search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • இரும்பாநாடு பட்டியல் இன மக்கள் கலெக்டரிடம் அளித்தனர்
    • விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாநாடு பட்டியல் இன மக்கள், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வீரையா ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் , நாங்கள் ஆவுடையார்கோவில் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பாநாடு கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திராகாந்தி கூட்டுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 20 காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த வீட்டிற்கான வீட்டுவரி, மின் கட்டணங்களை தொடர்ந்து செலுத்தி வருகிறோம். இந்த வீட்டு முகவரியில்தான் எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பெற்றுள்ளோம்.நாங்கள் வசிக்கும் காலனி வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2004-ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். இதுநாள் வரை எங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை.இந்நிலையில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுமனைக்கான இடம் தற்பொழுது வேறொரு தனிநபரின் பெயரில் பட்டா ஏற்பட்டுள்ளது. மேற்படி வேறொரு தனிநபரின் பட்டாவை உடனடியாக ரத்து செய்வதோடு 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களின் பெயரில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.
    • நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 421 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதா ரருக்குதெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத் தொடர்ந்து அவர், வருவாய் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை 2 நபர்களுக்கும், கடந்த ஆண்டு தேர் தீ விபத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகள் மற்றும் புதிய கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளை 3 நபர்களுக்கு வழங்கினார்.

    பின்னர் நெகிழி மாசில்லா சுற்றுச்சூழல் மற்றும் பொருட்கள் விழிப்புணர்வு சுவரொட்டியினை வெளியிட்டார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • காமராஜர் சாலையில் உள்ள பூங்காவினை வியாபாரிகள் சங்கம் சார்பில் பராமரித்து வருகிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    வியாபாரிகள் மனு

    கூட்டத்திற்கு செயற்பொறியாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். பெருமாள் புரம் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் டேனியல் ஆப்ரகாம், செயலாளர் ஆனந்தராஜ், மாநகர வர்த்தக கூட்டமைப்பு தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பெருமாள்புரம் காமராஜர் சாலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு உள்ள பூங்கா மற்றும் கழிவறை களை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம். தற்போது இந்த பூங்கா மற்றும் கழிவறையை பூட்டி விட்டனர். எனவே அதனை திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    குண்டும், குழியுமான சாலை

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 20-வது வார்டு தலைவர் ஜெய்லானி அளித்த மனுவில், பேட்டை 20-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. 15 ஆண்டுகளாக இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    நெல்லை கால்வாய் நயினார் குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நெல்லையப்பன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், நயினார் குளம் பாசனத்தை நம்பி 586 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளது. இதற்கு இடையூறாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை தடுக்க வேண்டும். சில இடங்களில் தார்ச்சாலை புதிதாக போடப்பட்டு 3 மாதத்தில் சேதம் அடைந்து விட்டது. எனவே அவற்றை தரமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    டவுன் ஆனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் அளித்த மனுவில், 14-வது வார்டுக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் 360 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அம்மன் கோவிலுக்கு மேற்கே 3 தெருக்கள் உள்ளது.

    இந்த 3 தெருக்களுக்கும் சேர்த்து தனியாக ஒரு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • மாநில அரசுகளின் செயலை கண்டித்து போராட்டம்.
    • முடிவில் பட்டியல் அணி ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

    திருத்துறைப்பூண்டி:

    மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பும்மாநில அரசுகளின் செயலை கண்டித்து திருத்து றைப்பூண்டியில் பா.ஜனதா கட்சியின் பட்டியல் அணியினர் வேதாரண்யம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பட்டியல் அணி தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.

