search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனர்கள்"

    விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைத்தால் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில், டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராஜன் முன்னிலையில் நடந்தது.

    டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கான பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

    சென்னை உயர்நீதிமன்ற வழக்குகளில் வழங்கிய இடைக்கால உத்தரவின் அடிப்படையில் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் போன்றவைகளால், சாலையினை பயன்படுத்துவோர் மற்றும் வாகன ஒட்டிகளிடம் கவன சிதறலை ஏற்படுத்துவதாலும் சாலையினை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாலும் விருதுநகர் மாவட்டத்திலுள்ள இணைப்புச் சாலைகள், சாலை சந்திப்புகள் பிளாட்பாரங்கள், நடைபாதைகள் மற்றும் மாவட்டத்திலுள்ள முக்கிய சாலைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை அருகில் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவற்றில் அங்கீகாரம் பெற்ற மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் சார்பில் அனுமதியின்றி டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தேவையான சமயங்களில் மட்டும் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும். எந்த இடத்தில் வைக்க வேண்டும், யாரிடம் அனுமதி பெற வேண்டும், அவற்றை எப்பொழுது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அனைவரும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுவதால், வெளிப்படை தன்மை உள்ளது.

    எனவே, விருதுநகர் மாவட்டத்தில் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து முறையாக அனுமதி பெற வேண்டும். அச்சக உரிமையாளர்கள் டிஜிட்டல் போர்டு, பிளக்ஸ், விளம்பர பதாகைகள் பிரிண்ட் செய்ய வரும் நபர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும்.

    விதிகளுக்கு முரணாக பேனர், விளம்பர பதாகைகள் மற்றும் பிளக்ஸ் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ. 5000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறை தண்டனை ஆகிய இரண்டும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், அனைத்து கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், விளம்பர அச்சக உரிமையாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள், காவல் துறையினர்கள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றக் கூறிய டிராபிக் ராமசாமியை அரசியல் கட்சியினர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #trafficRamasamy

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிக்கு நேற்று மாலை டிராபிக் ராமசாமி காரில் வந்தார். திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் பேனர்களை கண்டவுடன் டிராபிக் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அங்கிருந்த பேனர்களை தனது செல்போன் மூலம் படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.

    இதுகுறித்த தகவல் அங்கு பரவியதால் திருவையாறு கடைவீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி கேள்விப்பட்டதும் திருவையாறு போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு பேனருக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளையும், கம்புகளையும் அகற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார். இதனால் பேரூராட்சி பணியாளர்கள் அந்த கட்டைகளை அப்புறப்படுத்த முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டிராபிக் ராமசாமியை தாக்க முயன்றனர். உடனே அவருடன் வந்த பாதுகாப்பு போலீசார், டிராபிக் ராமசாமியை பத்திரமாக அவரது காருக்கு அழைத்து சென்றார்.

    அப்போது டிராபிக் ராமசாமி ஆவேசமாக, என்னை தாக்க முற்பட்டவர்கள் மீதும், கொலை செய்வதாக கூறியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டை செல்வேன் என்று கூறினார்.

    இந்த சம்பவத்தால் திருவையாறு கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து டிராபிக் ராமசாமி பாபநாசம் பகுதிக்கு சென்றார். ஆனால் அவர் வருவதை தகவல் அறிந்து பாபநாசம் கடை வீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை போலீசாரே இரவோடு இரவாக அகற்றினர். #trafficRamasamy

    சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி பேனர்கள் வைப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #BanOnBanners #TN
    சென்னை:

    தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாமல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி கூடுதல் மனுக்களையும்  தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பேனர் விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை என கண்டனம் தெரிவித்தனர். மேலும், பேனர் வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் இணைய வேண்டியதுதானே என்றும் கேள்வி எழுப்பினர்.

    இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார்.

    இந்நிலையில் பேனர் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.



    சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக பேனர் வைக்கக் கூடாது. விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் பின்பற்றுவோம் என தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். #BanOnBanners #TN
    பொதுஇடங்களில் பேனர்கள் வைக்கும் விவகாரத்தில் 6 மாதத்திற்குள் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Highcourt

    சென்னை:

    ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்களை வைக்கின்றனர். நடக்கக்கூட முடியாத அளவுக்கு நடைபாதைகளில் பேனர்களை வைக்கின்றனர்.

    இவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. கூட்டு சேர்ந்து அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, அனுமதிப் பெற்று பேனர் வைத்தாலும், அந்த அனுமதியை யார் வழங்கியது? எத்தனை நாட்களுக்கு அந்த பேனர் வைத்துக் கொள்ளலாம்? என்பது உள்ளிட்ட விவரங்கள் அந்த பேனரில் அச்சிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆஷா ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர், ‘பொதுஇடங்களில் பேனர்கள் வைப்பதற்கு முன்பு சென்னை மாவட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கினார். இப்போது மாநகராட்சி அனுமதி வழங்குகிறது. எனவே, அந்த பேனரில், எந்த அதிகாரி பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கினார்? எத்தனை நாட்கள் பேனர் வைக்கலாம்? அந்த பேனரில் அளவு எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அந்த பேனரின் கீழ் பகுதியில் அச்சிட்டிருக்க வேண்டும். இதற்காக, சென்னை நகர நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை 6 மாதத்துக்குள் கொண்டு வர வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #Highcourt

    ×