search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேண்டுகோள்"

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். #Modiurges #RahulGandhi #MKStalin
    சென்னை:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட அன்று இந்த தேர்தலில் முதன்முறை வாக்காளர்கள் அதிகமாக பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    தற்போது அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மீண்டும் இதே கருத்தை மோடி வலியுறுத்தியுள்ளார்.

    பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா, விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை குறிப்பிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இந்த தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிப்பதை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

    மற்றொரு டுவீட்டில் ‘வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாகும் வகையில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர்  ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதே கருத்தை நடிகர்கள் நாகார்ஜுனா, மோகன்லால் ஆகியோருக்கும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக உங்களது திரைத்தோற்றத்தின் மூலம் பல கோடி மக்களை நீங்கள் மகிழ்வித்து இருக்கிறீர்கள். பல விருதுகளையும் பெற்றிருக்கிறீர்கள். இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிகமான அளவில் அவர்கள் வாக்களிக்க நீங்கள் எல்லாம் ஊக்குவிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார்.
    ஜம்மு காஷ்மீரில் உள்ள தாய்மார்கள், தங்களது மகன்கள் பயங்கரவாத வழியில் செல்லாமல் தடுக்க வேண்டும் என ராணுவ அதிகாரி கே.ஜெ.எஸ்.தில்லான் வலியுறுத்தியுள்ளார். #JammuKashmir #KJSDhillon
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் இன்று சென்றார். அவர்
    செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    காஷ்மீரில் வாழும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயங்கரவாதத்தில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெரியாமல் யாராவது அந்த பாதையை தேர்ந்தெடுத்து விட்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வர விரும்பினால், அவர்கள் திரும்புவதற்கும், அவர்களுக்கு நல்ல பாதை அமைத்து தரவும் ராணுவம் தயாராக உள்ளது.

    அனைத்து காஷ்மீர் தாய்மார்களும் தங்கள் மகன்களிடம் ராணுவத்திடம் சரணடையுமாறு சொல்லுங்கள். உங்களின் பாதுகாப்பை ராணுவம் உறுதி செய்யும். மேலும், கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 152 காஷ்மீர் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். #JammuKashmir #KJSDhillon
    புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே உள்ள பகுதியில் கடற்கரையை தூய்மை செய்யும் பணி தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கடலோர காவல் படை வீரர்கள், ஊர்காவல் படையினர், என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    பின்னர் புதுவை மாநிலத்தை தூய்மையாக வைப்போம் என பதாகையில் எழுதி முதல் அமைச்சர் நாராயணசாமி கையெழுத்திட்டார்.

    பின்னர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடல் வளத்தை பேணி காப்பது நமது கடமை. நகரப் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அதிகளவில் சுற்றுலா தளங்களில் போட்டு செல்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புதுவை மக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
    அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட, தாங்கள் விரும்பும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Minister #Sengottaiyan
    சென்னை:

    தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்து, அதன் மூலமாக அவர்களின் எதிர்காலத்தை, பிரகாசமான எதிர்காலமாக மாற்றுவதற்காக, மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கி, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதால், மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்திற்கு நற்சான்று வழங்கிவரும் இவ்வேளையில், மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுத்தும், இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்து, தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திட வாருங்கள் என்று இருகரம்கூப்பி அழைக்கின்றேன்.

    “கல்லாதவர்களே இல்லாத மாநிலமாய் தமிழகத்தை ஆக்க வேண்டும் - பள்ளி வகுப்பறைகள் புனிதமாக இருக்க வேண்டும்” என்பதை தாரக மந்திரமாக கொண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க. அரசு, பள்ளி கல்வித்துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடியை ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து வருகிறது.

    எவ்வளவுதான், அரசு நிதிகளை ஒதுக்கினாலும், என் பள்ளி இது என்ற எண்ணத்தை தன் இதயத்தில் ஏந்திய உங்களைப் போன்ற நல்லோரின் துணையும், அனைத்துப் பள்ளிகளையும் மேலும் மெருகூட்டிட வழிவகை செய்திடும்.

    பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணைய வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை தாங்களாக மனமுவந்து செய்ய விரும்பினால், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    கல்வி ஒன்றால்தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

    அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போதுதான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே, அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளமிகு அரசுப் பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    காவிரியில் இருந்து விநாடிக்கு 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றும் திறன் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNMinister #Udhayakumar
    திருமங்கலம்:

    திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைகை அணை நீர் மட்டம் நேற்று 87.15 அடியாக இருந்தது. ஆதலால் முதற்கட்ட எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 60 அடி கொள்ளளவு வந்துள்ளதால் இன்று இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேலும் 69 அடி கொள்ளளவு வந்தவுடன் ஆற்றில் உபரி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது. கால்நடைகளை குளிப்பாட்டக் கூடாது. குறிப்பாக ஆற்றங்கரையில் செல்பி எடுக்கக்கூடாது.

    திருவிழா காலங்களில் முளைப்பாரி கரைக்கக்கூடாது. தாழ்வான பகுதிகளில் சிறுவர்கள் பெரியவர்கள் யாரும் நீச்சல் அடிக்கக்கூடாது. 13 ஆண்டுகளுக்குப் பின் வைகை அணை ஒரு போக சாகுபடிக்காக திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.

    தண்ணீர் திறக்கப்பட்டால் மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ள 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர்பாசன வசதி பெறும். குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு 18 கால்வாய் பி.டி. ஆர். கால்வாய் பெரியார் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய் ஆகிய கால்வாயில் நீர் திறந்துவிடப்படும்.

    கிருஷ்ணராஜசாகர் கபினி அணைகள் திறந்துவிடப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும். உபரி நீரும் தமிழகத்தில் பவானி அமராவதி திருமூர்த்தி அணைகள் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்த்து மொத்தம் காவேரியில் மொத்தம் 2 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேறி வருகிறது.

    காவிரியில் விநாடிக்கு 4 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றும் திறன் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. சேலம், தர்மபுரி, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்டோரா போட்டு ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு 33 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு உறைவிடம் தண்ணீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. #TNMinister #Udhayakumar
    பஞ்சாப் நேஷனல் வங்கி மோடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #PNBFraud #MehulChoksi
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.



    இந்தநிலையில் கரீபிய தீவு நாடான ஆண்டிகுவா-பர்புடாவின் குடியுரிமையை பெற்றுள்ளதாக மெகுல் சோக்சி கடந்த வாரம் அறிவித்தார். இதன் மூலம் அவர் ஆண்டிகுவாவில் வசித்து வருவது உறுதியாகி உள்ளது. எனவே அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி மெகுல் சோக்சியை கைது செய்யுமாறு ஆண்டிகுவா அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆண்டிகுவா-பர்புடா அதிகாரிகளை நேரில் சந்தித்து இது தொடர்பாக வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் தரை, கடல், வான் வழியான அவரது பயணங்களுக்கு தடை விதிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.  #PNBFraud #MehulChoksi #Tamilnews
    சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு 10 நாட்களுக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. #Hogenakkal
    தருமபுரி:

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று காலை 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. 11.30 மணிக்கு பிறகு நீர்வரத்து 1 லட்சத்து 20 அயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 7 மணி முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒகேனக்கல் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்.

    கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இன்னும் ஒரு வாரத்திற்கு 1,20,000 கனஅடி நீர்வரத்து வரும் நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா வருவதை இன்னும் 10 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

    மேலும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு செல்ல அனுமதிக்காமல், வரும் வாகனங்கள் அனைத்தும் வனத்துறை சோதனை சாவடி அருகே தடுத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கலில் வாழ்வாதாரம் பாதிக்கும் தொழிலாளர்களுக்கு, ‘‘பிளாஸ்டிக் இல்லா ஒகேனக்கல்’’ உருவாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும்.


    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்.

    மேலும் காவேரி ஆற்று பகுதியில் 25 இடங்கள் வெள்ள பெருக்கினால் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்று பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறை, வருவாய்த் துறை தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Hogenakkal
    உழவன் கைபேசி செயலியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை இணைந்து துரித நடவடிக்கை எடுத்து 4 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு ரூ.8 கோடி பெறப்பட உள்ளது. இன்னும் ஓரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் அவை வரவு வைக்கப்பட உள்ளது. வேளாண்மைத்துறையில் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் விவசாயிகளின் ஒத்துழைப்போடு 80 சதவீதத்தில் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்குபெற்று பயனடைய வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் மாநிலத்திலேயே ஒரு முன்னோடி மாவட்டமாக திகழ அனைத்து விவசாயிகளும் ஒத்துழைக்கவேண்டும். கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் வேளாண்துறை மூலம் 45 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களும், தோட்டக்கலைத்துறை மூலம் 11 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களும் அமைக்கப்பட்டு நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற கூற்றிற்கு இணங்க விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும்.

    நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் 2-வது கட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணிகள் மற்றும் மானாவாரி தொகுப்பு விவசாயிகள் குழுக்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு 1,800 ஹெக்டேர் பரப்பளவில் கோடை உழவுக்கான மானியம் விதைகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கும் பணிகள் இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

    விவசாயிகளின் உற்பத்தி இருமடங்காகவும், வருமானம் மும்மடங்காகவும் சாதனை அடையும் வகையில் விவசாயிகளுக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்திய உழவன் கைபேசி செயலியை அதிக அளவில் பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கடந்த மாதத்தில் பெறப்பட்ட விவசாயிகளுடைய கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மீது விவாதிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

    அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த திரளான விவசாயிகள் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து காப்பீடு தொகை பெறாத விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பு தொகை வழங்க வேண்டும். நீர் ஆதாரங்களான ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தடுப்பணைகள் கட்டவேண்டும். வரத்து கால்வாய்கள், ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும். விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    மேலும் காலியாக உள்ள வேளாண்மை உதவி அலுவலர் பணியிடங்களை நிரப்பவேண்டும். ஆற்றுப்படுகைகளில் மணல் எடுப்பதை தடுக்க வேண்டும். அங்கீகாரமற்ற வண்ணமீன் மற்றும் இறால் மீன் பண்ணைகளை அகற்ற வேண்டும். நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தில் பெருவிவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியம் வழங்க வேண்டும், ஏரிகளில் சவுடு மண் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

    இந்த கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாண்டியன், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) எபினேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பிரதாப்ராவ், ஆர்.டி.ஓ.க்கள் திவ்யஸ்ரீ, பவணந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    ×