search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர்"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami
    சென்னை:

    பாஜகவின் பிதாமகன் என அழைக்கப்படும், வாஜ்பாய் வாழும்போதே பாரத ரத்னா வாங்கிய தனி பெரும் சிறப்புக்கு சொந்தக்காரர். இவர் தனது 93-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனயில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.

    வயது மூப்பின் காரணமாக சிகிச்சைகள் ஏதும் பலனளிக்காமல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று (16.8.18) மாலை காலமானார். இவரது இறப்புக்கு பல்வேறு தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வாஜ்பாயின் மறைவு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.



    இதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு என தெரிவித்துள்ளார். இவர் உட்பட, டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    வலிமையான தலைவரையும், நல்ல மனிதரையும் நாடு இழந்துவிட்டதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #BanwarilalPurohit #TN #CMPalaniswami
    தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியும், தெலுங்கானா முதல்மந்திரியும் நல்ல திட்டங்களை தலைகீழாக மாற்றிவிட்டதாக விமர்சித்துள்ளார். #RahulGandhi #Modi #Telangana
    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுப்படுத்த அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு வழிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று தெலுங்கானா மாநிலத்தில், இளைஞர்களின் பெருந்திரள் கூட்டத்தின் நடுவே ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அந்த உரையில், உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    மோடியும், சந்திர சேகர் ராவும், முன்னேற்ற கனவுகள் குறித்து பேசி வருகிறார்கள் ஆனால், தெலுங்கானாவில் புதிய வரி விதிப்பும், போலீஸ் ராஜ்ஜியமும் மட்டுமே நடப்பதாகவும், பொதுமக்கள் பேச கூட அனுமதிக்கபடுவது இல்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.



    மேலும், தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன்பே மக்களுக்கு இருந்த அனைத்து கனவுகளும் நிறைவேற்றப்படாமல் போனதற்கு முதல்மந்திரியின் குடும்பத்தினரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே நாடு ஒரே வரி எனும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அன்றாட உபயோக பொருட்கள் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.



    இதையடுத்து, பிரதமர் மோடியைப் போலவே தெலுங்கானா முதல்மந்திரியும் பொய் வாக்குறுதிகளை மட்டும் அளித்துவருவதாகவும், ஊழல் தலைநகராக தெலுங்கான மாறிவிட்டதற்கு முதல்மந்திரியின் குடும்ப அரசியலே காரணம் எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

    மேலும், ரபேல் திட்டத்தை தலைகீழாக மாற்றியதன் மூலம், மோடி தனது நண்பர் அனில் அம்பானிக்கு பல லட்சம் கோடிகளை பரிசாக வழங்குகிறார் என்றும், இதேபோல், காங்கிரஸ் அரசால் 38 ஆயிரம் கோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தெலுங்கானா நீர்ப்பாசன திட்டத்தை தற்போது 1 லட்சம் கோடி ரூபாய்க்கு முதல்மந்திரி மாற்றியுள்ளதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். #RahulGandhi #Modi #Telangana
    உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாம் என முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். #IndiraBanerjee #MadrasHighCourt
    சென்னை:

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது. விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘உயர்நீதிமன்றத்தில் நடக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாம் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். நிதி ஒதுக்குவது நிறுத்தப்படாது என முதல்வர் நம்பிக்கையுடன் உறுதியளித்தார். யாரிடமும் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்காத நான், இதற்காக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்” என்றார்.



    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை  சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

    கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #MadrasHighCourt
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இன்று நேரில் பார்த்து, அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் விசாரித்தனர். #KarunanidhiHealth #EdappadiPalaniswamy #OPS
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர்.



    அவ்வகையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று நேரில் பார்த்தார். பின்னர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார். மேலும், கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், காமராஜ், சி.வி.சண்முகம் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் விசாரித்தனர்.

    பின்னர் வெளியே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு நேரில் சென்று பார்த்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.

    நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு, பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பின்னர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மருத்துவனையில் இருந்து வெளியேறினர். இதனால் காவேரி மருத்துவமனை அருகில் குவிந்திருந்த தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #KarunanidhiHealth #EdappadiPalaniswamy #OPS
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNassembly
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும் மற்றும் சமூகத் தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத் தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்படும்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக் கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டு தோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

    ஆங்கில மொழி அறிஞர்கள், ஆங்கில மொழிச் சொற்களை தொகுத்தல் முறையில் அணியமாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, “சொற்குவை” என்ற திட்டம் தொடங்கப்படும்.

