search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல்"

    ராசிபுரத்தில் நடைபெற்ற குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #RasipuramNurse
    நாமக்கல்:

    பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ராசிபுரம் அமுதவள்ளி (50), தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை பேரம் பேசி விற்ற நர்சு, கணவருடன் கைது செய்யப்பட்டார். 



    குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய குழந்தைகளை விற்பனை செய்தவரின் கணவர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.

    கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் செவிலியர் பர்வின்னை போலீசார் கைது செய்துள்ளனர். #RasipuramNurse
    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது. இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.



    இந்நிலையில், சென்னை, நெல்லை மற்றும் நாமக்கல் உள்டபட 18 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. #LokSabhaElections2019 #ITRaids
    நாமக்கல்லில் லாரி அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அன்புநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (35). லாரி அதிபரான இவர் குடும்பத்துடன் கடந்த 24 ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    நேற்றிரவு சிவக்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் எல்.டி.டிவியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. சிவக்குமார் ஊரில் இல்லாத சமயம் பார்த்த மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால் உள்ளூரை சேர்ந்த கொள்ளையர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து சிவக்குமார் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    உயர்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், ஊதிய மாற்றத்தால் ஏற்பட்ட 21 மாத ஊதிய நிலுவைத்தொகை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகிய அதிகாரிகளுக்கு வழங்கியபோல அரசு ஊழியர், ஆசியர்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.

    அதன்படி இன்று காலை சேலம் மாவட்டத்தில் சேலம், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, காடையாம்பட்டி, ஓமலூர், ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கெங்கவல்லி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களின் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தலைமை தாங்கி, பேசினர். அப்போது 9- அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைவரும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இது குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளருமான சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாவட்ட தாலுகா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் அரசு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு உழியர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எங்களது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வில்லையெனில் வருகிற 25-ந்தேதி சேலம் மாவட்ட தலைநகரான கலெக்டர் அலுவலகம் முன்பு அனைவரும் திரண்டு மிகப் பெரிய மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று நடந்த இந்த போராட்டத்தால் அரசு சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டது. உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையில் அரசு அலுவலர்கள் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.

    வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களின் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அரசு பணிகள் முடங்கியது.

    இந்த போராட்டத்தையொட்டி தாலுகா அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுப்பு போடப்பட்டிருந்தது. #tamilnews
    சேலம், நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் ஓடின. போராட்டத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.#Bharatbandh
    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை வாழப்பாடி, வீரபாண்டி, இளம்பிள்ளை, மேச்சேரி, ஓமலூர், இரும்பாலை, ஆட்டையாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

    அதுபோல் திருச்சி, தர்மபுரி, கரூர், நாமக்கல், மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மற்றபடி வேன், கால்டாக்சி வாகனங்கள் ஓடின.

    சூரமங்கலம் மீன் மார்க்கெட், உழவர் சந்தை, செவ்வாய்ப்பேட்டை, திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட் திறந்திருந்தன. வழக்கம்போல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் சென்றனர். பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.

    நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்கின. நாமக்கல் நகரில் கறிக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மினிவேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கியது.

    மோகனூர், பரமத்திவேலூர், சேந்த மங்கலம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #Bharatbandh

    நாமக்கல் அருகே தனியார் பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சின்ன நடுப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 27) கூலி தொழிலாளி.

