search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டர்கள்"

    தொண்டர்கள் நன்கொடையில்தான் பா.ஜனதாவை நடத்த வேண்டும் என பா.ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #BJP #Donation #AmitShah
    புதுடெல்லி:

    டெல்லியில், தீனதயாள் உபாத்யாயா நினைவு தினத்தையொட்டி, பா.ஜனதா ஊழியர்கள் கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் அமித் ஷா பேசியதாவது:-

    தொண்டர்கள் நன்கொடையில்தான் பா.ஜனதாவை நடத்த வேண்டும். தொண்டர்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை கட்சிக்கு தர வேண்டும். ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 பேராவது, தலா ஆயிரம் ரூபாயை பிரதமரின் ‘ஆப்’ மூலமாகவோ, காசோலை மூலமாகவோ நன்கொடையாக அளிக்க வேண்டும்.

    அதை விட்டுவிட்டு, பண முதலைகள், கட்டுமான அதிபர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் நன்கொடையை சார்ந்து இருந்தால், நமது லட்சியம் களங்கப்பட்டு விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் இலவசமாக முடித்திருத்தம் செய்யும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தொண்டர்கள், தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். #Telangana #TRS
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்தந்த கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், மக்களை ஈர்ப்பதற்கான வேலைகளும் நடந்துகொண்டே இருக்கிறது.

    அதன்படி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தீவிர தொண்டர்களான முடித்திருத்தம் செய்யும் தொழிலாளிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்கிறார்களாம். அதற்கு பதிலாக வரும் தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு வாக்களிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடப்படுகிறது.

    தேர்தல் நெருங்கும் சமயங்களில், இலவசம் இலவசம் என கட்சிகளின் அறிவிப்பு பழகிய ஒன்றாக இருந்தாலும், இப்போது இதுபோன்ற தீவிர தொண்டர்களின் நடவடிக்கைகள் சற்று சுவாரஸ்யமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. #Telangana #TRS
    விசாரணை செய்யாமல், விளக்கம் எதுவும் கேட்காமல் உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று நீக்கப்பட்ட 7 பேரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஏற்பட்ட கோஷ்டி மோதலை தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி தலைவர் ஏ.வி.எம்.ஷெரீப், வில்லிவாக்கம் பகுதி முன்னாள் தலைவர் வில்லிவாக்கம் ஜான்சன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் பொன் மனோகரன், திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் தலைவர் கடல் தமிழ்வாணன், மயிலை பகுதி முன்னாள் தலைவர் முரளிதரன், மத்திய சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாச மூர்த்தி, வடசென்னை மாவட்ட முன்னாள் பொது செயலாளர் டி.பி.பாஸ்கரன் ஆகிய 7 பேரையும் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் நீக்குவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில் நீக்கப்பட்ட 7 பேரும் இன்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறி இருப்பதாவது:-

    சத்தியமூர்த்திபவனில் நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்டத் தலைவர்கள் அல்லாத சிலரும் இந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இதைப் பார்த்து அனைவரையும் அனுமதிப்பதாகக் கருதி நாங்களும் கூட்ட அரங்கிற்குள் சென்றோம். எங்களைப் பார்த்த உடன் வேண்டுமென்றே வெளியேறும்படி சத்தம் போட்டார்கள்.

    பாரதிய ஜனதா, அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களெல்லாம் அரங்கின் உள்ளே இருக்கும்பொழுது காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் ஏன் உள்ளே வரக் கூடாது எனக் கேட்டுவிட்டு வெளியேறிவிட்டோம்.

    வெளியேறிய எங்களை கட்சிக்கே சம்பந்தம் இல்லாத திருநாவுக்கரசரின் கார் ஓட்டுநர் தகாத வார்த்தைகளை பேசி சட்டையை பிடித்து இழுத்து அடித்தார். உடனே அங்கே வந்த திருநாவுக்கரசர் எங்களைப் பார்த்து கடும் சொற்களால் மிரட்டினார்.

    அப்போது பாரதிய ஜனதாவிலிருந்து வந்த வீரபாண்டியன் என்பவர் எங்களை தாக்கினார். இதைக் கேள்விப்பட்டு அரங்கில் உள்ளிருந்து வெளியே வந்த இளங்கோவன் எங்களை அமைதியாக செல்லும்படி அறிவுறுத்தினார். நாங்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.