    அவை இணையதளப் பொது வெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர் களும், மொழியியல் ஆராய்ச்சி யாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்கென ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் (எம்.ஏ.) பயிலும் மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில், இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் தேர்வின் அடிப்படையில் முதலாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள் என மொத்தம் 30 மாணவர்களுக்கு மாதந் தோறும் கல்வி உதவித்தொகையாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #MGRStudyChair
    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த சவுந்திரபாண்டி, முத்துலட்சுமி, தேனி மாவட்டம் தாடிச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார், புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் பத்மா, புதுக்கோட்டை மாவட்டம் எல்.என்.புரத்தைச் சேர்ந்த கார்த்திக்கேயன், கோவை மாவட்டம் ஊஞ்சவேலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிங்கராஜ் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    நெல்லை மாவட்டம் அடங்கார்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.இலியாஸ் கடலில் மூழ்கிய வேறு ஒரு நபரை காப்பாற்ற முற்பட்டபோது உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் நம்பிவயல் கிராமத்தைச் சேர்ந்த விஜயசாந்தி தீ விபத்தில் உயிரிழந்தார்.

    காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம் நகரைச் சேர்ந்த கவுதம் தரைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

    கோயம்புத்தூர் மாவட்டம் அட்டகட்டி பகுதியைச் சேர்ந்த மோனிகா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சென்னை சேலம் இடையேயான பசுமைவழிச் சாலை தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று பதிலளித்தார். #greenwayroad #CM #TNassembly
    சென்னை:

    சென்னை - சேலம் இடையே மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

    காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த திட்டத்தால் ஏராளமான விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்த திட்டத்துக்கு சுமார் 150 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இது பற்றி கேள்வி எழுப்பினார். மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இந்த பிரச்சினை பற்றி முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    இதற்கிடையே மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியசாமியும் எழுந்து இந்த திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.



    இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவு சாலை திட்டம் பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    'கடந்த 25.2.2018 அன்று, மத்திய அரசின் “பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின்” கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சிபுரத்தில் (59.1 கி.மீ.), திருவண்ணாமலையில் (123.9 கி.மீ.), கிருஷ்ணகிரியில் (2 கி.மீ.), தருமபுரியில் (56 கி.மீ.) மற்றும் சேலத்தில் (36.3 கி.மீ.) ஆகிய மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளதுடன், இவ்வழிப்பாதைக்கு சேலம் முதல் அரூர் வரை என்.எச். 179ஏ என்றும், அரூர் முதல் சென்னை வரை என்.எச். 179பி என்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தற்போதுள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வழியாக சுமார் 360 கிலோமீட்டர் அல்லது சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் ஆத்தூர் வழியாக சுமார் 350 கிலோமீட்டர் பயணித்து சேலம் செல்ல வேண்டும். தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்தால் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாகும்.

    தற்போது, இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதன் கொள்ளளவை விட 130 சதவிகிதம் மற்றும் 160 சதவிகிதம் அதிகமாக போக்குவரத்து செறிவு உள்ள காரணத்தினால், இச்சாலைகளில் விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெறுகின்றன.

    இன்னும் 15 வருடங்களில், இவ்விரு தேசிய நெடுஞ்சாலைகளிலும், போக்குவரத்தானது 1,50,000 அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு சாலைகளையும் விரிவுபடுத்தினால், போக்குவரத்து செறிவு 60 ஆயிரம் பி.சி.யூ.விலிருந்து 1 லட்சம் பி.சி.யூ. வரை மட்டுமே அதிகப்படுத்தலாம்.

    ஆனால், இந்த புதிய எட்டு வழிச்சாலையின் போக்குவரத்து கொள்ளளவு 80,000 போக்குவரத்து செறிவு ( பி.சி.யூ.) ஆக இருந்தாலும், இச்சாலையானது விரைவு நெடுஞ்சாலையாக உள்ளதால், இதன் போக்குவரத்து கொள்ளளவு 1,50,000 போக்குவரத்து செறிவு ஆகும். எனவே, தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளின் 1 லட்சம் பி.சி.யூ.உடன் சேர்த்து 2 லட்சத்து 50 ஆயிரம் பி.சி.யூ. கொள்ளளவு பயன்பாட்டிற்கு வரும். இதனால், விபத்துக்கள் பெருமளவு குறையும். அதே நேரத்தில், பெருகிவரும் போக்குவரத்து செறிவையும் தாங்கி பயன் அளிக்கும்.

    இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், இத்திட்டத்தினால் காடுகளிலுள்ள மரங்கள் அழிக்கப்படும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலை கல்வராயன் மலை ஆகியவற்றிலிருந்து கனிம வளங்கள் சுரண்டப்படும் என்றும், விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி, சில அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் மற்றும் சில இடதுசாரி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்தச் சாலையின் நேர்பாடு, குறைவான வனப்பகுதியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கு எடுக்கப்படும் வன நிலத்திற்கு ஈடாக, இரு மடங்கு அரசு புறம்போக்கு நிலம், மாவட்ட நிர்வாகத்தினரால் நில மாற்றம் செய்து, வனத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 2 மடங்காக காடு வளர்க்கப்படும்.

    இச்சாலையினால் சுமார் 10,000-க்கும் குறைவான மரங்கள் வெட்டப்பட உள்ளன. எனினும், இந்த விரைவுச் சாலையில் இரு மருங்கிலும் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.

    இப்பெருவழிச் சாலை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை அளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    2.5.2018 அன்று சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரம் என்ற இடத்தில் நிலங்களை அளப்பதை சிலர் தடுத்ததினால், காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்த்தனர்.

    திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும், நிலங்களை அளப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 1.5.2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இச்சாலையைப்பற்றி தேவையற்ற சந்தேகங்களைப் போக்கவும், சரியான விவரங்களை பொதுமக்களுக்கு கொடுக்கவும் நான் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    தற்போதுள்ள சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துவதை விட, இந்த 8 வழி விரைவுச்சாலை திட்டத்தினால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவும், பயன்கள் அதிகமாகவும் இருப்பதால், இத்திட்டத்தினை செயல்படுத்துவது அவசியமாகும். எனவே, பொதுமக்களும், அமைப்புகளும் உண்மை நிலையினை அறிந்து, எதிர்ப்பினை கைவிட்டு, திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, கொடுத்த இழப்பீட்டை விட தற்போது அதிகமாகவே இழப்பீடு தொகை வழங்குகிறோம். உதாரணத்துக்கு 2007-08-ம் ஆண்டு சேலம் அயோத்தியா பட்டிணத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது.

    தற்போது ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. காங்கிரீட் வீடுகளுக்கு சதுர அடிக்கு முன்பு ரூ.100 வழங்கப்பட்டது. தற்போது ரூ.340 என்று கணக்கிட்டு வழங்குகிறோம்.

    ஓட்டு வீடுகளுக்கு முன்பு சதுர அடிக்கு ரூ.60 வழங்கப்பட்டது. தற்போது ரூ.200 வழங்குகிறோம். ஒரு தென்னை மரத்துக்கு முன்பு இழப்பீடாக ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம் கொடுக்கிறோம். இந்த 8 வழிச்சாலை அமைப்பதால் விபத்துகள் வெகுவாக குறையும். பல மாவட்டங்களில், தொழிற்சாலைகள் வளர்ச்சி அடையும்.

    இந்த திட்டத்தால் அதிக நிலம், வீடுகளை எடுப்பதாக தகவல் பரப்புகிறார்கள். அது தவறு குறைந்த அளவு வீடுகளையே எடுக்கிறோம். நான் சேலத்தில் இருப்பதால் 8 வழிச் சாலை அமைக்கும் வி‌ஷயத்தில் என் மீது குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்கள். எனவே இந்த திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்'.

    இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    பிரம்மா குமாரிகள் இயக்கம் நடத்தும் இளைஞர் பேரணியை சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். #brammahkumaarigal #youngstersrally #chennai
    சென்னை:

    பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பில் ‘எனது பாரதம் பொன்னான பாரதம்’ என்ற தலைப்பில் அகில இந்திய அளவிலான இளைஞர் பேரணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு வரை பேருந்து மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணியை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பேரணியில் தூய்மை, யோகா மூலமாக அறநெறியை பேணி காக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்ட இயக்கத்தினர் இன்று முதல் சென்னையின் பல்வேறு இடங்களிலும், நிறுவனங்களிலும், சொற்பொழிவு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.

