என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருமானவரித்துறை"
நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் நாளை (31-ந்தேதி)யுடன் முடிவடைவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படமாட்டாது. அரசு துறைகளின் கருவூலங்கள் சார்பில் பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறும். கருவூல கணக்குகளை சரிபார்த்தல், காசோலை, வரைவு காசோலை மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மட்டும் நடைபெறும்.
பொது மக்கள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் மட்டும் செலுத்தலாம். வழக்கமான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற பணிகள் நடைபெறாது. அதே வேளையில் மாதத்தின் 5-வது சனிக்கிழமையாக இன்று உள்ளதால் வங்கிகள் செயல்படுகின்றன.
எந்திரங்கள் வழியாக பணம் டெபாசிட் செய்வதில் எந்த சிக்கலும் கிடையாது என்று வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.
வங்கிகள் நாளை செயல்படுவது போல வருமான வரித்துறை அலுவலகமும் இயங்குகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான தாமதிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வருமானவரி படிவங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
அதனால் வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்றும் நாளையும் வருமானவரி அலுவலகம் வழக்கம் போல் செயல்படும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித்துறை மண்டல அலுவலகங்களிலும் வழக்கமான வேலை நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகிறது.
சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி சொத்துவரி இலக்கு வைத்து வசூலில் ஈடுபட்டு வருகிறது. நாளையுடன் நிதியாண்டு நிறைவடைவதால் நாளை அனைத்து மாநகராட்சி சொத்து வரி அலுவலகங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி வசூலில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) சொத்து வசூல் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
மேலும் அரசு இ.சேவை மையங்களும் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இ.சேவை மையங்களை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். #Bank #IncomeTaxDepartment
தேனியில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான எம்.எம். மளிகை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடியாக இது உள்ளது.
இதன் சார்பு நிறுவனமாக ஆர்.ஜி. கண்ணா எண்ணெய் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனங்களில் முறையான வருமானவரி தாக்கல் செய்யாமல் இருந்ததாகவும், ஜி.எஸ்.டி. வரி செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த 2 நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் உரிமையாளர் வீடு மற்றும் மேலாளர் வீடு, அலுவலகம், உற்பத்தி பொருள் பேக்கிங் செய்யும் பகுதி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.
வருமானவரித்துறை சோதனையால் அலுவல கங்கள் மற்றும் வீடுகள் பூட்டப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் தேனியிலும் இந்த சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த வெள்ளி விழா ஆண்டு தொடக்க விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய நாட்டின் மிகப்பெரிய பலமே மனித வளம். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சீனாவை நாம் மிஞ்சியுள்ளோம். 30 வயதுக்குறைந்த இளைஞர்கள் நம்முடைய நாட்டில் 60 சதவீதம் பேர் உள்ளனர். இதனால் தான் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் நம்முடைய நாட்டில் முதலீடு செய்யப்படுகிறது. பல நிறுவனங்கள் நம் நாட்டை நோக்கி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நம் நாட்டிலே படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா, ஐரோப்பியா போன்ற நாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் சாதாரண மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கும், தொழில் வியாபாரிகளுக்கு, தொழிற்சாலை நிறுவனங்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பல வாக்குறுதிகளை கொடுத்த மத்திய அரசு நான்கரை ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நிறைவேற்றவில்லை. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி இவைகளெல்லாம் நாட்டில் வேலைவாய்ப்பை குறைத்து பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இந்திய நாட்டில் வளர்ச்சி 9 சதவீதம் இருந்தது. தற்போது 7.1 சதவீதமாக ஆகியுள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் 2 சதவீதம் குறைந்துள்ளது. பாரதிய ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து துறைகளையும் சரி செய்ய குறைந்த பட்சம் ஓராண்டு ஆகும். விவசாயிகள், தொழில் நிறுவனம், தொழிற்சாலை, தொழிலாளர்கள், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வரே தெருவில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு காரணம் வருமான வரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. அதை தன் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் எதிரிகளையும், தொழில் அதிபர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. சி.பி.ஐ. நிறுவன தலைவரே ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எல்லாமே பலவீனமடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமென்றால் நாட்டில் மாற்றம் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #Narayanasamy #BJP
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணமடைந்தார்.
அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு முடிவு செய்தது. இதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பேரில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கு ஜெயலலிதாவின் உறவினர்களான தீபாவும், தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். போயஸ் கார்டன் இல்லத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கோரி அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் அரசு சார்பில் கருத்து கேட்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினார்கள்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்தும், அவர் ஏதாவது வரி பாக்கி வைத்துள்ளாரா? என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதற்கு வருமான வரித்துறை சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் பதில் அளிக்கப்பட்டது. வருமான வரித்துறை துணை ஆணையர் ஜி.சோபா அந்த பதிலை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
ஐதராபாத், ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி முடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு வருமான வரித்துறை பதிலில் கூறப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன் வாதாடுகையில், ‘ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கியை தமிழக அரசு செலுத்தி விட்டால், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என்று கூறினார்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், கூறுகையில், ‘ஜெயலலிதாவின் சொத்து வரி மற்றும் வருமான வரிப் பாக்கியை தமிழக அரசு செலுத்த தயாராக உள்ளது’ என்றார்.
உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘ஜெயலலிதா என்ற தனி நபரின் வருமான வரி பாக்கியை தமிழக அரசு எப்படி செலுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்து கூறியதாவது:-
‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு மற்றும் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆர்ஜிதம் செய்யும். அப்போது அந்த சொத்துக்குரிய மதிப்பு தற்போதைய சந்தை மதிப்பீட்டு அளவில் கணக்கிடப்படும்.
அந்த தொகை ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு வழங்கப்படும். அந்த தொகையில் இருந்து இந்த வரியை தமிழக அரசு செலுத்தும்.
மேலும், போயஸ் கார்டன் வீட்டை தங்களுக்கு வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக் ஆகியோரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், வாரிசுகளான அவர்கள் வரி பாக்கியை செலுத்துவார்கள்’.
இவ்வாறு அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார்.
இதையடுத்து வருமான வரித்துறையின் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கூறியதாவது:-
1990 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் சொத்து வரி பாக்கி 2005-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலான வருமான வரி பாக்கித் தொகை மட்டுமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் வந்த நிதியாண்டில் அவர் வரி செலுத்தி விட்டாரா? என்று தெரியவில்லை. இந்த அறிக்கை அரைகுறையாக உள்ளது. எனவே, தெளிவான அறிக்கையை வருமான வரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல, தமிழக அரசும் இந்த வரி பாக்கி செலுத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #VedhaNilayam #Poesgarden #Jayalalithaa #MadrasHC
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
‘ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.10.13 கோடி சொத்து வரி, 6.62 கோடி வருமான வரி என மொத்தம் ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லம், ஐதராபாத் வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கடை உள்ளிட்ட 4 சொத்துக்களை முடக்கி வைத்துள்ளோம். இந்த வரி பாக்கியை செலுத்திவிட்டால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் எதுவும் இல்லை’ என வருமான வரித்துறை தனது மனுவில் கூறியுள்ளது. #VedaNilayam #HighCourt
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருந்தது.
டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது, ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வாரி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ரொக்கப்பணம், சில ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிட்ட ஆவணங்களும் சிக்கியது. இதன் அடிப்படையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அபிராமபுரம் போலீசாருக்கு, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவில், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.