    பா.ஜ.க நகர தலைவர் அய்யப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி, மா.துணை தலைவர்கள் ஆதிசிவக்குமார், சதா.சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் உதயகுமார் மற்றும் பட்டியல் அணி பொதுச்செயலாளர்கள் ராஜா, சுரேஷ்கண்ணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பட்டியல் அணி ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

    • 50க்கும் மேற்பட்டோர் வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர்
    • 28 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டு குடும்பமாக வசிப்பதால் இட நெருக்கடியால் தவிப்பதாக குறிப்பிட்டு மனு

    அரியலூர்,

    ஜெயங்கொண்டம் கீழ அருந்ததியர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, அரியலூர் ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேற்கண்ட ஊரில் இருந்து வந்திருந்த 50}க்கும் மேற்பட்டோர், அங்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி சந்தித்து அளித்த மனுவில், நாங்கள் 28 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட ஊரில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறோம். தற்போது இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வீட்டில் வசிக்க முடியாத சூழல்நிலை ஏற்படடுள்ளது. எனவே ஆட்சியர் அவர்கள் மேற்கண்ட ஊர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஓய்வூதியம், பிரசவகால சம்பளம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை
    • அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம், கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.திருமானூர் கிராம நிர்வாக அலுவலர் பார்த்தி பனிடம், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஜீவா தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலையில் அளித்த மனுவில் கட்டட தொழிலாளர் சங்கத்தில் பதிவுப் பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.பணிக் காலத்தில், பிரசவ கால மூன்று மாதத்து ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ செலவுக்கு நிதி வழங்க வேண்டும். 52 வயது நிரம்பிய பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.வடுகபாளையம், குமாரபாளையம், அரஞ்ச்சேரி, கீழக்காவ ட்டாங்குறிச்சி, கீழப்பழுவூர், வெற்றியூர், கீழக்குளத்ததூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழி லாளர்கள், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • அரிசி ஆலை 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
    • அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட மாதப்பூர் சிங்கனூர் பகுதி மக்கள் இன்று பள்ளி குழந்தைகளுடன் வந்து திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்களது ஊர் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரிசி ஆலை 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து கழிவு நீர் தொட்டியில் சேமிக்கப்பட்ட கழிவு நீர் அங்குள்ள தென்னை மரங்களுக்கு உபயோகப்படுத்தப்படுவதால் அப்பகுதி சுற்றிலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஆலையின் பாய்லர் கழிவுகள் புகை கூண்டு மற்றும் சேமிப்பு தொட்டிகளில் இருந்து நச்சு துகள்கள் காற்றில் கலந்து அருகில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் சிங்கனூரில் உள்ள அனைத்து வீடுகளின் சமையல் கூடங்கள் , படுக்கையறை , வீட்டு வாசலில் காய வைக்கப்படும் துணிகள் , இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மீது சாரல் மழை போல் கரி மற்றும் தவிட்டு துகள்கள் விழுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு அப்பகுதி பொது மக்களுக்கு சளி இருமல் உள்ளிட்ட நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது . அரிசி ஆலை முறையாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாததற்கான சான்றுகள் உள்ள நிலையில் அரிசி ஆலையின் மீது நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
    • 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 24 வது வாா்டு மாமன்ற உறுப்பினருமான ஆா்.நாகராஜ், மேயா் என்.தினேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி 24 ஆவது வாா்டுக்குள்பட்ட சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

    இது தொடா்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 4 வது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும்போது இந்தப் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், தற்போது வரையில் எந்தவி தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சிவசக்தி நகரில் 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். அதேபோல நாகாத்தம்மன் கோயில் வீதி, சத்யா நகா் பகுதியில் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனதில் அவர் கூறியுள்ளார்.

    • காலம் கடந்து அறுவடை செய்யப்படாததால் வீணானதாக குற்றச்சாட்டு
    • நஷ்டஈடு கோரி மனு

