search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறப்பு"

    சென்னை குடிநீர் தேவைக்கு கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்படுகிறது.

    மேலும் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து பெறப்படும். தண்ணீர், பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கம், சிறுவானூர்கண்டிகை உட்பட 10 பகுதிகளில் உள்ள ராட்சத ஆழ்துளை கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரப்பு குறைந்து உள்ளது. பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பபாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும்.

    இந்த ஏரிகளில் தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சில நாட்களுக்குதான் சென்னையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி ஜதராபாத்தில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் முரளீதரன் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது தண்ணீர் திறந்து விட முடியாத என்று ஆந்திர மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.

    இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் பருவ மழை பெய்யும் என்ற நோக்கத்தில் நெற்பயிரிட்டனர். ஆனால் மழை பொய்த்து போனதால் தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் ஆந்திர அரசுக்குக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கால்வாய் வழியாகதான் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு பாய்ந்துவரும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு இன்று காலை கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கும் வந்து சேருகிறது. நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இன்று காலை வெறும் 949 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இந்த தருணத்தில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது சென்னை மக்களுக்கு ஆறுதல் தரும் வி‌ஷயமாகும்.

    கண்டலேறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 3 நாட்களில் தமிழக எல்லைக்கு வந்தடைய வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் பூண்டி ஏரிக்கு செல்லும்.

    பூண்டி ஏரியில் 3321 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 172 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பில் உள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும். கடந்த ஆண்டு 3.88 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது.

    இதற்கிடையே தற்போது கண்டலேறு அணையில் 11.257 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு, ஆடம்பரமான விழா எதுவும் இல்லாமல் இன்று திறக்கப்பட்டது. #MGRCentenaryArch
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றன. பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.



    அவர் தனது மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்ஜிஆர் வளைவை திறக்கக்கூடாது என கூறியிருந்தார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் வளைவு அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் வளைவை திறக்க தடை விதித்தனர். பின்னர், ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஐந்து நிமிட நிகழ்ச்சியாக மெரினாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர்.

    இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு கட்டுமான பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஆடம்பர விழா எதுவும் இல்லாமல் நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது. #MGRCentenaryArch

    495 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappdipalaniswami
    சென்னை:

    போரூரில் 245 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    சென்னை- சென்ட்ரல் துணை மின் நிலையம், விருதுநகர் மல்லாங்கிணர் துணை மின் நிலையம், மதுரை ஏழுமலை துணை மின் நிலையம், தருமபுரி மாம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையம்,ஈரோடு சிவகிரி துணை மின் நிலையம்,

    கரூர் ரங்கநாதபுரம் துணை மின் நிலையம், திருவண்ணாமலை அரையாளம் துணை மின் நிலையம், விழுப்புரம் ரெட்டணை துணை மின் நிலையம், கடலூர் சிறுபாக்கம் துணை மின் நிலையம்,

    வேலூர் கரிவேடுதுணை மின் நிலையம், திருநெல்வேலி ரஸ்தா துணை மின் நிலையம், தஞ்சாவூர் இ.பி.காலனி துணை மின் நிலையம், புதுக்கோட்டை பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையம் மற்றும் வல்லவாரி துணை மின் நிலையம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி துணை மின் நிலையம் என மொத்தம் 495 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தண்டையார்பேட்டையில் 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரிமாணவர் விடுதிக் கட்டடம்; பழவேற்காட்டில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம்; சிவகங்கை கிருங்காக்கோட்டையில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிமாணவர் விடுதிக் கட்டடம்,

    திருவிடைமருதூரில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம்; சாத்தமங்கலத்தில் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலப் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டிடம் மற்றும் சாத்தமங்கலத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 120 மாணவர்கள்தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவருக்கான கூடுதல் விடுதிக் கட்டடம் என மொத்தம் 8 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்கள் மற்றும் ஒரு கூடுதல் விடுதிக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகத் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மணலியில் 50 காவலர் குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 32 காவலர் குடியிருப்புகள் மற்றும் கழுகுமலையில் 6 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் 10 கோடியே 72 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 88 காவலர் குடியிருப்புகள், ராமநாதபுரம் ஆர் எஸ் மங்கலத்தில் 63 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்; தண்டை யார்பேட்டையில் காவல்துறை இணை ஆணையர் (வடக்கு) நிர்வாகக் கட்டடம் மற்றும் புதுவண்ணாரப்பேட்டையில் காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம், கரூர் ஆயுதப் படைக்கான நிர்வாகக் கட்டடம், திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படைக்கான நிர்வாகக் கட்டடம், என மொத்தம் 15 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் துறை கட்டடங்கள்,

    கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை, தருமபுரி பாலக் கோடு ஆகிய இடங்களில் 1 கோடியே 43 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள் என மொத்தம், 44 கோடியே 61 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நிதித் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் அரசுத் துறை நிறுவனத் தணிக்கைத் துறை ஆகிய துறைகளில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 215 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappdipalaniswami
    தமிழகத்தின் முக்கிய நீர் தேக்கங்களில் ஒன்றான மேட்டூர் அணையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு 2.5 லட்சம் கன அடி நீர் தற்போது திறக்கப்பட்டுள்ளது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.83 லட்சம் கனஅடியில் இருந்து 1.86 லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில், இன்று அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.95 லட்சம் கன அடியில் இருந்து 2.05 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    2005-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதே மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam
    உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். #CVShanmugam #Inaugurated
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நொனையவாடி கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குமரகுரு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு கிராம சேவை மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் வக்கீல் மணிராஜ், நகர செயலாளர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சாய்ராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், திருமால், முன்னாள் கவுன்சிலர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிவேல், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆறுமுகம், பாண்டியன், ராமசாமி, பாபு, அதையூர் சுப்புராயன், செல்வராஜ், ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.  #CVShanmugam #Inaugurated
    மதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்தது. #ChennaiHighCourt #tamilnaduGovernment
    சென்னை:

    சென்னை, திருமுல்லைவாயலில் புதிதாக மதுபான கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் கொண்ட அமர்வு, கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.



    மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளை ஏன் மதிய உணவுக்கு முன்பே திறக்கின்றனர்?, அந்த கடைகளில் வேலை நேரத்தை குறைத்தால் என்ன?, டாஸ்மாக் மதுபான கடைகளில் செயல்படும் பார்களில் தரமான உணவு விற்கப்படுகிறதா?, அந்த பார்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய உரிமங்களை பெற்றுள்ளதா? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

    அதில், சென்னையில் உள்ள டாஸ்மாக் பார்களில் 205 பார்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு உரிமம் பெறுவது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உரிமம் பெறாத பார்கள் 7 நாட்களுக்குள் உரிமத்தை பெறவேண்டும். இல்லையென்றால், அந்த பார்களின் இழுத்து மூடப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

    டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கே.செல்வராஜ், எங்கள் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் உணவு பாதுகாப்பு உரிமத்தை வாங்கிவிட்டனர். தரமான உணவு பண்டங்கள் தான் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், குடிபோதையில் சாப்பிடும் உணவு தரமானதா? என்பது குடிமகன்களுக்கு தெரியாது. அவர்கள் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும், அவர்களுக்கு நல்ல உணவு பண்டங்கள் தரமாக வழங்கப்படுகிறதா? என்பது தொடர்பாக அக்கறை எங்களுக்கு உள்ளது. எனவே, பார்களில் தரமான உணவு பண்டங்கள் விற்கப்பட வேண்டும். தரம் குறைவாக இருந்தால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    பின்னர், டாஸ்மாக் மதுபான கடையின் வேலை நேரத்தை ஏன் இதுவரை அரசு குறைக்கவில்லை. 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கடை திறந்துள்ளது. ஏன் உணவு இடைவேளைக்கு முன்பு மதுக்கடையை திறக்கிறீர்கள்?, பிற்பகல் 2 மணிக்கு மேல் திறந்தால் என்ன? என்று அரசு தரப்பில் ஆஜராகி இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அரவிந்த்பாண்டியன், டாஸ்மாக் மதுபான கடையை எப்போது திறப்பது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்றார். அதற்கு நீதிபதிகள், மதியம் உணவுக்கு முன்பு டாஸ்மாக் மதுபான கடையை திறந்து மக்களை குடிக்க வைப்பதில் என்ன கொள்கை முடிவு தமிழக அரசுக்கு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர்.

    அதைத் தொடர்ந்து, படிப்படியாக மதுபான கடைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அரவிந்த்பாண்டியன், நெடுஞ்சாலைகள் அருகே மதுபான கடைகள் திறக்கக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினால், தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டுவிட்டன. இதை நாங்கள் கணக்கு காட்ட விரும்பவில்லை. இருந்தாலும், இந்த 500 மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

    இதையடுத்து விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #ChennaiHighCourt #tamilnaduGovernment
    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள உடற்பயிற்சி கருவிகளில் உடற்பயிற்சிகள் செய்தார். இதில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி நிதியில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்விக் அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவப்பூரில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசினார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் அருகே பாடாலூரில் புதிய காவலர் குடியிருப்புகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூரில் தமிழக அரசின் சார்பில் ரூ.47.43 லட்சம் செலவில் காவலர்களுக்கான புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. அந்த குடி யிருப்புகளை நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தி லிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதையொட்டி பாடாலூர் புதிய காவலர் குடியிருப்பில் நடந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, பெரம்பலூர் எம்.பி. மருதராஜா, எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். பின்னர் அவர்கள் காவலர் குடியிருப்பு வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

