search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    • மகனின் இறந்த உடலை வாங்க பெற்றோர் பிச்சை எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
    • காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இறந்தவரின் உடல், 72 மணி நேரத்திற்கு தரப்படாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் சமஸ்டிபூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் தாக்கூர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனார். பின் அவர் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் அப்பகுதியில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் பெற்றோருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து மகேஷ் தாக்கூர் இறந்த மகனின் உடலை வாங்க தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

    ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. வறுமையில் வாடும் பெற்றோர், ரூ.50,000 லஞ்சம் கொடுக்க பணமில்லாமல் தெரு தெருவாக பிச்சை எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் யாரும் லஞ்சம் கேட்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி வினய் குமார் ராய் கூறுகையில்,

    இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது. இறந்த நபரின் உடல் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 72 மணி நேரம் வரை இறந்தவரின் உடல் தரப்படாது. பெற்றோர் மருத்துவ நிர்வாகத்திடம் கேட்டபோது, அங்கிருந்த அதிகாரிகள் நீங்கள் ரூ.50,000 லஞ்சம் கொடுத்தாலும் உடலை எடுத்து செல்ல முடியாது என கூறியுள்ளனர். இந்த வார்த்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. இதனால் மருத்துவமனை மீது தவறு இல்லை. 

    இவ்வாறு மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சொகுசு கார்களில் சிவப்பு விளக்குகளை நீக்கி ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம் என பெருமிதமாக கூறியுள்ளார். #PMModi #PublicRally
    முசாபர்பூர்:

    பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23,29  ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பயங்கரவாதத்தினை உருவாக்கும் அனைவரும் இந்த காவலாளிக்கு எதிராக இருக்கிறார்கள். குற்றங்கள் புரிந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று ஜாமீன் கேட்பவர்கள், இந்த உறுதியான அரசினை கண்டு அஞ்சுகின்றனர்.  எதிர்க்கட்சியினர் அவர்களின் வெற்றிக்காக பாடுபடவில்லை, தங்களின் குறைந்த செல்வாக்கை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழிப்புடன் இருங்கள். பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவார்கள், வீட்டை தாண்டினால் பெண்களுக்கு  பாதுகாப்பு இருக்காது.  இருண்ட பின் மக்கள் யாராக இருந்தாலும் வெளியே வர முடியாத சூழல் உருவாகும்.



    ஆனால் எங்கள் ஆட்சியில் சொகுசு கார்களில் இருந்த சிவப்பு விளக்குகளை நீக்கி, ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம். பாஜக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளுக்கு வாக்களித்தாலும், அது இந்த மோடிக்கே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #PublicRally

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும் என கூறியுள்ளார். #PMModi #LokSabhaElections2019
    தர்பங்கா:

    பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23  ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்று மொத்தம் 3 கட்ட வாக்குப்பதிவு  முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தர்பங்கா பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது:



    நடந்து முடிந்த 3 கட்ட வாக்குப்பதிவுகளின் நிலை, பாஜகவிற்கு சாதகமாக உள்ளதை நினைத்து எதிர்கட்சியான காங்கிரஸ் நடுங்கிக் கொண்டிருக்கிறது. மகா கூட்டணியில் இருப்பவர்கள், வாக்குப்பதிவு  இயந்திரங்களில் பழுது எனவும், பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டும் வருகின்றனர்.

    பீகாரின் முதல் மந்திரி நிதீஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் ஆகியோர் மிகச்சிறிய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கினர். இதனால் அவர்கள் மாநிலத்தையே ஒளிபெறச் செய்தனர்.

    மக்களே, ஓய்வெடுங்கள். பயங்கரவாதிகளை ஒழிக்க உங்கள் காவலாளியாகிய நான் இருக்கிறேன். மகா கூட்டணியில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதிகள் குறித்த கவலை இல்லை. ஆனால் புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும். நீங்கள் பாஜகவினருக்கோ, அதன் கூட்டணி கட்சியினருக்கோ வாக்களிக்கிறீர்கள் என்றால்,  உங்கள் காவலாளிக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LokSabhaElections2019

    பீகாரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். #CongressMP #MaulanaAsrarulHaqueQasmi
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மவுலானா அஸ்ரார்-உல்-ஹக். இவர் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிஷான்கஞ்சில் உள்ள சுற்றுலா இல்லத்தில் இரவில் தங்கினார்.

    அங்கு நேற்று அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலையில் அவரது சொந்த ஊரில் நடந்தது. மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி.க்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

    மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி. மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.  #CongressMP #MaulanaAsrarulHaqueQasmi
    பீகார் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா :

    பீகார் மாநிலம், தர்பாங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் சுவரில் சில மாண்வர்கள் சேர்ந்து மாணவிகளை பற்றி ஆபாச வாசகங்கள் எழுதியுள்ளனர். இதைக் கண்ட மாணவிகள் அதை உடனடியாக அழித்துள்ளனர்.