    ஆனால் எந்த விசாரணையும் செய்யாமல், எந்தவித விளக்கமும் எங்களிடம் கேட்காமல் எங்களை கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்கியுள்ளதாக மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இந்த நீக்கத்தைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்சய்தத், சென்னா ரெட்டி ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளோம். ஆகவே, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வந்த திருநாவுக்கரசர் கட்சியை உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை நீக்கியது எந்தவிதத்திலும் செல்லாது. நாங்கள் எப்போதும் போல காங்கிரஸ்காரர்களாவே தொடர்ந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த திங்கட்கிழமை கவலைக்கிடமாக மாறியதுமே பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர்.

    மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அவர் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் வெளி மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்னைக்கு வரத் தொடங்கினார்கள். அன்று மாலை 6 மணிக்கு கருணாநிதி மரணம் அடைந்த தகவல் பரவியதும் மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    அன்றிரவு கருணாநிதி உடலை வீட்டுக்கு கொண்டு செல்லவே 1½ மணி நேர பயணத்தை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அதற்கு காரணமே வெள்ளம் போல திரண்டு விட்ட தி.மு.க. தொண்டர்கள்தான். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் “வீர வணக்கம், வீர வணக்கம்... கலைஞருக்கு வீர வணக்கம்” என்று முழங்கியபடி சென்றது உணர்ச்சிமயமாக இருந்தது.


    புதன்கிழமை காலை முதல் மதியம் வரை தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கருணாநிதி உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், பொதுமக்கள் ராஜாஜி ஹாலுக்கு படையெடுத்தனர். அண்ணாசாலை வழியாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சிவானந்தா சாலை வழியாக மக்கள் வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அந்த இரு சாலைகளிலும் திரும்பிய திசையெல்லாம் மனித தலையாக, மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.

    மதியம் பொதுமக்கள் வருகை கணிசமாக அதிகரித்தது. கருணாநிதி இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக வரும் என்பது தெரிய வந்ததும் லட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியே குலுங்கியது.

    பிற்பகலிலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் அலை, அலையாக வந்தபடி இருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த போலீசார் கடும் சவாலை சந்தித்தனர். இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் முண்டியடித்ததால் நெரிசல் உருவானது.

    இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது.



    மாலை 4.30 மணிக்குப் பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கியதும் தொண்டர்களும் அலை, அலையாக பின் தொடர்ந்து அணிவகுத்து வந்தனர். இதற்கிடையே லட்சக்கணக்கான தொண்டர்கள் கடற்கரை சாலையில் குவிந்தனர். இதனால் நேற்று மாலை அந்த பகுதியும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. அவர்கள் அனைவரும் கருணாநிதி உடலுக்கு இறுதி சடங்குகள் முடியும் வரை தலைவா..... தலைவா.... என்று விண்ணதிர கோ‌ஷமிட்டப்படி இருந்தனர்.

    கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டு இரவு 7.30 மணிக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். தொண்டர்கள் முழுமையாக கலைந்து செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது.

    லட்சக்கணக்கான மக்கள் வருகையால் கருணாநிதி இறுதி ஊர்வலம் மறக்க முடியாத ஊர்வலமாக மாறியது. இந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீஸ் தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக தி.மு.க. வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. #DMKLeader #Karunanidhi #KarunanidhiFuneral

    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ஈரோடு:

    தி.மு.க.தலைவர் முதுபெரும் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி மறைவு தமிழக மக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

    கருணாநிதி மறைந்தார் என்ற செய்தியை தமிழர்களால் இன்னும் நம்பமுடியவில்லை.

    சென்னைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே என ஈரோடு மாவட்ட மக்கள், தி.மு.க. தொண்டர்கள், தமிழ்பால் பற்றுள்ளவர்கள் தங்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊர்களிலும் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அத்தாணி, பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, தாளவாடி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர், டி.என்.பாளையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் கலைஞருக்கு இதய அஞ்சலி செலுத்துவதற்காக அடைக்கப்பட்டன.

    பல கடைகள் முன் வியாபாரிகள் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி வைத்திருந்ததை காண முடிந்தது.

