search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமறைவு"

    கேரள மாநிலத்தில் 15 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஓ.என். ஜார்ஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். #KerelaCongressleader #ONGeorge #POCSO
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், வயநாடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான ஓ.என்.ஜார்ஜ் சுல்தான் பத்தேரி பஞ்சாயத்து முன்னாள் தலைவராக பதவி வகித்தார்.

    இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சுல்தான் பத்தேரி பகுதிக்குட்பட்ட 15 வயது பழங்குடியின சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.



    இதனால் மனமுடைந்த அந்த சிறுமி சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றபோது இவ்விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர்  ஜார்ஜை சந்தித்து நியாயம் கேட்டபோது பணத்தை தந்து சமரசம் செய்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

    இதை ஏற்றுக்கொள்ளாத சிறுமியின் பெற்றோர் ஜார்ஜ் மீது போலீசில் புகார் அளித்தனர். சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் ஜார்ஜை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையில்,  காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓ.என். ஜார்ஜை நீக்கியுள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் தலைமை இன்று பிற்பகல் தெரிவித்துள்ளது. #KerelaCongressleader #ONGeorge #POCSO
    அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். #Karnataka #JanardhanaReddy
    பெங்களூரு:

    அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

    இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் உதவியை பரீத் நாடியுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு, தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நிதி நிறுவன அதிபர் பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.

    ஜனார்த்தன ரெட்டி, உதவியாளர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனார்த்தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

    இவ்வாறு சுனில்குமார் கூறினார்.

    இதற்கிடையில், நிதி நிறுவன அதிபருடன், ஜனார்த்தன ரெட்டி பேசும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
    திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி தலைமறைவாகி விட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் பாப்பணன் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் குடியிருப்பவர்களிடம் வாரம் ரூ. 100 என்ற அடிப்படையில் தீபாவளி சீட்டு நடத்தினார்கள்.

    இதில் ஏராளமானோர் பணம் செலுத்தினார்கள். 52 வாரம் முடிந்து 6,200 ரூபாய் முதிர்வு தொகை தருவதாக கணவன்-மனைவி கூறி இருந்தனர்.

    ஆனால் சீட்டு முடிவடைந்து பணம் கொடுக்க வேண்டிய நிலையில் கணவன்-மனைவி தங்கள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அவர்களில் 15 பேர் ரூ. 6 லட்சம் வரை மோசடி செய்ததாக புகார் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதால் மோசடி தொகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தலைமறைவான கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    கொலை வழக்குகளில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி மோகன்ராம் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்புதூரை சேர்ந்தவர் மோகன்ராம் (வயது 36). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில், 10 கொலை வழக்குகள் அடங்கும். திண்டுக்கல்லில் 4 கொலை வழக்குகளும், தமிழகத்தின் பிற போலீஸ் நிலையங்களில் 6 கொலை வழக்குகளும் உள்ளன.

    திண்டுக்கல்லில் சிசர்மணி, சீட்டிங் ஆனந்த், குமார் ஆகியோரை கொலை செய்த வழக்குகளில் கடந்த 3 ஆண்டுகளாக அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மோகன்ராமை, திண்டுக்கல் வடக்கு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதேபோல் கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய 3 பேரை கொன்ற வழக்கில் மோகன்ராம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் கோவை போலீசார் அவரை தேடினர்.

    இதற்கிடையே மும்பையில் பதுங்கி இருந்த மோகன்ராமை கடந்த 8-ந்தேதியன்று போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மோகன்ராமை, திண்டுக்கல்லில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் கோர்ட்டில் ஆஜர்படுத்த திண்டுக்கல் போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக, கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு போலீசார் அவரை அழைத்து வந்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.

    மோகன்ராமின் நெருங்கிய கூட்டாளியாக வலம் வந்தவர் கணேசன் என்ற நரைமுடி கணேசன். இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் நரைமுடி கணேசன் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக மோகன்ராம் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர், திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு தீபா உத்தரவு பிறப்பித்தார். அதன்பிறகு மோகன்ராம் கோவை மத்திய சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். 
    ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இங்கிலாந்து தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது. #Agustascandal
    துபாய்:

    இந்தியாவில் ஜனாதிபதி உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் ரூ.3,721 கோடி என விலை நிர்ணயம் செய்திருந்தனர்.

    ஆனால் இதில் இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி விசாரணை நடத்த உத்தரவிட்டார். சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். அதில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் உள்ளிட்ட 3 வெளிநாட்டினர் இடைத்தரகர்களாக செயல்பட்டனர். இதில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சுக்கு ரூ.350 கோடி லஞ்ச பணம் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்திய கடற்படை தளபதி எஸ்.பி. தியாகி, அவருடைய 3 சகோதரர்கள், பாதுகாப்பு படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் ஆகியோரும் ஊழலில் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் துபாயில் வசித்து வந்தார். சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு அரசு அவரை கைது செய்தது. பின்னர் ஒரு மாதத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சித்தது.

