search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் பதிவாகியுள்ளது.
    • கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது

    கோவை,

    கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தொழிற்சாலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில், மாநகராட்சியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அண்மையில் தனியார் தொழிற்சாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தொழிற்சாலைகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொடர்ந்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் வேறு எந்த கொரோனா தொகுப்பும் ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. நோய்த் தொற்று பாதிப்பை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • போதிய நடைபாதை வசதி இல்லாததால் விபத்துகள் ஏற்படுவது தெரியவந்தது.
    • சாலைகளில் உள்ள ப்ரீ-லெப்ட், இடங்கள் எவை எனவும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    கோவை,

    கோவை அவினாசி சாலையில் பாதசாரிகள் கடக்கும் இடங்களை தேர்வு செய்து ஒளிரும் விளக்குகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் வாகன நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க காவல்துறையினர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த சில மாதங்களாக நடந்த சாலை விபத்துக்களை ஆய்வு செய்தனர். பெரும்பாலான சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் போதிய நடைபாதை வசதி இல்லாததால் விபத்துகள் ஏற்படுவது தெரிய வந்தது.

    மாநகர காவல்துறையின் சார்பில் காந்திபுரம், லட்சுமி மில் உள்ளிட்ட சிக்னல் சந்திப்புகளில் பாதசாரிகள் சாலையை கடக்க ஏதுவாக பிரத்யேக டைமர்கள் வைக்கப்பட்டுள்ளன. தவிர, சாலையில் இதற்கான அடையாளத்தையும் பெயிண்ட் அடித்து ஏற்படுத்தியுள்ளனர். மற்ற இடங்களில் இந்த அடையாளங்கள் இல்லை.

    இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் பாதசாரிகள் சாலையை கடக்க ஏதுவான இடத்தை கண்டறிந்து அங்கு ஒளிரும் விளக்கு பொருத்தி அடையாளப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக, அவிநாசி சாலையில், பாதசாரிகள் கடக்க ஏதுவான இடம் எது என கண்டறிய காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, சாலை பாதுகாப்பு குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்கள் பரிந்துரைக்கும் இடங்களில் பாதசாரிகள் சாலையை கடக்க ஏதுவாக அடையாளப்படுத்தப்படும். அந்த இடத்தில் நடந்து செல்பவர்கள், பாது காப்பாக சாலையை கடந்து செல்லலாம்.அவிநாசி சாலையை தொடர்ந்து மாநகர் முழுவதும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படும். அதே போல சாலைகளில் உள்ள ப்ரீ-லெப்ட், இடங்கள் எவை எனவும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    • வெள்ளிங்கிரியிடம் பணம் கேட்டு 2 வாலிபர்கள் மிரட்டியுள்ளனர்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (29). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள், வெள்ளிங்கிரியிடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தாக்கி கீழே தள்ளி கத்தியால் குத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தொழிலாளியை கத்தியால் குத்தியது மேட்டுப்பாளையம் பழைய முனிசிபல் ஆபீஸ் சாலையைச்சேர்ந்த சூர்யா (21),நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முல்லை நகரை சேர்ந்த அன்பு என்ற சந்தோஷ் (19) என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், அன்பு என்ற சந்தோசை கைது செய்தனர்.

    தொடர்ந்து தலைமறைவான சூர்யாவை தேடி வருகின்றனர்.

    • ராமசுப்புவின் மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
    • கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சரவணம்பட்டி - விளாங்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராமசுப்பு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்கா மல் ராமசுப்பு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துடியலூர் அருகே உள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கேசவன் (35). வெல்டர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வடமதுரை- தடாகம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கேசவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.
    • காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கோவை,

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று சட்ட சபையில் பேசியதாவது:-

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெருமாள்கோவில்பதி, பச்சினான்பதி உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காட்டுத்தீ சுமார் 5 கி.மீ சுற்றளவு வனப்பகுதியில் பரவியுள்ளது.

    காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் கடுமையாக போராடி வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின்படி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, கேரள மாநிலம் மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது காட்டுத்தீ ஒரளவு கட்டுக்குள் வந்துள்ளது. காட்டுத்தீ காரணமாக இயற்கை மரங்கள் கருகி விட்டன. வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    வனப்பகுதியை சுற்றி வாழும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், காட்டுத்தீ இந்த அளவுக்கு பரவ விடாமல் தடுத்து இருக்கலாம்.