    திருச்சி, 

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. லால்குடி வட்டம் புள்ளம்பாடி புஞ்சைசங்கேந்தி பகுதியை சேர்ந்த விவசாயி பாண்டியன்(வயது 54) என்பவர் மனு ஒன்றை அளித்தார். அதில், காட்டூர் சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட்ட கரணைகளை எனது 3 ஏக்கர் விவசாய நிலத்தில் நடவு செய்தேன். கரும்பு முதிர்ச்சி அடைந்த நிலையில் ஒப்பந்தப்படி அந்த ஆலை நிர்வாக அறுவடை செய்ய வரவில்லை. இதனால் 8 மாதம் கடந்த நிலையில், கரும்பு முதிர்ச்சி அடைந்து பலன் கொடுக்கும் தன்னையை இழந்து விட்டது. கடந்த ஆண்டில், 3 ஏக்கர் கரும்பு பயிரிட்டதில் அமோக விளைச்சல் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு கரும்பு அறுவடை செய்யப்படாமல், பாதிக்கப்பட்டதால் 20 டன் வருவதே சந்தேகமாக உள்ளது. அறுவடை செய்யப்படாமல், காலம் கடந்த கரும்பு நிற்பதால் பூச்சு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இதனால் முற்றிலும் பலன் அளிக்காத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே உரிய நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனு அளிக்க வந்த விவசாயி பாண்டியன் தனது தோளில் அறுவடை செய்யப்படாமல் தட்டையாக மாறிபோன கரும்பு கட்டை தோளில் சுமந்து வந்தது திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் அறிவுரை வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தின் செயல்பா டுகள் குறித்து, கூடுதல் முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் பிரபாகர், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தனர். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கி நிர்வாக ஆணையர் பிரபாகர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு கோரிக்கை மனுக்களில் எளிதில் உடனடியாக தீர்க்கக்கூடிய மனுக்கள் உள்ளன. அந்த மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் விரைந்து பயன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறை களைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவ வேண்டும்.

    தனித்துறையின் மூலம் செய்யக்கூடிய பணிகளை விரைந்து முடித்திடவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி கால தாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடவும் வேண்டும். பட்டா வேண்டி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை முறையாக கள ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடி க்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் குறைகளை தீர்ப்பது அரசு அலுவலர்கள் ஒவ்வொ ருவரின் கடமையாகும்.

    அரசு அலுவலர்கள் தங்களிடம் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணியாற்றும் போது, பெரும்பாலான பொது மக்களின் கோரிக்கை களுக்கு எளிதில் தீர்வு காண வழிவகை ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • 32 நபா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டன.
    • 16 ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் நிலத்தை ஒப்படைக்கவில்லை.

    வெள்ளகோவில் :

    இலவச வீட்டு மனைப் பட்டாக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனு விவரம் வருமாறு:-

    வெள்ளக்கோவில் வருவாய் கிராமம், கிழக்கு உப்புப்பாளையத்தில் 32 நபா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டன. இவற்றில் வெளியூா் நபா்கள் என 20 பேரின் பட்டாக்கள் 2007ல் தனி வட்டாட்சியரால் ரத்து செய்யப்பட்டன. இதனை எதிா்த்து தகுந்த ஆதாரங்களுடன் 8 நபா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கிடைத்த தீா்ப்பில், தனி வட்டாட்சியா் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் 16 ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் நிலத்தை ஒப்படைக்கவில்லை. மீண்டும் உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, இலவசப் பட்டாக்கள் படி, நிலத்தை அளந்து நான்கு புறமும் அத்துக்கட்டித் தர வேண்டுமென தீா்ப்பு வழங்கப்பட்டது. எனவே உயா்நீதிமன்ற ஆணைப்படி 8 நபா்களுக்கு நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    • பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நவீன தானியங்கி விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
    • தமிழர்கள் தாக்குவது போல் பொய்யான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    பல்லடம் :

    தென்னிந்திய நாடா இல்லா விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நவீன தானியங்கி விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குவது போல் பொய்யான, போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ஆகையால் தாங்கள் இந்த தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைதான் உள்ளது என்பதை தாங்கள் தெரியப்படுத்தியும், வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியை கட்டுப்படுத்த வீண் வதந்திகளை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், மக்கள் அதிகம் கூடும் கடைவீதி போன்ற இடங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அவர்களின் அச்சத்தை போக்கவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×