search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109600"

    • சி.புதூர் கிராமத்தில் வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
    • சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள வாடிப்பட்டி யூனியனுக்குட்பட்ட சி.புதூர் கிராமத்தில் வடக்கில் இருந்து தெற்கு பக்கம் செல்லும் முக்கிய கழிவுநீர் வாய்காலில் குடியிருப்பு களில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலந்து சென்று தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பாய்ந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிலத்தில் பாய்ந்து வந்த கழிவுநீர் பாதையை நில உரிமையாளர் மண்கொட்டி அடைத்து விட்டதால் 2 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மேற்கொண்டு செல்ல வழியின்றி வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதி வீடுகளில் உள்ளவர்கள் கால்கள் நனையாமல் நடந்து செல்ல தற்காலிகமாக கல்பாதை அமைத்து நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன் கூறுகையில், இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாற்று வழியில்லாத நிலையால் தனியார் பட்டா இடத்தை ஆர்ஜிதம் செய்து கழிவுநீர் வாய்க்கால் கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிள்ளோம். ஊரக வளர்ச்சி துறையின் அனுமதி கிடைத்த பின்னர் சாக்கடை நீர் வெளியேற வாய்கால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    • ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
    • மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால், குளங்களில் வெங்காய தாமரைகளைச்செடி ஆக்கிரமித்து நீர்நிலைகளையும், மீன்வளத்தையும், சுற்றுசூழலையும் பெருமளவில் பாதிக்கிறது. முன்பு கழிவு நீரில் மட்டுமே வளர்ந்த இந்த செடிகள்.

    தற்போது ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.

    இதனால் பாசன மதகுகளில் அடைத்துக்கொண்டு பாசனத்திற்கு பெரிய இடையூராக உள்ளது.

    நீர் நிலைகளை இடைவெளி இல்லாமல் மூடிவிடுவதால் ஆக்ஸிஜன் குறைந்து நன்னீர் மீன் இனங்கள் உட்பட அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகிறது.

    இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

    உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, கோடைகாலங்களில் மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாமல் நீரை ஆவியாக்கிவிடுகிறது.

    எனவே மாவட்ட அளவில் வெங்காய தாமரை அகற்றும் பணியை மக்கள் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

    ஒரு செடி கிடந்தாலும் மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.

    இச்செடிகளை ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்படும் நுண்ணுரம் தயாரிப்பு மையங்கள் மூலமும், அல்லது நிழலான பகுதிகளில் மூடாக்கு அமைத்து பஞ்சகவ்யா மூலம் எளிதாக மக்க வைத்து விவசாயிகளுக்கு வழங்க முடியும். எனவே தனி கவனம் எடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிங்கம்புணரியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    • இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளாக தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

    இதுபற்றி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீருடன் அப்பகுதி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கருக்கும் மேற்பட்ட காலி மனையிடங்களில் தேங்கிள்ளது.

    இதன் காரணமாக கடுமை யான துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லையால் குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எனவே இந்தப்பகுதியில வசித்து வரும் மக்கள் தங்களுடைய வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே பல மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு அரசு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரும்படி இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை அவனியாபுரம் துக்காராம் தெரு, மருத்துவ காலனி பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் சாக்கடையை சுத்தம் செய்யாததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவு நீர் வீட்டுக்குள் புகுந்தது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. இதையடுத்து பொதுமக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்கள் கலைந்து செல்ல வலியுறுத்தினார்.

    அதற்கு பொதுமக்கள் மறுத்ததால் உதவி பொறி யாளர் செல்வ விநாயகம் விரைந்து வந்து உங்கள் கோரிக்கையை சரி செய்கிறேன். சாக்கடையை சுத்தம் செய்கிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • சாலையின் ஒரு புறத்தில் 50-க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது
    • கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காரனோடை அருகே உள்ள ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

    சாலையின் ஒரு புறத்தில் 50 க்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் கடைகள், செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களின் கழிவுநீர் நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் விடப்பட்டு உள்ளது.

    இதனால் கால்வாயில் கழிவு நீர் நிரம்பி தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் பாய்ந்து தேங்கி நிற்கிறது. அவ்வழியே செல்லும் வாகனங்களில் கழிவுநீர் சிதறி மற்ற வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் இந்த கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து சோழவரம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆணையாளர் குலசேகரன் ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு விசாரணை செய்தார்.

    அப்போது அரசு அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி இல்லாத 12 குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். கால்வாயில் கழிவுநீர் விடுவதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆய்வின்போது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி ரமேஷ், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி படகு இல்லத்திற்க்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நீலகிரியில் இருந்து ஊட்டி படகு இல்லத்திற்க்கு ெசல்லும் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். இதனால் வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது கழிவுநீர் தெறிப்பதினால் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஊட்டி நகராட்சியில் பல பகுதிகளில் இந்த அவல நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      உடுமலை :

      உடுமலை ஏழுகுள பாசன திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கிராமங்களையொட்டி இத்திட்ட குளங்கள் அமைந்துள்ளன. தளி பேரூராட்சியை ஒட்டி தினைக்குளம், பள்ளபாளையம் ஊராட்சி அருகில் செங்குளம், போடிபட்டி அருகே ஒட்டுக்குளம் என முக்கிய குளங்கள் அமைந்துள்ளன.இவ்வாறு கிராமத்தின் அருகிலுள்ள குளங்களில் அங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.

