search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது"

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உள்ளார். தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றித் தரும் போது அதனை கூட்டணியில் சேர்த்ததில் என்ன தவறு? ஊழல் செய்ததற்காக ஆட்சியை பறி கொடுத்த ஒரே கட்சி இந்தியாவில் தி.மு.க. மட்டும்தான். தற்போது உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் நடக்காததற்கும் தி.மு.க.தான் காரணம்.

    ஆனால் இதனை மறைத்து ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி வருகிறார். பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. அவரது மகன் எப்படி இருப்பார்? மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.



    ஊழல் இல்லாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு? மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறோம்.

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருகிறது. அதனை தமிழக அரசு சட்டப்படி தடுத்து நிறுத்தியது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேகதாது என்பதற்கு பதிலாக மீத்தேன் என அமைச்சர் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    மேலும் அவர் பேசுகையில் மத்திய மந்திரி விஜய் கோயல் எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வுடன் பேசி வருகிறார் என்றார். பியூஸ் கோயல் என்பதற்கு பதிலாக விஜய் கோயல் என கூறியதால் தொண்டர்களிடம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார் என உங்களிடம் பொய்சொல்லிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

    மற்றொரு கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டனர் என்றார்.

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன்சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றார்.

    வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை அடிக்கடி பிரதமர் நரசிம்மராவை சந்தித்து வருகிறார் என்றார். அந்த கூட்டத்திலும் பிரதமர் பெயரை மாற்றி கூறினார். இதுபோல பல்வேறு கூட்டங்களில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் பேசிய சர்ச்சை கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    கர்நாடக அரசை கண்டித்து ஓசூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேகதாதுவை முற்றுகையிடும் போராட்டத்தை 3-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் கூறினார். #MekedatuDam
    தஞ்சாவூர்:

    தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் 79 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்ததாக 41 லட்சத்து 33 ஆயிரத்து 878 மரங்கள் சாய்ந்துள்ளதாக அரசு தரப்பில் அறிவித்துள்ளனர். கணக்கெடுப்பை குறைந்து காண்பிக்கும்படி கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.500 மட்டுமே நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    கர்நாடக அரசு திட்டமிட்டு தமிழகத்தை பாலைவனமாக்க நினைக்கிறது. மேகதாதுவில் அணை கட்டுவது மின்சாரம் தயாரிக்க என்றும், கடலில் வீணாகும் தண்ணீரை அணையில் சேமித்து அந்த தண்ணீர் முழுவதும் தமிழகத்திற்கு தான் வழங்கப்படும் என்றும் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.

    மின்சாரம் தயாரிப்பதற்கு தான் என கூறுவது உண்மையானால் ராசிமணலில் அணை கட்ட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. அதற்கு பதிலாக ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்று 1997-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவேகவுடாவிடம் அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி வலியுறுத்தினார்.

    ராசிமணலில் அணை கட்டப்பட்டால் அந்த அணை தமிழகத்திற்கு சொந்தமாகும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓசூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேகதாதுவை முற்றுகையிடும் போராட்டத்தை 3-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MekedatuDam


    மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அம்மாநில அமைச்சருக்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். #MekedatuIssue #CVShanmugam
    சென்னை:

    காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி இதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. தற்போது மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மேகதாது விவகாரம் தொடர்பாக பேசி தீர்வு காண வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஆனால், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இல்லை.



    இந்நிலையில், கர்நாடக அமைச்சரின் கடிதத்திற்கு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மீறி உள்ளதால் கர்நாடகாவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என கூறியுள்ளார்.

    “தமிழக அரசின் ஒப்புதல் இன்றி காவிரிபடுகையில் கர்நாடக அரசு எந்த அணையையும் கட்டக்கூடாது. ஆனால், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகம் மீறி உள்ளது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதப்படுத்தவே கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும்” என சி.வி.சண்முகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #MekedatuIssue #CVShanmugam
    மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். #Seeman #MekedatuDam


    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணைகட்ட முனையும் கர்நாடக அரசின் செயல்திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் மத்திய அரசின் செயலானது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. தமிழர்களின் உரிமையினை மறுத்து உணர்வினை உரசிப் பார்க்கும் பா.ஜ.க. அரசின் தமிழர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

    காவிரி நதிநீர் சிக்கலில் தொடக்கம் முதலே விதிகளை மீறிப் பல்வேறு அணைகளைக் கட்டியும், நிர்ணயிக்கப்பட்டதைத் தாண்டிப் பாசனப் பரப்பைப் பலதருணங்களில் விரிவுப் படுத்தியும் அராஜகப் போக்கைக் கையாண்டு வந்தது கர்நாடக அரசு.

    அதுமட்டுமல்லாது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஒரு ஆண்டுகூட செயல்படுத்தாமல் இருந்த தோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் பொருட்படுத்தவில்லை.இதனால் காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழர்களுக்கு எட்டாக் கனியாக மாறிப்போனது.

    மத்திய அரசின் பாரா முகத்தாலும் கர்நாடக அரசின் தொடர் தமிழர் விரோதப் போக்காலும், முப்போகம் விளைவித்த காவிரிப் படுகையின் வேளாண் பெருங்குடி மக்கள் இன்றைக்கு ஒருபோக விளைச்சலுக்கும் வழியின்றி வேளாண்மையைக் கைவிடுவதும், தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதுமானப் பெருந்துயரம் இம்மண்ணில் பன்னெடுங் காலமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டிவிட்டால் சொட்டு காவிரி நீரும் இனி தமிழகத்திற்கு இல்லை எனும் பேராபத்து நிலை உருவாகும். அதன்மூலம், காவிரிப்படுகையின் வேளாண் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டு முழுமையாக வெளியேற்றி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எரிகாற்று வளங்களை நீரியல் விரிசல் முறையில் மண்ணைப் பிளந்து எடுத்துப் பொருளீட்டலாம் எனும் பெரும் வணிக சதி இதனுள் ஒளிந்திருக்கிறது. இந்த திட்டங்களை இனியும் அனுமதிக்க மாட்டோம்.

    தமிழர்களின் உணர்வினை மதித்து காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அளித்திருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.கர்நாடக அரசின் செயலைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Seeman #MekedatuDam

    மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் மேகதாதுவில் புதிய அணை விரைவாக கட்டப்படும் என்றும், தமிழகத்திற்கு இதுவரை 310 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
    பெங்களூரு:

    கர்நாடக மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 67 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டுவோம். அதில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு போக மீதமுள்ள நீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்.

    காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தமிழகத்திற்கு நீர் வழங்க முடியும். 4 ஆயிரம் ஏக்கர் நிலம் அணை தேக்க நீரில் மூழ்கும். இதில் வனம், வருவாய் மற்றும் விவசாய நிலங்கள் அடங்கும். நடப்பு ஆண்டில் இதுவரை 310 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த காலக்கட்டத்தில் 82 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்துவிட்டு இருக்க வேண்டும். ஆனால் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    புதிய அணை கட்ட ரூ.6,000 கோடி நிதி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் நோக்கத்திற்காக தான் மேகதாதுவில் மாநில அரசு அணை கட்டுகிறது. மேகதாதுவுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளோம்.

    இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
    ×