7.2017 அன்று உத்தரவிட்டது.

    இதேபோல சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் குட்கா ஊழல் பற்றிய விசாரணையை சி.பி.ஐ. தற்போது மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரது பணிக்காலம் முடிந்தபிறகு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு 30.6.2017 அன்று அரசாணை பிறப்பித்து உள்ளது.

    அவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாக, குட்கா ஊழல் பிரச்சினையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படவில்லை என்று அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    தற்போது போயஸ் கார்டனில் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறையினரின் அறிக்கை கைப்பற்றப்பட்டு உள்ளது.

    அதில் தற்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அவரின் பதவியை சட்டவிரோதமாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக, முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் டி.கே.ராஜேந்திரனின் டி.ஜி.பி. பதவி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.



    வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், டி.ஜி.பி., வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் சசிகலாவை எதிர் மனுதாரராக சேர்த்து அவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
     
    கோவில் திருவிழாவில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளை வீடியோ கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Temple #highcourt

    சென்னை:

    தமிழகத்தில் பல மாவட்டங்களில், கோவில் திருவிழாவின் போது ‘ரிக்கார்டு டான்ஸ்’ என்ற பெயரில், ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இதுபோன்ற ஆபாச நடனங்களை கோவில் திருவிழாக்களின் போது நடத்த ஐகோர்ட்டு தடை விதித்தது.

    இதையடுத்து பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘தங்கள் கோவில்களில் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் நடன நிகழ்ச்சிகள் காலகாலமாக நடத்தப்படுகிறது. ஆனால், ஆபாச நடனம் என்று கூறி போலீசார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே தங்களது கோவில்களில் கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி எம்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஒரு காலத்தில் கோவில் திருவிழா என்றால் வில்லு பாட்டு, கிராமிய பாட்டு என்று நிகழ்ச்சிகள் நடந்தது.

     


    இப்போது அறிவியல் முன்னேற்றம் அடைந்ததால், இதுபோன்ற பல நடனங்கள் எல்லாம் கோவில் திரு விழாக்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, கோவில் திருவிழாவை முன்னிட்டு, கலாச்சார நடனம் என்ற நிகழ்ச்சி நடந்தால், அதை உள்ளூர் போலீசார் வீடியோ கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும்.

    அதில் ஆபாசம் இருந்தால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பவேண்டும்.

    இந்த வழக்குகளை எல்லாம் வருகிற நவம்பர் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #Temple #highcourt

    சென்னை டி.ஜி.பி.அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #NationalPoliceDay

    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு 21-ந்தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி ‘காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

    வீரமரணம் அடைந்த காவலர்கள் ஸ்ரீராமலு, நடராஜன், கோபால், காவலர் கிருஷ்ணன், எட்வர்டு, தனசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பெரிய பாண்டியன் உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் முதல் முறையாக அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஆவடி வசந்தம் நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு சென்ற கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். #NationalPoliceDay

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கை மூலமே பதவி விலகுவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #GutkhaScam #TTVDhinakaran
    சுவாமிமலை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று (24-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நாகை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குகிறார்.

    கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அம்மாவின் அரசு என்று கூறி ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி ஆட்சியில் 33 அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது அ.தி.மு.க.வின் ஊழல் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடமே இருக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும். நீர்ப்பாசனத்தை சீர் செய்தாலே விவசாயிகள் தற்கொலை முற்றிலும் தவிர்க்கப்படும்.

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சரோ, டி.ஜி.பி. யோ இதுவரை பதவி விலகவில்லை. நீதிமன்ற நடவடிக்கை மூலமே அவர்கள் பதவி விலகுவார்கள்.

    கருணாஸ் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக கூறி உடனே மன்னிப்பு கோரினார். ஆனால் இந்த அரசாங்கம் கருணாசுக்கு ஒரு நிலைப்பாடு, எச். ராஜா, எஸ்.வி. சேகருக்கு ஒரு நிலைப்பாடு கொண்டுள்ளது. இது அடிமை அரசாங்கம் என்பது தான் உண்மை.

    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.

    டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அறிவிக்கப்பட்டு விவசாயமும் விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில்களை மட்டுமே நடைபெற வேண்டும். ஏற்கனவே உள்ள திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தினாலும், ஊழலை தடுத்தாலும் அதிக விவசாய பிரச்சனைகள் தீர்த்து விடலாம்.

    நீர் ஆதாரங்களை சரிவர செயல்படுத்தி ஆறு, குளங்களை சீர் செய்து மழை காலங்களில் நீரை சேமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான விதை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #TTVDhinakaran
    தமிழ்நாடு முழுவதும் 22 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார். #TNPolice
    சென்னை:

    சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. விசுவநாத் ஜெயன் தரமணி சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தரமணி சரக உதவி கமி‌ஷனர் சுப்பராயன் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பெண்களுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் மாதவரம் போக்குவரத்து குற்ற புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    தலைமையிடத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ் பரங்கிமலை சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாவட்ட பெண்கள் குற்றப்புலனாய்வு பிரிவின் டி.எஸ்.பி. மகேந்திரன் மதுராந்தகம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    தர்மபுரி மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சுப்பையா சத்தியமங்கலம் சரக டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

    காஞ்சீபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கண்ணன் ராயபுரம் சரக உதவி கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை மாவட்ட நில மோசடி விசாரணை பிரிவு டி.எஸ்.பி. இளங்கோவன் நாங்குநேரி டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். #TNPolice
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது இல்லத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #KauveryHospital #Karunanidhi #TNCM #ChiefSecretary
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    இதையடுத்து சற்றுமுன்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்தார். இந்த செய்தியும் தொண்டர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் டிஜிபி ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து. மாலை 5 மணியளவில் காவிரி மருத்துவமனையின் அறிக்கை வெளியாகும் என கூறப்படுவதால், அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. #KauveryHospital #Karunanidhi #TNCM #ChiefSecretary
    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  கலவரத்தின்போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.



    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை தூண்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தின்போது 72 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiFiring #DGPReport
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததையடுத்து டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார். #sterliteplant #protest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடுத்ததால் வன்முறை வெடித்தது. அதனையும் மீறி போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர்  ஒரே சமயத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நுழைந்தனர். அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்றபோது கடும் மோதல் வெடித்தது.



    போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன் வாகனங்களையும் அடித்து நொறுக்கி  தீ வைத்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள், டிஜிபி, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசப்பட்டது. மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பின்னர் இந்த கலவரம் குறித்து டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், தூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துவிடட்து. கூடுதல் பாதுகாப்புக்கு மற்ற பகுதிகளில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் டிஜிபி கூறினார்.

    தூத்துக்குடியில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.  ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். #sterliteplant #protest
    ×