search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 114339"

    • இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகளை சீன கப்பல் மேற் கொள்கிறது.
    • இலங்கைக்கு சீன கப்பல் வருகை குறித்து இந்தியா கண்காணிப்பு.

    கொழும்பு:

    இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் அடுத்த மாதம் சீன ஆராய்ச்சி கப்பல் யுவான் வாங்கை நிறுத்துவதற்கு அந்நாட்டு ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் கெனல் நளின் கரத், பல நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்கள் நுழைவதற்கு இலங்கை அனுமதி வழங்குவது வழக்கமான ஒன்று என தெரிவித்துள்ளார். இதே சூழலில் சீனக் கப்பலுக்கு நாங்கள் அனுமதியும் வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

    இலங்கை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11ந் தேதி முதல் நிறுத்தப்படும் சீன ஆராய்ச்சி கப்பல் செப்டம்பர் வரை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சீன கப்பல் இலங்கை வருகை குறித்து கவனமுடன் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீன ராணுவத்தின் தலையீட்டிற்கு இடமளிக்க கூடாது என்று அந்நாட்டின் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகள், இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளன.

    • இலங்கை அதிபர் பதவிக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்து.
    • இலங்கை இந்தியா இடையே இருதரப்பு உறவு நீண்ட கால அடிப்படையிலானது.

    இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரணிலுக்கு, முர்மு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    நான் பதவியேற்றதற்கு உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இலங்கை இந்தியா இடையே இருதரப்பு கூட்டு உறவு நீண்ட கால அடிப்படையிலானது. பாரம்பரியம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளின் அடிப்படையில் அது மேலும் வலுவடையும். இலங்கை அதிபருக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இலங்கையில் அவசர நிலை சட்டம் அமலில் உள்ளது.
    • இது ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்படுகிறது.

    கொழும்பு:

    இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

    ஆனாலும் ரணில் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பொதுச் சொத்துகள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள், சேவை விநியோகம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் விக்ரமசிங்க கடந்த 19-ம் தேதி அறிவித்தாா். அதன்பின், நடந்த முடிந்த அதிபர் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க முதல்முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் பதவி விலகவேண்டும் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அமலில் உள்ள அவசர நிலை சட்டம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக தீவிரம் அடையும் போராட்டம்.
    • அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைப்பு.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன. 


    உடனடியாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுப்பு வேலிகளை அகற்ற முயற்சித்த நிலையில் அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

    • இலங்கை அதிபர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கியது.
    • ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா ஆதரவு.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டைவிட்டுச் சென்ற கோத்தபய ராஜபக்சே முறைப்படி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    முன்னதாக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அவர் நியமித்தார். ரணில் இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற நிலையில், இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு பாராளுமன்றம் தொடங்கி உள்ளது. இதற்கான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த சிறப்பு அமர்வின் போது, அதிபர் தேர்தல் நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை வரும் 19 ஆம் தேதி தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தால், அதிபர் தேர்லுக்கு வரும் 20 ஆம் தேதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்க பாராளுமன்றத்தில் ராஜபக்சேவின் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர்.

    அந்த கட்சி ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தவிர மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

    இதனிடையே மாலத் தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்க எந்த புகலிடமும் வழங்கவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தனிப்பட்ட பயணமாகவே அவர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

    • கோத்தபய தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
    • மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் சென்றார்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.

    போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். சில போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே தங்கி உள்ளனர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது. இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே 13ந்தேதி ராஜினாமா செய்வார் என அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்திருந்தார்.

    அதிபர் கோத்தபயா இலங்கையில் இருந்து வெளியேறியதாக நேற்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது உண்மையில்லை என்றும் கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.

    இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இலங்கை பாராளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.
    • ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு நடைபெறுகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகிய நிலையில், தப்பி ஓடி தலைமறைவாகி உள்ள கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி விலகுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து புதிய அதிபர் தேர்வு தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி மீண்டும் கூடுவதாகவும், புதிய அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஜூலை 19ஆம் தேதி பெறப்படும் என்றும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் இலங்கையின் அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை முக்கிய எதிர்கட்சியான சமகி ஜன பலவேகயாவின் தலைவர் சரத் பொன்சேகா உறுதிப்படுத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் சமகி ஜன பலவேகயா கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் தேர்வு தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற சஜித் பிரேமதாசவுக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    இதனிடையே, தாய்நாட்டை பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது, வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றை தவிர மாற்றுத் தீர்வு எதுவும் இல்லை என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அதிபரின் கீழ் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
    • புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலகிய நிலையில், அனைத்துக்கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கும் பணிகளில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இலங்கையுடன்அமெரிக்கா துணை நிற்பதாக அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்து வரும் அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    இலங்கையின் வரலாற்றில் பலவீனமான இந்த தருணத்தில் அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார். அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசு விரைந்து செயல்பட்டு கடன் நெருக்கடிக்கு தீர்வு காண்பதுடன், நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் கூடிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விலகல்.
    • இலங்கை தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்படுவார் என தகவல்

    கொழும்பு:

    சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக இல்லாத வகையில், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

    கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய உணவு பொருட்கள் விலையேற்றம் மற்றம் பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு சூழல்களால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    இதையடுத்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர். 


    இந்நிலையில் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதற்கு முன்னதாக ரணில் அந்த வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளார். போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

    முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ரணில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார். 


    அதற்கு பதில் அளித்துள்ள கோத்தபய, வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்காலிக அதிபராக சபாநாயகர் அபேவர்தன செயல்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே, கொழும்புவில் ரணில் விக்கிரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லம் அருகில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கையின் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் போலீஸ் அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த நான்கு ஊடகவியலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்வம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் மிகவும் முக்கியமானது. வன்முறையையும் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நிதானத்துடன் செயல்படுமாறு பாதுகாப்புப் படையினரையும் எதிர்ப்பாளர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    • அதிபர் மாளிகை அருகே இன்று பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டம்.
    • ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என போலீசார் எச்சரிக்கை.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடி, வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் இன்று பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதிபர் மாளிகை அருகில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளதால், வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதனையடுத்து நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

    அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவின்பேரில் நேற்று இரவு 9 மணி முதல் இந்த ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளின் வழியே பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    • ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.
    • ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்துள்ளது.

    இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே, இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.470க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்து ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து, சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து, ரூ.520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • மருந்து, கோதுமை உள்பட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    ஈரோடு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்கள் உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்காக தவித்து வருகின்றனர். அனைத்து பொருட்களின் விலை உயர்வால் சாதாரண நடுத்தர மக்கள் ஏழை மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    குழந்தைகள் குடிக்க பால் இன்றி தவித்து வருகின்றனர். இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறுநாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவும் பெட்ரோல், கோதுமையை இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. முதல்-அமைச்சரும் இலங்கைக்கு முடிந்த உதவியை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    அதனை ஏற்று தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மருந்து, கோதுமை உள்பட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை இலங்கை அரசுக்காக கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. சண்முகம் தனது ஒரு மாத ஊதியமான ரூ.89 ஆயிரத்து 136-யை இலங்கை மக்களுக்கு உதவிடும் பொருட்டு தமிழக அரசுக்கு மாவட்ட போலீஸ் துறை வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். இவரது இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை போலீசார், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ×