search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சீபுரம்"

    திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீட்டிப்பால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. #jactoGeo
    திருவள்ளூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அரசின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்பினர். ஆனால் அரசு ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசு அலுவலகங்களில் விண்ணப்பித்தவர்கள் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுவை தமிழக அரசு அழைத்து பேசாவிட்டால் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் போராட்டத்தை தடுக்க திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 98 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரசு ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

    அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. #jactoGeo
    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் பொன்னையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையினை ஏற்றுக்கொண்டார். #RepublicDay
    திருவள்ளூர்:

    திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 115 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

    மேலும் விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 34 போலீசாருக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் பொன்னி மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் லோகநாயகி, மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் குமார், சுகாதார துறை இணை இயக்குனர் தயாளன்,முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்ரெண்ட் சிலம்பரசன், சப்-கலெக்டர் ரத்தினா, திருவள்ளூர் துணை சூப்ரெண்ட் கங்காதரன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியரசு விழா நடைபெற்றது. தேசியக்கொடியை கலெக்டர் பொன்னையா ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையினை ஏற்றுக்கொண்டார், பின்னர் ஊர்க் காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், சாரண சாரணியர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். பின்னர் உலக அமைதியை குறிக்கும் வகையினில் புறாக்களையும் தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.

    பின்னர் முன்னாள் படை வீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு திருமண மானிய உதவித் தொகை, விலையில்லா மூன்று சக்கர மற்றும் சக்கர நாற்காலிகள், சலவைப் பெட்டிகள், எம்ப்ராய்டிங் தையல் மிஷின்கள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் மாவட்ட அளவில் நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் என 35 லட்சத்து 16 ஆயிரத்து 284 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 159 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், தாசில்தார் காஞ்சனமாலா, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #RepublicDay

    காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து உள்ளனர்.
    திருவள்ளூர்:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-ம் நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

    இதனால் திருவள்ளூர் பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பெரும்பாலான சத்துணவுப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதால் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை என்று திரும்பி சென்றனர்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ-ஜியோ சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கதிரவன், சவுத்ரி, இளங்கோவன், ஞானசேகரன், பாஸ்கர், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து வட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் மற்றும் மறியல் 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் ஜெபநேசன், ஜியோ ஒருங்கிணைப்பாளர் விக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு வருவாய்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வருவாய்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம், கிராம உதவியாளர் சங்கம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினரும், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சங்கங்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை (25-ந் தேதி) மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    காஞ்சீபுரம் அருகே விபத்தில் 3  பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    சென்னை போரூரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி ஜெகதாம்மாள் (வயது 58).

    இவர்களது உறவினரான காஞ்சீபுரத்தை அடுத்த நாயகன்குப்பதை சேர்ந்த ஒருவரது 3 மாத குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக இறந்தது.

    இதுபற்றி துக்கம் விசாரிப்பதற்காக இன்று காலை ஜெகதாம்மாள், அவரது மகன்கள் வள்ளியப்பன், நாகேந்திரன், அவரது மனைவி சித்ரா (30) உள்பட 7 பேர் காரில் புறப்பட்டனர். காரை மாங்காடை சேர்ந்த சக்திவேல் (35) ஓட்டினார்.

    அதிகாலை 4 மணி அளவில் காஞ்சீபுரம் - ஓரகடம் சாலையில் கட்வாக்கம் கூட்டுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வாலாஜாபாத்தில் இருந்து ஓரகடம் நோக்கி வந்த லாரி திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன் பகுதி நசுங்கியது. காரில் இருந்த டிரைவர் சக்திவேல், ஜெகதாம்மாள், சித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் வள்ளியப்பன், நாகேந்திரன், அஞ்சுகம், விஜயலட்சுமி, அவரது மகள் ரபியா ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
    காஞ்சீபுரம்:

    108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள்கோவில், அஷ்டபுஜம் பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், கவிதா உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் உள்ள புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    இதேபோல் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி குலசேகரஆழ்வார் ராமானுஜா அறக்கட்டளை சார்பில் வைணவ பக்தர் கிருஷ்ணராமானுஜர் தாசர் விழாவில் கலந்து கொண்ட 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் செய்திருந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பள்ளிப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதநாராயண சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதே போல திருவள்ளூர் பூங்காநகரில் உள்ள ஜலநாராயண சாமி கோவில் மற்றும் பேரம்பாக்கம் கமலவள்ளி சமேத வைகுண்ட பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    காஞ்சீபுரம் அருகே போலீசால் தாக்கப்பட்ட வாலிபர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    காஞ்சீபுரம் அருகே உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் மாணிக்கம் (வயது 22).

    கடந்த 29-ந் தேதி மாணிக்கம் காஞ்சீபுரம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது அருகே இருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீசார் மாணிக்கத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையின்போது திடீரென மாணிக்கம் மயங்கி சுருண்டு விழுந்தார்.

    உடனடியாக அவரை சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    போலீசார் தாக்கியதில் மாணிக்கம் உயிர் இழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் அருகே லாரி ஏற்றி தொழிலாளி கொலை செய்த வடமாநில டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சீபுரம்:

    வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு பொருட்களை ஏற்றி வரும் லாரி டிரைவர்கள், தமிழக எல்லைக்கு வந்ததும் தங்களுக்கு வழிகாட்டு வதற்காக ஒருவரை தங்களுடன் அழைத்து வருவது வழக்கம்.

    நேற்று, கொல்கத்தாவில் இருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றுக் கொண்டு ஒரு லாரி காஞ்சீபுரம் வந்தது. இதை தரண்ஷானி (34) என்பவர் ஓட்டி வந்தார்.

    சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்த இந்த லாரி காஞ்சீபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் என்ற இடத்தில் நின்றது. அதை ஓட்டி வந்த டிரைவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஷோரூம் செல்வதற்கு வழிகேட்டார்.

    அப்போது, துலுங்கும் தண்டலம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கங்கன் (55) என்பவர் வழிகாட்டு வதற்காக லாரியில் ஏறினார். அதற்கு பணம் தர வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து, அவர் அந்த லாரியில் சென்று இருசக்கர வாகனங்களை இறக்க வேண்டிய கடையை கட்டினார். லாரி புறப்படும் போது தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டார். அப்போது டிரைவருக்கும் கங்கனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பணம் தராவிட்டால் லாரியை விடமாட்டேன் என்று கங்கன் லாரியை வழிமறித்தார். அப்போது டிரைவர் தரண் ஷானி அவர் மீது லாரியால் மோதினார். இதில் கங்கன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

    தகவல் அறிந்ததும், பாலு செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகான் சம்பவ இடம் சென்று வழக்கும் பதிவு செய்தார். டிரைவர் லாரியை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்று ரோட்டிலேயே நிறுத்திவிட்டு தப்பி விட்டார்.

    போலீசார், அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கி இருந்த டிரைவர் தரண்ஷானியை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. #Rain #Lakes
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 916 ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் நீர் இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் வரத் தொடங்கியுள்ளது.

    நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. 52 ஏரிகளில் 75 சதவீமும், 179 ஏரிகளில் 50 சதவீதமும் மீதமுள்ள ஏரிகளில் 25 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான தாமல் ஏரி, தென்னேரி ஏரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணிமங்கலம், மானாம்பதி, மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தால் ஏரிக்கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளது.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவீனமாக உள்ள ஏரிக்கரைகள், மதகுகள், நீர்வரத்து கால்வாய் போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Rain #Lakes

    தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து 2 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். #Kanchipuram #Diwali
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நாகலூத்துமேட்டில் வசித்து வருபவர் மத்தின்பாய் (வயது 52). இவரது மனைவி தாஹிராபானு (45), மகன் முஸ்தாக் (22). தீபாவளி பண்டிகையையொட்டி மத்தின்பாய் வேலூர் மாவட்டம் நெமிலியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கிவந்தார். அவைகளை சில்லரை விற்பனைக்காக வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தார்.

    அவை அனைத்தும் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் நாட்டு வெடி வகையை சேர்ந்த பட்டாசுகள் என கூறப்படுகிறது. தாஹிராபானுவும், அவரது மகன் முஸ்தாக்கும் நேற்று மதியம் அந்த பட்டாசுகளை சில்லரை விற்பனைக்கு ஏற்றவகையில் பிரித்து சிறிய பாக்கெட்டுகளாக அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது 3 மணியளவில் திடீரென அந்த பட்டாசுகள் தீப்பிடித்துக் கொண்டன. இதனால் அடுத்தடுத்து பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் சரமாரியாக வெடித்து நாலாபுறமும் சிதறின. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த பட்டாசுகள் வெடித்தன. இதில் தாஹிராபானு, முஸ்தாக் ஆகியோர் மீது தீப்பற்றி உடல் கருகியது. சிறிது நேரத்திலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த வெடி விபத்தில் அருகில் வசிக்கும் மஸ்தான் (47) என்பவரின் வீட்டு சுவரும் இடிந்துவிழுந்தது. இதில் மஸ்தான் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அந்த வீட்டின் வெளியே உட்கார்ந்து இருந்த அவரது தாய் சர்புதீன்பீபி (75) படுகாயம் அடைந்தார். பின்னர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்தடுத்த 2 வீடுகளிலும் தாய்-மகன் பலியாகியுள்ளனர்.

    பயங்கர வெடி சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

    இந்த வெடி விபத்தில் மத்தின்பாய் வீடும், மஸ்தான் வீடும் பெருத்த சேதமடைந்தன. மேலும் எதிர்வீட்டில் உள்ள ஜன்னல்களும் நொறுங்கின.

    காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன், சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் சம்பவ இடத்தில் இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் அவர்களிடம் உள்ளதா? வெடி விபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் விசாரணை நடத்தினார். விசாரணையில் அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மத்தின்பாயை போலீசார் கைது செய்தனர்.

    நாட்டு வெடி வகை பட்டாசு என்பதால் உராய்வு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். ஆனாலும் தீப்பிடித்ததற்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது பற்றி தீயணைப்பு வீரர்களும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இந்த கோர சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, தாசில்தார் காஞ்சனமாலா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கே.மரகதம்குமரவேல் எம்.பி., மாவட்ட பிரதிநிதி ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    காஞ்சீபுரத்தில் பட்டபகலில் நடந்த இந்த பயங்கர வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பச்சிளம் குழந்தையை, நர்சிடம் கொடுத்து விட்டு பெண் மாயமான சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணி புரிபவர் கெஜலட்சுமி.

    இவர் இன்று காலை 6.30 மணியளவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையுடன் ஒரு பெண் அங்கே வந்தார்.

    ஆனால் கெஜலட்சுமியுடன் சிறது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, “ இந்த குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளுங்கள் கழிவறைக்கு போய்விட்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லி குழந்தையை அவரிடம் கொடுத்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்த நர்சு கெஜலட்சுமி குழந்தையை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்குள்ள குழந்தைகள் வார்டு சிறப்பு சிகிச்சை பிரிவில் குழந்தையை சேர்த்தார்.

    இது குறித்து, காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை கொடுத்து விட்டு மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். #Kutka
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள பாவாஜி தெருவில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கடை மற்றும் அதன் அருகே உள்ள குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான 50 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். #Kutka
    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது. இன்று காலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்துள்ளது.

    திருவள்ளூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, செம்பரம்பாக்கம், அம்பத்தூர், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

    இன்று காலை முதல் விடாமல் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்படக்கூடிய மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 50 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக செங்குன்றத்தில் 5 மி.மீட்டர் மழையும் பெய்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்:- (மி.மீட்டரில்)

    பள்ளிப்பட்டு 50
    தாமரைப்பாக்கம் 47
    செம்பரம்பாக்கம் 43
    பூண்டி 31.40
    சோழவரம் 27
    ஆர்கே பட்டு 27
    திருவள்ளூர் 27
    ஊத்துக்கோட்டை 21
    பூந்தமல்லி 21
    அம்பத்தூர் 20
    திருவாலங்காடு 19
    பொன்னேரி 12
    திருத்தணி 12
    கும்மிடிப்பூண்டி 10
    செங்குன்றம் 5

    மொத்தம் 372.40 மி.மீட்டர். மழை பெய்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. இன்று காலை மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான தூறல் பெய்து வருகிறது.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:-

    உத்திரமேரூர் 31
    செங்கல்பட்டு 9
    காஞ்சிபுரம் 47.30
    ஸ்ரீபெரும்புதூர் 43.60
    தாம்பரம் 8.10
    மதுராந்தகம் 33
    செய்யூர் 9.50
    திருக்கழுக்குன்றம் 10.20
    மாமல்லபுரம் 46.40
    திருப்போரூர் 23
    வாலாஜாபாத் 5
    சோழிங்கநல்லூர் 40
    ஆலந்தூர் 32

    மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக காஞ்சீபுரத்தில் 47.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வாலாஜாபாத்தில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 338.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    சென்னையிலும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 30 நிமிட நேரம் பலத்த மழை பெய்ததால் ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

    தாம்பரம், தி.நகர், ஆதம்பாக்கம் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.

    அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வண்டலூர், கூடுவாஞ்சேரி, குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், அடையார், துரைப்பாக்கம், கந்தன்சாவடி, சென்ட்ரல், கோயம்பேடு, எழும்பூர் உள்பட பல பகுதிகளில் பரவலாக 1 மணி நேரம் கன மழை பெய்ததால் ரோடுகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய கடலோர பகுதிகளான முட்டுக்காடு, கானாத்தூர், கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, தேவநேரி, மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், கூவத்தூர் பகுதிகளில் நேற்று மாலை பெய்ய துவங்கிய மழை இன்று காலை வரை பெய்து வந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தின் முக்கிய பகுதிகளான கிழக்கு ராஜ வீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஒத்தவாடை தெரு, கடற்கரை சாலை, ஐந்துரதம் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் குளம் போல் தேங்கி வாகனங்கள் ஊந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், “வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்து வருவதாகவும், இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளதால் இன்னும் 2 நாட்களுக்கு மழை எதிர்பார்க்கலாம்” என்றும் தெரிவித்தார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 18.8 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 24 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ×