search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட்"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #SterliteProtest

    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, நோய்களை பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    இதையடுத்து, ‘ஸ்டெர்லைட்’ ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் 28ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

    அதை விசாரித்த தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ‘ஸ்டெர்லைட்’ ஆலையில் நேரடி ஆய்வு செய்தது. ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15ந்தேதி பிறப்பித்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும், ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது என்றும், மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது என்றும் கூறி தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை நாடலாம் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

    வேதாந்தா நிறுவன சட்டபிரிவு பொது மேலாளர் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மின்சார வாரியம் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #SterliteProtest

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #SterliteCase #SupremeCourt
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அரசு தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின்  உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தான் வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர முடியும் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனமும் மேல்முறையீடு செய்திருந்தது.



    இவ்வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதாந்தா தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் பல நோய்கள் ஏற்படுவதாக வைகோ மீண்டும் குறிப்பிட்டார்.

    இன்று பிற்பகல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும், அனைத்து தரப்பினரும் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #SterliteCase #SupremeCourt

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #Sterlite #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி, அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமை தீர்ப்பாயம் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து வருகிற 24-ந்தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்றும், அன்றைய தினம் வீடுகள், வணிக நிறுவனங்களில் கருப்பு துணி கட்டவும், மக்கள் கருப்பு நிற ஆடை அணிந்தும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. மேலும் மக்களின் மனநிலைக்கேற்ப ஆலையை திறக்க விடாமல் இருப்பதில் உறுதியாக இருக்கிறோம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், கருப்புக்கொடி போன்றவை தேவையில்லாதது. இவ்வாறான செயல்கள் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டுவதாக அமையும். எனவே ஆலைக்கு எதிரான போராட்டங்கள் வேண்டாம்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Sterlite #ThoothukudiCollector #SandeepNanduri
    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி 8-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #Sterlite #TNGovernment #SC
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை தருண் அகர்வால் குழுவினர் அளித்த பரிந்துரையின் பேரில் பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. மேலும், வேதாந்தா நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் செலவில், தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு வருகிற 8ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Sterlite #TNGovernment #SC 
    தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். #DMK #MKStalin #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு அனுமதி கிடைக்காததால் கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள்.

    பின்னர் சட்டசபைக்கு வெளியே மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் பேரிடர் 15.11.2018 நள்ளிரவில் நிகழ்ந்தது. மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டும், கஜா பேரிடர் நிதியாக 46 நாட்கள் கழித்து - அதுவும் உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மத்திய அரசு 1,146 கோடியே 12 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக கேட்ட 1500 கோடியைக் கூட பெற முடியாமல் அ.தி.மு.க. அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தோல்வி அடைந்துள்ளார்.

    இதைக் கேட்டு பெறுவதற்கான துணிச்சல் இல்லாமல் முதல்-அமைச்சர் நாற்காலியில் அமரத் தகுதி இல்லாதவராக எடப்பாடி பழனிசாமி ஆகி விட்டார். “அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தவறியதால் இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அ.தி.மு.க. அரசின் தொழில் துறை அமைச்சர் சம்பத் தோல்வி கண்டிருக்கிறார்.

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு மேலாகியும் அதற்கு நிரந்தர தலைவர் நியமிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல், தமிழக விவசாயிகளுக்கு பெரும் கேடு விளைவித்து, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு இதுவரை தடை பெற முடியாமல்- மத்திய அரசு அனுமதியை திரும்பப் பெற வைக்க முடியாமலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்து இருக்கிறார்.

    புதிய எச்.ஐ.வி. தொற்றை தடுப்போம் என்று கூறிய அ.தி.மு.க. அரசு இன்றைக்கு அரசு மருத்துவமனையிலேயே எச்.ஐ.வி. ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய கொடுமை அரங்கேறி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் படுதோல்வி அடைந்து இருக்கிறார்.

    கார்ப்பரேசன் ஆபிசா அல்லது கரெப்சன் ஆபிசா என்று உயர்நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு தாண்டவமாடும் ஊழலால் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தோல்வியடைந்து நிற்கிறார்.

    விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடும் விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண முடியாமல் மின்துறை அமைச்சர் தங்கமணி தோல்வி அடைந்து விட்டார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணையில் இருக்கிறது.


    இவர்களுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ அரசு நிர்வாகத்தை நடத்த முடியாமல், மத்திய அரசிடம் மாநில உரிமையை பாதுகாத்திட முடியாமல், குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரைக் கூட நீக்க முடியாமல், சட்டம்-ஒழுங்கை அறவே காப்பாற்ற முடியாமல், டெண்டர் ஊழல் என்ற அளவில் முதல்-அமைச்சர் பொறுப்பிலேயே முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார். ஒரு நாட்டின் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் என அனைவர் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்து நிற்கிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்பால் எடுக்கப்பட்ட பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைச்சரவை. இவை அனைத்துக்கும் மேலாக தங்கள் கட்சித் தலைவரை இந்த நாட்டுக்கு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை காக்கத் தவறி இருக்கிறார்கள்.

    அவர் மரணத்தில் மர்மம் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தான் அப்போதே சொன்னேன். இன்றைக்கு சட்ட அமைச்சராக இருக்கக் கூடிய சி.வி.சண்முகம், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ராமமோகன்ராவ், தற்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

    ஜெயலலிதாவையே காப்பாற்ற முடியாத இவர்கள், கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்ற போகிறார்கள்? இப்படி எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்ட அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் அடங்கிய அ.தி.மு.க. அரசின் ஆளுநர் உரையால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.

    பதிலாக தமிழகத்தின் முன்னேற்றமும், வளர்ச்சியும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அ.தி.மு.க. அரசின் இந்த ஆளுநர் உரையைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வெளிநடப்பு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.வும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த னர்.

    வெளிநடப்பு செய்தது குறித்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மக்கள் இன்னும் அதில் இருந்து மீண்டு வரவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய வகையில் இழப்புத் தொகை வழங்கவில்லை. மத்திய அரசு மிகக் குறைந்த அளவுதான் நிதி வழங்கியுள்ளது. இது கடலில் பெருங்காயத்தை அளித்தது போன்றதாகும். விவசாயிகளுக்கான எந்த அறிவிப்பும் கவர்னர் உரையில் இல்லை. இவற்றை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

    ஜெயலலதா மறைவுக்கு பிறகு அவரது மறைவு குறித்து சட்டத்துறை அமைச்சர் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார். அவரது மரணத்தில் ஏதாவது காரணம் இருந்தால் ஆட்சி செய்த அ.தி.மு.க. அரசுதான் பொறுப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெளிநடப்பு செய்த முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் நிருபர்களிடம் கூறுகையில், “கஜா புயலுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை. தமிழக அரசும் அதை பெற தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றிய விவகாரத்தில் தமிழகஅரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதைகண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார். #DMK #MKStalin #TNAssembly
    ஸ்டெர்லைட் ஆலையை மூட‌ சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தனர். #Sterlite

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 22-ந்தேதி வழக்கு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி அளித்து கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டது. இதன் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆலையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் அரி ராகவன், மகேஷ் ஆகியோர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை கண்டித்து இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று காலை தூத்துக்குடி பண்டாரம்பட்டி, அ.குமரெட்டியாபுரம், மீளாவிட்டான் உள்ளிட்ட கிராமங்களிலும், சுற்றுப்பகுதியிலும் சில வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. தெருக்களிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டன. தூத்துக்குடி பாத்திமாநகரில் அப்பகுதியினர் சிலர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற சென்றனர்.


     

    இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. பின்பு பொதுமக்கள் சாலை ஓரம் கருப்புக்கொடியுடன் நின்று கோ‌ஷம் எழுப்பினர். இதனிடையே தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டரை வருகிற 21-ந்தேதி மக்கள் கூட்டமைப்பு சார்பில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர்.

    அதில் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்து உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே தூத்துக்குடி டபிள்யூ.சி.சி. ரோட்டில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் அருகே அக்கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாலன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், துணைச்செயலாளர் செல்வக்குமார், எட்வின் பாண்டியன், கோட்டாள முத்து, தொழிற்சங்க துணைத் தலைவர் சண்முக குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு கொடியேந்தி ஸ்டெர்லைட்டை மூடக்கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு தமிழக மக்களை வஞ்சிக்கிற தீர்ப்பாகும் என்று திவாகரன் கூறியுள்ளார். #SterlitePlant #NGT

    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர், திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி, போது நடந்த கலவரத்தில், பலர் உயிரிழந்தனர். இதனால் தமிழக அரசு, அந்த ஆலையை மூட உத்தரவிட்டது,

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பசுமை தீர்ப்பாயம், வழங்கிய, தீர்ப்பு தமிழக மக்களை, குறிப்பாக, தூத்துக்குடி மக்களை வஞ்சிக்கிற தீர்ப்பாகும், இதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, போராட்டத்தை நடத்த வேண்டும்,

    தமிழகத்தில் விவசாயத்தை கேள்விக் குறியாக்கும் வகையில், சமீபத்தில், மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணைகட்ட வரைவு திட்டத்திற்கு, அனுமதியளித்துள்ளது. இதை பார்க்கும் போது, ஏதோ சொல்லி வைத்த மாதிரி தமிழகத்தை வஞ்சிப்பதை போல மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது

    நமது அரசியல் இயக்கங்கள், இது போன்ற பொதுப் பிரச்சினைகளில், ஒன்றிணைந்து, போராட வேண்டியது, அவசியமாகும், அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது, நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.

    தமிழகத்தை தாக்கிய கஜா புயலால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்க போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை.

    நடந்து முடிந்த ஐந்து மாநில சட்ட மன்ற தேர்தல் முடிவுகள், ராகுல் காந்தியின், அரசியல் அணுகு முறையில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகும்.

    பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தியதுடன், அனைத்து துறைகளிலிலும், அரசியல் தலையீடு, மத இன பிரச்சினையை தூண்டி, நாட்டில் அமைதியின் மையை ஏற்படுத்திய, மக்கள் விரோத நடவடிக்கைகளால், பாரதிய ஜனதா கட்சிக்கு தோல்வியை கொடுத்திருப்பதாகவே, கருதுகிறேன்.

    தமிழக முதல்- அமைச்சர் முறையில் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தி.மு.க.தலைவர் ஸ்டாலினும், ஸ்டெர்லைட், மேகதாது அணை, போன்ற பிரச்சினைகளில், மக்களை காப்பாற்ற பொறுப்புடன், குரல் கொடுக்கவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும்.

    தினகரனின், செயல்பாடுகள் பிடிக்காமல் தான் செந்தில்பாலாஜி, தி.மு.க.விற்கு சென்றிருக்கிறார். #SterlitePlant #NGT

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் புதிய வடிவம் எடுக்கும் என்று வைகோ கூறினார். #sterliteplant #Vaiko
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    ஸ்டெர்லைட் வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தான் காரணம்.



    தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை மூட தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. இதனால் போராட்டம் நிற்காது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டம் புதிய புதிய வடிவம் எடுக்கும். ஆலை அகற்றப்படும் வரை போராட்டம் நடக்கும். ஆனால் வன்முறை இருக்காது. நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம்.

    தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் இந்த 20 தொகுதிகளிலும் யார் போட்டியிடுவது என்று தி.மு.க. தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sterliteplant #Vaiko
    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #NGT #TNgovernment #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.

    அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையையும் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிபுணர் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

    இந்த அறிக்கையை கடந்த 28-ந்தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது வாசித்துக் காட்டிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நிபுணர் குழு அறிக்கையின் நகல்களை இரு தரப்புக்கும் வழங்குமாறும் இந்த அறிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 7-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று தமிழக அரசு தரப்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் சர்மா தாக்கல் செய்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா? நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய மட்டுமே இந்த குழு நியமிக்கப்பட்டது.

    ஆனால் இந்த குழு இவற்றையெல்லாம் விட்டு விட்டு ஆலையை மூடியது தவறா? என்று ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த குழு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு உள்ளது.

    இந்த குழு பாரபட்சமாக செயல்பட்டு இருக்கிறது. குழுவின் அறிக்கை முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதங்களில் உள்ள உண்மை நிலவரங்களை இந்த குழுவின் அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. இந்த குழு எந்த இடத்திலும் நிலத்தடி நீர், தாமிரக்கழிவு தொடர்பாக உருவாகும் சுற்றுச்சூழல் மாசு பற்றி சரிவர ஆய்வு நடத்தவில்லை. அது தொடர்பாக எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ச்சியாக அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தேவையான வாய்ப்புகள் ஆலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டன. இதனை தன்னுடைய கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிபுணர் குழு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் ஏதோ உடனடியாக இந்த முடிவை எடுத்தது போல சித்தரித்து உள்ளது முற்றிலும் தவறாகும்.

    மேலும், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் மனு தாக்கல் செய்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முகாந்திரம் ஏதும் இல்லை. இந்த குழுவின் நியமனம் மற்றும் அதன் அறிக்கை ஆகியவற்றுக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை.

    இவ்வாறு தமிழக அரசின் பதில் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #NGT #TNgovernment #Sterlite

    ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார். #ThoothukudiSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.



    இதையடுத்து, தூத்துக்குடிக்கு வந்தடைந்த அந்த ஆய்வுக்குழு ஆலையை ஆய்வு செய்தது. பின்னர் இன்று அப்பகுதி மக்களிடம் கருத்துக்கள் அடங்கிய மனுக்களை பெற்றது. ஆலைக்கு ஆதரவு அளிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்நிலையில், மக்களின் மனுக்களை பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தருண் அகர்வால், மக்களிடம் கருத்துகள் அடங்கிய மனுக்களை பெற்றுவிட்டதாகவும், மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    தேவைப்பாட்டால் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் எனவும், மக்கள் பெரும்பாலானோர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இருப்பதாகவும் ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் ஆய்வை முடித்த ஆய்வுக்குழு நாளை சென்னை திரும்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ThoothukudiSterlite
    கருணாஸின் அவதூறு பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Jayakumar #Karunas
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    என்னை அரிச்சந்திரன் என கூறிய கருணாஸுக்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவரான ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?.

    ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது. ஸ்டாலின் அதனை கண்டிக்காதது ஏன்?. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. 
    தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவினர் ஸ்டெர்லைட்டில் ஆய்வு நடத்தக்கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. #ThoothukudiSterlite #SterliteCase #TNGovt #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஆய்வுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது’ என்று கடந்த 10-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தமிழக அரசுக்கு தகவல் வந்தது.

    இவ்விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் குழுவின் வருகைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து பெங்களூருவில் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல இயக்குனருக்கு தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நீங்கள் எழுதிய கடிதம் கடந்த 17-ந் தேதி எங்களுக்கு கிடைத்தது. அதில், 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சென்னை மற்றும் தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தை (ஸ்டெர்லைட்) பார்வையிடுவதற்கு கமிட்டி வருவதாக பயண திட்டத்தை குறிப்பிட்டு இருந்தீர்கள்.

    இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் தன்மை குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும், டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்விலும் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.



    அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் 10.9.18 அன்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யவேண்டும் என்று அந்த கோர்ட்டில் 14-ந் தேதியன்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    அதோடு, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள அப்பீல் வழக்கை எதிர்த்தும், தமிழக அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகார எல்லை குறித்தும் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், கமிட்டி பார்வையிடும் நிகழ்வை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    எனவே, கமிட்டியின் திட்டமிடப்பட்டுள்ள பயணத்தை ரத்து செய்ய வேண்டும். அதோடு கமிட்டியின் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த புதிய மனு ஒன்று தீர்ப்பாயத்தின் தலைமை நடுவர் நீதிபதி ஏ.கே.கோயல், நீதிபதிகள் எஸ்.பி.வங்டி, டாக்டர் நகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு வக்கீல்கள் யோகேஷ் கன்னா, ராகேஷ் சர்மா, பா.வினோத் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

    ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வக்கீல் ரோகிணி மூசா ஆஜராகி, ‘ஏற்கனவே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளபடி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக வளாகத்தில் நிர்வாக பணிகள், பராமரிப்பு பணிகளுக்கான அனுமதி மற்றும் தாமிர மூலப்பொருட்களை அகற்றுவதற்கான அனுமதி ஆகியவற்றை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்து வருகிறது. இதனால் எங்கள் நிர்வாகத்துக்கு நாளுக்கு நாள் பெருமளவில் பொருளாதார இழப்பீடு ஏற்படுகிறது. பணிகள் பெருமளவில் தடைபட்டுள்ளன. எனவே மேற்கண்ட பணிகளுக்கான அனுமதியை உடனடியாக வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கின் முகாந்திரம் குறித்த சீராய்வு மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நாளுக்கு ஒன்றாக புதிது புதிதாக கோரிக்கைகள் முன்வைப்பதை அனுமதிக்கக்கூடாது என்று வாதிடப்பட்டது.

    இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தங்கள் கோரிக்கைகளை தீர்ப்பாயம் நியமனம் செய்துள்ள நீதிபதி தருண் அகர்வால் குழுவின் முன்பு எழுத்து வடிவில் தாக்கல் செய்ய அனுமதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர்.

    இதற்கு தமிழக அரசு வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் தரப்பிலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கோரிக்கைக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து சிறப்பு குழுவில் மனு தாக்கல் செய்யலாம் என்று எழுத்து வடிவில் உத்தரவு தருமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    இதற்கு தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் இந்த வேண்டுகோளை ஏற்க முடியாது என்றும், ஏற்கனவே தீர்ப்பாயம் ஆகஸ்டு 20-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் குழுவின் முன்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்றும், அதற்காக தமிழக அரசுக்கு தனியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

    இதற்கு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் மிகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தீர்ப்பாயம் இப்படி நடந்து கொள்வது எந்த வகையிலும் சரியல்ல என்றும் தன்னுடைய எதிர்ப்பை உத்தரவில் பதிவு செய்யுமாறும் கூறினார். மேலும், தான் இதுவரை பார்த்ததில் எந்த தீர்ப்பாயமும் இப்படி நடந்து கொண்டது இல்லை என்றும் அவர் மிகக் கடுமையான குரலில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார்.

    இதற்கு நீதிபதி ஏ.கே.கோயல், உங்கள் வாதங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னால் அப்படி எதுவும் எழுத்து வடிவில் உத்தரவு பிறப்பிக்க இயலாது எனவும் கூறி விசாரணையை முடித்து வைப்பதாக கூறினார்.  #ThoothukudiSterlite #SterliteCase #TNGovt  #NGT

    ×