    இருந்தாலும் தொடர்ந்து அந்த மாணவர்கள் ஆபாச வாசகங்களை எழுதிவந்ததால், அவர்களுள் மோகன் எனும் மாணவனிடம் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் மாணவிகள் சிலர் சேர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த மோகன் மாணவிகளை பற்றி அபாசமாக பேசியதால் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, மோகனின் தாயார் உள்பட சில பெண்கள் பள்ளிக்கு வந்து மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில், காயமடைந்த 30 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் சிலர் குணமடைந்து மீண்டும் பள்ளிக்கு திரும்பிய நிலையில், இன்னும் 14 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தர்பாங்கா போலீஸ் ஐ.ஜி. திரிவெனிகஞ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
    பீகார் மாநிலத்தில் தோழியை கிண்டல் செய்த 15 வயது சிறுவனை சக நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா :

    பீகார் மாநிலம், பாட்னாவின் புறநகர் பகுதியை சேர்ந்த சத்யம்(15) எனும் சிறுவன் கடந்த 27-ம் தேதி கடத்தப்பட்டார். அதே தேதியில் ஹோமியோபதி மருத்துவராக உள்ள மாணவனின் தந்தைக்கு போன் செய்த கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதனால், பதற்றமடைந்த சிறுவனின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆர்.பி.எஸ் கல்லூரி வளாகத்தில் இருந்து சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் சிறுவனின் சக நண்பர்கள் மூன்று பேரை கைது செய்தனர்.

    உயிரிழந்த சிறுவன் சத்யம், தங்களின் தோழி ஒருவர் மற்றும் அப்பகுதி பெண்கள் சிலரை கிண்டல் செய்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் கடத்தி கொலை செய்ததாக கைதான 3 சிறுவர்களும் விசாரணையின் போது போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் சத்யம் கடந்த 27-ம் தேதி டியூஷன் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது நண்பர்கள் மூவரும் சேர்ந்து அவரை கடத்தியுள்ளனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் வைத்து சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மயங்கியதும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தி இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

    கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிறுவன் ஒருவனை மூன்று சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஜம்மு காஷ்மீர், பீகார், அரியானா, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #Governors #PresidentKovind
    புதுடெல்லி:

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நரிந்தர்நாத் வோஹ்ரா கவர்னராக இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டே வந்தது. சமீபத்தில் அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    இதனால், வோஹ்ரா கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

    பீகார் மாநிலத்தின் கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் எம்.பி லால் ஜி டாண்டன் பீகாரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா கவர்னராக இருந்த கங்கா பிரசாத் சிக்கிம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரிபுரா கவர்னராக இருந்த டதாகடா ராய் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக இருந்த காப்தன் சிங் சோலாங்கி திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக சத்யதேவ் நாராயன் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில கவர்னராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளனர். 
    பீகாரில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளி விடுதியில் எல்கேஜி மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாட்னா :

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவின் புறநகர் பகுதியான பதுகாவில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளியின் விடுதியில் இருந்து 7 வயது மதிக்கத்தக்க மாணவன் சடலத்தை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து அம்மாவட்ட போலீஸ் எஸ்.பி. அரவிந்த் குமார் கூறுகையில், எல்.கே.ஜி படித்து வந்த அபிமன்யூ எனும் மாணவனின் உடல் பள்ளி விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கழுத்து பகுதியில் இறுக்கப்பட்ட அடையாளங்கள் உள்ளதால், மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே, வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தி வருகிறோம், என தெரிவித்தார்.

    பள்ளி விடுதியில் இருந்து மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாஜக தலைமையிலான ஜனநாயக கூட்டணியில் மற்றும் பீகாரில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ஜார்கண்ட் மாநில பாஜக அரசை கண்டித்து போராட்டம் தொடங்க உள்ளது. #NDA #BJP #JDU
    ராஞ்சி:

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகிக்கிறது. மேலும், பீகாரில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஜார்கண்ட் மாநில பிரிவு அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கொடி பிடித்துள்ளது.

    பீகாரை விட ஜார்காண்ட் அதிக கனிம வளங்களை கொண்டது. ஆனாலும், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 25-ம் தேதி போராட்டம் தொடங்க உள்ளோம். பீகாரில் மட்டுமே எங்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி, ஜார்கண்டில் இல்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அம்மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சி பொறுப்பாளர் ஷரவன் குமார் தெரிவித்துள்ளார்.
    நீட் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி, பீகார் பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அவரது வருகைப்பதிவில் சர்ச்சை எழுந்துள்ளது. #NEET
    பாட்னா:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது.

    இந்த தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேசிய அளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதேபோல, பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

    விருப்பப் பாடமாக அறிவியல், கலை மற்றும் வணிகவியலை தேர்வு செய்து படித்த கல்பனா குமாரி, இந்த ஆண்டுக்கான இறுதித்தேர்வில் 500-க்கு 434 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரெகுலர் முறையில் படித்தது தெரியவந்துள்ளது.

    2 ஆண்டுகளாக டெல்லியில் நீட் பயிற்சி பெற்று வந்த அவர், பீகாரின் ஷெயோகரில் உள்ள பள்ளிக்கு எப்படி வந்து தினமும் பாடங்களை கவனித்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதிய வருகைப்பதிவு இல்லாமல் அவர் பள்ளி இறுதித்தேர்வு எழுதியது எப்படி எனவும் சர்ச்சை எழுந்தது.

    இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில கல்வித்துறை பத்தாம் வகுப்பு மற்றும் இறுதி ஆண்டு தேர்வுக்கு வருகைப்பதிவு அவசியமில்லை என தெரிவித்துள்ளது. 
    கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், பீகாரில் நாங்கள் தனிக்கட்சி நாங்கள் என்பதால் ஏன் ஆட்சியமைக்க கூடாது? என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #RJD
    பாட்னா:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

    பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

    குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பீகாரில் நாங்களே தனிப்பெரும் கட்சி ஏன் நாங்கள் ஆட்சியமைக்க கூடாது? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், பாஜக 53 இடங்களிலும் வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது போலவே, கூட்டணி ஆட்சி அமைத்தது.

    பின்னர், 2017-ம் ஆண்டு திடீரென ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், கூட்டணியிலிருந்து விலகி பின்னர் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×