search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 131319"

    மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBench #Tasmac
    மதுரை:

    கன்னியாகுமரியை சேர்ந்த ரசீத் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் பள்ளிகளும் உள்ளன.

    டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் போதையில் தகராறு செய்கிறார்கள். இதனால் அந்த பகுதி பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் எதிர்மனுதாரராக மதுவிலக்கு ஆயப்பிரிவு உள்துறை செயலாளரை சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    விளவங்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் நாளை (30-ந்தேதி) மகாத்மா காந்தி நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அடுத்த மாதம் 18-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #MaduraiHCBench #Tasmac
    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும், மது அருந்தும் கூடங்களையும் மூடவேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி அனைத்து மதுபானக் கடைகளையும், மது அருந்தும் கூடங்களையும் மூடவேண்டும் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

    வருகிற 2 -ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் உள்ளிட்டவைகளை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    எனவே அன்று அனைத்து மதுபானக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும். மீறி திறந்தாலோ, மறைமுகமமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படுவது உறுதி என அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
    நாமக்கல்:

    தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத்தில் சுமார் 6,800 மதுக்கடைகள் இருந்தன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்ற போதும், தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றபோதும் தலா 500 மதுக்கடைகளை மூடினர்.

    அதன் பிறகு படிப்படியாக மேலும் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 4,800 மதுக்கடைகள் மட்டுமே உள்ளன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதில் உறுதியாக இருக்கிறோம். இதில் மாறுபட்ட கருத்து இல்லை.

    மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால், அவற்றில் பணி புரிந்த பணியாளர்களுக்கு வேறு துறையில் பணியிடங்களை ஒதுக்கி கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வேறு துறைக்கு செல்லும் டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்கு இதே முன்னுரிமை வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். ஆனால் இதர துறைகளில் உள்ளவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இருப்பினும் கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வு நடத்தி இளநிலை உதவியாளர் நிலையிலான பணியிடம் வழங்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு பணியாற்ற வசதியாக மூத்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து உள்ளார். அந்த விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterThangamani
    ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    தமிழக அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, மதுபானக்கடைகள் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர்களுக்கான சமூகநீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த மாதம் 28-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால், அவற்றை உடனடியாக மூடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜராகி, கடந்த 21-ந் தேதி தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    அதில் ‘சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் வரும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் ஒவ்வொன்றாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 815 மதுபானக்கடைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதற்கு மனுதாரர் கே.பாலு தரப்பில் ஆஜரான வக்கீல் பா.கருணாகரன் ஆட்சேபம் தெரிவித்தார். மே 21-ந் தேதி வெளியிட்ட அரசாணையை நேரடியாக கோர்ட்டில் தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதன் மீது பதில் தாக்கல் செய்ய எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். தமிழக அரசு 815 மதுக்கடைகளை திறக்க அவசரம் காட்டுகிறது. கோடை விடுமுறைக்கு பிறகும் கூட இந்த வழக்கை ஒத்திவைக்கலாம் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், ‘சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு மே 14 மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு மே 21-ந் தேதி வெளியிட்டுள்ள அரசாணை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனை தமிழக அரசு செயல்படுத்தலாம். இந்த அரசாணை குறித்து எதிர்மனுதாரருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவின் மூலம் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு ரத்து ஆகிறது. இதனால் தமிழக அரசால் அடையாளம் காணப்பட்ட ஊரகப்பகுதிகளில் அமைந்துள்ள 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×