    அடுத்த மாதம் வெயில் இன்னும் கடுமையாக இருக்கும். எனவே வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

    மக்களையும், வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பார் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டிலை உடைத்து தலையில் தாக்கினார்.
    • அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-ஊட்டி செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை எதிரே பிரபல தனியார் மதுபான பார் செயல்பட்டு வருகிறது.

    இந்த பாரில் நீலகிரி மாவட்டம் கேத்தியை சேர்ந்த மனோஜ்குமார்(47) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கேரளாவை சேர்ந்த சதீஷ்குமார், கண்ணன், ராஜன், சந்திரன் ஆகிய 4 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று பாருக்கு ஒரு நபர் வந்து, மது அருந்தியுள்ளார். அவருக்கு பார் ஊழியரான சதீஷ்குமார் மது மற்றும் உணவு பொருட்களை வினியோகம் செய்தார்.

    பின்னர் அந்த நபரிம் அதற்கான பணத்தை சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் கொடுக்க மறுத்ததுடன், பார் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டிலை உடைத்து தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த சக ஊழியர்கள், ஓடி வந்து, அந்த நபரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர், அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றார்.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்த அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் காயம் அடைந்த சதீஷ்குமாரை மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பி யுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பார் ஊழியரை தாக்கிய நபர், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சரவணகுமார்(43) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ெஜயிலில் அடைத்தனர்.

    • வருகிற 22 -ந் தேதி(சனிக்கிழமை) குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் நடைபெறுகிறது.
    • லட்சார்ச்சனை விழாவில் ரூ400 செலுத்தி பக்தர்கள் பங்கு பெறலாம்.

    சரவணம்பட்டி,

    கோவை கோவில்பாளையத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராண வரலாற்று சிறப்புமிக்க காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது.

    இங்குள்ள சிவலிங்கம் எமதர்மராஜன் சாமவிமோசனம் பெறுவதற்காக கவுசிகா நதிக்கரையில் நுரையும் மணலுமாய் சேர்ந்து செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

    இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமான குரு பகவானாக அமைந்துள்ளார்.

    இந்த கோவில் குரு பரிகார ஸ்தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 22 -ந் தேதி(சனிக்கிழமை) குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருக்கோவில் செயல் அலுவலர் அருண் பிரசாத் பிரகாஷ் கூறியதாவது:

    குரு பகவான் வருகிற 22-ந் தேதி இரவு 11.26 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    குரு பெயர்ச்சியை யொட்டி இரவு 9 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடக்கிறது.

    அதனை தொடர்ந்து பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு கலச அபிஷேகம் நடக்கிறது. பின்னர் குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனையும் காண்பிக்கப்படுகிறது.

    இரவு 11.26 மணிக்கு குரு மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் குரு பெயர்ச்சி விழா தொடங்குகிறது.அதனைத்தொடர்ந்து 23-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மற்றும் 24-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதம் வழங்கப்படுகிறது.

    குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து, லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

    இந்த லட்சார்ச்சனை விழாவில் ரூ400 செலுத்தி பக்தர்கள் பங்கு பெறலாம். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் மற்றும் லட்சார்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு பகவான் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், தக்கார் வெற்றிச்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை அந்த வாலிபரிடம் கொடுத்தார்.
    • மூதாட்டியின் மகன் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் ஜோதிடம் பார்க்க வேண்டுமா ஜோதிடம் என சத்தம் போட்டபடி சென்றார்.

    அந்த வாலிபர் மூதாட்டியை பார்த்து ஏற்கனவே இந்த வீட்டில் 2 உயிர் போய் உள்ளது. மீண்டும் இந்த மாதத்தில் ஒரு உயிர் போக உள்ளது. அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த வாலிபரை அழைத்து உயிர் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.

