search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாத்தான்குளம்"

    சாத்தான்குளம் அருகே கணவன்-மனைவி பஸ் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    நெல்லை மாவட்டம் இட்டமொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 52). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜக்கம்மாள் (47). இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று மாலையில் தங்கராஜ் தன்னுடைய மனைவியுடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த வாரச்சந்தையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

    சாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வந்தபோது, அந்த வழியாக சென்ற பஸ் திடீரென்று மொபட்டின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜின் மீது அந்த பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி ஜக்கம்மாளுக்கு தலை, காலில் பலத்த காயம்ஏற்பட்டது.

    விபத்தை ஏற்படுத்திய பஸ் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஜக்கம்மாளை மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    விபத்தில் இறந்த தங்கராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜக்கம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இட்டமொழி, சாத்தான்குளம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு, விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சாத்தான்குளம்இட்ட மொழி மெயின் ரோட்டில் மின்வாரிய அலுவலகம், யூனியன் அலுவலகம், அரசு கல்லூரி, கல்வியியல் கல்லூரி போன்றவை உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் இந்த சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    எனவே அங்கு விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடைகள், ஒளி எதிரொலிப்பான் ஸ்டிக்கருடன் கூடிய எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சாத்தான்குளத்தில் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகள் ஆனந்தி (வயது 19). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக தினமும் அவர் பஸ்சில் சென்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வேலைக்கு சென்ற ஆனந்தி பின்னர் வீடு திரும்பவில்லை. கடையிலும் இல்லை. உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை சந்திரகுமார் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என தேடி வருகின்றனர்.

    சாத்தான்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மகன்கள் இறந்த சோகத்தில் தந்தையும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகேயுள்ள மணிநகர் புதூரை சேர்ந்தவர் கோயில்மணி(60). இவர் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குணசீலி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். இவர்களில் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகன் விஜய். இவருக்கு திருமணமாகவில்லை.

    விஜய் கோவையில் தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். விஜயின் அண்ணன் ராஜா புதூரில் சொந்தமாக டெம்போ வைத்து தொழில் செய்து வந்தார். விஜய் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த விஜய் கோவையிலிருந்து புதூருக்கு வந்து கடந்த 20-ம் தேதி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டார்.

    ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு திருமணமான அவரது சகோதரர் ராஜா குடும்ப பிரச்சனையால் மதுவிற்கு அடிமையாகி இருந்துள்ளார். அவர் தம்பி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த வி‌ஷம் கலந்திருந்த மதுவை சாதாரண மது என நினைத்து குடித்து விட்டார். சாத்தான்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா 20-ந் தேதி இறந்தார். பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜய் 22-ந் தேதி இறந்தார்.

    இரண்டு மகன்களும் இறந்த சோகத்தில் இருந்த கோயில்மணி வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சரியாக சாப்பிடாமல் இருந்துவந்தாராம். சம்பவத்தன்று அவர் தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் புதூருக்கு தகவல் கொடுத்தனர்.

    உறவினர்கள் சென்று அவரை மீட்டு வந்து உடன்குடி தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே கோயில்மணி பரிதாபமாக‌ இறந்தார். ஒரே வீட்டில் 10 நாட்களுக்குள் 2 மகன்கள், தந்தை இறந்தது அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ள‌து.
    சாத்தான்குளத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திர காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி அம்சம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது அம்சம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். அவர் பிரசவத்துக்காக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    மணிகண்டன் தசரா குழுவில் இருந்தார். தசரா குழு வரவு-செலவு கணக்குகள் தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மந்திரம் மகன் மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் இருந்து அருகில் உள்ள மற்றொரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார்.

    இதனிடையே தனது மகனுக்கு மணிகண்டனால் ஆபத்து இருப்பதாக ஆட்டோ டிரைவர் மணிகண்டனின் தாய் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் தனது மாமனார் ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    சமீபத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் மீண்டும் சாத்தான்குளத்துக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் அங்குள்ள பஜாரில் கடையில் புரோட்டா வாங்க சென்றார். அப்போது அங்கு மந்திரம் மகன் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் அங்கு வந்தனர்.

    அவர்கள் திடீரென ஆட்டோ டிரைவர் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அவர்கள் ஓட ஓட விரட்டி சென்று மணிகண்டனை வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இந்த சம்பவம் காரணமாக பஜாரில் பரபரப்பும், பதட்டமும் உண்டானது. அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு சாத்தான்குளம் டி.எஸ்.பி. பாலச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிந்தனர். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

    வீட்டு முன்பு கூரை அமைத்த தகராறில் தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய 4 பெண்கள் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கடகுளத்தை சேர்ந்தவர் ஜெய்சீலன். இவரது மனைவி குணசீலி. இவர்களது மகள் டைட்டா கேப்ரின் (வயது 16). இவர்களது வீட்டின் முன்பு வெயிலுக்காக கூரை அமைத்திருந்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த அகிலா, அல்போன்ஸ், வாசுகி, செல்வி, ஜேசம்மாள், ஜெயபிரபு, சுகன் ஆகியோர்சிலர் இந்த கூரையை அகற்றும்படி கூறியுள்ளனர். ஆனால் குணசீலி வெயிலுக்காக அமைத்துள்ளேன். பின்னர் இதை அகற்றிவிடுகிறேன் என கூறியுள்ளார். 

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் குணசீலி கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதை தடுக்க சென்ற டைட்டா கேப்ரினையும் தாக்கியுள்ளனர். 

    இது குறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்.
    சாத்தான்குளம் அருகே பணத்தகராறில் தொழிலாளி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள கள்ளம்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்(வயது45). இவர் சென்னையில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். சமீபத்தில் அவர் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லிங்கம்(50) என்பவரிடம் ரூ.1000 கடன் வாங்கினாராம். அதை திரும்ப கொடுக்க தாமதமானது. இது லிங்கத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    உடனே தனது உறவினர் ஜெகன் என்பவருடன் சென்று செந்திலிடம் பணத்தை கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிங்கம், ஜெகன் ஆகியோர் சேர்ந்து செந்திலை சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதை பார்த்த லிங்கமும், ஜெகனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    செந்திலின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

    தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட செந்திலுக்கு கலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.#tamilnews
    ×