search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாமீன்"

    ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார். #NawazSharif #NawazBail #PMLNLeader
    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு (வயது 69), அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    இதனை சுட்டிக்காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் ஷெரீப்புக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கினர். பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஜாமீன் உத்தரவு லாகூர் சிறை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. சிறை நடைமுறைகள் முடிந்து நவாஸ் ஷெரீப் இன்று காலை சிறையில் இருந்து வெளியே வந்தார். 3 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு அவர் வெளியே வந்தார். அவரை வரவேற்க சிறை வாசல் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். நவாஸ் காரில் புறப்பட்டுச் சென்றபோது பூக்களை தூவி வரவேற்றனர்.



    சில தொண்டர்கள் நவாஸ் ஷெரீப்பின் கார் அவரது இல்லத்தை அடையும் வரை பின்தொடர்ந்து சென்றனர். வீட்டில் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் நவாஸை வரவேற்றனர். அவர் விரைவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NawazSharif #NawazBail #PMLNLeader

    மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவிக்கு, 11 மாதங்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்துள்ளார். #NirmalaDevi
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டதால் நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் மிரட்டி தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக நிர்மலா தேவி தெரிவித்திருந்தார்.

    முருகன், கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய, நிலையில், நிர்மலா தேவிக்கு கடந்த 12ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது.



    இதையடுத்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் ஜாமீன் பொறுப்பு ஏற்றனர். அத்துடன், தலா 10 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு பிரமாண பத்திரங்களை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, நிர்மலா தேவி, இன்று ஜாமீனில் விடுதலையானார்.

    சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிர்மலா தேவி, செய்தியாளர்களை சந்திக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
    பேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC
    புதுடெல்லி:

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையால் நிராகரிக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் பாலிநாரிமன், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் கடந்த டிசம்பர் 4-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பாலிநாரிமன், வினித்சரண் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

    விசாரணை தொடங்கியதும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே, இந்த இருவரும் கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனியும் அவர்களை சிறையில் அடைப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டனர். #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC

    நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

    இந்த நிலையில் நவாஸ் செரீப் வக்கீல் கவாஜா ஹாரீஸ் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 18-ந்தேதி நடைபெற உள்ளது. எனினும் “நவாஸ்செரீப்பின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதால் அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு இரவு 9 மணிக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விளக்கம் அளிக்கும்படி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்தவர் சுனந்தா. சேத்துப்பட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வேகமாக வந்த கார் மோதி பலியானார்.

    அந்த காரை ஓட்டி வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் இருவரை போலீசார் உடனடியாக கைது செய்யவில்லை. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து சுனந்தாவின் கணவர் சுரேந்திரன் நாயர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மாணவர்கள் இருவரும் குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த என் மனைவி, பல நாட்கள் சிகிச்சைக்கு பின் மரணமடைந்தார். அவர் உடல் நலத்தை பற்றித் தெரிந்துக் கொண்ட போலீசார், அவர் இறப்பதற்கு முதல் நாள் காரை ஓட்டியதாக ஒரு மாணவனை கைது செய்து, அவனை உடனடியாக ஜாமீனிலும் விடுவித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த விபத்து வழக்கின் புலன் விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்து, விசாரணையை ஜனவரி 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    இதையடுத்து காரை ஓட்டியதாக மாணவர்கள் கரண், மதன் ஆகியோர் மீது உள்நோக்கம் இல்லாமல் பிறரது மரணத்தை ஏற்படுத்துதல் என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் டிசம்பர் 18 மற்றும் 19-ந்தேதிகளில் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்ககோரி சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்கள் இருவருக்கும் கடந்த டிசம்பர் 21-ந்தேதி இரவு 9.15 மணிக்கு ஜாமீன் வழங்கினார். இந்த ஜாமீன் உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட்டு டிசம்பர் 22-ந்தேதி தடை விதித்தது.

