search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஎஸ்இ"

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கி, தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது. புதிய புத்தகம் அச்சிடப்படுகிறது.
    புதுடெல்லி:

    மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளின் பாடத்திட்டத்தை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு தயாரிக்கிறது.

    இவ்வாறு தயாரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘சாதி முரண்பாடு ஆடை விவகாரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன.

    இதற்கு நாடார் சமுதாயம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட அந்த தவறான தகவல்களை நீக்க வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

    போராட்டமும் நடத்தப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

    இதற்கிடையே, சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சைக்குரிய பகுதி, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டது.

    அதன்படி, மேற்படி பாடத்தில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை முற்றிலும் நீக்கம் செய்து, புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இந்த பாடத்துடன் கிரிக்கெட் உள்ளிட்ட மேலும் சில பாடங்கள் என மொத்தம் 70 பக்கங்கள் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
    நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில், தேர்வு குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. #CBSEClass12Exam #CBSE
    சென்னை:

    சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்தியா முழுவதும் அங்கீகாரம் பெற்ற 21 ஆயிரத்து 400 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 4 ஆயிரத்து 974 மையங்களிலும், அங்கீகாரம் பெற்று வெளிநாடுகளில் இயங்கும் 225 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 78 மையங்களிலும் தேர்வு எழுதுகிறார்கள். இந்தியாவில் 4,974 தேர்வு மையங்களில் 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு கேள்வித்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.



    தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் மற்றும் பள்ளியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை கட்டாயம் தேர்வு அறைக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டது. இந்த அடையாள அட்டைகள் இன்றி வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பேனாக்கள் மற்றும் அடிப்படை உபகரணங்களை மட்டுமே தேர்வு அறைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பென்சில் பாக்ஸ் கொண்டு செல்லலாம் ஆனால் அதில் எதுவும் எழுதியிருக்கக்கூடாது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மட்டும், நொறுக்குத்தீனி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. அனைவரும் தண்ணீர் பாட்டில்களை வெளிப்படையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    செல்போன், புளூடூத் ஸ்பீக்கர், ஹெட்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், ஹெல்த் பேண்டு உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் எதையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பிரிண்டிங் செய்யப்பட்ட மற்றும் கைப்பட எழுதப்பட்ட எந்த பொருளுக்கும் அனுமதி இல்லை. சிப்ஸ், குளிர்பானம், பிஸ்கட் உள்ளிட்ட பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகளை மீறும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் தவறான மற்றும் பொய் செய்திகளை மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம். அவ்வாறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திருப்பதி தெரிவித்துள்ளார்.

    அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 21-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேர்வினை 4,974 மையங்களில் 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள் எழுதுகின்றனர்.

    தேர்வு பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை கடந்த ஆண்டை விட ஒருவாரம் முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளது. #CBSEClass12Exam #CBSE
    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. #CBSE #ExamDate
    சென்னை:

    மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று அதிகாரப்பூர்வமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டுத் தேர்வுகள் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. 

    இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிகின்றன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #CBSE #ExamDate
    சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய தவறான செய்தியை நீக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் அமைப்புகள் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய தவறான செய்தியை நீக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் அமைப்புகள் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் தி.நகர் ஹரிநாடார் தலைமை தாங்கினார். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மண் பாண்ட சங்க தலைவர் சே.ம. நாராயணன், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் பேசிய தலைவர்கள் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய அவதூறு செய்திகளை முழுமையாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    உண்ணாவிரதத்தில் த.மா.கா. பொருளாளர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, கொட்டிவாக்கம் முருகன், மனோகரன், சென்னை நாடார் சங்க தலைவர் கரண்சிங் நாடார், அம்பத்தூர் விஜயகுமார், புழல் தர்மராஜ், கே.சி.ராஜா, ராகம் சவுந்தரபாண்டியன், மயூரா, டாக்டர் ஜெமிலா, சிலம்பு சுரேஷ், சாத்தான் குளம் முன்னாள் சேர்மன் ஆனந்தராஜ், சத்ரிய பெருமாள், மால் மருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சி.பி.எஸ்.சி. பாடத்தில் நாடார் பற்றிய பொய் செய்திகளை வரும் கல்வி ஆண்டில் மத்திய அரசு நீக்க வேண்டும்.

    ஆன்மிகம், கல்வி, விளையாட்டு, இதழியல் துறையில் பல சாதனைகள் படைத்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சேவையை போற்றும் வகையில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    சென்னையில் இருந்து திருச்செந்தூர் பகுதிக்கு குலசை எக்ஸ்பிரஸ் எனும் புதிய ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாது மணல் தொழிற் சாலைகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கிட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    துபாயிலுள்ள கல்வி நிறுவனத்திற்கு ஆங்கில வழியில் படித்து சிபிஎஸ்இ பள்ளியில் பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் கலெக்டர் கூறியுள்ளார்.
    ராமநாதபுரம்:

    அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் துபாயிலுள்ள கல்வி நிறுவனத்திற்கு ஆங்கில வழியில் படித்து சி.பி.எஸ்.இ. பள்ளியில் பணி அனுபவம் பெற்ற பிரின்சிபால், சீனியர், ஜுனியர் பள்ளி மேற்பார்வையாளர், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், பெண் இஸ்லாமிய ஆசிரியர் தேவைப்படுகிறார்கள்.

    கல்வித்தகுதி மற்றும் விவரங்கள் நிறுவன வலைதளத்தில் WWW.omc-manpower.com அறிந்து கொள்ளலாம்.

    பிரின்சிபால் மாத ஊதியம் ரூ.3 லட்சம், சீனியர், ஜுனியர் பள்ளி மேற்பார்வையாளர் மாத ஊதியம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், பெண் இஸ்லாமிய ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வழங்கப்படும்.

    தகுதி மற்றும் விருப்பமிருப்பின், சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் 2 புகைப்படத்துடன் omcre-sum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். #tamilnews
    சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் தவறை திருத்தாமல் நாடார்களை இழிவுப்படுத்தும் வாசகங்கள் நீடிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #cbse

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் 9-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடநூலின் 8-வது பாடமாக ‘ஆடைகள்: ஒரு சமூக வரலாறு’ இடம் பெற்றுள்ளது. அதில், 168-வது பக்கத்தில் ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள்; நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகு காலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று மீண்டும், மீண்டும் குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயல் ஆகும்.

    நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அந்த பாடத்தை சி.பி.எஸ்.இ நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 6 ஆண்டுகளுக்கு முன் 25.10.2012 அன்று அறிக்கை விடுத்தேன். அதுமட்டுமின்றி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    அவ்வழக்கில் 16.11.2016 அன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கும்படி ஆணையிட்டது. அதன்படி அந்த பாடம் நீக்கப்படும் என்று 19.12.2016 அன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    ஆனால், அந்தப் பாடமோ அல்லது அந்தப் பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதிகளோ நீக்கப்படவில்லை. மாறாக சில வார்த்தைகள் மட்டும் திருத்தப்பட்டுள்ளன. அந்தப் பாடத்தில் ஏற்கனவே இருந்த நாடார்கள் பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்தவர்கள், அவர்கள் கள் இறக்கும் சமுதாயத்தினர் என்ற இரு பகுதிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

    அதேநேரத்தில் மலையாள நாயர்கள் கன்னியாகுமரி பகுதியின் பூர்வகுடிகள் அல்ல.... அவர்கள் பிழைப்பு தேடித்தான் குமரி மாவட்டத்தில் குடியேறினர் என்ற உண்மை பதிவு செய்யப்படவில்லை. இப்போதும் அந்தப் பாடத்தைப் படித்தால் மலையாள நாயர்களுக்கு நாடார்கள் அடிமைகளாக இருந்தது போன்ற தோற்றம் ஏற்படும் வகையில் வார்த்தைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

    மலையாள நாயர்கள் உயர் சாதியினர் என பழைய பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது இப்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த பாடத்தில் நாடார்கள் கீழ் சாதியினர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவை அனைத்தும் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வி‌ஷமச் செயல்களாகும்.

    அதேபோல், நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக அவர்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதனால் அவர்களுக்கு ஆடை அணியும் உரிமை கிடைத்ததாகவும் பாடத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அடக்குமுறைக்கு எதிராக அய்யா வைகுந்தர் 1936ஆம் ஆண்டிலிருந்து தாம் மறையும் வரை போராட்டம் நடத்தியதன் பயனாகவே நாடார் சமுதாயப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை வழங்கப்பட்டது என்பதால், உண்மையான வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.

    ஆனால், ஆடை சீர்திருத்தத்தில் அய்யா வைகுந்தர் போன்ற இந்து சீர்திருத்தவாதிகளும் பங்கேற்றனர் என்ற அரை வரியை மட்டும் புதிதாக சேர்த்துள்ள பாடநூல் ஆசிரியர்கள், வேறு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது சகோதரர்களாக வாழும் இந்து, கிறித்தவ நாடார் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. இதுவும் உள்நோக்கம் கொண்ட வி‌ஷமத்தனம் ஆகும்.

    இதை ஏற்க முடியாது. ஏற்கனவே உறுதியளித்தவாறு நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற பிரிவு முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #cbse

    2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற மத்திய அரசு உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் அனைத்து மாநில பள்ளி கல்வித்துறை செயலாளர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் 1 முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்களை போதிக்கின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிகளை மீறி, வீட்டுப்பாடங்களை கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அதேபோல, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு உத்தரவுப்படி 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் 2 முறை சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் கூறினார்.

    ஆனால் இதனை அமல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சார்பில் கோரப்பட்டது.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘இந்த உத்தரவை செயல்படுத்த ஏற்கனவே போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வருகிற 17-ந்தேதிக்குள் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிகல்வி துறை செயலாளர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தார். வழக்கு விசாரணையையும் 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
    நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. #NEET #CBSE
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 24 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இதில் தமிழ் வினாத்தாளில் மொழி பெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதை தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு “நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் கருணையாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதோடு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவ கவுன்சிலிங் நடத்தவும் உத்தரவிட்டது.

    மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ்.இ. சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் நீட் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் இது தொடர்பாக கூறப்பட்டு இருப்பதாவது:-


    நீட் தேர்வில் அளிக்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்களே காரணம். தமிழக அரசு பரிந்துரை செய்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர்.

    மேலும் 554 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 196 மார்க் கருணை மதிப்பெண்ணாக வழங்கினால் அவரது மொத்த மதிப்பெண் 750 ஆக உயரும்.

    மொத்த மதிப்பெண்ணே 720 தான் என்ற நிலையில் கருணை மதிப்பெண்ணாக தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் எப்படி தர முடியும்? கருணை மதிப்பெண்ணால் குழப்பம் மட்டுமே ஏற்படும்.

    இவ்வாறு சி.பி.எஸ்.இ. தனது மனுவில் தெரிவித்துள்ளது.

    சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

    இதேபோல மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக மாணவர் சத்யா தாக்கல் செய்த மனு மீதும் நாளை விசாரணை நடைபெறும். #NEET #CBSE
    தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமையன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது.
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கடந்த 10-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், ‘மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.


    ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று  சிபிஎஸ்இ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட்,  வரும் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்து உள்ளது. மாணவர் சத்யா தேவர் தொடர்ந்த வழக்கையும் 20 ஆம் தேதியே விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த மாணவர் சத்யா தேவர், தான் ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும் தனக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாகவும், ஐகோர்ட்டு உத்தரவால் தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே கல்லூரியில் ஒதுக்கீடு நீடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #NEETGraceMarks #CBSEAppeal
    தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கவேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம்கோர்ட்டில் நாளை அப்பீல் மனு தாக்கல் செய்யவுள்ளது. #NEET #CBSE
    சென்னை:

    மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் மொழி மாற்றம் செய்து கேட்கப்பட்ட கேள்விகளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

    நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு விட்ட நிலையில் சில மாநிலங்கள் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டன. சில மாநிலங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழில் நீட் தேர்வு எழுதிய சுமார் 24,700 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட்டு இருப்பது சி.பி.எஸ்.இ. அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சட்ட நிபுணர்களுடனும் கலந்து ஆலோசித்தனர். அப்போது சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுகுவது என்று விவாதித்து முடிவுகள் எடுத்துள்ளனர்.

    அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்ய சி.பி.எஸ்.இ. நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தற்போது சி.பி.எஸ்.இ. அதிகாரிகள், மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார்கள். அந்த அமைச்சகம் அனுமதி அளித்ததும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அப்பீல் மனுவை தாக்கல் செய்யும்.

    இதற்கிடையே மருத்துவ கவுன்சிலிங்கை நடத்தி வரும் சுகாதாரத்துறையிடம் மனிதவள அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அப்பீல் செய்யப்படும் நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நாளை (வெள்ளிக்கிழமை) சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படும் என்று தெரிகிறது.


    சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தனது அப்பீல் மனுவில் 2018-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு குறிப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்ட திட்டமிட்டுள்ளது. அந்த தகவல் தொகுப்பில், ‘‘மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 மொழிகளில் வினா புத்தகம் வழங்கப்படும். ஒன்று மாநில மொழியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும்.

    மாநில மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு, கேள்வி மொழி மாற்றத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆங்கிலத்தில் உள்ளதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் இறுதியானதாக கருதப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தகவல் குறிப்பை சுட்டிக்காட்டி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுக்கு தடை கேட்க சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு போட்டு தீர்ப்பைப் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரும், மேல்சபை எம்.பி.யுமான டி.கே.ரெங்கராஜன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    எனவே இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டால் உடனடியாக தீர்ப்பை வெளியிட இயலாது என்று கூறப்படுகிறது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட முடியும். அந்த தீர்ப்பு வருவதற்குள் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவ கவுன்சிலிங் முடிந்து விடும்.

    தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவிகிதம் போக மீதமுள்ள இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 3501 எம்.பி.பி.எஸ். இடங்கள் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இது தவிர அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 இடங்களும் தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 600-ம் நிரம்பி விட்டன.

    தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 723 எம்.பி.பி.எஸ். இடங்களும், 645 பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. மருத்துவ படிப்பை பொறுத்த வரையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    இந்த நிலையில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டு மீண்டும் மருத்துவ கலந்தாய்வை நடத்துவது எப்படி சாத்தியமாகும் என்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வருகிறது. #NEET #CBSE
    நீட் தேர்வை நடத்துவதில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #NEET #NEETExam
    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இதில் தமிழ் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டி ருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் தரவரிசை பட்டியலை தற்போதைக்கு அரசு வெளியிடாது என ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


    அப்போது சி.பி.எஸ்.இ. நடத்தும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தேர்வை நடத்துவதில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது.

    நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறான விடை என தெரிந்தும் பெரும்பாலான வகையில் முடிவெடுத்தது எந்தவகையில் நியாயம்?

    வழக்கு விசாரணையில் இருந்தும் முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? போன்ற கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #NEET #NEETExam
    சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

    விடைத்தாள்  திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். கூகுள் தளத்திலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.



    மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பிறந்த தேதி, பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018
    ×