search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி"

    குமரியில் பறக்கும் படையினர் கண்காணிப்பு வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தக்கலை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் 6 சட்டமன்ற தொகுதிகளிலும், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறார்கள்.

    குளச்சல் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் ஞானம் நகரைச் சேர்ந்த ஆசிரியர் ரொனால்டு மேரி என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து கருவூலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டன் கோணம் பகுதியைச்சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதை தாசில்தார் ஷீலாவிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் மேக்காமண்ட பத்தில் தாசன் என்பவரிடம் இருந்து ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுக்கடை பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்க கொண்டு சென்ற 11 மிக்சிகளையும் பறிமுதல் செய்தனர்.

    குமரி மாவட்டம் முழுவதும் இன்று காலையிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், ஆரல்வாய்மொழி பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த 3 நாட்களில் 35-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.

    குறிப்பாக சுவர் விளம்பரம், கொடிக்கம்பங்கள் தொடர்பாகவே புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரியில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    தக்கலை அருகே குமார புரம் கைதோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சிவநந்தினி(வயது19).

    இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 மாதமாகிறது. சிவநந்தினி நேற்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சிவநந்தினி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் சாந்தி கொற்றியோடு போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது 2-வது மகள் சிவநந்தினியை எனது கணவர் முத்துக்கிருஷ்ணனின் தங்கை மகன் சுரேசுடன் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணை எதுவும் கொடுக்கவில்லை. வரதட்சணை வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

    இந்தநிலையில் சிவநந்தினி நேற்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்லும் வழியில் இறந்து விட்டதாக கூறி உள்ளார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்கிறிஸ்துராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 2 மாதமே ஆவதால் தக்கலை சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    கீரிப்பாறை லேபர் காலனியைச் சேர்ந்தவர் சகாயம். இவரது மகன் தேவதாஸ்(22). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 26-ந்தேதி வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவரது மனைவி ஜெயந்தி(36). இவர் நேற்று வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடையாலுமூடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குலசேகரம் முன்னீர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம்(49). இவர் வி‌ஷம் குடித்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குமரியில் பஸ்கள் மீது கல்வீச்சு தாக்கப்பட்டது தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்கு இருமுடி கட்டி தரிசனம் செய்யச் சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை கேரள போலீசார் அவமதித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள அரசை கண்டித்து நேற்று குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்தும் சீராக நடைபெறவில்லை. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதியில் 12 அரசு பஸ்கள் மற்றும் ஒரு கல்லூரி பஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்களில் பம்மம் சிறிய காட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (26), ராஜேஷ் (38) ஆகிய ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மார்த்தாண்டம் பம்மம், உண்ணாமலைக்கடை பகுதியில் பஸ்களை உடைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரும் பா.ஜனதா பிரமுகர்கள் ஆவர். அவர்களை போலீசார் குழித்துறை 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கல் வீச்சு தொடர்பாக மேலும் சிலரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பஸ் உடைக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதன் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


    குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மலையோர பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 26.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சிற்றாறு-1 அணைக்கு 179 கனஅடி தண்ணீரும், மாம்பழத் துறையாறு அணைக்கு 26 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-18.2, சிற்றாறு 1-16, சிற்றாறு 2-11, நாகர்கோவில்-2.4, பூதப்பாண்டி-1, ஆரல்வாய் மொழி-6, பாலமோர்-10.8, திற்பரப்பு-12.6.திற்பரப்பு அருவியில் விடுமுறை தினமான நேற்று அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இந்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பல குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
    குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதைத் தொடர்ந்து மீனவ கிராமங்களில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு செய்தார்.
    நாகர்கோவில்:

    புயல் காரணமாக தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டு இருந்த “ரெட் அலர்ட்“ வாபஸ் பெறப்பட்ட போதிலும் குமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டது. எனவே தற்போது மீண்டும் கனமழை பெய்தால் அதை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

    மேலும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்புவதற்காகவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் இருந்து 646 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதில் பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர். எனினும் நேற்று முன்தினம் நிலவரப்படி 80 படகுகள் மட்டும் கரை திரும்ப வேண்டி இருந்தது. ஆனால் நேற்று காலை அந்த எண்ணிக்கை 64 ஆக குறைந்துள்ளது.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு பேரிடர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள ஜோதி நிர்மலா நேற்று முன்தினம் மாலை குமரி மாவட்டம் வந்தார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது குமரி மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை அவசர கால செயல் மையத்தை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பணி தூத்தூர், குளச்சல் உள்ளிட்ட இடங்களில் நடந்தது.