    அத்தியாவசியமான பொருளான பால் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு உள்பட அனைத்து ஊர்களிலும் ரோட்டோரங்களில் வேன் மூலம் பால் விற்பனை செய்து வந்தனர்.மேலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

    பொது மக்கள் மற்றும் தி.மு.க.தொண்டர்கள் ஆங்காங்கே கூடி நின்று கருணாநிதி பற்றியே பேசிக் கொண்டே இருந்தனர்.

    ஈரோடு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கிடந்ததால் கடை வீதிகள் மற்றும் முக்கிய இடங்கள் வெறிச்சோடி போய் கிடந்தன. ஒவ்வொருவர் வீட்டிலும் தங்கள் வீட்டில் ஒரு பெரியவர் காலமானதை போல் நினைத்து பாகுபாடின்றி தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் அவரது படத்துக்கு தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பல இடங்களில் திமுக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    விழுப்புரம்:

    தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மரணம் அடைந்தார்.

    இதையொட்டி துக்கத்தை அனுசரிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சாலையோரங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. விழுப்புரம் வண்டிமேடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கருணாநிதி உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கு தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெண்கள் கதறி அழுதனர். ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். விழுப்புரம் மாவட்டமே சோகமயமாக காட்சியளித்தது. கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஏராளமான தி.மு.க.வினர் வாகனங்களில் சென்றனர்.

    கருணாநிதி மறைவையொட்டி விழுப்புரத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் புதிய பஸ் நிலையம் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தது. சிலர் படிக்கட்டில் தொங்கியபடியே சென்றனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    இறுதி ஊர்வலத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி காத்து கருணாநிதிக்கு இறுதி வணக்கம் செலுத்தும்படி திமுக தலைமைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. #DMK #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-



    திமுக  தலைவரும் தமிழின தலைவருமான கலைஞரின் புகழுடன் தாங்கிய இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு, சிவானந்தா சாலை வழியாக தந்தை பெரியார் சிலையைக் கடந்து, பேரறிஞர் அண்ணா சிலை வந்தடைந்து, அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

    கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் இறுதி ஊர்வலத்தில் அமைதி காத்து, தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞருக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. #DMK #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral 
    கருணாநிதி உடல்நிலை குறித்து ‘காவேரி’ மருத்துவமனையில் இருந்து தெரிவிக்கப்படும் தகவலுக்காக தொண்டர்கள் தூக்கத்தை தொலைத்தும் தொடர்ந்து காத்திருக்கிறார்கள். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    விதியே இது என்ன சோதனை....?

    ஓய்வறியாத சூரியனை ஒற்றை அறைக்குள் முடக்கினாய். வயது மூப்புதான். ஆனாலும் எங்களை விட்டு அவர் பிரிவதை மனம் ஒப்பவில்லையே!

    எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திய கருணாநிதியின் உடல் நிலையிலும் அதிசயிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன.

    மீண்டு வருகிறார் கலைஞர் என்ற சேதி கேட்டு தொண்டர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. விழி திறந்தார் என்றதும் தொண்டர்கள் விழிகளில் ஆனந்தக் கண்ணீர்!

    வருவார் நம் தலைவர். மீண்டும் அவரது காந்தக் குரலை கேட்கும் காலம் வரும் என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.

    தேறி வருகிறார் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு ‘கருணாநிதி கவலைக்கிடம்’ என்று வந்த தகவல் இடியாய் தாக்கியது.



    மீண்டும் காவேரி நோக்கி ஓடி வந்தார்கள். ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் திரண்டு விட்டனர்.

    இருண்டுபோன நேரம் அவர்களுக்கு தெரியவில்லை. ‘அரசியலில் எவ்வளவோ ‘கெடு’ விதித்த கலைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் ‘கெடு’ என்றதும் தொண்டர்கள் மனம் நொறுங்கி போனார்கள்.

    விடிய விடிய ஆஸ்பத்திரி வாசல். போக்குவரத்து மாற்றப்பட்டதால் சாலைகளில் அமர்ந்தும், படுத்தும் நேரத்தை போக்கி கொண்டிருக்கிறார்கள்.

    தூக்கத்தை தொலைத்த கண்கள். பசியால் உடல் சோர்ந்தாலும் இடைவிடாமல் ‘வா.... வா.... தலைவா....’ என்று உரக்க குரல் எழுப்பி வருகிறார்கள்.