    இந்த நிலையில், வக்கீல் சுனந்தாவின் கணவர் ஒரு மனு தாக்கல் செய்தார், அதில் “இந்த விபத்து வழக்கை ஐகோர்ட்டு கண்காணித்து வருகிறது என்று தெரிந்தும், சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் இரவு சுமார் 9.15 மணிக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்” என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கஜா மொய்தீன் கிஸ்தி ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரவு 9.15 மணிக்கு மாவட்ட நீதிபதி எப்படி ஜாமீன் வழங்கினார்? என்று கேள்வி எழுப்பினார்.

    ‘இரவு ஜாமீன் வழங்கியது குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி விளக்கம் அளித்து விரிவான மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #HighCourt
    இரண்டு கைதிகளை ஜாமீனில் விடுவித்த விவகாரத்தில் எழும்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #ChennaiHighCourt
    வழக்கறிஞர் சுனந்தா என்பவர் கடந்த அக்டோபர் மாதம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கார் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    அப்போது இருவருக்கும் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சுனந்தா கணவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் ஜாமீனுக்கு இடைக்கால தடைவிதித்தது. இதற்கிடையே இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

    இதனால் சுனந்தா கணவர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை என அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘‘எழும்பூர் மாஜிஸ்திரேட் மற்றும் சைதாப்பேட்டை கிளைச்சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் நாளை 2.15 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும்’’ என்று சம்மன் அனுப்பியுள்ளது.
    நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். #JanardhanaReddy #BriberyCase
    பெங்களூரு:

    பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக சையத் அகமது பரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையிலும் வழக்குப்பதிவாகி இருந்தது.

    அந்த வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்திடம் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக கடந்த 10-ந் தேதி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி ஆஜரானார். பின்னர் மறுநாள் (11-ந் தேதி) நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறி ஜனார்த்தனரெட்டியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஜனார்த்தனரெட்டி சார்பில், பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலையில் ஜனார்த்தனரெட்டியின் ஜாமீன் மனு நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரூ.2 லட்சம் பிணைத்தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரிக்கிறது. #NawazSharif #Summon #SupremeCourt
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்குகளில் சிக்கி தவிக்கிறார். அவரும் அவரது மகள் மரியம், மருமகன் கேப்டன் சப்தார், மகன்கள் ஹசன், உசேன் ஆகியோரும் ஊழல் செய்து குவித்த பணத்தில் லண்டன் அவென்பீல்டு பகுதியில் சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக ஊழல் தடுப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கலானது.



    இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப் மகன்கள் ஹசன், உசேன் ஆகியோர் விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாத நிலையில் அவர்கள் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

    நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் மீதான வழக்கை இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டு விசாரித்து, நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, மரியத்துக்கு 7 ஆண்டு, கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    அதையடுத்து அவர்கள் ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இருப்பினும், நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோர் தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களும், ஜாமீன் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அத்தார் மினல்லா, மியான்குல் ஹசன் அவுரங்கசீப், அவர்கள் 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தனர். அவர்களுக்கு ஜாமீனும் வழங்கினர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஆனால் அவர்களை ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்ததை எதிர்த்து ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    அந்த மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமர்வின் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அதை அவர்கள் விசாரணைக்கு ஏற்றனர்.

    மேலும் அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீனில் விடுவித்தது செல்லுமா என்பதுபற்றிய விசாரணையை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். முன்னதாக நடந்த முதற்கட்ட விசாரணையின்போது, நீதிபதிகளிடம் நவாஸ் ஷெரீப் தரப்பு வக்கீல் ஹாரிஸ், “நான் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகன் மீதான மேலும் இரு ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறேன். எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி போட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

    அதையடுத்துதான் விசாரணை அடுத்த மாதம் 12-ந் தேதிக்கு ஒத்தி போடப்பட்டது.

    அப்போது தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் வேடிக்கையாக, “எனக்கு உடல் நலம் சரியில்லை. இந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு நீங்கள் (ஹாரிஸ்) ஆஜராவதால்தான் எனக்கு படபடப்பு அதிகமாக இருக்கிறது என்று எனது டாக்டர்கள் சொல்கிறார்கள்”என குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து கோர்ட்டில் எல்லோரும் சிரித்து விட்டனர். எனவே, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மருமகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்தாகுமா என்பது அடுத்த மாதம் 12-ந் தேதி தெரிய வரலாம்.
    பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டதாக கூறினார். #Modi #SoniaGandhi #RahulGandhi #Demonetisation
    பிலாஸ்பூர்:

    கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.

    ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார். சத்தீஸ்காரின் பிலாஸ்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-



    பணமதிப்பு நீக்க நடவடிக்கையை குறைகூறுவது முட்டாள்தனமானது. ஏனெனில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் நாட்டில் இருந்த போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உள் ளன. அதன் விளைவாகத்தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும், ராகுல் காந்தியும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது.

    நாட்டின் வளர்ச்சிக்காகவே பா.ஜனதா பாடுபட்டு வருகிறது. இதனால் பா.ஜனதாவுடன் எப்படி போட்டியிடுவது? எனத்தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பி இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடக்கமும், முடிவும் ஒரே குடும்பம்தான். ஆனால் எங்கள் அரசியலோ ஏழைகளின் குடிசையில் தொடங்குகிறது.

    வாழ்வோ, சாவோ நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒரு தலைமையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெறவில்லை. அந்தவகையில் சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், தற்போதைய வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கும்.

    ஏழைகளுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயிலும், வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எவ்வளவு உண்மையுடன் கூறியிருக்கிறார்? அந்த மீதமுள்ள 85 பைசாவை உறிஞ்சுவது ‘கை’தான் (காங்கிரஸ் கட்சியின் சின்னம்).

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 
    குட்கா வழக்கில் கைதான அதிகாரிகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #Gutkha #CBI
    சென்னை:

    தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர்குப்தா ஆகியோர் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களது சட்டவிரோதமான செயலுக்கு உடந்தையாக இருந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே சி.பி.ஐ. கோர்ட்டிலும், சென்னை ஐகோர்ட்டிலும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், விசாரணை நீதிமன்றமான சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் செந்தில்முருகன், என்.கே.பாண்டியன் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும், தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Gutkha #CBI
    திருமங்கலம் அருகே ஜாமீனில் வந்த பெண் ரோட்டை கடக்க முயன்றபோது கார் மோதி பலியானார்.

    பேரையூர்:

    உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 54).

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து திருமங்கலம் போலீஸ் நிலைய காவலில் அடைக்கப்பட்டு இருந்த பாண்டியம்மாளை நேற்று போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

    இதனையடுத்து பாண்டியம்மாள் வீட்டுக்கு செல்வதற்காக திருமங்கலம்- கப்பலூர் இடையே உள்ள 4 வழிச்சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சேலம் மாவட்டம், ஆத்தூர், அரியமுத்து பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.

    திருப்பத்தூரில் பணம் கொடுக்க மறுத்த தந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஜெயா நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 65). ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இவரது மகன் ராஜ்குமார் (37). இவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டு அடிக்கடி தனது தந்தை மனோகரனிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி ராஜ்குமார் தனது தந்தையிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது மனோகரன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தனது தந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

    பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீசில் சரணடைந்தார். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிந்து கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் ராஜ்குமார் ஜாமீனில் வெளியேவந்தார்.

    அவரது வீட்டின் எதிரே உள்ள காசி என்பவரது வீட்டில் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்கி படித்து வருகின்றனர்.

    நேற்று அவர்கள் வெளியில் சென்ற நேரத்தில் ராஜ்குமார் அவர்களது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், மாலையில் மாணவர்கள் அறைக்கு வந்து பார்த்தபோது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இறந்த ராஜ்குமார் வேலூர் மத்திய சிறையில் சைக்கோ போல் செயல்பட்டு வந்ததால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் திருப்பத்தூர் பகுதிகளில் சைக்கோ போல் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாராம்.

    தற்போது தனது வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×