    அதாவது மீனவ கிராமங்களில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை அவர் பார்வையிட்டார். புயல் எச்சரிக்கை குறித்த தகவல் கிடைக்காத மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள், மீனவர்கள் கரை திரும்பும் விவரங்களை சேகரிக்கும் பணிகள், வானிலை நிலவரம் பற்றி மீனவர்களிடம் தெரிவிக்கும் பணிகள் அங்கு நடைபெறுகிறது. அந்த பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு செய்தார். மேலும் 2 படகுகளை அவரே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து கரை திரும்பும்படி கூறினார்.

    மேலும் கரை திரும்பாத மீனவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழை காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக செய்துள்ள ஏற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் தூத்தூரில் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மீனவ மக்களுக்கு தகவல்கள் துரிதமாக தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்று மீனவ பிரதிநிதிகளிடம், அவர் கூறினார். மேலும் குளச்சலில் விசைப்படகு தளத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பெரும்பாலான படகுகள் கரை திரும்பிவிட்டன. இன்னும் 64 படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டி உள்ளது என்று கருதுகிறோம். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நடக்கிறது. கடலில் இருக்கும் மீனவர்களின் நிலையை ஆய்வு செய்வதற்காக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபெறும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. கடலுக்கு சென்ற அனைத்து மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பும் வரை இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

    மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு கருவி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் அவை வந்து சேர்ந்துவிடும். மேலும் எந்த விதமான தொடர்பு சாதனங்களை மீனவர்கள் கேட்டாலும் அதை வழங்க அரசு தயாராக உள்ளது. குமரி மாவட்டத்துக்கு பேரிடர் மீட்பு குழு ஏற்கனவே வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கான பணி இன்னும் வரவில்லை. ஆனால் எந்த விதமான பேரிடரையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதிக் தயாள், கூடுதல் இயக்குனர் (சிறப்பு அலுவலர், ராமநாதபுரம்) ஜாணிடாம் வர்க்கீஸ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சையத் சுலைமான் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 
    நெல்லை, குமரி மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிந்தது. இதனால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #HeavyRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனாநதி ஆகிய அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 124 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 137 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 13 அடி உயர்ந்தது.



    அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிர பரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பல மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. குறுக்குத்துறை தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



    தொடர் மழை காரணமாக, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. கருப்பாநதி, கடனாநதி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

    குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது.

    இந்த நிலையில் புலியருவியில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி சிவகாசியை சேர்ந்த பிரபு (வயது 39) என்ற சுற்றுலா பயணி இறந்தார்.

    செங்கோட்டை அருகே கேரள மாநிலம் தென்மலையில் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலையில் திடீரென தென்மலை ரெயில் குகை நுழைவுவாயிலில் ராட்சத பாறை விழுந்து குகை பாதையை மூடிவிட்டது. மேலும் அப்பகுதியில் இருபுறமும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது.

    தண்டவாளத்தில் விழுந்து கிடக்கும் பாறை மற்றும் மண்சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் நேற்று காலை நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக இரவு 12.30 மணிக்கு பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்தானது.

    இதேபோல் குமரி மாவட்டத்திலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் இரணியல் ரெயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குருவாயூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அதிக அளவில் மண் மூடி இருந்ததாலும் சீரமைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. மண் சரிவு காரணமாக பல ரெயில்கள் நடு வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    நாகர்கோவிலில் இருந்து புறப்படவேண்டிய 9 ரெயில் கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை-கொல்லம் செல்ல வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

    நெடுந்தூர பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் பொருட்டு மாற்று ஏற்பாடாக, கொல்லம்- சென்னை இடையேயான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றன. கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

    தொடர்மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் தென்காசி வட்டார பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
    குமரியில் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சம் வாழை மற்றும் ரப்பர் மரங்கள் சேதம் அடைந்ததுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதனால் மேற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது. பழமையான மரங்கள் வேரோடு சரிந்தது. நாகர்கோவில், ஆரல் வாய்மொழி பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சரிந்தது.

    இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

    சூறைக்காற்று, கனமழை காரணமாக தக்கலை, குமாரபுரம், தோப்பூர், திருவட்டார், புத்தன்கடை, குலசேகரம், திருவரம்பு, திற்பரப்பு, அருமனை, அண்டுகோடு பகுதிகளில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முறிந்தன.

    இது போல சாமி தோப்பு, தாமரைகுளம், அழகிய பாண்டியபுரம், தோவாளை, கடுக்கரை, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் வாழை மரங்கள் சேதம் அடைந்தது.மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது.வாழை பயிரிட்ட விவசாயிகள் இதனால் கவலை அடைந்தனர்.