    இதற்காக ஐக்கிய அரசு எமிரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதை விசாரித்த 3 நீதிபதிகள், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டதாக நேற்று தகவல் வெளியானது.

    ஆனால் அப்படி எந்த உத்தரவும் கோர்ட்டு பிறப்பிக்கவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.

    கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு அனுப்பலாமா? என்று ஐக்கிய அரபு அரசு கோர்ட்டில் விவரம் கேட்டிருந்தது. இது சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்ட கோர்ட்டு தனது கருத்துக்களை குறிப்பிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது.

    இந்த அறிக்கையில் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை இந்தியாவுக்கு அனுப்பலாம் என்ற கருத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது கோர்ட்டு தீர்ப்பு அல்ல, கருத்து தான் என்பதால் அவரை இந்தியாவுக்கு அனுப்பும் உத்தரவாக கருத முடியாது என்று கூறப்படுகிறது.

    இதனால் அவர் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு இப்போது சாத்தியம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. ஒரு வேளை ஐக்கிய அரபு கோர்ட்டு உத்தரவிட்டாலும் அதை மேல்முறையீடு செய்வதற்கும் அங்கு வாய்ப்பு உள்ளது. அந்த கோர்ட்டிலும் தீர்ப்பு வந்தால் மட்டுமே அவர் நாடு கடத்தப்படுவார் என்று சட்ட நிபுணர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது. மைக்கேல் ஜேம்ஸ் வழக்கில் அவரது வக்கீலாக அமல்அல் சுபி ஆஜராகி வருகிறார்.

    அவரிடம் இதுபற்றி கேட்டபோது, தற்போது கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

    அதே நேரத்தில் அவரை நாடு கடத்தும்படி ஐக்கிய அரபு கோர்ட்டு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார். #Agustascandal

    பல்வேறு குற்றவழக்குகளில் சரணடைந்த ரவுடி பினு, ஜாமீனில் வெளிவந்த பின்னர் தலைமறைவானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அதிரடியாக அப்பகுதிக்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார்.

    இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, தினமும் மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், ஜாமீனில் வெளியான நாள்முதல் ரவுடி பினு கையெழுத்திட வரவில்லை எனவும், பினு தலைமறைவாகி விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #RowdiBinu #Abscond
    பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில், தலைமறைவாக உள்ள இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு புதிதாக ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி தொடர்பாக முருகன் சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே. ராஜா ஆகியோரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குழுவினர் விசாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல் துறையினர் மலைக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை மற்றும் உற்சவர் சிலைகளை ஆய்வு செய்தனர். அதேபோல் கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஸ்தபதி முத்தையா, கே.கே.ராஜா ஆகியோருக்கு ஆதரவாக முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, அப்போதைய அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஐம்பொன் சிலை மோசடியில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலும் சம்பந்தப்பட்டிருப்பது கோவில் அதிகாரிகள், ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. ஐம்பொன் சிலையில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் எந்த அளவில் சேர்க்கவேண்டும், சிலையின் வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரியாக தனபால் இருந்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளது.

    முன்னாள் ஆணையர் தனபாலை விசாரணைக்கு வரும்படி கூறி 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. எனவே அவருடைய வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவானதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசிக்கும் அவரை போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். சிலருடைய உதவியுடன் முன்னாள் ஆணையர் தனபால் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தனபால் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் கேட்டு தனபால் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், “இந்த வழக்கில் 3-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளேன். சிலை மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலை தயாரித்ததில் தவறு நடந்ததாக கூறுகிறார்கள். ஆனால் நேரடியாக என் மீது குற்றம் சாட்டப்படவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    வேலூர் மத்திய ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவானார்.
    வேலூர்:

    வேலூர் மத்திய ஜெயிலில் இருந்து பரோலில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவானார். அவர் போலியான வீட்டு முகவரி கொடுத்துள்ளது தெரியவந்ததால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற பாப்பண்ணா (வயது 45). இவரை கடந்த 1999-ம் ஆண்டு மத்திகிரி பகுதியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தளி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாப்பண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்த பாப்பண்ணா கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது மனைவி சகாயமேரிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பார்த்து விட்டு வருவதற்கு பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வேலூர் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாப்பண்ணாவை கடந்த 28-ந் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு பரோலில் வெளியே செல்ல உத்தரவிட்டார். அதையடுத்து அவர் ஜெயிலில் இருந்து வெளியே சென்றார். கடந்த 4-ந் தேதி மாலை பரோல் முடிந்து மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அவர் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஜெயிலுக்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து வேலூர் மத்திய ஜெயில் உதவி சூப்பிரண்டு முருகசேன் தளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தளி போலீசார், உதவி சூப்பிரண்டு அளித்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்த சென்றனர்.

    அப்போது பாப்பண்ணா பரோலில் வர விண்ணப்பித்தபோது அளித்த வீட்டின் முகவரி போலியானது எனவும், போலியான முகவரியை அவர் கொடுத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்து தலைமறைவாகி உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பாப்பண்ணாவை தீவிரமாக தேடி வருகின்றனர். 
    ×