search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112912"

    வேலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆய்வு செய்ய சென்ற கலெக்டர் ராமன் பள்ளி வகுப்பறையில் மாணவரை போன்று அமர்ந்து, ஆசிரியை பாடம் நடத்துவதை கவனித்தார். #vellorecollector #collectorraman
    வேலூர்:

    எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் பின்தங்கியே உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனவே நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவ, மாணவிகளின் கற்றலில் கூடுதல் கவனம் செலுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் 36 ஆண்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் அருகில் உள்ள தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் இருந்ததை தற்போது அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி என கூடுதலாக 3 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ராமன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பிளஸ்-2 வகுப்பறைக்கு சென்ற அவர்கள் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து, ஆசிரியை ஒருவர் வேதியியல் பாடம் கற்பித்ததை மாணவர்கள் போன்று கவனித்தனர். சுமார் 45 நிமிடம் மாணவரை போலவே கலெக்டர் பாடத்தை கவனித்தார்.

    பிறகு மற்ற வகுப்புகளுக்கு சென்று மாணவ, மாணவிகளை படிக்க சொல்லியும், கற்றதை எழுத சொல்லியும் அவர்களின் கல்வித்திறனை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, வாசிப்புத்திறன் குறைவாக உள்ள மாணவ, மாணவிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். அதில் ஒரு ஆசிரியை விடுமுறை எடுத்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் காலை 10 மணிக்குள் வருகை பதிவேட்டை முடிக்காததும் தெரியவந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் விடுமுறை எடுத்த ஆசிரியை ஆகிய 2 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் மார்சுக்கு, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

    மேலும் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னோடி மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். #vellorecollector #collectorraman

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் டெல்லியைச் சேர்ந்த 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #NEET #NEET2018 #NEETkills
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

    மருத்துவ படிப்பை விரும்பிய மாணவர்களின் இலக்கிற்கு மிகப்பெரிய தடையாக அமைந்த இந்த நீட் தேர்வை தடை செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி வருடந்தோறும் தவறாமல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் டெல்லியைச் சேர்ந்த பர்னவ் மெஹன்டிரடா என்ற 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் நீட் தேர்வு எழுதி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து தோல்வியுற்றதால் மனம் உடைந்த பர்னவ் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், மாணவர் பிரனவின் அறையில் இருந்த அவரது இறுதி கடிதத்தில், நீட் தேர்வு முடிவுகள் குறித்து பெற்றோரிடம் பொய் கூறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். பிரனவ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தூக்கு போட்டுக்கொள்ள முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பிரதீபா என்ற மாணவி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    தரமான மருத்துவர்களை உருவாக்கும் என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு மரணங்களை உருவாக்கி வரும் நிலையில் அரசு கண்டுகொள்ளாமல் மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்தும் நிகழ்வு வேதனையளிக்க கூடியதாகவே உள்ளது. #NEET #NEET2018 #NEETkills
    சேலத்தில் காதலியுடன் இருக்கும் படத்தை வெளியிடுவதாக மிரட்டியதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் ஜாகீர்ரெட்டிப் பட்டியை சேர்ந்தவர் அபினவ்(வயது 20). இவர் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தார். அவர் கடந்த வாரம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் தொலைந்துபோன மன வருத்தத்தில் அவர் இந்த முடிவை எடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ‘திடீர்’ திருப்பமாக சிலர் அவரை பணம் கேட்டு மிரட்டியதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மாணவனுடைய பெற்றோர் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் மீது புகார் கொடுத்துள்ளனர். இதில், தனது மகனை சிலர் செல்போனில் மிரட்டி உள்ளனர். அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை செய்த கொண்ட மாணவன் அபினவ், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் பெற்றோருக்கு தெரிய வரவே, அந்த பெண்ணை திருமணம் செய்து தருமாறு அபினவ் தரப்பில் கேட்டுள்ளனர். இதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. காதலிக்கும் போது அந்த பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள் செல்போனில் இருந்ததாக தெரிகிறது.

    இதை அறிந்த மாணவர்கள் சிலர் அபினவ் செல்போனை திருடி வைத்துக்கொண்டு மிரட்டி வந்துள்ளனர். பல லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததுடன், பணத்தை கொடுக்காவிட்டால் செல்போனில் உள்ள புகைப்படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

    இது பற்றி தெரிந்ததும் அந்த பெண், தனது படங்கள் வெளிவந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவன் அபினவ் வேறுவழி தெரியாமல் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தற்கொலை செய்த அன்று அபினவ் இறந்து விட்டாரா? என பார்ப்பதற்கு மிரட்டல் விடுத்த நண்பர்கள் வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது போலீசார் அபினவ் செல்போனுக்கு யாரெல்லாம் பேசினார்கள்? என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர்.இதையடுத்து மிரட்டல் விடுத்த மாணவர்கள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #tamilnews
    தேர்வு தோல்வி பயத்தால் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். தேர்வு தோல்வி பயம் காரணமாக அவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3-ல் உள்ள வசந்தம் நகரை சேர்ந்தவர் காந்திரூபன், பி.எஸ்.என்.எல். அதிகாரி. இவருடைய மகன் ஷாம்பிரதீப் (வயது 18). ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார். ஆனால் சரியாக தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகிறது. இதனால் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்று மாணவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்துள்ளார்.

    நேற்றுமுன்தினம் அவர் தூக்கம் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்திற்கு வந்துள்ளார். மேம்பாலத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கத்தியால் தனது கையில் வெட்டியிருக்கிறார்.

    பின்னர் சுமார் 30 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    உடனடியாக போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவர் ஷாம்பிரதீப்பை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    நித்திரவிளையில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த மாணவர், செல்பி எடுக்கும்போது கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நித்திரவிளை:

    நித்திரவிளையை அடுத்த கிடாரக்குழியை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மனைவி ஸ்டெல்லா கிரேஸ். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜாண்சனும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் மும்பையில் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜாண்சன் இறந்துவிட்டார். அதன் பிறகு ஸ்டெல்லா கிரேஸ் குழந்தைகளுடன் மும்பையிலேயே வசித்து வந்தார். இவரின் மகன்கள் மும்பையில் படித்து வருகிறார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டதால் ஸ்டெல்லா கிரேஸ் 2 மகன்களுடன் சொந்த ஊரான கிடாரக்குழிக்கு வந்தார்.

    கடந்த வாரம் ஊருக்கு வந்த ஸ்டெல்லா கிரேசும், அவரது மகன்களும் நேற்று பொழியூர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடல் அலையை ரசித்தபடி இருந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் கடல் அலைகளில் அருகே நின்றபடி செல்போனில் செல்பி எடுத்தனர்.

    அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஸ்டெல்லா கிரேசையும், அவரது 2 மகன்களையும் இழுத்துச் சென்றது. அலையில் சிக்கிய மூவரும் அலறினர்.

    சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்ற மீனவர்கள் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் ஸ்டெல்லா கிரேசும் அவரது இளைய மகனும் மீட்கப்பட்டனர். மூத்த மகன் ஜோயல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்து போன ஜோயலுக்கு 12 வயது ஆகிறது. அவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தபோது கடல் அலையில் சிக்கி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    கோவையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத சோகத்தில் மாணவர் குட்டையில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சிங்காரவேலு. மெக்கானிக். இவரது மகன் நவீன் (வயது 17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் கணிதம், இயற்பியல் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

    ஆனால் இவரது நண்பர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக நவீன் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த நவீன் தனது பெற்றோரிடம் நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றார். குட்டையன் தோட்டம் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த நவீன் திடீரென அருகே இருந்த மயிலேரிபாளையம் குட்டையில் குதித்தார்.

    இதனை பார்த்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குட்டையில் இருந்து நவீனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே நவீன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகளை இயங்காமல் நிறுத்தி வைப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. #GovernmentSchool
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. குழந்தைகளின் தொடக்கக்கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக மதிய உணவு திட்டம், விலையில்லா சீருடைகள், புத்தகங்கள், காலணி போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    எனினும் அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாக இருப்பதாக தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம், தொடக்கக்கல்வி இயக்கம் ஆகியவை ஆய்வு நடத்தி கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது.

    இதையடுத்து அரசு தொடக்கப்பள்ளிகளில் எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள்? எத்தனை ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்? எத்தனை சத்துணவு ஆயாக்கள் இருக்கிறார்கள்? போன்ற விகிதாச்சார விவரங்களை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை கணக்கில் எடுத்தது.

    அரசு நடத்திய ஆய்வில் 890 தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக இருப்பது தெரிய வந்தது. 29 பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, 4 நகராட்சி தொடக்கப்பள்ளி என 33 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவ-மாணவி கூட படிக்கவில்லை என்பதும், அங்கு ஆயாக்கள் மட்டுமே தினமும் வந்து செல்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.

