search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118697"

    • பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.
    • பக்தர்கள் திருப்பாவை, பக்தி சொற்பொழிவு நடத்தினர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் தற்போது திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோவிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர்.

    ஆரணி நகரில் சார்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை திருப்பாவை உற்சவத்துடன் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் அமர்ந்து திருப்பாவை, பக்தி சொற்பொழிவு நடத்தினர்.

    இதேபோல் தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும், கொசப்பாளையம் பகுதியில் உள்ள கில்லா சீனிவாச பெருமாள் கோவிலிலும், அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும், ஆரணி - ஆற்காடு சாலை இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் மார்கழி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட சீனிவாச பெருமாள் கோவில், சிவன் கோவில், காந்திதெரு வாசவி மகாலில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரசக்தி விநாயகர் கோவில், சக்தி விநாயகர் கோவில், வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் முத்தாலம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில், அய்யப்பசேவா சங்கம், மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    • கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • நாளை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    விழாவின் நிறைவாக கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகின்றது. மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றது. தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை மகாதீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். தொடர்ந்து வருகிற 6-ந்தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மகா தீப மை (தீப சுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப 'மை' பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது காட்சி அளிக்கும். இந்த நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. இந்த காற்றிலும் 2,668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • 16-ந் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    • 16-ந் தேதி வரை மகா தீபம் காட்சி அளிக்கும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து 7-ந் தேதி காலையில் இருந்து மறுநாள் 8-ந் தேதி காலை வரை பவுர்ணமி நீடித்ததால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. 7-ந் தேதி இரவு கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. நேற்று முன்தினம் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக அன்று காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் நடைபெற்றது. சாமி கிரிவலம் சென்று கோவிலை அடைந்த பின்னர் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து அய்யங்குளத்திற்கு வந்தார். பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்றது. அப்போது கடுமையான பனிப்பொழிவு இருந்தது. மக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் தெப்பல் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

    இன்று (சனிக்கிழமை) மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.

    கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் கடந்த 6-ந் தேதி ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும். அதன்படி வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மகா தீபம் காட்சி அளிக்கும். மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அதனால் வருகிற 16-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும்.
    • 6-ந்தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    திருவண்ணாமலையில் மகா தீபத்தையொட்டி 35 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி நடைபெற்ற தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்களும், கடந்த 6-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றப்பட்ட போது தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் தீபத்திருவிழா நடைபெற்றதால் கடந்த காலங்களை விட அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதன் அடிப்படையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட்டு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு முதன் முறையாக தீயணைப்பு துறை ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

    மேலும் 5 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு மாட வீதி மற்றும் கிரிவலப்பாதையில் உடனுக்குடன் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அரசு அலுவலர்கள் கொண்ட 96 குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தினசரி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிந்தனர்.

    மேலும் பக்தர்களின் வசதிக்காக கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பஸ்கள் 6 ஆயிரத்து 520 நடைகள் இயக்கப்பட்டு சுமார் 6 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்.

    கடந்த 5-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை 36 சிறப்பு ரெயில்கள் உட்பட 75 ரெயில்கள் இயக்கப்பட்டன. மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 85 மருத்துவ குழுக்கள் 680 மருத்துவர் மற்றும் மருத்துவர் சார்ந்த பணியாளர்களை கொண்டு சுழற்சி முறையில் செயல்பட்டன.

    இம்மருத்துவ முகாம்களில் சுமார் 7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர். இதில் ரூ.7 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான மாத்திரை, மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளது. 20 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்கள், 15 பைக் ஆம்புலன்ஸ் மற்றும் 5 மலையேறும் அவசர கால மருத்துவ குழுக்கள் செயல்பட்டு சுமார் 400 நபர்கள் வரை பயனடைந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 13 ஆயிரத்து 61 போலீசார் ஈடுபட்டனர். 500 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. 85 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டது.

    15 ஆயிரம் குழந்தைகளின் கைகளில் செல்போன் எழுதப்பட்ட டேக் கட்டப்பட்டது. இதன் மூலம் கூட்டத்தில் தொலைந்த 14 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு அரசால் செய்யப்பட்ட விழா ஏற்பாடுகளையும், வசதிகளையும் முறையாக பயன்படுத்தி ஒத்துழைப்பு அளித்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தர தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல்- அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத் துறை, சட்டமன்ற துணை சபாநாயகர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த நிகழ்வு ஆண்டிற்கு 2 முறை மட்டுமே நடைபெறும்.
    • பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 6-ந் தேதி மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

    கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 8.35 மணியளவில் தொடங்கி நேற்று காலை 9.33 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை வரை ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் பக்தர்களை போன்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிகழ்வு ஆண்டிற்கு 2 முறை மட்டுமே நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழா முடிந்து 2-வது நாளிலும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் நடக்கும் திருவூடல் முடிந்ததும் பக்தர்களை போன்று அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி கிரிவலம் வருவார்.

