search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    பிரதமர் மோடி தனது பேச்சு மூலம் பொதுமக்கள் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #Congress #RahulGandhi #Modi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆவேசமாக பேசினார். பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். தன்னை நேருக்கு நேர் அவரால் பார்க்க முடியவில்லை என்றார்.

    இதற்கு மோடி பதிலடி கொடுத்தார். பிரதமர் இருக்கையை கைப்பற்ற ராகுல் காந்தி அவசரப்படுவதாக கூறினார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடியின் பாராளுமன்ற பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி இன்று டுவிட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:-



    பிரதமர் மோடி தனது பேச்சு மூலம் மக்கள் மனதில் வெறுப்பு, பயம், கோபத்தை விதைக்கிறார்.

    தேசத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அன்பும், இரக்கமும்தான். நம் அனைவரின் மனதிலும் அன்பும், இரக்கமும் உள்ளது என்பதை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Congress #RahulGandhi #Modi
    தி.மு.க.வின் செயல்படாத தலைவர் மு.க.ஸ்டாலின் என்று முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கிண்டல் செய்துள்ளார். #MKAlagiri #MKStalin
    மதுரை:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டியில் தனது ஆதரவாளரின் இல்ல திருமண விழாவை, முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நடத்தி வைத்தார்.

    நான் திருமணத்தை நடத்தி வைக்க வருகிறேனா? அல்லது கட்சி மாநாட்டிற்கு வருகிறேனா? என்று தெரியாத அளவுக்கு கொடி தோரணங்களோடு என்னை வாழ்த்தி வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதை பார்க்கும்போது, பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது. தற்போது தி.மு.க.வில் உள்ளவர்கள் கட்சிக்கு உழைக்காதவர்கள். அவர்கள் அனைவரும் பதவிக்காகவே இருக்கிறார்கள். செயல்படாத ஒரு தலைவர் செயல் தலைவர் என்று சென்னையில் இருக்கிறார். ஆனால் செயல்படுகிற செயல் வீரர்கள் அதிகம் பேர் என்னிடம்தான் உள்ளனர்.


    இவ்வாறு அவர் பேசினார்.

    செயல்படாத தலைவர் என்று தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்து மு.க. அழகிரி திருமண விழாவில் பேசிய பேச்சு தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் செயல்வீரர்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள் என்று மு.க. அழகிரி கூறியிருப்பது விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் மு.க. அழகிரி ஈடுபடுவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  #MKAlagiri #MKStalin
    டெல்லியில் நடக்கும் அரசியல் குழப்பத்தை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi
    புதுடெல்லி:

    டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரவும் துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

    இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



    டெல்லி முதல்-மந்திரி, துணை நிலை கவர்னர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறார். பா.ஜனதா கட்சியினர், முதல்-மந்திரி வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தியாளர்கள் முன்பு அமர்ந்து பேட்டி கொடுக்கின்றனர்.

    டெல்லியில் நடக்கும் இந்த நாடகங்களை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளார். இந்த அரசியல் குழப்பத்தை, பிரதமர் தலையிட்டு தீர்க்காததால் மக்கள் தான் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது கவலை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #NarendraModi #tamilnews
    விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது.
    பெர்ன்:

    இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த 13 பேர் நிதி உதவி அளித்ததாக அவர்கள் மீது சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சுவிஸ் பெடரல் கிரிமினல் கோர்ட்டு, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் நிதி உதவி செய்தவர்களுக்கும் இடையே பாரம்பரிய ரீதியான தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு என்பதற்கான போதிய ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்தது.

    மேலும் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 8 பேர் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். மற்ற 5 பேர் மீது மோசடியில் ஈடுபட்டதாக மட்டுமே குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது. 
    தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக கோவில் சொத்து பராமரிப்பு கணக்கு தணிக்கை செய்யப்படவில்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ஆலயம் மீட்பு குழு சார்பில் ஸ்ரீரங்கம் புனிதம் காப்போம் என்ற பொதுக்கூட்டம் நடந்தது. செண்பக மன்னார் செண்டலங்கார ஜீயர் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-

    கோவில் ஆகம விதிகளில் அரசு தலையிடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு 1940 ஆண்டு தீர்ப்பில் உள்ளது. இதனை தமிழக அறநிலையத்துறை கடைபிடிக்கவில்லை. கோவில்களுக்குள் அறநிலையத்துறை நுழையக்கூடாது என்று 1965-ம் ஆண்டு தீர்ப்பு உள்ளது. இதுவரை அதற்கு எந்த தடை ஆணையும் இல்லை. இதனால் அறநிலையத்துறை கோவில்களில் இருக்க கூடாது.