    ரூ.47.43 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் குடியிருப்பில் 800 சதுர அடியில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்புகளும், 900 சதுர அடியில் 1 போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சேதுராமன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந் திரன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக செயற் பொறியாளர் நாச்சிமுத்து, ஆலத்தூர் தாலுகா தாசில்தார் சீனிவாசன், ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செய லாளர் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ரூ.2 கோடியே 14 லட்சத்தில் அமைக்கப்பட்ட தென்னூர் அண்ணாநகர் அறிவியல் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. திறந்தவெளி அரங்கமும் பயன்பாட்டுக்கு வந்தது.
    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 50-வது வார்டு தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் அருகில் மத்திய அரசின் அடல் புனரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றம் திட்டத்தின் கீழ் அண்ணாநகர் அறிவியல் பூங்கா ரூ.2 கோடியே 14 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை நேற்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

    இந்த பூங்காவில் 2,005 சதுர அடி பரப்பளவில் அலுவலகத்துடன் கூடிய அறிவியல் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 20 வகையான அறிவியல் உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. உயிரி அறிவியல் பூங்கா மற்றும் ஆற்றல் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளன. ராட்சத டைனோசர் உருவங்களும் இடம் பெற்று உள்ளன. புல்வெளி தளம், அழகிய பூச்செடிகள் மற்றும் பசுமை தாவரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    அறிவியல் கண்காட்சிகள், கருத்தரங்குகள், சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையிலும், அதை 200 பேர் அமர்ந்து காணும் வகையிலும் கேலரி வசதிகளுடன் கூடிய திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு மற்றும் ஒலிபெருக்கி வசதியுடன் கூடிய இந்த அரங்கம் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.

    பூங்காவிற்கு வரும் சிறுவர், சிறுமிகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கி விளையாடுதல் போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டு உள்ளன. பெரியோர், முதியோரின் வசதிக்காக நடைபயிற்சி பாதை, பூங்காவுக்கு வரும் அனை வரையும் வரவேற்கும் வகையில் பாறைகளுடன் கூடிய செயற்கை நீருற்று, உயர்கோபுர மின் விளக்கு, அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    கட்டணம் எதுவும் இன்றி இலவசமாக அனுமதிக்கப்பட்டதால் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் நேற்று இரவு பூங்காவுக்கு வந்து மகிழ்ச்சியாக பொழுது போக்கினார்கள். இந்த பூங்காவானது தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக, ஸ்ரீரங்கம் கோட்டம் மேலூர் ரோட்டில் ரூ.58 லட்சத்தில் நடைபயிற்சி தளம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்துடன் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. ப.குமார் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பூங்காவை திறந்து வைத்தனர். 
    வெளிநாடுகளுக்கு பதிவு தபால் அனுப்புபவர்களின் வசதிக்காக அண்ணாநகர் அஞ்சலகத்தில் சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சென்னை வடகோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க.குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்ணாநகர் அஞ்சலகத்தில் வெளிநாடுகளுக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மற்றும் பார்சல் அனுப்புபவர்களுக்காக ஒரு சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கவுண்ட்டர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கி வருகிறது.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு அண்ணாநகர் அஞ்சலகத்தின் துணை அஞ்சல் அதிகாரியை 044-26211012 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் மேலும் உயரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    கூடலூர்:

    கேரள எல்லைப் பகுதியில் உள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய அளவு மழை பெய்யாத நிலையில் ஒருபோக நெல்சாகுபடி மட்டுமே நடைபெற்றது.

    இந்த ஆண்டு கோடை மழை ஓரளவு கை கொடுத்ததால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் கனமழை பெய்து அணையின் நீர்மட்டம் மேலும் உயரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இந்த வருடமாவது ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மழையை நம்பி விவசாயப்பணிகளை தொடங்க விவசாயிகள் தயக்கம்காட்டி வருகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. 260 கனஅடிநீர் வருகிறது. நேற்று வரை 50 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் 100 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 36.38 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 60 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.40 அடியாக உள்ளது. 31 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.11 அடியாக உள்ளது. 3 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. வரத்து இல்லை. பெரியாறு 10, தேக்கடி 2.4, கூடலூர் 1.4, சண்முகாநதிஅணை 1, சோத்துப்பாறை 2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #Sathanurdam #TNCM
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2018ஆம் ஆண்டு பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாயில் முறையே வினாடிக்கு 350 கன அடி மற்றும் 220 கனஅடி வீதம் 5 நாட்களுக்கு கூடுதலாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.



    இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 45000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Sathanurdam #TNCM

    ×