search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • லேப்டாப்பை திருடி அவர் கொண்டு வந்த பையில் வைத்துக் கொண்டார்.
    • ஊழியர் சந்தேகத்தால் திருப்பிக் கொடுத்து ஓட்டம்

    கோவை,

    கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகள், லேப்டாப் மற்றும் செல்போன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் இங்கு லேப்டாப் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைக்கு வாலிபர் மற்றும் ஒரு இளம்பெண் வந்தனர். அங்கு பணியில் இருந்த விற்பனையாளரிடம் கம்ப்யூட்டருக்கு மவுஸ் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த விற்பனையாளர் இளம் பெண்ணுடன் வந்த வாலிபருக்கு மவுஸ் காண்பித்துக் கொண்டிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட அந்த இளம்பெண் கடையில் டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருடி அவர் கொண்டு வந்த பையில் வைத்துக் கொண்டார். இதையடுத்து வாலிபரிடம் மவுஸ் காண்பித்துவிட்டு வந்த அந்த விற்பனையாளர் டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த லேப்டாப் மாயமானதால் அந்த இளம்பெண் மீது விற்பனையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் இதுகுறித்து இளம்பெண்ணிடம் அவர் கேட்டுள்ளார். முதலில் அந்த பெண் தான் எடுக்கவில்லை என மறுத்தார். அவரது பேச்சில் சந்தேகமடைந்த விற்பனை யாளர் பெண்ணிடம் இருந்த பையை திறந்து காண்பி க்கும்படி வலியுறு த்தியுள்ளார். இதையடுத்து அவர் கொண்டு வந்த பையை திறந்து பார்த்த போது அதில் லேப்டாப் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் பையில் இருந்த லேப்டாப்பை எடுத்து விற்பனையாளரிடம் திரும்ப கொடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து இருவரும் எதுவும் வாங்காமல் கடையை விட்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இரவில் பின்தொடர்ந்து சென்ற கும்பல் துணிகரம்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலை பூலுவம்பட்டியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 40) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டாஸ்மாக் கடையில் அதிகம் விற்பனையாகி இருந்தது. மொத்தம் ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் வசூலாகி இருந்தது. இன்று மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.

    எனவே வசூலான பணத்தை நாளை (செவ்வாய்க்கி ழமை) தான் வங்கியில் கட்ட முடியும். இதனால் கடையில் பணத்தை வைத்திருந்தால் பாதுகாப்பாக இருக்காது, எனவே தனது கட்டு ப்பாட்டில் வைத்திருக்கலாம் என சண்முகசுந்தரம் கருதினார். இதையடுத்து இரவு 11.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு பணத்தை ஒரு பையில் வைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    வடிவேலம் பாளையத்தை நெருங்கிய வேளையில் அங்குள்ள ஒரு சந்திப்பில் மோட்டா ர்சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்த னர். 3 பேரும் சேர்ந்து சண்முகசு ந்தரத்தை தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ.7 லட்சத்து 38 ஆயிரம் பண த்தை பையுடன் பிடுங்கிச் சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகசுந்தரம் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் பணம் பறித்தவர்கள் யாரும் சிக்கவில்லை.

    சண்முகசுந்தரம் பணத்து டன் செல்வதை நோட்டமி ட்டே மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்று பணத்தை பறித்தது விசா ரணையில் தெரியவந்தது. பணம் பறித்த நபர்கள் என்பது குறித்து பேரூர் சரக டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
    • எதனால் இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை, மே.1-

    கோவை போத்தனூர் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது68). இவரது மகன் பிரித்திவிராஜ் (33). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் அவரது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராகவேந்திரனும் அவரது மனைவியும் மணப்பா றையில் உள்ள அவரது உறவினர் குடும்ப விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் அங்கிருந்து பிரித்தி விராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. உடனே பக்கத்து வீட்டில் உள்ள எழில் குமாருக்கு தொடர்பு கொண்டு, தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டேன் ஆனால் அவர் எடுக்கவில்லை என்றும், அவரை பார்க்குமாறும் கூறினார்.

    அங்கு அவரது வீட்டிற்கு சென்ற எழில், பிரித்தி விராஜ் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதனால் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
    • திடீரென அங்கிருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டார்.

    கோவை,

    தென்காசியை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.

    இவர் கோவை போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு அவர் தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் நீட் தேர்வுக்கு தயாரானார்.

    இந்நிலையில், வருகிற மே 7-ந் தேதி நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமோ? என அவர் மன குழப்பத்தில் இருந்து வந்தார்.

    இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று விடுதியில் இருந்த மாணவி, திடீரென அங்கிருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டார்.

