search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114232"

    • பெண்ணின் கண்ணத்தில் அமைச்சர் அறையும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது.
    • பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கர்நாடகா காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

    சாம்ராஜ்நகர்:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கலந்து கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு நில உரிமை பட்டாக்களை வழங்கினார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பெண் ஒருவர் தள்ளப்பட்டதால் அவர் அமைச்சர் மீது விழுவது போல் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் சோமண்ணா அறையும் வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் வெளியாகி வைரலானது. 


    அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சி, வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் குடகு மாவட்டம் மடிகேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் சோமண்ணா பெண்ணை அறைந்தது அவரது மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன.
    • 2 அடி உயரத்தில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் கொல்கத்தா காளி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள ஒரு சிற்பக்கலைக்கூடத்தில் 12 அடி உயரத்தில், பல்வேறு சிறப்பம்சங்களுடன் கொல்கத்தா காளி சிலை செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிலை 6 டன் எடையுடன் ஒரே கல்லில், 10 தலைகள், 10 கால்கள், ஏகசூலம், சங்கு, கதை, ரத்த கின்னம், கதிர் அரிவாள், அரக்கன் தலை, கத்தி, சாட்டை, வில் அம்பு, டமாரம் என 10 கைகளிலும் 10 ஆயுதங்களுடன் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் காளி சிவன் ரூபத்தில் வந்து கொடூர அரக்கனை காலடியில் போட்டு மிதிப்பது போன்றும் சிலை செதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காளிக்கு 20 மனித தலைகள் கொண்ட மாலை அணிவித்திருப்பது போன்ற தோற்றத்துடன் சிலை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. சிற்பி சிவக்குமார் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலை வடிவமைப்பு பணியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    இந்த சிலை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருமுருகன்பூண்டியில் இருந்து கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சாந்திராம கிராமத்தில் உள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக லாரி மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

    • டேங்கர் லாரிக்கும், அரசுப் பேருக்கும் இடையே சிக்கி டெம்போ வேன் நசுங்கியது.
    • காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

    ஹாசன்:

    கர்நாடகா மாநிலம் அர்சிகெரே தாலுகாவில் நேற்றிரவு பால் டேங்கர் லாரி, அரசு பேருந்து மற்றும் டெம்போ டிராவலர் வேன் அடுத்தடுத்து மோதின. இதில் டேங்கர் லாரிக்கும், அரசுப் பேருக்கும் இடையே சிக்கி வேன் நசுங்கியது. அதில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.இதில் 4 குழந்தைகள் அடங்கும். காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

    • ரீமிக்ஸ் பாடலை போட்டு பொதுவெளியில் ஆட்டம் போட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினர்.
    • சிறார் குற்ற சட்ட விதிகளின்படி நடவடிக்கை என போலீசார் தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    மிலாது நபி கொண்டாட்டங்களையொட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள டேங்க் கார்டன் பகுதியில் ஊர்வலம் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் சிலர், இந்து மதம் குறித்து தெலுங்கானா எம்.எல்.ஏ.அக்பருதீன் ஓவைசியின் சரச்சைக்குரிய வார்த்தைகள் அடங்கிய ரீமிக்ஸ் பாடலை போட்டு சாலையில் ஆட்டம் போட்டுள்ளனர்.

    கைகளில் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வளைதளங்களில் பகிரப்பட்டது. இவற்றை பார்த்த பெங்களூரு சித்தாபுரா பகுதி போலீசார், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் 14 சிறுவர்கள் உட்பட 19 இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட 14 சிறுவர்கள் மீதும் சிறார் குற்றத் தடுப்பு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் சித்தாபுரா காவல் நிலையம் முன்பு திரண்டு தங்கள் குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அனுப்பி வைத்தனர். 

    • புதிய கட்டணம் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதிய விதிமுறைகள் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்ததாக அமைச்சர் தகவல்

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் அதை சரிசெய்வதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் யுனிட்டுக்கு சராசரியாக 35 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் ஜூன் மாதம் 25 முதல் 30 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    புதிய கட்டணத்தின்படி, பெங்களூரு மின்சார வினியோக நிறுவன (பெஸ்காம்) எல்லையில் ஒரு யூனிட்டுக்கு 43 பைசா வசூலிக்கப்படும். மங்களூரு மின்சார வினியோக நிறுவன (மெஸ்காம்) எல்லை பகுதியில் 24 பைசாவும், உப்பள்ளி மின்சார வினியோக நிறுவன (ஹெஸ்காம்) எல்லை பகுதிகளில் 35 பைசாவும், கலபுரகி மின்சார வினியோக (ஜெஸ்காம்) எல்லை பகுதியில் 35 பைசாவும், சாமுண்டீஸ்வரி மின்சார வினியோக நிறுவன (செஸ்காம்) எல்லை பகுதியில் 34 பைசாவும் அதிகரித்துள்ளது.

    மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மின் கட்டணம் உயர்வு குறித்து மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது;-

    கர்நாடகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு நிலக்கரியின் விலை உயர்வுக்கு ஏற்பவுவும், நிலக்கரி விலையை ஒப்பிட்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது என்ற புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதாவது 3 மாதங்களுக்கு ஒருமுறை நிலக்கரி விலையை மதிப்பீடு செய்து, அதற்கு தகுந்தாற் போல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, தற்போது நிலக்கரி விலை உயர்வு காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த புதிய விதிமுறைகள் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமலுக்கு வந்தது. மாநிலத்தில் மின் கட்டணம் உயர்வதற்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறையே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

    • சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கண்டித்தும் ஆசிரியை தனது பழக்கத்தை மாற்றவில்லை
    • பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் துமாகூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியையான கங்கா லக்ஷ்மம்மா என்பவர், பள்ளியில் மதுபாட்டிலைக் கொண்டு வந்து, மது அருந்தியபடி பாடம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கண்டித்தும், அதனை கங்கா லக்ஷ்மம்மா கண்டுகொள்ளவில்லையாம். தொடர்ந்து மது குடித்துவிட்டு பாடம் எடுத்து வந்ததால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கு வருகை தந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், கங்கா லக்ஷ்மம்மாவின் வகுப்பறைக்கு சென்ற அவர்கள், வகுப்பறையில் சோதனை செய்தனர். அப்போது, மேசை டிராயரில் மதுபாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அவரும் குடிபோதையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்த கல்வித்துறை அதிகாரிகள், பின்னர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    • 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு.
    • மடாதிபதி ஜாமீன் மனு மீது நீதிமன்றம் இன்று விசாரணை.

    சித்ர துர்கா:

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்தின் தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மடாதிபதி மீது மைசூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

    மடாதிபதி சிவமூர்த்தி தரப்பில் ஜாமீன் கோரி சித்ரதுர்கா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தததாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அலோக் குமார் தெரிவித்தார்.

    அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபின் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவின் மிகப்பெரிய லிங்காயத் சமுதாயத்திற்கு சொந்தமான ஸ்ரீமுருகா மடத்திற்கு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவகுமார், கே.சி.வேணுகோபால் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

    இந்த மடத்தின் தலைமை மடாதிபதி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மடாதிபதியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.

    கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் எனப்படும் மத அடையாள ஆடைகளை அணிந்து செல்வதற்கு மாநில அரசு தடை விதித்தது. இந்த தடையை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உப்பினங்கடி கல்லூரியில் தடையை மீறி ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் அளிக்கக் கோரி கர்நாடகா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதி நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    • அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் முழுவதும் வெளியேற்றம்.
    • கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறப்பு

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன.

    கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி போன்ற அணைகள் நிரம்பிவிட்டன. அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 1,25,569 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை நிரம்பியுள்ளது. அந்த அணையின் 33 மதகுகள் திறக்கப்பட்டு ஒரு லட்சம் கனஅடி நீர் துங்கபத்ரா ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் ஹம்பியில் உள்ள வரலாற்று சின்னங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    கட்டபிரபா, மல்லப்பிரபா, கிருஷ்ணா, காவிரி, சுபா, வராகி மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. கடலோர பகுதிகளில் உள்ள அணைகளும் நிரம்பி வழிவதாக கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றனர்.
    • தட்சிண கன்னடா பகுதியில் பாஜகவினர் போராட்டம்

    தட்சிண கன்னடா:

    கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மாலை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த படுகொலையை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெல்லாரே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலையை கண்டித்து தட்சிண கன்னடா பகுதி பாஜகவினர் சாலை மறியல் உள்ளிடட் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில்,பிரவீன் நெட்டாரு படுகொலைக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிரவீன் நெட்டாரு படுகொலை காட்டுமிராண்டித்தனமானது என்றும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமது டுவிட்டர் பதிவில் பொம்மை குறிப்பிட்டுள்ளார். கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், விரைவில் நீதி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    • காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.
    • காவிரி நீர் வரத்து அதிகரிப்பதால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப் பெருக்கு.

    மாண்டியா:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன.

    அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணைக்கு வினாடிக்கு, 49 ஆயிரத்து 244 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரத்து 356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் வெளியேறும் மதகுகள் பகுதியில் மூவர்ண கொடியின் நிறத்தில் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. இது காண்போரை கவர்ந்து வருகிறது.

    இதுபோன்று, கபினி அணைக்கு வினாடிக்கு, 26 ஆயிரத்து 847 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளிலிருந்தும், தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 4,356 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த தண்ணீர் இன்று இரவு தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவை வந்தடையும் என தெரிகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிகபட்ச தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அபாயம் உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமலில் உள்ளது.

    • தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு.
    • கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழையால் அம்மாநில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 34,304 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

    இதேபோல் கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15,727 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 23,511 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×