search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமியார்"

    மனைவியை சேர்க்க கோரி மாமியார் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மோசிக்கீரனார் வீதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி. நிர்மலா என்ற மகளும் சிவகுமார் என்ற மகனும் உள்ளனர்.

    நிர்மலாவுக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த செல்லதுரைக்கும் இடையே முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் செல்ல துரையும் ,நிர்மலாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். செல்லத்துரை லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செல்லத்துரைக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகி விட்ட செய்தி நிர்மலாவுக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவருடன் கோபித்துக்கொண்டு நிர்மலா ஈரோட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இந்நிலையில் செல்லத்துரை நேற்று ஈரோட்டுக்கு வந்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற அவர் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் நிர்மலா கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

    அதன் பின்னர் செல்லதுரை அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் மீண்டும் மாலை மாமியார் வீட்டுக்குச் செல்லத்துரை வந்தார். தனது மனைவியுடன் தண்ணீர் சேர்த்து வைக்குமாறு மீண்டும் கூறினார். அப்போது வீட்டில் விஜயலட்சுமியின் தாய் மல்லிகா மட்டும் இருந்தார்.

    திடீரென செல்லதுரை தான் கொண்டுவந்த பெட்ரோல் கேனை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இனி பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்லத்துரையை தடுத்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்லத்துரையை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் லாரி டிரைவர் செல்லத்துரை மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் செல்லத்துரை ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    நல்லம்பள்ளி அருகே சொத்தை பிரித்து தரும்படி மாமியார் மற்றும் மனைவி அடிக்கடி தொந்தரவு செய்ததால் கல்லூரி மாணவர் மாயமானார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சாமிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அரவிந்த் (வயது 21).

    இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் அதேகல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் தாமரைக்கொடி என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். 

    பின்னர், தாமரைக்கொடி வீட்டிலேயே அரவிந்த் தங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து தாமரைக்கொடியும், அவரது தாயும் சேர்ந்து அரவிந்தனிடம் அவரது சொத்துக்களை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பிரித்து வாங்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி அரவிந்த் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு தொலைபேசியில் அழைத்து எனது மனைவியும், மாமியாரும் சொத்தை பிரித்து தரும்படி, தொந்தரவு செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். பின்னர் அரவிந்த் தொலைபேசியின் அழைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து அரவிந்த் அவரது மனைவி வீட்டிற்கும் செல்லவில்லை, அவரது தந்தை வீட்டிற்க்கும் செல்லவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி பல இடங்களில் தேடிப்பார்த்தும் அரவிந்த் கிடைக்கவில்லை. இது குறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் எனது மகனை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சபரிமலை சென்று சாமி தரிசம் செய்த கனகதுர்கா, அவரது மாமியார் தாக்கியதில் படுகாயடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Sabarimalatemple #Kanakadurga
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 2-ந்தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வந்த ஆச்சாரத்தை மீறி சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த முதல் இளம்பெண்கள் என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர்.

    ஆனாலும் இவர்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தது ஐயப்ப பக்தர்களிடையே ஆத்திரத்தை எற்படுத்தியது. அவர்களுக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த இளம்பெண்களுக்கு மிரட்டல்களும் வந்தன. இதனால் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

    சபரிமலை சென்று திரும்பிய பிறகு கனகதுர்கா தனது உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் நிலைமை சற்று சகஜம் ஆனதை தொடர்ந்து கனகதுர்கா நேற்று அதிகாலையில் மலப்புரம் அங்காடிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி, 2 குழந்தைகள் மாமியார் சுமதி ஆகியோர் இருந்தனர். கனகதுர்காவை பார்த்ததும் ஆவேசம் அடைந்த மாமியார் சுமதி, அவரை வீட்டிற்குள் வர வேண்டாம் என்று கூறி தடுத்தார். ஆச்சாரத்தை மீறி சபரிமலைக்கு சென்றது ஏன்? என்று கூறி அவரை கண்டித்தார்.

    அதற்கு தான் ஆச்சாரத்தை மீறவில்லை என்று கனகதுர்கா கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ஆவேசம் அடங்காத சுமதி, வீட்டில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக கனகதுர்காவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கனகதுர்கா மயங்கி விழுந்தார்.

    மேலும் கனகதுர்கா அங்கு வந்த தகவல் அறிந்த ஐயப்ப பக்தர்களும் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கனக துர்காவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தன்னை மாமியார் தாக்கியது பற்றி கனகதுர்கா, போலீசில் புகார் செய்தார். போலீசார் 324-வது பிரிவின்படி மாமியார் சுமதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சுமதியும், தன்னை கனகதுர்கா தாக்கியதாக புகார் செய்துள்ளார். அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Sabarimalatemple #Kanakadurga



    பொதுவாக மாமியாருக்கும், மருமகளுக்கும் சுமூகமான உறவு இருக்காது. இருவரும் கருத்து வேறுபாடுகளுடன்தான் இருப்பார்கள். இத்தகைய கால கட்டத்தில் மருமகளுக்கு மாமியார் சிறுநீரகம் கொடுத்து உயிர் அளித்த சம்பவம் நடந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரை சேர்ந்தவர் சோனிகா (32). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.

    டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டன. எனவே, சிறுநீரக மாற்று ஆபரேசன் அல்லது டயாலிசிஸ் செய்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

    நீண்டநாள் டயாலிசிஸ் செய்ய முடியாது. சிறுநீரக மாற்று ஆபரேசன் தான் ஒரே வழி என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே சோனிகாவின் தாயாரை தொடர்புகொண்டு சிறுநீரகம் தானம் வழங்கும்படி கேட்டனர்.

    அதற்கு தாயார் மறுத்து விட்டார். பின்னர் அவரது தந்தை மற்றும் சகோதரர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களும் சிறுநீரகம் தர மறுத்துவிட்டனர்.

    ஆனால் சோனிகாவின் மாமியார் கனிதேவி (60) தனது மருமகளுக்கு சிறுநீரக தானம் வழங்கமுன்வந்தார். சோனிகாவை தனது மகளாக பார்க்கிறேன் என்றார். பல பரிசோதனைகளுக்கு பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    தற்போது சோனிகா உடல் நலத்துடன் இருக்கிறார். தனக்கு சிறுநீரகம் கொடுத்து உயிர்காத்த மாமியாரை தாயாக பார்க்கிறேன்’’ என்றார்.
    காரிமங்கலம் அருகே தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றிய இளம்பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பையப்பட்டி யானூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன்-அம்பிகா தம்பதியினரின் மகன் பிரசாந்த். இவர் பஞ்சு மெத்தை விற்பனை செய்யும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வெள்ளையன் கொட்டாயூர் பகுதியைச் சேர்ந்த சகாதேவன்- நாகவள்ளி தம்பதியினரின் மகள் முத்துலட்சுமிக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துலட்சுமி தனியார் பள்ளியில் அக்கவுண்டரராக பணியாற்றி வந்தார்.

    பிரசாந்த்-முத்துலட்சுமி இருவரும் திருமணம் நடந்த பிறகு சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு இருதேவ் என்ற ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பிரசாந்தின் தாயார் அம்பிகா இதனை தட்டிகேட்டார். இதில் முத்துலட்சுமியை திட்டியதாக தெரியவந்தது. இதனால் முத்துலட்சுமி மனமுடைந்து காணப்பட்ட அவர் தனது அறையில் கதவை உள்தாழிட்டு கொண்டு தூங்க சென்றார். 

    இன்று காலை நீண்ட நேரமாகியும் முத்துலட்சுமி அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் பதறிப்போன கணவர் பிரசாந்த், மாமியார் அம்பிகா ஆகியோர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் முத்து லட்சுமி கதவு திறக்கவில்லை. உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின் விசிறியில் முத்துலட்சுமி தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு கதறி அழுதனர். 

    முத்துலட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இன்று அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று   பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் பிரசாந்த் வீட்டிற்கு திரண்டு வந்தனர். அப்போது முத்துலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவரது காது அறுந்த நிலையிலும், அதில் தோடு காணாமலும் இருந்தது. இதனால் முத்துலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கருதிய அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அப்போது தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமான பிரசாந்த் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் கொடுத்தனர். 

    இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நகரமாட்டோம் என்று கூறி முத்துலட்சுமியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. 

    இதுகுறித்து முத்துலட்சுமியின் உறவினர் ஒருவர் கூறியதாவது:

    முத்துலட்சுமியிடம் பேசுவதற்காக நேற்று இரவு அவரது தாயார் செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை முத்து லட்சுமி தூக்கில் பிணமாக கிடக்கிறார் என்று அவரது கணவர் பிரசாந்த்  தகவல் கூறினார். ஆனால் நாங்கள் வந்து முத்துலட்சுமியின் பார்த்தபோது அவரது காது அறுந்த நிலையில் இருந்தது. நேற்று இரவே முத்துலட்சுமியை அவரது மாமியாரும், கணவரும் சேர்ந்து அடித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கி விட்டு எங்களிடம் நாடகமாடுகின்றனர். அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலவிவரம் தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் முத்துலட்சுமியின் கணவர் பிரசாந்த் மற்றும் அவரது தாயார் அம்பிகா, மாமனார் முருகேசன் ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துலட்சுமி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை அடித்து கொன்றுவிட்டு தூக்கில் தொங்கவிட்டு கணவரும், மாமியாரும் நாடகமாடுகின்றனரா? என்று போலீசார் விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும். 

    திருமணமாகி 2 வருடங்கள் ஆனநிலையில் முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.    
    ×