search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயல்"

    செந்துறை அருகே தண்ணீரின்றி கருகிய நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி வயலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் பெரிய ஏரி. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் இல்லை. இந்த ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்த 300 ஏக்கர் நெல் சாகுபடி முற்றிலும் பாதிப்படையும் தருவாயில் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அச்சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ராயம்புரம் பெரிய ஏரியானது 364 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ளதாகும். தமிழக அரசு விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்ததால் போதிய அளவு விவசாயிகள் மண் எடுக்க முடியவில்லை. பாசன ஏரிகள் தூர்வாரப் படவில்லை.  
    364 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை உடனடியாக தூர்வாரவேண்டும்.

    பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அதற்கான இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நெல் வயல்களில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரியலூர் செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரியலூர் தாசில்தார் கதிரவன் உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
    வயல்களில் மின் வேலிகளை அமைப்பது கூடாது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழக மின்சார வாரியத்தின் அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் விபத்துக்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மின்பாதையில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால், அதனருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மின் கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ, கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ, மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி மின் வாரியத்தில் இல்லாத நபர்கள் பணி செய்யக்கூடாது. மின்தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரி செய்ய வேண்டும். மின்பாதைக்கு அருகில் கட்டிடம் கட்டும்போது போதிய இடைவெளி விட்டு பணி மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது அதன் இழுவை கம்பியிலோ கட்டக் கூடாது. உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின்கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின் வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    உர விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பாடாலூர்:

    உர விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஆலத்தூர் வட்ட துணைத் தலைவர் தங்கராஜு தலைமை வகித்தார். வட்டத் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் பச்சையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்லதுரை, மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். 

    கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர்கள் கருப்புடையார் , விநாயகம் ,வட்டத் தலைவர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் ராஜாங்கம், மாவட்டத் குழு உறுப்பினர் முருகேசன், வட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். ஆர்ப்பாட்டத்தில் உர விலையை குறைக்க வேண்டும், யூரியா எடை குறைப்பை கைவிட வேண்டும். 

    கூட்டுறவு சங்கத்தில் புதிய விவசாயக் கடன் வழங்க வேண்டும். இரூரில் பொதுப் பாதையை தனிநபர் பட்டா போட்டதை ரத்து செய்ய வேண்டும் . நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை எடுக்க வேண்டும், இரூர் காலணி தெருவில் தண்ணீர் தேங்காமல் கால்வாய் அமைக்க வேண்டும்.பெருமாள் பாளையம் ஏரியில் கிராவல் திருட்டை தடுக்க வேண்டும். பாடாலூரில் அவசர சிகிச்சைக்காக புதிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும், கிரஷர் லாரியை முறையான பாதையில் இயக்க வேண்டும் , என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கம், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    சோழவந்தான் பகுதியில் நெற் பயிர்களை எலிகள் கொய்து தின்று நாசப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க எலிகளை கொல்வதற்கு பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகிறது.

    சோழவந்தான்:

    சோழவந்தான் பகுதிகளுக்கு முல்லைபெரியாறு வைகையாற்று பாசனம் மூலம் 2 மாதங்களுக்கு முன்பு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு நெல் நடவுபணி மும்மரமாக நடந்தது.

    தற்போது நெற்பயிர்கள் கதிர்களாக (பால்பிடித்தல்) மாறும் நிலையை வந்தடைந்தது. இந்த நிலையில் நெற் பயிர்களை எலிகள் கொய்து தின்று நாசப்படுத்தி வருகிறது.

    இதனை தடுக்க எலிகளை கொல்வதற்கு பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகிறது பாரம்பரிய முறையான எலிகிட்டிகள் 1¾ அடி இடைவெளியில் வயல் வெளிகளில் அமைத்து வருகின்றனர்.

    இதுகுறித்து எலிகிட்டி அமைக்கும் பணியை மேற்கொள்ளும் சின்னான் கூறுகையில், முதல் நாள் வைக்கப்பட்ட எலிகிட்டியை மறுநாள் சென்று எடுப்போம் கிட்டிகளில் எலி சிக்கி இறந்து கிடக்கும் அவைகளை நாங்களே அப்புறப்படுத்துவோம்.

    மற்ற முறைகளை காட்டிலும் இதற்காக ஆகும் செலவு குறைவு. மேலும் எலி கிட்டி அமைத்த வயலுக்கும் எலி கிட்டி அமைக்காத வயலுக்கும் அறுவடையின் போது மகசூல் வித்தியாசம் அதிகம் என்பதை விவசாயிகள் உணரமுடியும் என்றார்.

    மேலும் விவசாய பணிகளான உரமிடுதல்களை எடுத்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போல எலி கிட்டிகள் அமைக்கும் பணியை அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை, வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், முன்னாள் பொதுச்செயலாளர் பிரபாகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நுகர்வோர் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ரமேஷ். ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு நிர்வாகி கனகராஜ், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொகுதி மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

    திருவாரூர் தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக கருத வேண்டாம். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இங்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளர்கள். அனைத்து தேவைகளும் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப் படும்.

    திருவாரூரில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திருவாரூர் விளமல் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும். ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை. தற்போது சம்பா விதைப்பு நடைபெற்று வரும் சூழலில் விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. வயல்களுக்கு தண்ணீரைகொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்-அமைச்சரின்் உத்தரவின்படி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தண்ணீர் பிரச்சினை சரியாகி விடும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 
    திருக்கனூர் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன். விவசாயி. இவரது மனைவி சங்கரி (வயது 38).

    இவர் நேற்று காரில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வயல்வெளிக்கு ஓட்டி சென்றார்.

    அப்போது வயல் வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் சங்கரி மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சங்கரியை அருகில் வயல் வேலையில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி பலியான சங்கரிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×