      செங்குளத்தில் பள்ளபாளையம் கிராமத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் மேற்குப்பகுதியில் சேர்கிறது. அங்கிருந்து செங்குளத்திற்கு தண்ணீர் செல்லும் மழை நீர் வடிகாலில் இணைகிறது.

      பல ஆண்டுகளாக கழிவு நீர் குளத்தில் கலப்பதால், மழைக்காலத்திலும் அணையிலிருந்து தண்ணீர் வரும் போதும் குளத்து நீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதே போல் தினைக்குளம், ஒட்டுக்குளம் ஆகிய குளங்களிலும் அருகில் உள்ள கிராமங்களின் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.

      எனவே பொதுப்பணித்துறை, சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து குளங்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

      • ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      • இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.

      தஞ்சாவூர்:

      தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது வண்ணாரப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

      உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து கழிவுநீர் பிள்ளையார்பட்டி எல்லைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை விரிவாக்கபணி செய்து வண்ணாரபேட்டை ஊராட்சி எல்லைவரை கொண்டு வந்துள்ளனர். இதனால் இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.

      கழிவுநீர் வருவதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் உங்கள் கோரிக்கை குறித்து மனு அளியுங்கள் என்றனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு மனு அளித்தனர்.

      • அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்
      • கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

      விழுப்புரம் :

      மரக்காணம் அருகே நகர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர்கள். இந்த தெருவில் சாக்கடை கழிவு நீர் குடிநீருடன் கலந்து தெருவில் ஓடுவதாலும், அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

      இந்த நிலையில் தெருவில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு உற்பத்தியாகிறது. இதனால் மர்ம நோய்களும், மலேரியா, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக அந்த மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • கண்ட இடங்களில் கழிவு நீரை வெளியேற்றி செல்லும் தனியார் கழிவுநீர் லாரிகள் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
      • முதல்முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது முறை தவறுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

      சென்னை:

      வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மலக்கசடு மற்றும் கழிவு நீரை தனியார் லாரிகள் மூலம் அகற்றுவதற்கு புதிய விதிமுறைகள் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

      சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கழிவு நீரை அகற்றும் தனியார் லாரிகள் அவற்றை முறையாக எந்த இடத்தில் வெளியேற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பின்பற்றாமல் நீர்நிலைகள், மழை நீர் கால்வாய் பகுதியில் விட்டு விடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

      கண்ட இடங்களில் கழிவு நீரை வெளியேற்றி செல்லும் தனியார் கழிவுநீர் லாரிகள் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது.

      இதன்படி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம் பெற வேண்டும். ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.

      உரிமம் பெற்றவர் தவிர வேறுயாரும் மலக்கசடு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்.

      உரிமம் பெற்ற வாகனத்தில் ஜி.பி.எஸ்.களை பொருத்த வேண்டும். கழிவு, கசடுகளை 6 ஆயிரம் லிட்டர் வரை அப்புறப்படுத்த கட்டணமாக ரூ.200-ம், அதற்கு மேல் உள்ள அளவுக்கு ரூ.300-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

      இந்த சட்ட விதிகளை மீறும் தனியார் லாரி உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல்முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது முறை தவறுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

      3-வது மற்றும் தொடர்ச்சியாக விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று புதிய சட்டத்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      • தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
      • மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      திருமங்கலம்

      மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டு கிராமத்தில் வி.கள்ளப்பட்டி சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்

      கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெய்த மழையிலும், தொடர்மழை காரணமாகவும் அங்கன்வாடி மையத்தின் முன்பு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை இல்லை. இதனால் தற்போது அந்த தண்ணீர் கழிவுநீராகி நோய் பரவும் மையமாக உருவெடுத்து உள்ளது.

      தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.இதன் காரணமாக அங்கன்வாடி மைய பொறுப்பாளர் அருகில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை அங்கு வைத்து பாடம் நடத்தி வருகிறார்.

      அங்கன்வாடி மையத்தின் அருகிலே உள்ள நியாய விலைக் கடையும் தண்ணீர் தேங்கிய காரணத்தினால் மூன்று மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது. நியாய விலை கடை திறக்க முடியாத சூழல் இருப்பதால் தற்காலிகமாக நியாய விலை கடை தும்மக்குண்டு அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக உடை யாம்பட்டி, கரிசல்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் இப்பகுதியினர் தெரி வித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்று மாத காலமாக மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • பேருந்து நிலையத்தில் கழிவுநீர் ஓடுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்
      • நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்

      கரூர்:

      கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தில் இருந்து, கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். தென் மாநிலங்களின், நுழைவு வாயிலாக உள்ள கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடத்தில், இரவு நேரத்தில் விளக்குகள் எரிவது இல்லை. நாள் தோறும் சுத்தம் செய்வது இல்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. சில நேரங்களில் கழிப்பிடத்தில் இருந்து கழிவு நீர் வெளியில் ஓடுகிறது. இதனால், பயணிகள் துர்நாற்றத்தால், முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். கழிவுநீர் செல்லும் பகுதியில், தள்ளுவண்டியில் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பயணிகளுக்கு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தை நாள்தோறும் சுத்தம் செய்து, கழிவுநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


      ×