search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயத்தாறு"

    ஆலங்குளம்-கயத்தாறு பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழையால் மரங்கள்- மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. #Rain

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தென்காசி, செங்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில் நேற்று பகல் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தியது. ஆனால் பிற்பகல் கருமேகங்கள் திரண்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    ஆலங்குளத்தில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதில் ஆலங்குளம் ஜோதிநகர் பகுதியில் ஆங்காங்கே மரங்களும், 7 மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் ஆலங்குளம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாப்பாக்குடி அருகே உள்ள இலந்தகுளத்தில் மின்னல் தாக்கியதில் தேவ அருள் குமார் என்பவரின் பசுமாடு பலியானது.

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோவில்பட்டி, கழுகுமலை பகுதியிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கயத்தாறு பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கழுகுமலையில் 10 மில்லி மீட்டரும், கோவில்பட்டியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் ஆய்க்குடியில் 15.2 மில்லி மீட்டரும், தென்காசியில் 14.3 மில்லி மீட்டரும், சங்கரன் கோவிலில் 10 மில்லி மீட்டரும், குண்டாறு அணை 5 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவி 3 மில்லி மீட்டரும், செங்கோட்டை 2 மில்லி மீட்டரும், சிவகிரி மற்றும் அடவிநயினாரில் 1 மில்லி மீட்டரும் மழையும் பெய்துள்ளது.

    கோடை மழையின் போது இடி-மின்னலுடன் சூறாவளி காற்றும் வீசுவதால் பல்வேறு இடங்களில் பயிரிடப் பட்டுள்ள வாழை மரங்களும் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் புகார் செய்து வருகிறார்கள்.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 4.86 கன அடி தண்ணீர் மட்டுமே பாபநாசம் அணைக்கு வந்தது. ஆனால் இன்று பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 71.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 17 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 49.28 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 75.72 அடியாக உள்ளது.

    குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்றும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை வெயிலுக்கு இதமாக வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து குளிக்க தொடங்கியுள்ளார்கள். இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.  #Rain

    நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள பருத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது19). இவர் 11-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று சுரேஷ் பொருட்கள் வாங்குவதற்காக நாற்கர சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் சுரேஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி ஆகியோர் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து விசாரணையின் பேரில் சாத்தூர் சோதனை சாவடியில் சுரேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மடக்கி பிடித்தார். பின்னர் காரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த அய்யாத்துரை மகன் மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கயத்தாறு அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
    கயத்தார்:

    பாளை கே.டி.சிநகரை சேர்ந்தவர் பால சரவணன் (வயது22). என்ஜினீயரான இவர் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் வசித்து வந்தார். இவரது நண்பருக்கு நேற்று சிவகாசியில் திருமணம் நடைபெற்றது. இதற்காக பால சரவணன் தனது நண்பர் சென்னையை சேர்ந்த சரத் (22) என்பவருடன் சிவகாசிக்கு வந்தார்.

    திருமண விழாவில் கலந்து கொண்ட அவர்கள் இன்று காலை நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடிக்கு வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் பாலசரவணன், சரத் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    சிறிது நேரத்தில் பால சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சரத் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுபற்றி கயத்தாறு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ஆதமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த சரத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான பாலசரவணன் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் இறந்ததாக சான்றிதல் வழங்கப்பட்ட முதியவர் ஓய்வுதியம் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீருத்து கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி(வயது85). முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் வர்மக்கலை படித்தவர். வயதான காலத்தில் இவருக்கு அரசு சார்பாக முதியோர் பென்சன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குருசாமிக்கு வரவேண்டிய முதியோர் பென்சன் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருசாமி கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அதற்கு தாலுகா அலுவலக அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை.

    இதையடுத்து அவர் தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேசிடம் மனு கொடுத்தார். பின்பு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர் மனு அனுப்பினார். இதுபற்றி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ அனிதா இதுபற்றி விசாரணை நடத்தினார். அப்போது கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் குருசாமி இறந்துவிட்டார் என அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி அறிக்கை கொடுத்து பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குருசாமி மீண்டும் தாலுகா அலுவலகம் சென்று தனக்கு முதியோர் பென்சன் நிறுத்தப்பட்டது ஏன் என கேட்டார். அதற்கு அதிகாரிகள் நீங்கள் இறந்து விட்டீர்கள். அதனால் உங்களுக்கு பென்சன் கிடையாது என்றார்களாம். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குருசாமி மீண்டும் மனு கொடுத்தார். அதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதன்பிறகே அதிகாரிகள் தங்கள் தவறு செய்ததாக கலெக்டர் அலுவலகத்துக்கு பதில் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குருசாமிக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.#tamilnews
    ×