    பெரும்பாலான பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை இருந்தது தெரிய வந்தது. இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துவிட அரசு முடிவு செய்துள்ளது.

    அப்படியே அந்த மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று விட்டாலும், இயங்காமல் இருக்கும் இந்த பள்ளிக்கூடங்களை, மாணவர்கள் அங்கு வந்து படிப்பதற்கு நன்கு வசதி உள்ள இடங்களாக மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 32 மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் 10-க்கும் குறைவான மாணவ-மாணவிகள் படிக்கும் 890 தொடக்கப்பள்ளிகளில் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எனவே 890 தொடக்கப்பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
    பட்டுக்கோட்டையில் மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 46). இவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மகன் பிளஸ்-2 தேர்வில் 1005 மதிப்பெண் எடுத்ததை அறிந்து இனிப்பு வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது வீட்டில் இருந்த செல்போன் விளம்பரபோர்டு சாய்ந்து இருந்ததால் அதனை சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக அவர் மீது உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து அடைக்கலத்தின் உடலை மீட்டனர். இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகன் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை கொண்டாட இனிப்பு வாங்கி சென்ற தந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லையில் டாஸ்மாக்கை மூடக்கோரி தற்கொலை செய்துகொண்ட மாணவர் தினேஷ் பிளஸ்-2 தேர்வில் 1,024 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவம் (வயது 17). நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினேஷ் நல்லசிவம் பலமுறை சொல்லியும் அவர் திருந்தவில்லை. எனவே மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்தாத தந்தையை கண்டித்தும், டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் கடந்த 2-ந் தேதி தினேஷ் நல்லசிவம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானதில் தினேஷ் நல்லசிவம் 1,200-க்கு 1,024 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்-194, ஆங்கிலம்-148, இயற்பியல்-186, வேதியியல்-173, உயிரியல்-129, கணிதம்-194.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாடசாமி, இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மகனை இழந்துவிட்டேனே என்று கூறி கதறி அழுதார்.

    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.

    அதைப்போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறும்வகையில், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.

    இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 பேர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 பேரும், என மொத்தம் 99 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ், 2017-18-ம் கல்வி ஆண்டில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அறிவியல், மெட்டலார்ஜி, புரடக்‌ஷன் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ஸ்வைன்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    சிவில் மற்றும் பி.டெக். பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள லெய்ப்னிஸ் பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேசன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy
    மதுரவாயலில் தனியாருக்கு சொந்தமான 16-வது மாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பூந்தமல்லி:

    மதுரவாயலில் தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான 16 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள 6-வது மாடியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மகன் சிபிசக்ரவர்த்தி (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள இவர், ‘நீட்’ தேர்வு எழுதி உள்ளார்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சிபிசக்ரவர்த்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 16-வது மாடிக்கு சென்றார். அப்போது திடீரென கால் தவறி சிபிசக்ரவர்த்தி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதனைக்கண்டதும் அந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலர் மொட்டை மாடிக்கு சென்று சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே மொட்டை மாடிக்கு செல்லும் வழியை குடியிருப்புவாசிகள் பூட்டி வைத்துள்ளனர்.

    ஆனால் உயிரிழந்த சிபிசக்ரவர்த்தி மற்றும் அவரது நண்பர் மொட்டை மாடிக்கு ஜன்னல் வழியாக செல்ல முயன்றுள்ளனர். அப்போது கால் தவறி கீழே விழுந்து சிபிசக்ரவர்த்தி இறந்து போய் இருப்பது தெரியவந்துள்ளது.

    இருவரும் எதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்கள்? என்பது குறித்து அவரது நண்பரிடம் விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது. பள்ளிகள் திறந்தவுடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இந்த கல்வி ஆண்டு 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெளிர் பச்சை சட்டை(அக்குவா கிரீன்), அடர் பச்சை கால் சட்டை (மெடோ கிரீன்) வழங்கப்பட உள்ளது.

    6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் வெளிர் பிரவுன் சட்டையும், பழுப்பு சிவப்பு கால் சட்டையும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.

    இந்த சீருடைகளுக்கான துணிகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை வழங்குகிறது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய சீருடைகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 
    ×