    வயது மூப்பு தவிர்க்க முடியாததுதான். ஆனால் எங்கள் ஆசைக்காக எங்கள் தலைவரை இன்னும் கொஞ்ச நாள் எங்களிடம் விட்டு வை என்று தொண்டர்கள் ஏங்குகிறார்கள்.

    குடும்பத்தோடு வந்தவர்கள்... வீட்டில் கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு பதறியடித்துக் கொண்டு வந்த பெண்கள்.... மனைவி, குழந்தைகளை வீட்டில் இருக்க சொல்லி விட்டு வந்த ஆண்கள், வேலைகளை விட்டு விட்டு ஓடோடி வந்த இளைஞர்கள், இளம்பெண்கள்.....



    காவேரி வாசலில் திரண்டிருக்கும் கூட்டம் வடிக்கும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கலைஞர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது இதுதான்!

    ஆண்டவனே உன்பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன். இந்த ஓருயிரை நீ வாழ வைக்க உன்னிடம் கையேந்தினேன்.. மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!

    இன்று மாலைதான் எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவமனை கூறி விட்டது.

    ‘கலைஞர் எப்படி இருக்கிறார்?’ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டார்களா? சென்று வருவோர், போவோரை ஓடி ஓடி சென்று கேட்கிறார்கள்.

    கோவையைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஜெனிபர். போரூரில் தங்கி இருந்து வேலை பார்க்கிறார். கலைஞர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும் அவரது தந்தை சென்னை விரைந்துள்ளார். தந்தையும், மகளுமாக இன்று அதிகாலையில் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டனர். ஜெனிபர் கூறியதாவது:-

    கலைஞர் எனக்கு தாத்தா மாதிரி. அவரால்தான் நான் படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அவர் உடல்நிலை கவலைக்கிடம் என்றதும் தாங்க முடியவில்லை.

    அவர் எப்படி இருக்கிறார் என்று யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க. ரொம்ப சங்கடமாக இருக் கிறது. அவரது நிலையை அறியாமல் இங்கிருந்து போக மனமில்லை.

    அனிதா (கொளத்தூர்): நேற்று மாலையில் கேள்விப்பட்டதும் அவசர அவசரமாக வந்து விட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    டாக்டர்கள் 24 மணி நேரம் கெடு சொல்லி இருக்கிறார்கள். கடவுளை நம்பி இருக்கிறோம். அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை உள்ளது.

    வரலெட்சுமி (கொளத்தூர்):- எனக்கு உடம்புக்கு சரியில்லை. வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தேன். கலைஞர் கவலைக்கிடம் என்றதும் புறப்பட்டு வந்தேன்.

    பத்து நாளாக ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவருக்கு வயசு மூப்பு மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். தலைவருக்கு அப்படி எதுவும் வராது. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து கை அசைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன்.

    கோமளவள்ளி (திருவொற்றியூர்):- கருணாநிதிக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு வில்பவர் அதிகம். ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “100 வயது வரை உயிரோடு இருப்பேன். அதற்கு முன்பு எனது உயிர் போனாலும் தமிழுக்காக உயிர் போகும்” என்றார். அவர் போராட்டக்குணம் கொண்டவர். மரண போராட்டத்தில் இருந்து மீண்டு வருவார்.

    அம்மு (ஆயிரம்விளக்கு):- என் குடும்பமே தி.மு.க. குடும்பம். கருணாநிதி உடல்நிலை பற்றி கேள்விபட்டதும் எங்களால் சாப்பிட முடியவில்லை. அவர் உடல்நலத்துடன் இருந்தாலே போதும். அவருக்கு நேற்று மீண்டும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்று கேள்விபட்டதும் தூக்கம் வரவில்லை. குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இன்று அதிகாலையிலே வந்து விட்டோம்.