ஆனால், குற்றம் சாட்டப்படுபவர்களின் பெயர்களை குறிப்பிடாமல், அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மருது கணேஷ், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், பிறருடைய வீடுகளிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்ததற்காக ஆதார ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.4.71 கோடி ரொக்கப்பணமும் கீழ் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் ரூ.3 லட்சமும், ஜெ.சீனிவாசனிடம் ரூ.3 லட்சமும், கல்பேஷ் எஸ்.ஷாவிடம் இருந்து ரூ.1 கோடி 10 லட்சமும், சாதிக் பாட்ஷாவிடம் இருந்து 6 லட்சமும், கார்த்திகேயனிடம் இருந்து ரூ.8 லட்சமும், ஆர்.சரத்குமாரிடம் இருந்து ரூ.11 லட்சமும், ஆர்.சின்னத் தம்பியிடம் இருந்து ரூ.20 லட்சமும், டாக்டர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.15 லட்சமும், நயினார் முகமதுவிடம் இருந்து ரூ.2 கோடியே 95 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்த பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. அது போன்று வெளியிடும் நடைமுறை இல்லை அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கப்பரிசு குறித்த விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RKNagarByelection #MadrasHC
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்பட பல்வேறு பொருட்களை ஒப்பந்த அடிப்படையிலும், ரேசன் கடைகளுக்கு பருப்பும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வினியோகம் செய்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் கிறிஸ்டி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு மற்றும் முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தது. போலி நிறுவனங்கள் தொடங்கி பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள் உள்பட 72 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாராசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர், ஆகியோர் வீடுகளிலும் 7 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அப்போதைய தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி வீட்டில் நடந்த சோதனையில் அவர் பதவிக்கு வந்த பிறகு பல மடங்கு சொத்து அதிகரித்தற்கான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் ஆண்டிபாளையம் எஸ்.பி.எஸ்.நகர் குடியிருப்பில் வைத்து கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரித்த போது அவர் மாடியில் இருந்து குதித்த தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த தகவல் படி திருச்செங்கோடு தேக்கவாடியில் உள்ள கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தநிலையில் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஆவணங்கள் மற்றும் பென் டிரைவ்களை தொடர்ந்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அப்போது சத்துணவு திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உயர் பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.2400 கோடி பணத்தை லஞ்சமாக கொடுத்தது தொடர்பான பட்டியல் அதில் இருந்தது.
வங்கிகளின் மூலமாகவும், ஆன்லைன் மூலமும் சிலருக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களும் இதில் சிக்கியுள்ளது. குறிப்பாக முக்கிய அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் டிரைவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் பெயரில் இந்த லஞ்சப்பணம் கைமாறி உள்ளதையும் வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
அரசியல் சத்துணவு திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவியும் உள்ளது. இதனால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. இதனால் சத்துணவு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடநத்திருப்பதை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்துள்ளனர்.
தற்போது லஞ்சப் பட்டியலில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் வருமான வரித்துறை சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விரைவில் வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் தமிழக அரசிடமும் விளக்கம் கேட்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி பணத்தை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பான பட்டியல் சிக்கியதால் அந்த வழக்கு தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தற்போது சத்துணவு திட்டத்திலும் முறைகேடு மற்றும் லஞ்சப்பட்டியல் சிக்கியுள்ளதால் இந்த வழக்கும் விரைவில் சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. இதனால் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பீதி அடைந்துள்ளனர். #Eggnutritioncorruption #ITRaid #ChristyFriedgramIndustry
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருந்தது. அ.தி.மு.க. அம்மா அணிக்கு சசிகலா தலைமை தாங்கி இருந்தார். இந்த அணி சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்பட்ட புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன் களத்தில் இருந்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணப்பட்டுவாடா நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நேரத்தில் தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்களும் செயல்பட்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு அமைச்சர்களே பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி மாநிலம் முழுவதும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. ரூ.89 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா செய்திருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க. அணிகள் இணைந்தும் மதுசூதனன் தோல்வியை தழுவினார்.
வருமான வரி துறையினர் சோதனை நடத்திய பிறகு இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அந்த பிரச்சினை அப்படியே அடங்கிப் போனது.
இந்த நிலையில் வருமான வரி துறையினர் தற்போது அது தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷனிடமும், தமிழக அரசிடமும் தாக்கல் செய்துள்ளனர். அதில் வருமான வரி சோதனையின் போது திரட்டப்பட்ட தகவல்கள், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆகியவை முழுமையாக இடம் பெற்றுள்ளன. வருமானவரி சோதனையில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் அறிக்கையில் உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, வருமான வரி சோதனையின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார். #RKNagar #RKNagarelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்