    தமிழகத்தில் 38 ஆயிரத்து 635 கோவில்கள் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் 5 சதவீத கோவில்களையே காணவில்லை. 10 சதவீதம் கோவில்கள் சிதிலமடைந்துள்ளன. கோவில் நிலங்களை நிர்வகிக்க 628 அதிகாரிகள் இருந்தும் நாளுக்கு நாள் கோவில்கள் மாயமாகி வருகின்றன.

    கோவில் குருக்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டுக்கு ரூ.58 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாக ஆவணங்களில் உள்ளன. அதிகாரிகள், பணியாளர்கள் கோவில் வருவாயில் 18 சதவீதம் பராமரிப்பு என்ற போர்வையில் சுருட்டப்படுகின்றன.

    கடந்த பல ஆண்டுகளாக கோவில் சொத்துக்கள் பராமரிப்புக்கு கணக்கு தணிக்கை நடக்கவில்லை. ஆனால் இதற்காக கோவில் வருவாயில் 4.5 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 403 ஏக்கர் புஞ்சை, 15 தோப்புகள், 2 வணிக வளாகம் என்று கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன.

    இதனை முறையாக பராமரித்து வரி வசூல் செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. மாறாக கோவில் ஆகம விதிகளில் தொடர்ந்து தலையிட்டு பக்தர்களின் கோபத்தை சம்பாதிக்கின்றனர். இந்து கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.

    தமிழகத்தில் உள்ள கோவில் நிலையங்களில் உள்ள 20 லட்சம் வீடுகளுக்கு குறைந்த பட்சம் வாடகை வசூல் செய்தால் கூட பல லட்சம் கோடிகள் வருமானம் வரும். இதை வைத்து இந்து குழந்தைகளுக்கு இலவச தரமான மருத்துவத்தை அளிக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #Tamilnews
    அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தானே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. #rahulgandhi #defamationcase
    தானே:

    மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் கொன்று விட்டது என கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    கடந்த முறை ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும், ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தபோது, அவற்றை ராகுல் காந்தி மறுத்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #RSS #rahulgandhi #defamationcase
    மோடி உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அனுதாபம் தேட நடத்தப்படும் முயற்சி என்று மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. #PMModi #Congress
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “அல்கார் பரி‌ஷத்” என்ற அமைப்பின் மாநாடு நடந்தது.

    அப்போது பீமா- கோரே கான் பகுதிகளில் திடீர் கலவரம் ஏற்பட்டது. புனே போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    மும்பை, டெல்லி, நாக்பூரில் இருந்து புனேக்கு வந்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

    1. சுதீர் தவாலே-மும்பை (தலித் இயக்க தலைவர்)

    2. சுரேந்தரா கட்லிஸ் (மனித உரிமை வழக்கறிஞர்)

    3. மகேஷ் ரவுத் (பழங்குடி இன பிரதிநிதி)

    4. சோமாசென் (நாக்பூர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர்)

    5. ரோனா வில்சன் (டெல்லி)

    இவர்கள் 5 பேருக்கும் நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். நக்சலைட்டுகள் தூண்டுதலின்பேரில் இவர்கள் 5 பேரும் பீமா- கோரே கான் பகுதியில் திட்டமிட்டு கலவரத்தை நடத்தினார்கள் என்று போலீசார் சொல்கிறார்கள்.

    கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட அந்த 5 பேரின் வீடுகளிலும் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள ரோனா வில்சன் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட போது சில கடிதங்கள் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதங்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எழுதியது என்று கூறப்படுகிறது.

    “ஆர்” என்று கையெழுத்திட்டு பிரகாஷ் என்பவருக்கு அந்த கடிதம் கடந்த ஆண்டு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பிரதமர் மோடியை ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது போன்ற பாணியில் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, “மோடியை கொலை செய்வதற்காக எம்-4 ரக துப்பாக்கிகளை வாங்கவும், 4 லட்சம் குண்டுகளை வாங்கவும் ரூ. 8 கோடி தேவைப்படுகிறது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.


    பிரதமர் மோடியின் சாலை பயணத்தை குறி வைத்து தாக்குதலை நடத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறுகையில், “மோடியின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறுகையில், “பா.ஜ.க.வுக்கு எதிராக மாவோயிஸ்டு தீவிரவாதிகளை சில கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. இது ஆபத்தில் முடியும் என்பதை அந்த கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட 5 பேரையும் புனே கோர்ட்டில் நேற்று முன்தினம் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டி மாவோயிஸ்டுகள் எழுதிய கடிதத்தையும் போலீசார் தாக்கல் செய்தனர்.

    அந்த கடிதத்தை சுட்டிக்காட்டி பேசிய அரசு வக்கீல் உஜ்வாலா பவார், “கைதான 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு 5 பேருக்கும் மாவோயிஸ்டு அமைப்புடன் எத்தகைய வகைகளில் தொடர்பு இருக்கிறது என்பதையும் அவர் கோர்ட்டில் விளக்கமாக கூறினார்.

    இதற்கு குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் தோசீப் ஷேக் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறுகையில், “மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அது போலியானது. அதன் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

    இந்த நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி மோடி உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அனுதாபம் தேட நடத்தப்படும் முயற்சி என்று விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய்நிருபம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போதும் அவரைக் கொல்ல சதி சென்று தகவல் வெளியானது. இப்போதும் அதே பாணியில் கடிதம் வெளியிட்டுள்ளனர். இது மோடி தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள, தற்போதைய பிரச்சனைகளை திசை திருப்பும் முயற்சியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

    பிரதமர் மோடி தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறி அனுதாபம் தேட முயற்சி செய்கிறார். அவருக்கு செல்வாக்கு சரியும் போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றை செய்வார்கள். தற்போதும் பா.ஜ.க.வினர் அத்தகைய கதைகளை உலவ விட்டுள்ளனர்.

    இந்த தடவை மாவோயிஸ்டுகள் சதி என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க பொய் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் கடித வார்த்தைகளில் சந்தேகம் உள்ளது.

    மாவோயிஸ்டுகள் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் எங்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது. அதில் உண்மை என்பது வெளியில் கொண்டு வரப்பட வேண்டும்.

    எனவே அந்த சதி திட்டம் கடிதம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார். #PMModi #Congress
    கமல்ஹாசனும், ரஜினி காந்த்தும் சுயநலவாதிகள் என்றும் இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


    காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது. தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றி விட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.

    அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்த விதமான பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?. சுயநலவாதிகள் அல்லவா இவர்கள். இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

    தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    நீட் தேர்வை சுய நலத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்படுத்துவதாக அரசியல் கட்சிகள் மீது மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #BanNEET #NeetPolitics
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்த ஆண்டு மாணவி பிரதீபாவின் மரணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    இந்த விவகாரம் நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.



    இந்த நிலையில் நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா மரணம் அடைந்தது குறித்து மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ‘நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏறப்டுத்துகிறது. இந்த விஷயத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு நல்வழி காட்ட வேண்டும். நீட் தேர்வை கட்சிகள் சுய நலத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்படுத்துகின்றன. நீட் தேர்வை காரணம் காட்டி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்கின்றனர்’ என்று குற்றம் சாட்டினார் பொன்.ராதாகிருஷ்ணன். #BanNEET #NeetPolitics

    சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி வைத்து, சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது என அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.
    சிங்கப்பூர்:

    சீனாவின் தென்பகுதியில் அமைந்து இருப்பது தென்சீனக்கடல். பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக திகழ்கிற தென்சீனக்கடல், 35 லட்சம் ச.கி.மீ. பரப்பளவிலானது. உலகின் 3-ல் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து இந்தக் கடல் வழியே நடைபெறுகிறது. அது மாத்திரம் அல்லாமல், இந்தக் கடலின் அடியில் ஏராளமான எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் உள்ளது.

    இதன் காரணமாக இந்த கடல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இருப்பினும் இந்த கடலின் சர்ச்சைக்குரிய பகுதிகள் மீது சீனாவுடன் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.

    ஆனால் சீனா அதில் செயற்கை தீவுகளை அமைத்து, அதை ராணுவமயமாக்கி வருவதாக பரவலாக ஒரு சர்ச்சை உள்ளது. சமீபத்தில் அங்கு உள்ள பராசல் தீவின் அங்கமான ஊடி தீவில் சீனா கனரக போர் விமானங்களை நிறுத்தியது. இதை சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் சீனா அந்தப் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

    இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ், சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான ஒரு மாநாட்டில் பேசினார். அதில் அவர் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    தென் சீனக்கடல் பகுதியில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணைகள், மின்கருவிகளை செயலிழக்க செய்கிற ஜாமர் கருவிகளை சீனா ஏராளமாக நிறுத்தி வைத்து உள்ளது.

    இவற்றை சீனா நிறுத்தி வைத்து இருப்பதின் நோக்கம், அண்டை நாடுகளை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும்தான்.

    சீனாவின் நடவடிக்கைகள் அதன் பரந்த நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

    சீனாவுடன் அமெரிக்கா ஆக்கப்பூர்வமான உறவைப் பராமரிக்கத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேவைப்பட்டால் அந்த நாட்டுடன் தீவிரமாக போட்டியிடுவோம். இந்த பிராந்தியத்தில் சீனா முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளை ராணுவ மயமாக்க மாட்டோம் என்று 2015-ம் ஆண்டு, சீன அதிபர் ஜின்பிங் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அளித்த வாக்குறுதியை காப்பாற்றத்தவறி விட்டது என்றும் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சாடினார்.

    இந்த மாநாட்டில் ஜேம்ஸ் மேட்டிஸ் பேசும்போது, டிரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை.

    இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் சிங்கப்பூரில் 12-ந் தேதி சந்தித்து நடத்த உள்ள பேச்சு வார்த்தையில் தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்தி உள்ள விவகாரம் இடம் பெறாது. (தென் கொரியாவில் அமெரிக்கா 28 ஆயிரத்து 500 துருப்புகளை நிறுத்தி வைத்து இருக்கிறது). கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்கள் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்” என்று குறிப்பிட்டார். 
    சாராய ஆலை குற்றச்சாட்டு தொடர்பாக டி.டி.வி. தினகரன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டசபையில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
    சென்னை:

    சட்டசபையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு பிரச்சினையை முன்வைத்து பேசினார்.

    2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 6,672 மதுக்கடைகளை குறைப்பேன் என்று மறைந்த ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அதன்படி பதவி ஏற்றதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

    பிப்ரவரி மாதம் பிறந்த நாளன்று 500 மதுக்கடைகளை மூடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 3.866 கடைகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    கடந்த மே 21-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி 810 கடையை மீண்டும் திறக்க இந்த அரசு முயற்சிக்கிறது. அம்மா வழியில் நடப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்வது சரியா? இதற்கு காரணம் என்ன என்றார்.

    உடனே அ.தி.மு.க. உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். ஒரு உறுப்பினர் “உர்..ர்.. என்று சத்தம் எழுப்பினார். தொடர்ந்து டி.டி.வி. தினகரன் பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது சபாநாயகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    சபாநாயகர்:- யாரும் உங்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக சொல்வதற்கெல்லாம் பதில் அளிக்க வாய்ப்பு கொடுக்க முடியாது. மதுவிலக்கு மற்றும் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரிடம் பதில் இருந்தால் விளக்கம் அளிப்பார்.

    (அதன் பிறகு தினகரன் மீண்டும் பேச எழுந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கவில்லை.)