    இது போல மேற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் ரப்பர் மரங்களும் முறிந்தன. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்ததால் ரப்பர் பால் வெட்டும் தொழில் நடைபெறவில்லை. இந்த நிலையில் மழையுடன் வீசிய சூறைகாற்றில் ரப்பர் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் ரப்பர் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

    வாழை, ரப்பர் விவசாயிகளை போல நெற்பயிரிட்ட விவசாயிகளும் மழையால் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    ஊட்டுவாழ்மடம், தெரிசனங்கோப்பு, நாக்கால் மடம், வெள்ளமடம் பகுதிகளில் நெல் பயிரிட்ட நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. நீர் தேங்கியதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது.

    மலை கிராமங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடி வார பகுதிகளில் பெய்யும் கன மழையால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டாறுகளில் இருந்து பிரிந்துச் செல்லும் கால்வாய்களிலும் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    பழையாறு, கோதையாற்றிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் இதுவரை 31 வீடுகள் சேதம் அடைந்தது. இதில் 3 வீடுகள் முழுமையாகவும், 28 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்து உள்ளது.

    மழை காரணமாக மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி நேற்று 2 பேர் பலியானார்கள். நித்திரவிளையை அடுத்த செம்மான்விளை வாழப்புறம் வீட்டைச் சேர்ந்த பாலையன்(67), பால்வாங்க சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி இறந்தார்.

    இது போல அருமனையை அடுத்த குழிச்சல் நெடுமங்கால விளையைச் சேர்ந்த அகஸ்டின்(36) என்பவர் மாட்டுக்கு புல் அறுக்கச் சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

    2 நாட்களுக்கு முன்பு ஆரல்வாய்மொழி குமாரபுரத்தில் துரைராஜ் என்பவரும் இது போல மின்சாரம் தாக்கி இறந்தார். இவரையும் சேர்த்து இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.


    குலசேகரம் தும்பக்கோட்டில் ரமேஷ் என்பவரது வீடு மழையால் இடிந்து விழுந்தது

    குமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பூதப்பாண்டி- 9, சிற்றாறு1-36.8, சிற்றாறு2- 6, களியல்- 14.4, கன்னி மார்-61.4, கொட்டாரம் - 33, குழித்துறை-16, மயிலாடி- 16, நாகர்கோவில்- 9.6, பேச்சிப்பாறை-41.2, பெருஞ்சாணி- 21.4, புத்தன் அணை- 23.6, சுருளோடு- 41, தக்கலை-7, குளச்சல்- 15, இரணியல்-4.2, மாம்பழத்துறையாறு-12, ஆரல்வாய்மொழி-4.6, கோழிப்போர்விளை-7, அடையாமடை- 21, குருந்தன்கோடு-7.2, முள்ளங்கினாவிளை- 12, ஆணைக்கிடங்கு-40.

    நேற்று ஒரு நாளில் மட்டும் குமரி மாவட்டம் முழுவதும் சராசரியாக 22.22 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

    குமரி மாவட்ட அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 11.70 அடியாக உள்ளது. பெருஞ்சாணி- 69.60, சிற்றாறு1- 14.01, சிற்றாறு2- 14.10, மாம்பழத்துறையாறு-54.05, பொய்கை- 13.80.

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர் மட்டம் மேலும் உயரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 23.4 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கன்னியாகுமரி, சாமித்தோப்பு, கொட்டாரம், பொற்றையடி பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக இடைவிடாது கனமழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக இதமான குளிர்க்காற்றும் வீசி வருகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

    கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சாரல் மழையும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

    பரளியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாத்தூர் தொட்டில் பாலத்துக்கு கீழ் செல்லும் சப்பாத்து பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

    தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் சுமார் 200 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 6.70 அடியாக இருந்தது. அணைக்கு 477 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.15 அடியாக உள்ளது. அணைக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 52 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு 53.81 அடியாக உள்ளது. அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-14, பெருஞ்சாணி-10.2, சிற்றாறு-1-20.2, சிற்றாறு-2-3, புத்தன் அணை-12.8, முள்ளங்கினா விளை-11, கோழிப்போர் விளை-4, திற்பரப்பு-14.2, குருந்தன்கோடு-2.8, ஆணைக்கிடங்கு-5, நாகர் கோவில்-3.4, பூதப் பாண்டி-3.6, கன்னிமார்-21.4, சுருளோடு-11.4, பால மோர்-23.4, மயிலாடி-4.8, கொட்டாரம்-10.4.
    ×