    உடனடியாக அந்த வாலிபர் மூதாட்டியிடம் நீங்கள் அணிந்து இருக்கும் நகைகளை கழற்றி என்னிடம் கொடுங்கள் நான் சாமி முன்பு வைத்து பரிகாரம் செய்து விட்டு தருகிறேன் என்றார். இதனை உண்மை என நம்பிய மூதாட்டி தான் அணிந்து இருந்த செயின், மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த வாலிபர் மூதாட்டி யிடம் 21 நாட்களுக்கு இதனை யாரிடம் சொல்ல கூடாது. அவ்வாறு கூறினால் பரிகாரம் பழிக்காமல் போய்விடும் என கூறி விட்டு அங்கு இருந்து சென்றார்.

    மூதாட்டி தனது மகன் வந்ததும் நடந்த சம்பவங்களை அவரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    • பணத்தை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி கொடுக்கவில்லை.
    • விஞ்ஞானி தனசெல்வன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் தனசெல்வன் (வயது 57). ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவர் தனது மகனை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க விரும்பினார். இதற்காக பல வழிகளில் முயற்சி மேற்கொண்டார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தனசெல்வனுக்கு கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பிர்தவுஸ், சலாவூதீன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் தனசெல்வத்திடம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் தெரிந்தவர்கள் இருப்பதாகவும், அவர்கள் உதவியுடன் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தரலாம் என கூறினர். மருத்துவ சீட்டுக்கு ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும் என்றனர்.

    இதனை உண்மை என நம்பி தனசெல்வன் தனது மகனை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் கேட்ட பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

    பணத்தை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் பிர்தவுஸ், சலாவூதின் ஆகியோர் கூறியபடி எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி கொடுக்க வில்லை.

    இதனையடுத்து தன செல்வன் 2 பேரையும் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    இது குறித்து விஞ்ஞானி தனசெல்வன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக கூறி விஞ்ஞானியிடம் ரூ.20 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த பிர்தவுஸ், சலாவூதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கோவை,

    தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் (என்எம்எம்எஸ்) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை (எம்எச்ஆர்டி) சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி, திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்ேறாரின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

    ஏழாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 9, 10 பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதன்படி 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படுகிறது.

    வறுமை காரணமாக திறமையான மாணவர்கள் பள்ளிக் கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதே இந்த கல்வி உதவித்தொகையின் நோக்கமாகும். மாணவர்களின் நுண்ணறிவுத்திறனை சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியானதில், தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கோவை மாவட்டத்தில், மொத்தம் 162 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குடிபோதையில் இருந்த வாலிபர், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
    • மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது 10-ம் வகுப்பிற்கு தேர்வு நடந்து வருவதால் மாணவிக்கு மதியத்திற்கு பிறகே வகுப்புகள் தொடங்கும்.

    சம்பவத்தன்று, மாணவி, பள்ளி செல்வதற்காக புறப்பட்டு தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வந்தார்.

    குடிபோதையில் இருந்த அவர், மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவரை பார்த்த மாணவி, சத்தம் போட முயன்றார். அதற்குள் வாலிபர், மாணவியின் வாயை பொத்தி அவரை வீட்டில் இருந்த அறைக்குள் தூக்கி சென்றார்.

    அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்து தப்பிக்க மாணவி எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவர் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார்.

    அப்போது வீட்டிற்கு மாணவியின் தம்பி வந்து விட்டார். அவர் சத்தம் கேட்டு அறைக்கு சென்றார். இதை பார்த்த சதீஷ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி வடக்கிபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு மாணவியிடம் பழகி வந்ததாகவும், இதனை மாணவியின் குடும்பத்தினர் தட்டி கேட்டதால், அவர்களது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததும் குறிப்பிடத்தக்கது.

    • கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
    • ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கோவை,

    பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அப்பணிகள் முன்னேற்ற நிலை குறித்து அவ்வப்போது கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்ெகாண்டு வருகின்றார்.

    அதனடிப்படையில் பொள்ளாச்சி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் 48 கடைகள் கொண்ட மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகராட்சி ஆண்கள், மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, ரூ.148 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டுமான பணிகள், பொள்ளாச்சி கோயம்புத்தூர் சாலை சி.டி.சி மேடு, அருகே ரூ.7 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் கிராந்தி குமார்பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ×