search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123586"

    பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 84 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்குப்பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. #PambanBridge #PambanRailwayBridge
    ராமேசுவரம்:

    மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பனில் 3 கிலோ மீட்டருக்கு கடலில் ரெயில் மேம்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.

    இந்த பாலத்தில் ராமேசுவரத்துக்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதேநேரத்தில் கப்பல் போக்குவரத்துக்கும் ஏற்றவகையில் இருபிரிவுகளாக திறக்கும்படி பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அந்த வழி தடத்தில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.



    பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், 84 நாட்களுக்கு பிறகு தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 6.5 டன் துருப்பிடிக்காத இரும்பு ராடுகளை கொண்டு விரிசல் சரிசெய்யப்பட்டதையடுத்த தற்போது மீண்டும் ரயில் சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது.

    புவனேஸ்வர், சேது, கோவை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 10 கிமீ வேகத்தில் ரயில் பாலத்தில் சென்றதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. #PambanBridge #PambanRailwayBridge

    30 தீர்த்தங்களை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 12-ந்தேதி ராமேசுவரம் வருகிறார். #TNGovernor #Banwarilalpurohit
    ராமேசுவரம்:

    தென்னிந்தியாவில் புண்ணியஸ்தலமாக கருதப்படும் ராமேசுவரத்துக்கு நாள் தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடினால் நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    அண்மையில் ராமேசுவரம் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் 30 தீர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் புனரமைக்கப்பட்டுள்ளன.

    இதனை பக்தர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 12-ந்தேதி ராமேசுவரம் வருகிறார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் பின்னர் தீர்த்தங்களை திறத்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

    கவர்னர் வருகையையொட்டி மாவட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். #TNGovernor #Banwarilalpurohit
    முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை ராமேசுவரம் கோவில் சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். #MukeshAmbani
    ராமேசுவரம் :

    ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபரான முகேஷ் அம்பானி, அவருடைய மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். முன்னதாக குருவாயூர் கோவிலுக்கு சென்ற அவர்கள் அதன்பின்னர் மதுரை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாமில் வந்திறங்கினர்.

    ராமேசுவரம் கோவிலில் அவர்களை கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, குருக்கள் ரவி பர்வே ஆகியோர் மாலை கொடுத்து வரவேற்றனர். பின்பு விநாயகர் சன்னதியில் 22 புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு அவர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி-அம்மன் சன்னதிகளில் விசேஷ பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா திருமணம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை சன்னதியில் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அம்மன் சன்னதியில் திருக்கோவில் சார்பில் அவருக்கு ராமலிங்க பிரதிஷ்டை படம், ராமர் படம், பிரசாதம் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் புத்தகத்தில் முகேஷ் அம்பானி குறிப்பு எழுதினார்.

    தனது குடும்பத்தினர் பெயர்களில் 5 உறைகளில் தலா ரூ.11,000 வீதம் வைத்து கோவிலுக்கு நன்கொடை வழங்கினார். மேலும் அவர் கோவிலுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று இணை ஆணையரிடம் கேட்டார். அதற்கு இணை ஆணையர், கோவிலின் 2-ம் பிரகாரத்தின் ஒரு பகுதி திருப்பணி நிறைவடையாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக அந்த பிரகாரத்தை கட்டித்தருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். #MukeshAmbani

    ராமேசுவரத்தில் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு விசாரணை நடத்தி வருகிறார். #Acid #AcidAttack
    ராமநாதபுரம்:

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பெண் மீதும் ஆசிட் வீசப்பட்டது.

    ராமேசுவரம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் வெண்மணி. இவர் நேற்று இரவு தனது சகோதரர் மெய்யரசு என்பவருடன் அதே பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த டி.ஏ.எம்.எஸ். நகரைச் சேர்ந்த ஒரு கும்பல் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து வைத்தனர்.

    ஆனால் ஆத்தரம் அடங்காத அந்த கும்பல் சிறிது நேரத்தில் வெண்மணி வீட்டுக்கு வந்து அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியது.

    மேலும் அந்த கும்பல் வெண்மணியின் மனைவி கவுசல்யா (வயது 20) மீது ஆசிட் வீசியது. இதனால் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.



    இந்த தாக்குதலில் வெண்மணியின் தந்தை வரதராஜன், மெய்யரசு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராமேசுவரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு விசாரணை நடத்தி வருகிறார். #Acid #AcidAttack



    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 1200 பேரை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. #Fishermen #SriLankaNavy

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 1200 மீனவர்கள் 265 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

    தமிழக மீனவர்களிடம் “நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே இங்கிருந்து செல்லுங்கள்” என்று எச்சரித்தனர்.

    அச்சத்தில் நடுங்கிய மீனவர்கள் படகுகளை திருப்பிக்கொண்டு கரைக்கு திரும்ப ஆயத்தமானார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் திடீரென்று ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத் தெறிந்தனர். படகுகளையும் சேதப்படுத்தினர்.

    “வலைகளை அறுத்து எங்கள் பிழைப்பை கெடுக்காதீர்கள்” என்று கெஞ்சினர். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து வலைகளை சேதப்படுத்தினர். பின்னர் உடனே இடத்தை காலி செய்யுங்கள் என்று விரட்டியடித்தனர்.

    ராமேசுவரம் மீனவர்களும் உயிர் பிழைத்தால் போதும் என நினைத்து படகுகளை திருப்பிக் கொண்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.

    இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது எனறு மீனவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy

    சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    சிவகங்கை:

    சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டம், அதன் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இக்னேசியஸ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மெய்யப்பன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் வடிவேலு, வட்ட பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், மாதந்தோறும் மருத்துவ படி ரூ.1,000 வழங்க வேண்டும், பண்டிகை முன்பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய வேண்டும், மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டிக்கு அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும், சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கருப்பையா நன்றி கூறினார்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 27 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். #TNFishermen #LankanNavy
    ராமேசுவரம்:

    ராமேசுவரம், பாம்பன் மற்றும் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

    இலங்கை கடற்படையின் இத்தகைய நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 27 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

    ராமேஸ்வரம் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருட்கள் சிவகங்கையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் மாற்றம் செய்யப்படும். #Rameswarambullets

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவரது வீட்டின் பின்புறத்தில் தோண்டிய போது ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்டது. இதில் சக்திவாய்ந்த வெடி குண்டுகள், கண்ணி வெடி, தோட்டாக்கள் ஆகியவை இருந்தன.

    இதனை திருவாடானை மாஜிஸ்திரேட் பாலமுருகன் ஆய்வு செய்தார். அப்போது வெடிபொருட்களின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை வெடி மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து வெடி மருந்து நிபுணர்கள் கடந்த வாரம் ராமேசுவரத்திற்கு வந்தனர். அவர்கள் 2 முறை வெடிபொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வுக்காக மாதிரிகளை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துகள் அதே இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள வெடிமருந்துகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வெடி மருந்துகளை ஆய்வு செய்த சென்னை வெடிபொருட்கள் நிபுணர்கள் திருவாடானை கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில், தங்கச்சிமடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடி மருந்துகளின் மாதிரி தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை கிடைத்த பின்னர் தான் வெடிபொருட்களை அழிப்பது குறித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியும். எனவே அதுவரை வெடி பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கை அடிப்படையில் வெடிபொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல மாஜிஸ்திரேட் அனுமதி அளிப்பார் என தெரிகிறது.

    அதன்பின்னர் வெடி பொருட்கள் சிவகங்கையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் பாதுகாக்கப்படும். இறுதி அறிக்கை வந்தபின்னர் அவை அழிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார். #Rameswarambullets

    ராமேஸ்வரம் அருகே கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள் தமிழ்ஈழ விடுதலைப் போராளிகள் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி, சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர். #Rameswarambullets
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே கடற்கரை கிராமமான தங்கச்சி மடத்தில் ஆயுத குவியல் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தமிழ்ஈழ விடுதலைப் போராளிகள் பதுக்கியது என தெரிய வந்ததால் டெல்லி மற்றும் சென்னையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் மேல் விசாரணை நடத்த ராமேசுவரம் விரைந்துள்ளனர்.

    தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவரது வீட்டின் பின்புறம் அந்த ஆயுத குவியல் சிக்கியுள்ளது. அவர் இந்த இடத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டினார். அப்போது வித்தியாசமான சத்தம் கேட்டதால் புதையலாக இருக்கும் என கருதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசாரும் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த இடத்தை அகலப்படுத்தி தோண்டினார்கள். அப்போது ஆயுத புதையல்கள் இருப்பது தெரிய வந்தது. அவை வெடிக்கக் கூடிய அபாயம் இருப்பதால் போலீசார் உஷாராகி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றினார்கள்.

    அதன்பிறகு தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் சிறிய இரும்பு பெட்டிகளாக சிக்கின. அதனை போலீசார் பாதுகாப்புடன் திறந்து பார்த்தபோது அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பது தெரிய வந்தது.



    தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றிலும் தோண்டினார்கள். நள்ளிரவு வரை தோண்டும் பணி நீடித்தது. அப்போது குவியல் குவியலாக ஏராளமான ஆயுதங்கள் சிக்கின. அவற்றை போலீசார் மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்து ஆய்வு செய்தனர். என்னென்ன ஆயுதங்கள் சிக்கின என்ற விவரங்களை கணக்கெடுத்தனர்.

    400 அதிநவீன கை எந்திர துப்பாக்கி குண்டுகள், 5 ஆயிரத்து 500 சின்ன துப்பாக்கி குண்டுகள், 4 ஆயிரத்து 928 எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி குண்டுகள், 199 அடுக்கடுக்கான செனைட்டர் சிலாஸ் குண்டுகள், 20 எம்.5-302 ரக துப்பாக்கி குண்டுகள், 87 சிக்னல்ஸ் ரவுண்டு குண்டுகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் இருந்தன.

    வெடிகுண்டுகளை வெடிக்க பயன்படுத்தும் 8 ரோல் வயர்கள் (சிறியது-4, பெரியது-5), 20 கண்ணிவெடிகள், 11 பாக்கெட் கன் பவுடர், 15 கையெறி குண்டுகள் போன்றவையும் பதுக்கப்பட்டு இருந்தது.

    கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் பூமியில் புதைக்கப்பட்டு சுமார் 30 முதல் 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இலங்கையில் தமிழ் அமைப்புகளுக்கும், இலங்கை அரசுக்கும் நடைபெற்ற போரின்போது 1983-ம் ஆண்டு தமிழகத்தில் தமிழ் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    ராமேசுவரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். உள்பட பல்வேறு தமிழ் ஈழப் போராளிகள் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

    1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் பயிற்சி நிறுத்தப்பட்டு போராளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அப்போது அவர்கள் தங்கள் கைவசம் வைத்திருந்த துப்பாக்கி குண்டுகள் மற்றும் ஆயுதங்களை மண்ணில் புதைத்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குவியலாக எடிசன் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. அந்த துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடி குண்டுகள் செயல் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை மற்றும் டெல்லியில் இருந்து அதிகாரிகள் ராமேசுவரம் விரைந்துள்ளனர்.

    அவர்கள் ஆய்வு நடத்திய பிறகே கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் செயல்பாட்டில் உள்ளதா? செயலிழந்து விட்டனவா? என்பது தெரிய வரும்.

    ஆயுதங்களின் தன்மையை கண்டறிய வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். ஆயுத குவியல் வைக்கப்பட்டுள்ள வீட்டைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆய்வுப் பணி முடியும் வரை நெருங்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ஆய்வு முடிந்ததும் ஆயுத குவியல்கள் கியூ பிராஞ்ச் போலீஸ் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிகிறது.

    தமிழ்ஈழ விடுதலைப் போராளிகள் பல வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி இலங்கை ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தினார்கள்.

    தற்போது சிக்கி இருக்கும் ஆயுதங்களின் அடையாளங்கள் மூலம் அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆயுத குவியல் சிக்கியது பற்றி போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் பூமியில் புதைக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம் என தெரிகிறது.

    கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் செயல்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அந்த ஆயுதங்கள் எங்கு தயாரிக்கப்பட்டது? எப்போது தயாரிக்கப்பட்டது? என்பது குறித்தும் விவரம் சேகரிக்கப்படும். அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்.

    ஆயுதங்களை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். டெல்லியில் இருந்தும் வர உள்ளனர்.

    1983-ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் பல்வேறு தமிழ் ஈழப்போராளிகள் ஆயுதப் பயிற்சி எடுத்துள்ளனர். எனவே அவர்கள் தான் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே மதுரையில் இருந்து வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போலீசார் தங்கச்சிமடம் சென்றனர்.

    கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளின் செயல்திறன், அவற்றை செயல் இழக்க வைப்பது போன்றவை குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் வெடிகுண்டுகள் ஆய்வு செய்யப்பட்டன.

    எடிசன் வீட்டை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் இது போன்று வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டு உள்ளனவா? என்பது குறித்தும், நவீன கருவிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. #Rameswarambullets

    ராமேசுவரத்தில் வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமதீர்த்தம், வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 51). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று பாண்டி தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இன்று காலை வீடு திரும்பிய பாண்டி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் ராமேசுவரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன.

    கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் 4-வது நாளாக பலத்த சூறாவளி வீசுகிறது. இதனால் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகிறது.
    ராமேசுவரம்:

    வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவக் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தீவுப்பகுதியான ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    ஆங்காங்கே மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் ரெயில்களும் பாம்பன் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காற்றின் வேகம் குறைந்த பின்னர் மெதுவாக இயக்கப்பட்டன.

    4-வது நாளாக இன்றும் சூறாவளியின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகள் மணலால் மூடப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    இன்றும் பாம்பன் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    ராமேசுவரத்தில் விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்யக்கூடாது மற்றும் புகைப்படம் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி 90 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலம் நீங்க இன்னும் சில நாட்களே இருப்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரிப்பு செய்து தயார்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை வருடந்தோறும் மீன்பிடி தடைக்காலம் முடியும் நேரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அப்போது விசைப்படகுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நீளம், அகலம், என்ஜின் திறன், அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? போன்றவை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறு சான்றிதழ் பெற்ற விசைப்படகுகள் மட்டுமே கடலுக்குள்ள அனுமதிக்கப்படும்.

    அதன்படி இன்று ராமேசுவரத்தில் விசைப்படகுகளை ஆய்வு செய்ய மீன்வளத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள விசைப்படகுகளை ஆய்வு செய்ய சென்றனர்.

    அப்போது திடீரென்று விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்யக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியாமல் திரும்பிச்சென்றனர்.

    இதுதொடர்பாக ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    ×