    சேலம் காட்டுவளவு நடுப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (30). இரு சக்கர வாகன மெக்கானிக். நண்பர்களான 2 பேரும் திருநள்ளார் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    இன்று காலை நாமக்கல் வலையப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது நாமக்கலில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சுகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை தட்டி பறித்தது. இதை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
    நாமக்கல்:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தலின் போது பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை தட்டி பறித்தது. இதை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    நாமக்கல் மணிக்கூண்டு அருகே கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜி.ஆர்.சுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் மாணிக்கம், நகர செயலாளர் குப்புசாமி, துணை தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் சபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம் அருகே உள்ள வடுகம் முனியப்பம்பாளையம் கிராம காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியினர் நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சவுந்திரராஜன் தலைமையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல ராசிபுரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், ராசிபுரம் நகர தலைவர் ஸ்ரீராமுலு முரளி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையம் காங்கிரஸ் கட்சியினர் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் பட்டாசு வெடித்தனர். வாகனங்களில் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் தங்கராஜ், சிவராஜ், சுப்பிரமணி, சரவணன், சக்திவேல், தாமோதரன், காளியப்பன், சிவகுமார், மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை காலை நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெறுகிறது. #DMK
    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் காந்தி செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் உடையப்பன் தலைமையில் நடைபெறுகிறது. சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏவும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள், நகர, ஒன்றிய பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK
    நாமக்கல் அருகே 9 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வீசாணம், மரூர்பட்டி, ராசாகவுண்டனூர், செங்காளி கவுண்டனூர், கொண்டம்பட்டி, செம்பாறைபுதூர், கரடிப்பட்டி, பொட்டணம், செல்லிப்பாளையம் ஆகிய 9 கிராமங்களுக்கு மின்சாரம் செல்லும் மின்பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென கோளாறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்து, மின் வினியோகத்தை சீரமைத்தனர்.

    ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மீண்டும் 9 கிராமங்களுக்கும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று மின்பாதையில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து, மீண்டும் மின்சாரம் வழங்கினர். இதுபோன்ற பிரச்சினை அடிக்கடி ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    நாமக்கல் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தொலைதூர கிராம மக்களும் அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகின்றது. நாமக்கல் மாவட்டம் விவசாயிகள் அதிகமுள்ள மாவட்டம் ஆகும். வேளாண்மை துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருட்கள், விதைகள், மரக்கன்றுகள், சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது. விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து, குறைந்த நீரை கொண்டு நிறைந்த மகசூலை பெறுவதோடு நீர் சேமிப்பிற்கும் உதவிட வேண்டும்.

    பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களுக்கு தேவையான வருமான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சான்று, விதவை சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட 17 வகையான சான்றிதழ்களையும் வருவாய் துறையின் சார்பில் இருக்கும் இடத்தில் இருந்தே பெறும் வகையில் இ-சேவை மையங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த முகாமில் 37 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா உள்பட மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 57 ஆயிரத்து 494 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    அதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், அவற்றை உரிய அலுவலரிடம் வழங்கி, அந்த மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    இந்த முகாமில் வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கண்ணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கேரளாவில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பின் எதிரொலியாக நாமக்கல்லில் 3¼ கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் தெரிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 3½ கோடி முட்டைகள் கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இதற்கிடையே கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த முட்டைகளை தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வெள்ள பாதிப்பு காரணமாக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட முட்டைகளும் சம்பந்தப்பட்ட இடங்களில் இறக்கப்படாமல் ஆங்காங்கே லாரிகளிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சின்ராஜ் கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் தொடர் மழை காரணமாக ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்பால் நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்பட வேண்டிய முட்டைகள் நாளுக்கு நாள் தேக்கம் அடைந்து வருகின்றன. நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு நாள் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த 1 கோடி முட்டைகளில் 20 லட்சம் முட்டைகள் மட்டுமே தற்போது கொண்டு செல்லப்படுகிறது.

    வடக்கு கேரளாவை தவிர வேறு எங்கும் முட்டைகளை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் முட்டைகள் வீதம் கடந்த 4 நாட்களாக 3¼ கோடி முட்டைகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படாமல் நாமக்கல் மண்டலத்தில் தேக்கம் அடைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    காவிரியில் வெள்ளம் 3 லட்சம் கன அடி அளவுக்கு பாய்ந்தோடுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி கரையோரப் பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். இதற்காக இன்று அவர் சேலம் செல்கிறார்.

    நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். பவானியில் தொடங்கி காளிங்கராயன் பாளையம், குமாராபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களையும், பின்னர் கரூர் மாவட்டத்தில் வெள்ளப் பகுதிகளையும் பார்வையிடுகிறார்.

    நாளை மாலை ஈரோட்டில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். #TNCM #EdappadiPalaniswami

    ×