    அமைச்சர் தங்கமணி:- 2016 தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மது விலக்கு கொண்டு வருவதுதான் நமது கொள்கை என்று அம்மா அறிவித்தார். அதன்படி 23.5.2016-ல் 500 மதுக்கடையை மூட கையெழுத்திட்டார். அதன் பிறகு அம்மா பிறந்த நாளில் 500 கடைகள் மூடப்பட்டது. இப்போது 3.866 கடைகள் உள்ளன. பக்கத்து மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் வந்து விடக் கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமுடன் உள்ளது. 2002-ல் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மது பானம் சப்ளை செய்தது யாருடைய ஆலையில் இருந்து அவர்களது குடும்பத்தை சார்ந்ததுதானே. மது விலக்கை பற்றி பேசுபவர்கள் அவர்களது மதுபான ஆலையை அப்போது மூடசொல்லி இருக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறியதும் தினகரன் பதில் அளிக்க முற்பட்டார். சபாநாயகர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. மைக் இல்லாமலேயே சிறிது நேரம் பேசினார். வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். மைக் இல்லாமல் பேசிய பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் கூறினார்.

    இதையடுத்து தினகரன் வெளிநடப்பு செய்தார். சட்டசபைக்கு வெளியே வந்த தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த அரசு 810 மதுக்கடையை புதிதாக திறக்க முயற்சி செய்கிறது என்று கூறினால் நிதானம் இல்லாமல் பேசுவதாக என்னைப் பார்த்து கூறுகிறார்கள். எனது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மது ஆலை இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த சாராய ஆலையும் கிடையாது. என் குடும்பம் என்றால் நானும் என் மனைவியும்தான். ஒரு வேளை எங்கள் உறவினர் குடும்பத்தினருக்கு மது ஆலை இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அந்த ஆலையில் இருந்து மது வாங்க மாட்டோம் என்று இவர்களால் சொல்ல முடியவில்லை.

    கோவை அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இவர்களுக்குத்தான் நிறைய பங்கு உள்ளது. இந்த ஆட்சி போகும் போது தொழிற்சாலைகளில் யார்-யார் பினாமி என்பது தெரிந்துவிடும். ஹவாலா பணத்தை காட்டி நான் ஜெயித்ததாக அமைச்சர் கூறுகிறார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.6,000 வீதம் ஓட்டுக்கு பணம் கொடுத்து ரூ.180 கோடி வரை செலவு செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    நாங்கள் ரூ.20 நோட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அப்படி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. வாக்குறுதி கொடுத்து இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம். மதுசூதனன் ஆட்கள்தான் ரூ.20 நோட்டை காட்டி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

    தனக்கு போன் மூலம் மிரட்டல் வருவதாக அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார். இவர்கள் ஆட்கள்தான் இவரை மிரட்டி இருப்பார்கள். எங்கள் கட்சி ஆட்கள் இவரை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. யார் மிரட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயிகள் பிரச்சனைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் துணை நிற்பதில்லை என அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடைசெய்யக்கோரி மார்ச் 1-ந் தேதி முதல் 100 நாட்கள் குமரிமுதல் கோட்டை வரை 32 மாவட்டங்கள் வழியாக விவசாயிகள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சீபுரம் வந்தார்.

    பின்னர் அய்யாக்கண்ணு மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து பாலாற்றில் 3 கிலோ மீட்டருக்கு ஒன்று என தடுப்பணை கள் கட்ட வேண்டும், மாவட் டத்தில் உள்ள அனைத்து சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

    அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. காலம்காலமாக அரசியல் வாதிகள் விவசாயிகளை அடிமை போல் வைத்துள்ளனர்.

    அ.தி.மு.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி என எந்த ஒரு அரசியல் கட்சியும் விவசாயிகளுக்காக துணை நிற்கவில்லை.

    மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு திட்டத்திற்காகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த விட மாட்டோம். மீறி கையகப்படுத்தினால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்.

    நடிகர் ரஜினிகாந்த் நதிகள் இணைப்பிற்காக தருவேன் என்று சொன்ன 1 கோடி ரூபாயை என்னிடமோ அல்லது மத்திய அரசிடமோ இதுவரை தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அய்யாக்கண்ணு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவருடன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைபொதுச் செயலாளர் தீனன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #Tamilnews
    ×