    இதை பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் மாநகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • ஒரு கிராம் போதைபொருளை ரூ.3,500-க்கு என அதிக லாபத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    கோவை,

    கோவையில் போதைபொருள் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகர போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாநகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே 7 பேர் கும்பல் போதைப்பொருள் விற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு 7 பேர் கும்பல் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் 7 பேரையும் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சுஜிமோகன், அஸ்வின் என்ற அஸ்வின் குமார், அமர்நாத், பிரசாந்த், ராஜேஸ், புள்ளி பிரவீன் என்ற பிரவீன்ராஜ், பிரதீப் என்பதும், இவர்கள் கோவையில் ரவுடிகளாக வலம் வந்தது தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

    சுஜிமோகன் உள்ளிட்ட 7 பேர் கும்பலும் பெங்களூருவில் இருந்து மெத்தாபெட்டமைன் என்னும் போதைப்பொருளை கடத்தி வந்து கோவையில் அதனை விற்பனை செய்துள்ளனர்.

    குறிப்பாக கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்களை குறிவைத்து இந்த விற்பனையில் ஈடுபட்டதும், ஒரு கிராம் போதைபொருளை ரூ.3,500-க்கு என அதிக லாபத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேர் மீதும் சரவணம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் கைதான சுஜிமோகனிடம் இருந்து 55 கிராம் போதை பொருளும், அஸ்வினிடம் இருந்து 1.2 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    கைதான 7 பேர் மீதும் கோவையில் உள்ள சரவணம்பட்டி, ரத்தினபுரி, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், பீளமேடு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தல், அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் இவர்கள் 7 பேரும் கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் நீதிமன்றங்களில் முறையாக ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். தற்போது போதைப்பொருள் வழக்கில் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீண்டும் அதே கும்பல் 15 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
    • பொதுமக்கள் உடனடியாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    கோவை,

    கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் சி.எம்.நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த இடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது என தெரிகிறது. ஆனால் இந்த இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து சி.எம். நகர் என பொதுமக்களுக்கு விற்பனை செய்ததாக அண்மையில் மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக கோவைக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சி.எம். நகர் பொதுமக்கள் நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து புகார் அளித்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை 6 பேர் கொண்ட கும்பல், சி.எம்.நகர் பகுதிக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள மக்களிடம் இது எங்கள் இடம். இது வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை பார்த்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள், அங்கு வசித்து வரும் மற்ற குடியிருப்பு வாசிகளும் குவிந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் இருதரப்பினரையும் திங்கட்கிழமை (நாளை) விசாரணைக்கு வருமாறு கூறி விட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மீண்டும் அதே கும்பல் 15 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். மேலும் மற்றொரு வாகனத்தில் கட்டுமான பொருட்களையும் ஏற்றி வந்தனர்.

    பின்னர் அந்த பொருட்களை அங்குள்ள காலி இடத்தில் வைக்க முயன்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவர்களிடம் சென்று இங்கு வைக்க கூடாது என தெரிவித்தனர்.

    இதனால் அந்த கும்பல் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமாதானம் செய்தும், அந்த கும்பல் கேட்காமல் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் 2 தரப்பினரிடமும் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த கும்பலில் இருந்த ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளை இயக்கியவாறு அங்கு கூட்டமாக நின்றிருந்த பெண்கள் மீது கொண்டு வந்து மோதினார். இதில் சில பெண்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளை இயக்கி கொண்டே இருந்தார்.

    இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து சென்றனர். மேலும் மக்களிடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதையடுத்து மக்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் மக்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    போலீசாரின் முன்பே பெண்கள் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

    • இன்று அதிகாலை அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை நியூ சித்தாபுதுர் நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (வயது70).

    இவர் முன்னாள் அரசு வக்கீல் ஆவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற அவர் நேற்று கோவைக்கு வந்தார்.

    வழக்கம் போல நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

    சிறிது நேரத்தில் அவரது படுக்கை அறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தொடர்ந்து அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது. அத்துடன் அவர் மீது தீ பரவியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

    அப்போது அவரது உடல் முழுவதும் தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனால் அதற்குள் உடல் கருகிய ரேனுகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இருக்கையிலும் தண்ணீர் விழுந்து நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே சென்றனர்.
    • இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை கோவை புறநகர் பகுதிகளான அன்னூர், பொகலூர், தாளத்துறை, தேரம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக கனமழை பெய்தது.

    இந்த மழையின் போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது பஸ்சுக்குள் மழைநீர் வடிந்து உள்ளே விழுந்து கொண்டிருந்தது.

    இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இருக்கையிலும் தண்ணீர் விழுந்து நனைந்ததால் பயணிகள் நின்று கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இருந்த போதிலும் பஸ் முழுவதும் மழைநீர் விழுந்து கொண்டே இருந்ததால் சில பயணிகளை பஸ்சை விட்டு இறங்கி மாற்று பஸ்சிலும் பயணிக்கும் நிலை உருவானது.

    பஸ்சுக்குள் மழை நீர் வடிந்ததை பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேவேளையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பழுதடைந்த பஸ்களை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பயணிகளிடம் எழுந்துள்ளது.

    • காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்ராஜ், துணைத் தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஷ், பொறியாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.

    1-வது வார்டு பிரியா (கம்யூ): எனது வார்டில் சேரன் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. அதற்கு தீர்வுகாண வேண்டும்.

    7-வது வார்டு ரங்கசாமி (தி.மு.க), நேரு நகரில் போர்வெல் பழுதாகி உள்ளது. எனவே புதிய போர்வெல் அமைக்க வேண்டும்.

    5-வது வார்டு ரவிக் குமார்(தி.மு.க), பொன்விழா நகரில் வீட்டுமனைக்கு அனுமதி இல்லாமல் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.

    9-வது வார்டு பிரியா (தி.மு.க), ராயல் கார்டன், முல்லை நகர், காமராஜர் நகர் பகுதியில் குடிநீர் விஸ்தரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    21-வது வார்டு விக்னேஷ், (பாஜக),காரமடை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மின்மயானத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் வாடகை வாகனத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    உடனடியாக இந்த ஆம்புலன்ஸ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின்மாயானம் மாலை 7 மணிவரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    24-வது வார்டு ராமமூர்த்தி (திமுக),பெரியார் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்கள் பாலம் வசதி இல்லாததால் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் முறையாக நடக்கவில்லை. தனியார் ஒப்பந்ததாரர் குடியிருப்புவாசிகளிடம் இணைப்பிற்கு ரூ.15 ஆயிரம் வாங்கி உள்ளனர். ஆனால் தண்ணீர் 3 முதல் 4 குடம் மட்டுமே வருகிறது.

    வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடும்போதும் ஒப்பந்த குழுவினருக்கு தெரியாமல் டெண்டர் விட கூடாது என பேசினார்.இதற்கு பதில் அளித்த கமிஷனர் பால்ராஜ், ரூ.25 ஆயிரத்திற்குட்பட்ட பணிகளுக்கு மட்டுமே பணிகளை பிரித்து கொடுப்பதில் முடிவு செய்யும் உரிமை ஒப்பந்த குழுவினருக்கு உண்டு. அதற்கு மேல் மதிப்பில் உள்ள பணிகளுக்கு ஒப்பந்த குழுவுக்கு உரிமை இல்லை என்றார்.

    துணைத்தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஸ் (காங்கிரஸ்)- எனது வார்டுக் குட்பட்ட குடிநீருக்கு போர்வெல் அமைக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.இதேபோன்று 13-வது வார்டு கண்ணப்பன் (தி.மு.க), 27-வது வார்டு வனிதாசஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க), 2-வது வார்டு குருபிரசாத், 17-வது வார்டு மலர்கொடி (தி.மு.க), தியாகராஜன்(தி.மு.க.) உள்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசினர்.

    இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது. அப்போது அஜந்தாவில் மனை பிரிவுகள் வரையறைக்கு அனுமதி கேட்டு வைக்கப்பட்ட தீர்மானத்தில், எந்த இடம், எந்த வார்டு என குறிப்பிடவில்லை.

    மேலும் அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே லே-அவுட்டுகளை கவுன்சிலர்கள் பார்வையிட வேண்டும் என்றும், அதன் பின்பே ஒப்புதல் அளிக்கவும், அதுவரை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என கவுன்சிலர் தியாகராஜன் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் உள்பட 6 தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    • கற்களை எடுத்து சதீஷ்குமார் தலையில் வீசினார்.
    • இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது33). இவர் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியருக்கும், சதிஷ்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து இங்கு பணிபுரியும் தஞ்சையை சேர்ந்த வினோத்குமார்(19), பிரவின் (18) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சதிஷ்குமாரிடம் எங்களை பற்றி மேலாளரிடம் என்ன கூறினாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் கிடந்த கற்களை எடுத்து அவரது தலையில் வீசி தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலயே மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இளம்பெண் வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.
    • சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவையை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவர் கூலி தொழிலாளி. இவர் கோவை சி.எம்.சி காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பொது இடத்தில் வைத்து இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தார்.

    அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கி கீழே தள்ளினார். பின்பு கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து இளம்பெண் வெரைட்டி ஹால் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கோவையை சேர்ந்த சதிஷ்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். நடுரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 2050-க்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
    • கோவையில் இதுவரை 10 லட்சம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு இன்று கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு தானியங்கி மஞ்சப்பை மற்றும் துணிப்பை விற்பனை எந்திரத்தை தொடங்கி வைத்து பைகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2050-க்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் மரங்களை நட, போக்குவரத்துகளில் ஏற்படக்கூடிய கார்பன் குறைப்பு, நீர் நிலைகளை பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கமானது கார்பன் நியூட்ரல் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.கோவையில் இதுவரை 10 லட்சம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு இதனை அதிகப்படுத்த உள்ளோம். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 10 கோடி மரங்கள் நடவு செய்யப்படும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

    வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. நாட்டு மரங்கள்தான் நடவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளோம். அதனை மீறி வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் அதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார். மரங்களை நடவு செய்வது மட்டும் முக்கியமில்லை. நட்ட மரங்களை தொடர்ந்து வளர்க்க வேண்டும். 2050-ம் ஆண்டுக்குள் கோவை கார்பன் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதலின் படி இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×