    ரூபன் (சேலம்):- நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்து கேள்விபட்டதும் ரெயில் ஏறி சென்னை வந்து விட்டேன். கருணாநிதி மக்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். பெண்களுக்கு சொத்து உரிமை கிடைக்கும்படி செய்தவர். அவரால் நிறைய பேரின் சமூக அந்தஸ்து உயர்ந்துள்ளது. அவரை எப்படியாவது பார்க்கவே வந்தேன். அவர் நலமுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    கல்லை பெரியசாமி (பெரம்பலூர்):- கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்ததும் தூங்க முடியவில்லை. தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர் கலைஞர். அவருக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். அவரிடம் எந்த மனு கொடுத்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். அனைத்து ஜாதியினரையும் அரவணைத்து செல்லக் கூடியவர். அவர் எப்போது அறிவாலயம் வருவார், உடன்பிறப்பே என்று எப்போது அழைப்பார் என்று காத்து கொண்டிருக்கிறேன். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்விழித்து பேசுவது போன்ற படம் வெளியானதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தொண்டர்களின் கூட்டம் குறைந்ததால் ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து சீரானது. #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 27-ந்தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் கருணாநிதி உடல் நிலையை கண்காணித்து வருகிறது.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட குடும்பத்தினர் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதி உடல்நிலை குறித்து தெரிவித்து வருகிறார்கள். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதி உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து வருகிறார்கள்.

    கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதில் இருந்தே தி.மு.க. தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினார்கள். 5 நாட்களாக இரவு பகல் பாராமல் ஆஸ்பத்திரி அருகிலேயே காத்துக் கிடந்தனர். கருணாநிதியை பார்த்துவிட்டு வரும் முக்கிய பிரமுகர்கள் ‘கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது’ என்று கூறினார்கள்.

    என்றாலும், தொண்டர்கள் அந்த இடத்தில் இருந்து நகரவில்லை. வெளியூர் தொண்டர்களும் வரத் தொடங்கியதால் ஆஸ்பத்திரி பகுதியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடல்நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நிலைமையை சமாளிக்க ஆஸ்பத்திரி முன்பு பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு வதந்திகள் பரவின. உண்மைநிலை என்னவென்று தெரியாமல் தொண்டர்கள் தவித்தனர். ‘கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் சீராகி விட்டது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

    இதை உறுதிபடுத்தும் விதத்தில் காவேரி ஆஸ்பத்திரியும் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிப்பதால் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று சென்னைக்கு வந்து கருணாநிதியை பார்த்தார்.


    இதையடுத்து ராகுல்காந்தி நேரில் கருணாநிதியை பார்த்தது போன்ற புகைப்படம் வெளியானது. இதில் கருணாநிதியின் காது அருகே மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது கருணாநிதி கண்விழித்து பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. இந்த படம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    ‘தலைவர் கலைஞர் மீண்டு வந்துவிட்டார்’ என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள். அதைதொடர்ந்து காவேரி ஆஸ்பத்திரி வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இன்னும் சில தினங்கள் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் தொண்டர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே தொண்டர்கள் குவிந்ததால் அந்த ஆஸ்பத்திரி அமைந்துள்ள லஸ் சர்ச் சாலையில் தடுப்புவேலி அமைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நேற்று கருணாநிதி கண்விழிப்பது போன்ற படம் வெளியானதால் தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர். இதனால் அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் கலைந்து சென்றனர். கூட்டம் குறைந்ததை அடுத்து தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டன. ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து சீரானது. தற்போது காவேரி ஆஸ்பத்திரி பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் மீண்டும் குவிந்ததால், அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். முதலில் அவர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். உடல்நிலை பற்றி கவலையுடன் விசாரித்தனர்.

    அதன்பிறகு கடந்த 27-ந்தேதி நள்ளிரவில் திடீர் என்று உடல்நிலை மோசம் அடைந்ததால் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கோபாலபுரம் இல்லத்தில் குவிந்திருந்த தொண்டர்களும் காவேரி மருத்துவமனை சென்றனர். அங்கு 3 நாட்களாக கவலையுடன் காத்திருந்து உடல் நிலை பற்றி கேட்டறிந்து வருகிறார்கள்.

    காவேரி ஆஸ்பத்திரி முன் ஏராளமானோர் திரண்டு இருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியை பார்க்க வரும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் ஆஸ்பத்திரிக்குள் செல்ல முடியாமலும் வெளியே வர முடியாமலும் நெரிசலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

    போலீசார் கடுமையான போராட்டத்துக்கு பின் கூட்டத்தை விலக்கிவிட்டு தலைவர்களின் கார்களுக்கு வழிவிட செய்து வருகிறார்கள்.

    தொடர்ந்து அங்கு இந்தநிலை நீடிப்பதால் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி முன்கூடியுள்ள தொண்டர்களை கலைந்து போகச் சொல்லி வருகிறார்கள். போலீசார் எவ்வளவோ சொல்லியும் கூட்டம் கலைய மறுத்துவிட்டது. நேற்று இரவு திடீர் என்று அதிக அளவில் தொண்டர்கள் திரள தொடங்கினர்.


    இதை தொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரி முன் கூடியிருந்த தொண்டர்களை கலைந்து போகுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்த நேரத்தில் பொது செயலாளர் அன்பழகன் வந்த காரும் தொண்டர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டது. அவருக்கு வழிவிட சிரமம் ஏற்பட்டது. தொண்டர்கள் கலைய மறுத்ததுடன் போலீசாரின் தடுப்பு வேலியை தள்ளிவிட்டுச் சென்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

    அதன்பிறகு கூட்டம் கலையத் தொடங்கியது. இன்று காலையில் மீண்டும் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அவர்களை ஆஸ்பத்திரி கேட் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆஸ்பத்திரிக்குள் யாரையும் நுழைய விடவில்லை.

    நாலாபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் அரண்போல் நின்று இருந்தனர். முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் வேறு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    ஆஸ்பத்திரிக்கு வெளியே திரண்டுஇருக்கும் தொண்டர்கள் ‘‘ஓடிவா தலைவா...எழுந்து ஓடிவா...தலைவா’’ என்று கோ‌ஷம் எழுப்பியவாறு இருந்தனர். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    காவேரி மருத்துவமனை முன்பு கூடியிருந்த தொண்டர்களில் சிலர் கருணாநிதி குணம் அடைய வேண்டி மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தினார்கள். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ரத்த அழுத்த பிரச்சனையும், சிறுநீரக தொற்றும் இருப்பதால் அதை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரி முன் தொண்டர்கள் கவலையுடன் 3 நாட்களாக திரண்டு இருக்கிறார்கள். கருணாநிதி நலம்பெற வேண்டி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் காவேரி ஆஸ்பத்திரி முன்பு கூடியிருந்த தொண்டர்களில் சிலர் கருணாநிதி குணம் அடைய வேண்டி ஆஸ்பத்திரி அருகே மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தி வருகிறார்கள்.

    அவர்கள் காலை நேரத்தில் வரிசையாக அமர்ந்து போட்டி போட்டு மொட்டை அடித்தனர். #DMKLeader #Karunanidhi #KauveryHospital

    உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #Karunanidhi #Dmk
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்த நிலையில், டிசம்பர் மாதம் 1-ம் தேதி அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற கருணாநிதி அதன்பிறகு வீடு திரும்பினார்.

    இதற்கிடையே, டிசம்பர் மாதம் 15-ம் தேதி மூச்சு திணறல் காரணமாக கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எளிதாக மூச்சு விடுவதற்காக தொண்டையில் ‘டிரக்கியாஸ்டமி’ என்னும் செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, 9 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் பின்னர் வீடு திரும்பினார்.

    அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் கட்சிப் பணிகளை எதுவும் மேற்கொள்ளவில்லை. சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

    கடந்த 18-ம் தேதி கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த ‘டிரக்கியாஸ்டமி’ செயற்கை சுவாசக் குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து, வீட்டிலேயே அவரை வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே, கடந்த 24-ந் தேதி அவருக்கு சளித்தொந்தரவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கும் கடுமையாக சிரமப்பட்டார். இதனால், காவேரி மருத்துவமனையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் கருணாநிதிக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். அதற்காக மருத்துவமனையில் இருந்து சில மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன.

    சக்கர நாற்காலியில் கருணாநிதியால் உட்கார முடியவில்லை. இதனால், கட்டிலில் அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் நேற்று அவரது கை நரம்பு வழியாக சில மருந்துகளை செலுத்தியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் யாரையும் பகல் நேரத்தில் அவரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.

    ஆனால், மாலையில் ஒவ்வொருவராக சென்று கருணாநிதியை பார்க்க டாக்டர்கள் அனுமதித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் சார்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-



    தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.

    அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே ஆஸ்பத்திரி வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.

    கருணாநிதியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று டாக்டர் கள் கேட்டுக்கொள்கிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9.45 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.
    அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் சென்று இருந்தனர். #Karunanidhi #Dmk
    ×