    இதையடுத்து, இன்று காலை 9 மணியளவில் சென்னையில் தங்களது பேரணியை துவக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று மற்றும் நாளை இந்த பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #brammahkumaarigal #youngstersrally #chennai
    நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #NeetKillsPradeepa #BanNEET #ReliefPradeepaFamily #TNAssembly
    சென்னை:

    மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். நீட் தேர்வை தமிழில் 24 ஆயிரத்து 720 பேர் எழுதினார்கள். அவ்வாறு தமிழில் தேர்வு எழுதிய விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவி பிரதீபா பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    கடந்த ஆண்டு நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காததால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய அவருக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தது. கடந்த ஆண்டு பெற்ற 155 மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் கிடைத்ததால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



    கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்த ஆண்டு மாணவி பிரதீபாவின் மரணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி விஷம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும்  நீட் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசியபோது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், தேர்வுகளில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலை போன்ற தவறான முடிவுகளை மாணவர்கள் யாரும் எடுக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். #NeetKillsPradeepa #BanNEET #ReliefPradeepaFamily #TNAssembly
    காங்கிரஸ் தயவில் கர்நாடகாவில் ஆட்சியமைத்துள்ள குமாரசாமி, 5 ஆண்டுகளும் முதல்வராக இருக்க காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதையடுத்து நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. #KumaraSwamy #Karnataka #congress
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து ஒரு வாரம் ஆகியும் மந்திரிகள் பதவி ஏற்கவில்லை.

    முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது மற்றும் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கீடு என காங்கிரஸ் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. இதில் முதல்-மந்திரி பதவியை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை, தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பேன் என்று குமாரசாமி பிடிவாதமாக மறுத்து விட்டார்.

    இதேபோல் காங்கிரஸ் தங்களுக்கு நிதி, நீர்ப்பாசனம், உள்துறை போன்ற முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று கேட்டது. இதற்கும் குமாரசாமி மறுத்து விட்டார். இதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் மாநில தலைவர்கள் முறையிட்டனர்.



    என்றாலும் இழுபறி நீடித்தது. வேறு வழியில்லாமல் காங்கிரஸ் இதில் பணிந்து விட்டது. காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை மனதில் வைத்து புதிய சமரச திட்டத்தை தெரிவித்தனர். அதன்படி மாநிலத்தில் குமாரசாமி முதல்-மந்திரியாக நீடித்தால், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஜே.டி.எஸ். கட்சி போட்டியிட வேண்டும் என்று தெரிவித்தது.

    முதலில் தயங்கிய குமாரசாமி பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின் சமரசம் ஆனார். முதல்-மந்திரி பதவியில் 5 ஆண்டு நீடிப்பது தொடர்பான உறுதிமொழி ஒப்பந்தத்தை எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும் என்று குமாரசாமி கேட்டார். அதற்கும் காங்கிரஸ் சம்மதித்தது. இது மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவரும் பொதுச்செயலாளருமான கே.சி.வேணுகோபால் நேற்று பெங்களூர் வந்து மாநில தலைவர்களை சந்தித்து பேசி சமாதானப்படுத்தினார். 5 சுற்று பேச்சுவார்த்தைக்குப்பின் சமாதானம் அடைந்தனர்.

    அதன்பிறகு குமாரசாமியையும் கே.சி.வேணுகோபால் சந்தித்துப் பேசினார். காங்கிரசின் உத்தரவாதத்தை நேரில் அளித்தார். இதையடுத்து காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி உடன்பாடு பற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதன் பிறகு ஓரிரு நாட்களில் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. #KumaraSwamy #Karnataka #congress

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் காவல்துறையை காவிமயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #sterliteprotest #bansterlite #stalin
    மதுரை:

    திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்காதது வெட்கக்கேடானது. மோடி வெளிநாட்டு பிரதமரா? என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று சந்தித்தது கபடநாடகம். காவல்துறையை காவிமயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகுவதே தமிழக மக்களுக்கு பாதுகாப்பு எனவும் அவர் குறிப்பிட்டார். #sterliteprotest #bansterlite #stalin
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring
    சென்னை:

    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.



    ம.தி.மு.க. தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவு பெற்று 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மே 67-ம் தேதி வரை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்பை எதிர்த்து, ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பக்கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

    தூத்துக்குடி படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். வால்மார்ட் இணைய வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring

    ×