    அதன்படி நேற்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தார். அருணாசலேஸ்வரருடன், பராசக்தி அம்மனும், சின்னக்கடை வீதியில் உள்ள துர்கை அம்மனும், அடி அண்ணாமலை கிராமத்தில் ஆதி அருணாசலேஸ்வரரும் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அருணாசலேஸ்வரர் கிரிவலத்தையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் நேற்று பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழாவை தொடர்ந்து அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடந்தது. நேற்று இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடந்தது. அப்போது பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து அய்யங்குளத்திற்கு ஊர்வலமாக வந்து தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும், நாளை (சனிக்கிழமை) சண்டிகேஸ்வரர் வீதிஉலாவும் நடக்கிறது.

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது
    • அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்!!!

    * திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

    * நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

    ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.

    மூன்று இளையனார்!

    இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

    கோபுரம் அருகிலேயே பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

    காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

    திருவண்ணாமலை வரலாறு

    திருவண்ணாமலை மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சி அளிக்கிறார்.

    மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.

    இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது. சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்.

    ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர்.

    இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை.

    இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.

    ஒன்பது கோபுரங்கள்!

    கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

    சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

    கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

    மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

    திருவண்ணாமலை கோவில் கட்டமைப்பு

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது.

    கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோயிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கோயிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

    மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார். திருப்புகழ் ' என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அற்பணிக்கப்பட்டது.

    மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். இக்கோயிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக 5 பிரகாரங்கள் உள்ளன.

    இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலேசுவரரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவை வருமாறு:-

    திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜ கோபுரம். ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும்.

    இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும். குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள்.

    இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது. இங்கு சிவா லிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.

    இந்த பிரகாரத்தின்மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி. இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் கட்டினார். இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக முன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.

    முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும். மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறார். இந்த சன்னிதி கோபுரதில்லையனர் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.

    இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும். இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது. இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது. அதனால்தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது. இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார்.

    கோயிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது. இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.

    • ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.
    • இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தில் பவனி வருகிறார்.

    திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் நிறை வாக நடைபெறும் தெப் பல் உற்சவத்தின் 2ம் நாளான நேற்று அய்யங்கு ளத்தில் பராசக்தி அம் மன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து அருள்பாலித்தார்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் விமரிசையாக நடந்து வருகிறது. அதன் படி, தெப்பல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்தார்.

    அதைத்தொடர்ந்து, 2ம் நாளான நேற்று இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் பவனி வந்து பத்தர்களுக்கு அருள்பாலித் தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, இரவு 8 மணி அளவில், அண்ணாமலையார் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க பராசக்தி அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

    தெப்பத்தை முன்னிட்டு, அய்யங்குளத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இன்று இரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவத்தில் பவனி வருகிறார்.

    • மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.
    • தீப நெய் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாகும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில்மகாதீபம் ஏற்றப்பட்டது.

    மகாதீபம் ஏற்றுவதற்கு தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரை பயன்படுத்தப்பட்டது. தீப கொப்பரை, தீபத்திற்கு தேவையான நெய், திரி ஆகியவை கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மகா தீபம் ஏற்றுவதற்காக 4,500 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீப நெய் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாகும். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும்.

    கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.

    • திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடக்கிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 27-ந் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. பரணி தீபம் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலையிலும், மகா தீபம் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் உச்சியில் ஏற்றப்பட்டது.

    மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று முன்தினம் மாலையில் மகாதீபம் நிகழ்ச்சி முடிந்த பிறகு கோவிலில் கொடியிறக்கம் நடைபெற்றது. இதையடுத்து இரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் மர மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் மர நந்தி வாகனத்திலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்த படி வீதிஉலா வந்தனர். தொடர்ந்து விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    வழக்கமாக பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 8.35 மணியளவில் தொடங்கியது. இதனால் பவுர்ணமியையொட்டியும் நேற்று 2-ம் நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையில் இருந்தே தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் கோவிலை சுற்றியும், கிரிவலப்பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் ஏற்றப்படும். அதன்படி 2-ம் நாளான நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் மற்றும் கோவிலில் இருந்த பக்தர்கள் மகா தீபத்தை பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருகில் அய்யங்குளத் தெருவில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடக்கிறது. முதல் நாள் விழாவான நேற்று சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சந்திரசேகரரை வைத்து 3 முறை வலம் வந்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பர்வத ராஜகுலத்தினர் மட்டுமே மலை மீது ஏற வேண்டும்.
    • எல்லோரும் அதில் ஏறக் கூடாது.

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது, தீபம் ஏற்றும் பர்வத ராஜகுலத்தினர் மட்டுமே மலை மீது ஏற வேண்டும். அவ்வாறு தீபமேற்ற செல்வோர் உரிய விரதத்தை அனுஷ்டித்திருக்க வேண்டும்.

    எல்லோரும் அதில் ஏறக் கூடாது. திருவண்ணாமலை மலை சிவனின் வடிவமாக இருக்கிறது.

    அதன் மீது ஏறினால், சிவனையே மிதிப்பதற்கு ஒப்பாகும். இது மகாபாவமும் ஆகும். இந்த பாவத்திற்குப் பிராயச்சித்தமே கிடையாது.

    • புராணக் கதை ஒன்று திருவண்ணாமலைக்கு உண்டு.
    • இம்மலையின் உயரம் 2,688 அடி என்கிறது தல வரலாறு.

    கார்த்திகை திருநாளன்று அண்ணாமலையார் தீபம் மலையின் மீது ஏற்றப்படும். நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகிய ஐம்பூதங்களில் அக்னித் தலமான திரு அண்ணாமலையில் ஈஸ்வரன், அருணாசலேஸ்வரன் என்ற திருநாமம் கொண்டு சிறப்பாகக் காட்சி அளிக்கிறார். அம்பாள் திருநாமம் உண்ணாமுலை.

    புராணக் கதை ஒன்று இந்தத் திருவண்ணாமலைக்கு உண்டு. பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட, தானே பெரியவன் என்றார் சிவன். இதனை நிரூபிக்க, நெருப்புக் கோளமாய் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்தார் சிவன். தனது அடியையோ முடியையோ கண்டுவிட்டால் அவரே உயர்ந்தவர் என்றாராம் சிவன். ஜூவாலையின் அடி தேடிப் போனாராம் விஷ்ணு.

    முடி தேடிப் போனாராம் பிரம்மா. சிவன் தலையில் இருந்த தாழம்பூ விழ, அதனைப் பொய் சாட்சியாக்கினாராம் பிரம்மா. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மனுக்குக் கோயில் கிடையாது எனச் சாபமிட்டாராம். பொய் சாட்சி கூறிய தாழம்பூ சிவனுக்குப் படைக்கத் தகுதி இழந்தது. அந்த ஜூவாலை தோன்றிய இடமே திருவண்ணாமலை என்கிறது தலப் புராணம். ஆண்டுக்கு ஒரு முறை மலையின் உச்சியில் வெட்டவெளியில் ஏற்றப்படும் தீபம், எந்தப் புயல், மழை, காற்றுக்கும் அணையாது என்பது நிதர்சனம்.

    மனநலம்

    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் தீபத்தன்று அதனை மிகுந்த விசேஷமாகக் கருதுகின்றனர். திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகக் கருதப்படுவதால் மலைவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காகும். அருணன் என்றால் சூரியன், நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையின் உயரம் 2,688 அடி என்கிறது தல வரலாறு. அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது என்று மேலும் தெரிவிக்கிறது அத்திருத்தல வரலாறு.

    கிரிவலப் பாதையில் எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டலிங்கங்கள், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை ஆகும். இந்த மலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர்.

    இம்மலையில் இன்றும் பல சித்தர்கள், யோகிகள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுவதால், பவுர்ணமியன்று கிரிவலம் வருவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பது ஐதீகம். வலம் வரும்போது, கையில் கத்தையாக ஊதுவத்தி ஏற்றி எடுத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்படும் சித்தர்களுக்கு, இந்த வாசனைப் புகையை அர்ப்பணிக்க முடியும். நிலவின் குளிர் கதிருடன், காற்றில் கலந்து வரும் மூலிகையின் மணம் மனத்திண்மையை அளித்துக் காரிய வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாக நம்புவதால், பக்தர்கள் கிரிவலம் செய்ய வருகிறார்கள்.

    ×